Published:Updated:

`என் பெற்றோர் ஒரே பாலினத்தினர்!' -பர்சனல் பகிரும் பின்லாந்து பிரதமர் சன்னா மரின்

என் குடும்பத்தைப் பற்றி, வெளிப்படையாகப் பேச முடியாமல் நான் மெளனமாக இருந்த காலகட்டம் ரொம்பவும் கடினமாக இருந்தது.

சன்னா மரின்
சன்னா மரின்

சன்னா மரின், பின்லாந்துப் பிரதமர். உலகின் இளவயதுப் பிரதமர் என்ற பெருமைக்குச் சொந்தக்காரர் ஆகியிருப்பவர். சன்னா, தன் உறவுகளைப் பற்றி சமீபத்தில் மனம்விட்டுப் பேசியிருக்கிற விஷயங்கள் பலரை ஆச்சர்யப்படுத்தி, சிலரை `வாவ்' சொல்ல வைத்து டிரெண்டிங் ஆகிக் கொண்டிருக்கிறது.

உலகின் இளவயதுப் பிரதமர் சன்னா மரின்
உலகின் இளவயதுப் பிரதமர் சன்னா மரின்

`என்னுடையது ஒரு LGBT ( lesbian, gay, bisexual, and transgender) குடும்பம். என் அம்மாவின் வாழ்க்கைத்துணையாக இருந்தவர், ஒரு பெண். அவர்கள் இருவரும்தான் என்னை வளர்த்தார்கள். எனக்குத் தெரியும், என்னுடைய குடும்பம் வழக்கத்துக்கு மாறானது என்று. ஆனால், என் வளர்ச்சிப் பயணத்தில் அவர்களுடைய பங்கு மிகப் பெரிது.

என் குடும்பம், உலகத்தின் இயல்புகளுக்குச் சற்று மாறானது என்பதால், சிறு வயது முதல் என் குடும்பத்தைப் பற்றி நான் யாரிடமும் வெளிப்படையாகப் பேசியதில்லை. ஒரே பாலினப் பெற்றோர் தங்களுக்காகக் கோரும் உரிமைகள், அவர்களின் குழந்தைகளின்மேல் எந்தவித எதிர்மறைத் தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்று ஆய்வுகள் மறுபடி மறுபடி சொல்லி வருகின்றன. என்றாலும், ஒரே பாலினத்தினர் சேர்ந்து வாழும் குடும்பங்கள் இன்றைக்கும் மறைக்கப்பட்ட அல்லது விலக்கப்பட்டவையாகவே சமூகத்தில் வாழ்ந்து வருகின்றன.

இந்தச் சூழ்நிலைகளுக்காக நான் வருத்தப்பட்டிருக்கிறேனே தவிர, என் குடும்பம் குறித்து எப்போதும் நான் கவலைப்பட்டதில்லை.
சன்னா மரின்

என் குடும்பத்தைப் பற்றி, வெளிப்படையாகப் பேச முடியாமல் நான் மெளனமாக இருந்த காலகட்டம் ரொம்பவும் கடினமாக இருந்தது. எனக்குக் குடும்பம் இருக்கிறது; ஆனால், அது உலகத்தின் கண்களுக்குத் தெரியவில்லை. எங்களை குறைவுபட்டவர்களாக இந்தச் சமூகம் உணர வைத்தது. இவ்வளவு ஏன், எங்கள் மூவரையும் ஒரு குடும்பமாகவே யாரும் அங்கீகரிக்கவில்லை. வழக்கமான குடும்பங்கள் அமையப் பெற்றவர்கள், எங்களை அவர்களுக்குச் சமமாகக்கூட நடத்தவில்லை.

உங்களுக்கு ஒன்று தெரியுமா? இந்தச் சூழ்நிலைகளுக்காக நான் வருத்தப்பட்டிருக்கிறேனே தவிர, என் குடும்பம் குறித்து எப்போதும் நான் கவலைப்பட்டதில்லை. என் குடும்பம் காரணமாக மற்றவர்கள் என்னைக் கேலி செய்வதையும் நான் அனுமதிக்கவில்லை. அந்தளவுக்கு என் சிறு வயதில் வலிமையானவளாகவும் பிடிவாதக்காரியாகவும் இருந்தேன்'' என்கிற சன்னா மரின்,

தன்னுடைய டீன் ஏஜில் பேக்கரியில் வேலைபார்த்திருக்கிறார். அவருடைய குடும்பத்திலிருந்து பல்கலைக்கழகத்தில் படிக்கப்போன முதல் பெண்ணும் சன்னாதான்.

Sanna Marin
Sanna Marin

சன்னாவுக்குத் தற்போது, ஒன்றே முக்கால் வயதில் எம்மா அமலியா என்கிற அழகான மகள் இருக்கிறாள். தன் நிறைமாத வயிறு, மகளுக்குப் பாலூட்டியது, வேலைபார்க்கும் ஓர் அம்மாவாக மகளை வளர்த்தெடுத்தது எனத் தன் வாழ்க்கையின் முக்கியமான காலகட்டங்களையெல்லாம் புகைப்படங்களாக சமூக வலைதளங்களில் போஸ்ட் செய்து, ஓர் அம்மாவாகத் தன் அனுபவங்களை மற்ற பெண்களுடன் பகிர்ந்துவருகிறார் சன்னா மரின்.

இளம் பிரதமருக்கு இன்னொரு `வாவ்'!