Published:Updated:

39 வயதில் 44 குழந்தைகள்... அதிக கருவள பெண்ணைத் துரத்தும் கொடூரம்!

அந்த வீட்டின் ஒரு நாள் பயன்பாட்டுக்கு மட்டும் 25 கிலோ மாவு தேவைப்படுகிறது. ''மீன், இறைச்சி போன்றவை சாப்பிடுவது என்பது மிகவும் அரிதாகவே நடக்கும்'' என்கிறார் மரியம்.

ஒரு குழந்தையைப் பெற்றெடுப்பதற்கே பல்வேறு சிரமங்களைச் சந்திக்கும் பெண்களின் மத்தியில், 44 குழந்தைகளைப் பெற்றெடுத்துள்ளார் ஓர் அதிசயப் பெண். உகாண்டாவைச் சேர்ந்த 39 வயதான மரியம் நபாடான்சிக்கு இதுவரை 6 இரட்டைக் குழந்தைகள் பிறந்துள்ளனர். தவிர, 4 பிரசவத்தில் 3 குழந்தைகள், 5 பிரசவத்தில் 4 குழந்தைகள் என மொத்தம் 44 குழந்தைகள். தற்போது ஆப்பிரிக்கக் கண்டத்திலேயே மிகப்பெரிய குடும்பம் மரியத்துடையதுதான்.

வறுமை
வறுமை
Pixabay

மரியத்துக்கு முதல் முறை இரட்டைக் குழந்தைகள் பிறந்தபோதே அவருக்கு சினைப்பை அசாதாராண அளவில் இருப்பதை மருத்துவர்கள் கண்டறிந்தனர். அவருக்கு மரபணு ரீதியாக அதிகமான கருவளம் உள்ளது. பொதுவாக, பெண்களுக்கு கருமுட்டை உருவாகி முதிர்ச்சியடைந்து, சினைப்பையிலிருந்து வெளியேறும். பெரும்பாலும் ஒரு கருமுட்டைதான் முதிர்ச்சியடைந்து வெளியேறும். ஆனால், இவருக்கு இருக்கும் அசாதாரண கருவளத்தின் காரணமாக, ஒரே நேரத்தில் பல கருமுட்டைகள் சினைப்பையிலிருந்து வெளியாகின்றன. அதனால்தான், ஒரு பிரசவத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் பிறந்திருக்கின்றனர்.

இறுதியாக இரட்டைக் குழந்தைகள் பிறந்தபோது, அவர் மேலும் குழந்தைகள் பெற்றுக்கொண்டால் அது அவரது உடல்நலனைப் பாதிக்கும் என்பதால், மீண்டும் குழந்தை பெற்றுக்கொள்ளக்கூடாது என்று மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

Bread
Bread
Pixa bay

இந்தச் சூழலில், மரியத்தை கைவிட்டுச் சென்றுவிட்டார் அவரின் கணவர். ஏற்கெனவே வறுமையில் தத்தளித்துக்கொண்டிருந்த இந்தக் குடும்பம் கணவரின் பிரிவின் காரணமாக மேலும் மோசமான வறுமைக்குத் தள்ளப்பட்டுள்ளது. அவருக்குப் பிறந்த 44 குழந்தைகளில் 6 குழந்தைகள் உயிரிழந்துவிட்டனர். தற்போது தனி மனுஷியாக 38 குழந்தைகளைப் பராமரித்துவருகிறார் மரியம்.

தகரக் கொட்டகையினால் ஆன சிறிய வீட்டில் தன் குழந்தைகளுடன் வசித்து வரும் அவர், தன் குழந்தைகளுக்கான அன்றாட உணவுக்காவும், பள்ளிக் கட்டணத்தைச் செலுத்துவதற்காகவும் கிடைக்கும் வேலைகளையெல்லாம் செய்துவருகிறார். முடிவெட்டும் தொழில், நிகழ்ச்சிகளுக்கு அறைகளை அலங்காரம் செய்வது, இரும்புபோன்ற உலோகக் கழிவுகளைச் சேகரித்து அவற்றை எடைக்குப் போடுது, ஜின் வகை மதுவைக் காய்ச்சி விற்பது, உள்ளூர் மூலிகை மருந்துகளை விற்பனை செய்வது என வெவ்வேறு வேலைகளைச் செய்கிறார்.

ஓய்வெடுக்கவோ, எளிய வேலைகளை மட்டும் செய்து பணம் சம்பாதிக்கவோ அவருக்கு வழியில்லை. தன் உடலை வருத்திக்கொண்டுதான் அத்தனை வேலைகளையும் செய்கிறார் மரியம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

``நான் கண்ணீரில்தான் பிறந்து வளர்ந்தேன். என் கணவரும் என்னைத் துயரங்களின் வழியேதான் கூட்டிச்சென்றார். என்னுடைய மொத்த நேரத்தையும் குழந்தைகளைப் பராமரிப்பதற்கும் சம்பாதிப்பதற்கும்தான் செலவிடுகிறேன்" எனும் மரியத்தின் குழந்தைப்பருவமும் துயரம் தோய்ந்ததாகவே இருந்திருக்கிறது.

என் அம்மா மிகவும் அன்பானவர். எங்களுக்காக அவர் பல்வேறு வேலைகளைச் செய்கிறார். அந்த வேலைகள் அனைத்தும் அவரைப் பிழிந்து எடுக்கின்றன.
மரியத்தின் மூத்த மகன் இவான்
Mariam Nabatanzi
Mariam Nabatanzi
The Courier Mail

``நான் பிறந்த மூன்று நாளிலேயே என் அம்மா, குடும்பத்தையும் அப்பாவையும் விட்டுவிட்டுப் போய்விட்டார். எனக்கு முன்பாக 5 குழந்தைகள் பிறந்திருந்தனர். என் அப்பா மறுமணம் செய்துகொண்டார். சித்திக்கோ எங்களைக் கொஞ்சமும் பிடிக்கவில்லை. எனக்கு முன்னால் பிறந்த 5 குழந்தைகளுக்கும் உணவில் கண்ணாடித்துகள்களைப் போட்டு சாப்பிடக் கொடுத்து கொலைசெய்துவிட்டார். அந்தச் சமயத்தில் நான் மட்டும் உறவினர் வீட்டுக்குப் போயிருந்ததால் உயிர் பிழைத்தேன். இறப்பு என்றால் என்னவென்று உணர்ந்தபோது, எனக்கு 7 வயது. என் உறவினர்கள்தான் என்ன நடந்தது என்பதை எனக்கு விளக்கிச் சொன்னார்கள்.

எனக்கு முன்னால் இருந்த 5 உடன்பிறப்புகளையும் இழந்ததால், வாழ்க்கையில் 6 குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பது என் ஆசையாக இருந்தது. ஆனால், 38 குழந்தைகளை வளர்ப்பது என்பது எனக்குள் மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்கியிருக்கிறது" என்கிறார் மரியம்.

மரியத்தின் குடும்பம் வசிக்கும் அந்தச் சிறிய வீட்டின் சுவரில், சில குழந்தைகள் பள்ளிப்பருவத்தில் பட்டம் பெற்ற புகைப்படங்கள் மாட்டப்பட்டுள்ளன. மரியத்தின் மூத்த மகன் இவான் கிபுகாவுக்கு தற்போது 23 வயதாகிறது.

வறுமை காரணமாகத் தனது பள்ளிப்படிப்பை நிறுத்திய இவான், தன் அம்மாவைப் பற்றிக் கூறும்போது, "என் அம்மா மிகவும் அன்பானவர். எங்களுக்காக அவர் பல்வேறு வேலைகளைச் செய்கிறார். அந்த வேலைகள் அனைத்தும் அவரைப் பிழிந்து எடுக்கின்றன. அதனால் வீட்டில் சமைப்பது, துணிகள் துவைப்பது எனச் சின்னச்சின்ன வேலைகளை அவருக்குச் செய்துகொடுப்போம். இந்தக் குடும்பத்தின் மொத்த பளுவையும் அவர் ஒற்றை ஆளாகச் சுமக்கிறார். அவருக்காக நான் மிகவும் வருந்துகிறேன்'' என்கிறார்.

poverty
poverty
Pixabay

அந்த வீட்டின் ஓர் அறையில், அடுக்குகள் கொண்ட கட்டிலில் 12 குழந்தைகள் உறங்குவது வழக்கம். 38 குழந்தைகளில் அந்த 12 குழந்தைகள் மட்டுமே சற்று சொகுசை அனுபவிக்க முடிகிறது. மற்ற குழந்தைகள் அழுக்குப்படிந்த மற்றோர் அறையில்தான் உறங்குகின்றனர்.

வீட்டில் மூத்த குழந்தைகள், இளைய குழந்தைகளைக் கவனித்துக்கொள்கின்றனர். அதனால் மரியம் வேலைக்குச் செல்ல முடிகிறது. அந்த வீட்டின் சுவரில் ஓர் அட்டவணை வரையப்பட்டு மாட்டப்பட்டிருக்கிறது. அதில், எந்தெந்தக் குழந்தை எந்த நாளில் என்னென்ன வேலைகளைச் செய்ய வேண்டும் என்ற குறிப்புகள் உள்ளன. அட்டவணையின் அடியில், 'சனிக்கிழமை நாம் எல்லாரும் சேர்ந்து வேலை செய்ய வேண்டும்' என்று எழுதப்பட்டிருக்கிறது. அந்த வீட்டின் ஒரு நாள் பயன்பாட்டுக்கு மட்டும் 25 கிலோ மாவு தேவைப்படுகிறது.

child in poverty
child in poverty
Pixabay

``மீன், இறைச்சி போன்றவை சாப்பிடுவது என்பது மிகவும் அரிதாகவே நடக்கும். என்னுடைய சிறிய வயதிலேயே பெரிய கடமைகளை ஏற்றுக்கொண்டேன். பிறந்ததிலிருந்தே நான் எந்த சந்தோஷத்தையும் அனுபவித்ததில்லை. என் குழந்தைப் பருவம் துயரம் நிறைந்தது. அதை என் குழந்தைகளுக்குக் கொடுக்கக்கூடாது. அவர்களை சந்தோஷமாக வைத்திருக்க வேண்டும் என்பதே என் குறிக்கோள்’’ என்கிறார் மரியம்.

Vikatan
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு