தென் மாவட்டத்தில் ஒரு சிறு நகரத்தில் வசிக்கிறோம். என் கணவர் டிகிரி படித்துவிட்டு தண்ணீர் கேன் போடும் தொழில் செய்துவந்தார். நான் டிகிரி முடித்திருந்தாலும் வேலைக்குச் செல்லவில்லை. நான்கு வருடங்களுக்கு முன் எங்களுக்குத் திருமணம் முடிந்தது.
இந்நிலையில், இரண்டு வருடங்களுக்கு முன்பு தொழிலில் ஏற்பட்ட ஒரு பிரச்னையில் எதிர் தரப்பினருக்கும் என் கணவருக்கும் ஏற்பட்ட சண்டை கைகலப்பில் முடிந்துவிட்டது. இதனால் தன் பாதுகாப்புக்காக, ஊரில் இருக்கும் ஒரு பெரிய ரௌடியிடம் சென்றார் அவர். அந்த ரௌடி என் கணவருடன் அவரது ஆள்கள் சிலரை அனுப்பிவைத்து, என் கணவரிடம் பிரச்னை செய்தவர்களை அடிக்கவைத்தார். அதிலிருந்து அந்த நபரிடமிருந்து என் கணவருக்குத் தொழிலில் எந்தப் பிரச்னையும் வருவதில்லை. ஆனால், பிரச்னை வேறு திசையில் இருந்துவந்து என் கணவரை இழுத்துக்கொள்ளும் என்று அப்போது நான் எதிர்பார்க்கவில்லை.

என் கணவர் அந்தச் சம்பவத்துக்குப் பிறகு, அடிக்கடி அந்த ரௌடியைச் சென்று சந்திக்க ஆரம்பித்தார். அங்கு, 16 வயதுப் பதின் பருவச் சிறுவர்களில் இருந்து 50 வயது ஆள்கள் வரை எப்போதும் ஒரு படை அந்த ரௌடியைச் சுற்றியிருப்பது, ஒரு ராஜாங்கமாக அவர்கள் தங்களைத் தாங்களே நினைத்துக்கொண்டு `கெத்து' என்ற பெயரில் ஊரில அனைவரையும் மிரட்டியபடி இருப்பது, ஊருக்கு ஒதுக்குப்புறம் ஒரு தோப்பில் கூடித் தண்ணி அடிப்பது, வெட்டு, குத்து என்று ஒரு சம்பவம் செய்த பின்னர் அனைவரும் அதற்கான கூலியைப் பெற்றுக்கொண்டு கேரளா, கொடைக்கானல் என்று ஏதோ டூர் போல சென்று தங்கிவிட்டு, சட்டப் பிரச்னைகள் சரியான பின்னர் திரும்புவது என, இவற்றையெல்லாம் பார்க்கப் பார்க்க என் கணவருக்கும் அந்தப் படையில் சேரும் போதை வந்துவிட்டது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
ஆரம்பத்தில் வேலை இல்லாத நேரத்தில், `அண்ணனப் பார்க்கப் போறேன்' என்று சொல்லிவிட்டுச் சென்று, அந்தக் கூட்டத்துடன் நேரம் செலவழித்துவிட்டு வந்தவர், பின்னர் வேலை நேரத்திலும் அந்தக் கும்பலே கதி என்று கிடக்க ஆரம்பித்தார். `அண்ணன் கூட இருக்குறதுதான் நமக்கு கெத்து, நாளைக்கு நமக்கு ஏதாச்சும் ஒரு பிரச்னை வந்தாலும் பாதுகாப்பு' என்றார். தொழிலில் அவரது கவனம் குறைய, அது குறித்து அவருக்கும் எனக்கும் சண்டைகள் வர ஆரம்பித்தன. இந்நிலையில், ஊருக்குள் அந்த ரௌடிக்கும் இன்னொரு தரப்பினருக்கும் ஏற்பட்ட மோதலில் சம்பவ இடத்தில் என் கணவரும் பிரச்னையில் ஈடுபட்டதால் காவல் நிலையம் சென்று வர நேர்ந்தது. அதற்குப் பின்னாவது அவர் அஞ்சுவார், அந்த ஆபத்துக் கும்பலில் இருந்து விலகுவார் என்று நினைத்தேன். ஆனால் நடந்ததோ அதற்கு எதிரானது. `நானும் ரௌடிதான்' என்று அதிலிருந்து அவர் தன்னை ஒரு ரௌடியாகவே உணர ஆரம்பித்துவிட்டார்.

என் கணவரைப் பற்றி மட்டுமல்ல... அந்த ரௌடி கும்பலால் ஒரு மாயை போல ஈர்க்கப்படும் பதின் வயதுச் சிறுவர்கள், இளைஞர்கள் என்று அனைவரைப் பற்றியுமே நான் கவலைப்படுகிறேன். இப்போது காவல்துறை ஊருக்கு ஊர் ரௌடிகளைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருகிறது எனச் செய்தி வருகிறது. என் கணவர் மூலம் அதுபோன்ற கும்பல்களின் செயல்பாடுகளை அறிந்துகொள்ள முடிந்தவளாகச் சொல்கிறேன்.
ஒவ்வொர் ஊரிலும் ஒரு பெரிய ரௌடி இருந்துகொண்டு, தனக்குக் கீழ் சில பல இளைஞர்களை ஒரு கூலிப்படையாக உருவாக்கிக்கொள்கிறார். அந்த ரௌடியிடம் அப்படிச் சேரும் இளைஞர்களின் தேவை பணம்தானா என்றால், அப்படிச் சொல்லமுடியவில்லை.
தங்கள் குடும்பத்தில், சொத்தில், தொழிலில், காதலில் ஒரு பிரச்னை என்று அந்த ரௌடியிடம் அடைக்கலம் தேடிச் செல்பவர்களில் சிலர், மது, குடி, கேங்கிஸம், காவல்துறை முதல் தொழிலதிபர்கள் வரை அந்த ரௌடிக்கு இருக்கும் செல்வாக்கு என அந்தக் குற்றக் கும்பலின் உல்லாச(!) வாழ்க்கையைப் பார்த்து, தாங்களும் அதில் தங்களை இணைத்துக்கொண்டு கத்தியை கையில் எடுக்கிறார்கள். புதுப்பேட்டை `கொக்கி குமார்' முதல் மாஸ்டர் `பவானி' வரை ரௌடிகளுக்குத் தமிழ் சினிமா கொடுக்கும் ஹீரோயிஸ பில்ட் அப்பின் விளைவும், இந்த இளைஞர்களை இன்னும் மயக்கத்துடன் கறுப்பு உலகத்துக்குள் இழுத்துக்கொள்கிறது. சிலர், `எனக்கு ஒரு பிரச்னை வந்தப்போ அண்ணன் எனக்காக அவனை அடிச்சார், அவருக்காக நான் எதுவும் பண்ணுவேன்' என்று விசுவாசியாக தங்களை அந்த ரௌடியிடம் ஒப்புக்கொடுக்கிறார்கள். அடிதடி முதல் கொலை வரை நடக்கும் சம்பவங்களில் அந்த ரௌடிக்குக் கிடைக்கும் பெரும் பணத்தில் இந்தப் படைக்கும் கூலி கிடைக்கும்போது, அந்தக் காசு போதை, வாழ்க்கையில் வேலை, தொழில் என்று நேர்மறையாக உழைக்கும் எண்ணத்தில் இருந்து அப்படியே அவர்களை காவு வாங்கிக்கொள்கிறது.

மேலும், சில காலம் இந்த ரௌடி கும்பலிடம் இருந்துவிட்டு, பின்னர் அந்தத் தவற்றை உணர்ந்து நல்ல பிழைப்புப் பிழைக்க நினைத்தாலும், முன்னர் செய்த குற்றங்களால் ஏற்பட்ட பகை அவர்களைத் துரத்திக்கொண்டே இருப்பதால், `இனி இந்த கும்பலை விட்டுச் சென்றால் நமக்கு பாதுகாப்பில்லை, எதிரி நம்மை போட்டுவிடுவான்' என்ற பயமும் அவர்களை அந்தப் புதைகுழிக்குள்ளேயே இழுத்துக்கொள்கிறது. மேலும், ஒவ்வோர் ஊரிலும் இருக்கும் பெரிய ரௌடிகளும் தங்களுக்குள் ஒரு நெட்வொர்க் வைத்துக்கொண்டு, கிளப் பிரச்னைகள், மணல் கொள்ளை, ரியல் எஸ்டேட், அடிதடி, கொலை போன்ற குற்றச் செயல்களுக்கு, தங்களிடம் உள்ள கூலிப்படையை கைமாற்றிப் பயன்படுத்திக்கொள்கிறார்கள். இந்த இரண்டு வருடங்களாக, என் கணவரின் வாழ்க்கை இப்படித்தான் மாறிப்போயிருக்கிறது.
இந்நிலையில், ஆறு மாதங்களுக்கு முன் பக்கத்து நகரத்தில் முன் விரோதத்தால் நடந்த ஒரு கொலையில் என் கணவரும் கூலிப்படையாகச் சென்றுவிட்டார். சம்பவத்துக்குப் பின் காவல் துறை விசாரணைக்கு வந்தபோதுதான், எனக்கே அதைப் பற்றி தெரியவந்தது. அடிதடி, சண்டை என்றிருந்த என் கணவர் இப்போது கொலை வரை சென்றுவிட்டதை எண்ணி உறைந்து, கலங்கிப் போனேன்.
கொலை செய்யச் சொன்னவர்கள் பணம் கொடுத்து என் கணவரையும், அதில் சம்பந்தப்பட்ட இன்னும் சிலரையும் கேரளாவில் ஒரு விடுதியில் தங்கவைக்க, இரண்டு வாரங்களுக்குப் பின் அனைவரும் கோர்ட்டில் சரண்டராகி, ரிமாண்ட் செய்யப்பட்டு, அந்த ஆள்கொல்லி கும்பலால் பெயிலில் எடுக்கப்பட்டார்கள். பிறகு, என் கணவர் தண்ணீர் கேன் தொழிலுக்குத் திரும்பவில்லை. ஆனாலும் அவர் கையில் காசு புழங்குகிறது.

`ரத்தத்துல வர்ற காசு எப்படித்தான் இவங்களுக்குச் செரிக்குதோ' என்று ஊர், உறவு என் குடும்பத்தை பேசும்போது, நான் கூனிக் குறுகிப் போகிறேன். ஆனால் என் கணவரோ இப்போது ஒரு லைசைன்ஸ்டு ரௌடியாகத் தான் அங்கீகாரம் பெற்றுவிட்டதாக மிதப்பில் இருக்கிறார். அவர் இந்த ரௌடி கும்பலிடமிருந்து வெளிவரவில்லை என்றால் நான் அவரை பிரிந்துவிடுவேன் என்று எச்சரித்துப் பார்த்துவிட்டேன். எதற்கும் அவர் அசைவதாக இல்லை. இந்தக் குற்றவாளியுடம் என்னாலும் நிச்சயம் இனி வாழ முடியாது. இவர் செய்யும் பாவங்கள் எல்லாம் என் குழந்தைக்குத்தானே சேரும் என்று நினைத்து நினைத்து அழுதுகொண்டிருக்கிறேன். நான் மட்டுமல்ல... தங்கள் மகனை, சகோதரனை, கணவனை இப்படி கூலிப்படை புதைகுழியில் இருந்து மீட்கமுடியாத கண்ணீரில் பல பெண்களும் மூழ்கிக்கொண்டிருக்கிறோம்.
என் கணவர் கொண்டுவரும் பாவக் காசில் இனியும் என் பிள்ளையை வளர்க்க நான் தயாராக இல்லை. வேலை தேடிக்கொண்டு பிரிந்துவிட நினைக்கிறேன். இன்னொரு பக்கம், அவரை மொத்தமாக உதறிவிட்டுச் சென்றால், இந்த குற்றக் கும்பலுடன் ஒரேயடியாகச் சென்று சீரழிந்துவிடுவாரே என்று தவிப்பாக இருக்கிறது.
என்ன செய்வது நான்?
வாசகியின் பிரச்னைக்கு உங்கள் ஆலோசனைகளை கமென்ட்டில் பதிவு செய்யலாமே..!
தோழிகளே... இதுபோல நீங்கள் சந்திக்கும் பிரச்னைகள், உறவுச் சிக்கல்களை அவள் விகடனுடன் பகிர்ந்துகொள்ள விருப்பமா? உங்கள் அனுபவங்களை எங்களுக்கு அனுப்பலாம். avalvikatan@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு Penn Diary என Subject-ல் குறிப்பிட்டு உங்கள் அனுபவங்களை அனுப்பி வையுங்கள். தேர்ந்தெடுக்கப்படும் அனுபவங்கள் விகடன் தளத்தில் வெளியாகும்.