Published:Updated:

கல்யாணத்துக்கு ‘யெஸ்’, காமத்துக்கு ‘நோ’...

இளம் தம்பதியர் சந்திக்கும் புதிய  சிக்கல்!
பிரீமியம் ஸ்டோரி
இளம் தம்பதியர் சந்திக்கும் புதிய சிக்கல்!

இளம் தம்பதியர் சந்திக்கும் புதிய சிக்கல்!

கல்யாணத்துக்கு ‘யெஸ்’, காமத்துக்கு ‘நோ’...

இளம் தம்பதியர் சந்திக்கும் புதிய சிக்கல்!

Published:Updated:
இளம் தம்பதியர் சந்திக்கும் புதிய  சிக்கல்!
பிரீமியம் ஸ்டோரி
இளம் தம்பதியர் சந்திக்கும் புதிய சிக்கல்!

அவள் விகடன் நடத்திய குழந்தையின்மை தொடர்பான வெபினாரில் ஒரு பெண் வருத்தத்துடன் தன் கேள்வி யைப் பதிவு செய்திருந்தார்.

``என் கணவர் உடலுறவில் ஈடுபாடு இல்லை என்கிறார். ஆனால், எனக்கு குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும். எப்படியாவது உதவுங்கள் டாக்டர்” என்ற அந்தக் கேள்விக்கு இந்தப் பிரச்னையுடன் வரும் தம்பதியர் எண்ணிக்கை இன்று அதிகரித்திருப்பதாக மருத்துவர் சொன்ன பதில் அதிர்ச்சியளித்தது. திருமண உறவின் அடித்தளமே தாம்பத்தியம் எனும்போது அதை தம்பதியர் தவிர்ப்பது ஏன் என்ற கேள்வி எழுகிறது. குழந்தையின்மை பிரச்னை விஸ்வரூபம் எடுத்துக் கொண்டிருக்கும் நிலையில், பெரும்பாலான தம்பதியருக் குள் தாம்பத்தியமே நிகழ்வதில்லை என்ற உண்மை யையும் நம்பத்தான் வேண்டியிருக்கிறது.

தம்பதியருக்குள் என்னதான் நடக்கிறது... இது என்ன புதிய பிரச்னை..? மருத்துவ நிபுணர்களிடம் பேசினோம்.

குழந்தை பெறுவது மட்டுமே குறிக்கோள் அல்ல!

``ஆறு தம்பதிகளில் ஒருவருக்கு குழந்தையின்மை தொடர்பான ஏதோ ஒரு பிரச்னை இருக்கிறது. அவர் களில் எத்தனை பேருக்கு பாலியல் செயலிழப்பு (Sexual Dysfunction) இருக்கிறது என்பதைக் கண்டறிவது மிகவும் சிரமம். தம்பதியர் இருவருமே வேலைக்குச் செல்லும் பட்சத்தில் இருவரிடமுமே இப்படியான எண்ணம் இருக்கிறது. ஒருவர் மட்டும் வேலைக்குச் செல்கிறார் என்றால், வேலைக்குச் செல்லும் அந்த நபரிடம் இந்த மனநிலை காணப்படுகிறது’’- புள்ளி விவரத்துடன் பேச ஆரம்பிக்கிறார் சென்னையைச் சேர்ந்த, குழந்தையின்மை சிகிச்சை மருத்துவர் வசுந்தரா ஜெகன். சிகிச்சைக்கு வரும் தம்பதியரின் மனநிலையையும் அதில் ஏற்பட வேண்டிய மாற்றங்களையும் பேசுகிறார் அவர்.

``மன அழுத்தம்தான் 80-90% பாலியல் வாழ்க்கையை பாதிக்கும் முக்கிய காரணி. ஐ.டி துறையில் நைட் ஷிஃப்ட்டில் பணியாற்றுவோருக்கு உயிரியல் கடிகாரமே மாறிவிடும். இரவு நேரத்தில்தான் தாம்பத்தியத்தில் ஈடுபட வேண்டும் என்ற பொதுவான மனநிலை இருக்கிறது. இதனால் சந்தோஷத்துக்காக ஈடுபட வேண்டிய தாம்பத்தியம் அழுத்தமாக மாறி, நாளடைவில் அதில் ஈடுபாடு குறைந்துவிடும்.

கல்யாணத்துக்கு ‘யெஸ்’, காமத்துக்கு ‘நோ’...

பிரைவசி சார்ந்த பிரச்னைகள், சர்க்கரைநோய், உயர் ரத்த அழுத்தம், புகைப்பழக்கம், மதுப்பழக்கம், உடல் பருமன், ஹார்மோன் பிரச்னைகளும் காரணங்களாக அமையலாம். தாம்பத்திய உறவு வலி மிகுந்ததாக இருக்குமா என்ற பயத்தினால் சில பெண்கள் வெஜைனா பகுதியை இறுக்கமாக்கி (`வாஜினிஸ்மஸ்') உடலுறவுக்கு ஒத்துழைக்க மாட்டார்கள். தாம்பத்திய உறவுக்கு முன்பு இருவருக்கும் மனரீதியான நெருக்கம் அதிகரிக்க வேண்டும். சிலர் தாம்பத்தியம் வேண்டாம். ஆனால், குழந்தை வேண்டும் என்பதில் மிகவும் உறுதியாக இருப்பார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு உளவியல் சார்ந்த மதிப்பீடுகளையும் செய்வோம்.

எல்லா முறைகளையும் கையாண்டுவிட்டு, எதுவும் கைகொடுக்கவில்லை என்றால் செயற்கைக் கருத்தரிப்பு முறைகளுக்குச் செல்வோம். இதே பிரச்னையோடு 100 தம்பதிகள் வந்தால், கவுன்சலிங் மூலம் 50-60 பேரை சரிசெய்து தாம்பத்தியத்தில் ஈடுபடுத்திவிட முடியும். அதற்குப் பிறகுதான் குழந்தையின்மை சிகிச்சை பற்றி சிந்திக்க வேண்டும். தாம்பத்திய ஈடுபாடின்மைக்கு ஹார்மோன் பிரச்னைகள், கருமுட்டைகளின் எண்ணிக்கை குறைவாக இருப்பது, வயது முதிர்வு போன்றவை காரணம் என தெரிந்தால், கவுன்சலிங்கில் நேரத்தை வீணாக்காமல் நேரடியாக சிகிச்சையைத் தொடங்குவோம்.

குழந்தை பெறுவது என்பது திருமண வாழ்க்கையில் ஓர் அங்கம். அதுதான் திருமண வாழ்க்கையின் ஒட்டுமொத்த குறிக்கோள் என்ற மனநிலை மாற வேண்டும். தாம்பத்திய வாழ்க்கை என்பது தம்பதியிடம் நெருக்கத்தை ஏற்படுத்தி, அவர்களின் நீண்டகால திருமண பந்தத்துக்கு ஓர் அடித்தளமாக அமைய வேண்டும்’’ என்கிறார் டாக்டர் வசுந்தரா ஜெகன்.

கவுன்சலிங் மட்டுமே உதவாது

ஆண்களுக்கு தாம்பத்திய உறவில் அறவே ஈடுபாடு இல்லாமல் போவதற்கான காரணங் களை விளக்குகிறார், சென்னையைச் சேர்ந்த பாலியல் சிகிச்சை மருத்துவர் காமராஜ்.

``பாலியலில் ஆர்வமின்மை என்பதை ஏதோ மனம் சம்பந்தப்பட்ட விஷயம் என நினைத்து வெறுமனே கவுன்சலிங் மட்டும் போதும் என நினைக்கக்கூடாது. முதலில் உடல்ரீதியான பிரச்னைகள் காரணமாக இருக்குமோ என்று பார்க்க வேண்டும். அந்தப் பிரச்னைகளுக்கு சிகிச்சைகள் கொடுத்தாலே இவர்களது தாம் பத்திய வெறுப்பு மாறும்’’ என்பவர் அப்படி சில பிரச்னைகளைப் பட்டியலிடுகிறார்.

`` ‘ஏசெக்ஸுவல்' என ஒரு பிரிவினர் இருக் கிறார்கள். இவர்களுக்கு பாலியலில் துளியும் ஆர்வமே இருக்காது. சிறுவயதில் பாலியல் ரீதியான துன்புறுத்தல்களைச் சந்தித்தது, உடலிலுள்ள வேறு பிரச்னைகள், மனத்தளவி லான பாதிப்பு என இதற்கு பல காரணங்கள் இருக்கலாம். உலகம் முழுவதும் ஏசெக்ஸுவல் பிரிவைச் சேர்ந்த திருமணமாகாதவர்கள், உறவில் ஈடுபாடு இல்லாதவர்கள் என ஏராள மான நபர்கள் அவர்களுக்கான இணைய தளத்தில் பதிவு செய்து வைத்திருக்கிறார்கள்.

அடுத்தது Unconsummated Marriage. அதாவது திருமணமாகியும் தாம்பத்திய உறவு வைத்துக் கொள்ளாத நிலை. 100 திருமணங்களில் நான்கில் இந்தப் பிரச்னை இருக்கிறது. திருமணமான புதிதில் பெரும்பாலான ஆண் களுக்கும் மனைவியிடம் ஆண்மையைக் காட்ட வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். முதல்நாள் உறவு கொள்ளும்போது அது இயலாமல் போகும்போது பயந்து, மனைவியின் அருகில் செல்வதையே நிறுத்தி விடுவார்கள். மனைவி அருகில் வந்தாலே முதல் நாள் தோல்வி நினைவுக்கு வந்து, அவர்களால் உறவில் ஈடுபட முடியாது. கணவனுக்கு என்ன பிரச்னை என்பது மனை விக்கும் தெரியாது. கணவனோ மனைவியை முற்றிலுமாக தவிர்க்கத் தொடங்குவார்.

ஒரே விடுதியில் தங்கியிருப்பவர்கள், ஒரே இடத்தில் வேலை பார்க்கிறவர்கள், இளவயது சிறுவனுக்கும் அவனைவிட வயதில் மூத்த ஆணுக்குமிடையிலான பாலியல் உறவு... என தன்பாலின ஈர்ப்புடைய ஆண்களுக்கு பெண் ணுடனான உறவு என்பது பிடிக்காமலோ, பயமானதாகவோ இருக்கலாம். இவர்களால் ஆண்களிடம் மட்டும்தான் உறவு வைத்துக் கொள்ள முடியும்.

தைராய்டு குறைபாடு மற்றும் புரொலாக்டின் ஹார்மோன் குறைபாடு உள்ளவர்களுக்கும் பாலியலில் ஈடுபாடே இருக்காது.

இவை தவிர, மனநலனுக்கான மருந்துகள், தூக்க மருந்துகள் எடுப்போருக்கும் தாம்பத்திய உறவில் ஈடுபாடில்லாமல் போகலாம்’’ என்கிற டாக்டர் காமராஜ், மேற்குறிப்பிட்ட பிரச்னை களுக்கான தீர்வுகளையும் சொல்கிறார்.

``திருமணமாகியும் உறவு கொள்ளாத நிலையை 100 சதவிகிதம் சரிசெய்ய முடியும். தன்பாலின ஈர்ப்பாளர்களும், ஏசெக்ஸுவல் பிரிவினரும் திருமணம் செய்யாமலிருப்பதே சிறந்தது. பெற்றோர் வற்புறுத்தலுக்கு பயந்து திருமணம் செய்து கொள்வார்கள். ஆனால், இவர்களால் மனைவியுடன் உறவுகொள்ள முடியாது. இவர்களது திருமண வாழ்க்கை குழப்பத்துடனேயே தொடரும் அல்லது விவாகரத்தாகும். ஹார்மோன் குறைபாடுகளை முழுமையாகச் சரிசெய்ய முடியும். புரொலாக்டின் ஹார்மோன் மூளையிலிருந்து சுரக்கக்கூடியது. அந்தச் சுரப்பி வீங்கி நிறைய புரொலாக்டினை சுரந்தாலும் ஆண்மைக் குறைபாடு உண்டாகும். தேவைப்பட்டால் எம்ஆர்.ஐ ஸ்கேன் எடுத்துப் பார்த்து அந்தச் சுரப்பி வீங்கியிருக்கிறதா என்று பார்ப்பதோடு, புரொலாக்டின் அளவைக் குறைப்பதற்கான சிகிச்சையும் பரிந்துரைக்கப்படும்.’’

பிரிவது தீர்வல்ல...

``புதுமண தம்பதியர் மட்டுமன்றி, 50 ப்ளஸ் வயதில்கூட தாம்பத்திய உறவு பிரச்னைகளுக்குத் தீர்வு தேடி வருகிறார்கள்’’ என்கிறார் சென்னை யைச் சேர்ந்த, காக்னிட்டிவ் பிஹேவியரல் மற்றும் செக்ஸ் தெரபிஸ்ட் சுனிதா மேனன். இந்தப் பிரச்னையின் பின்னணி குறித்து வேறொரு பார்வையை முன் வைக் கிறார் அவர்.

``திருமணமாகி ஐந்து வருடங்கள், எட்டு வருடங்களாகியும்கூட ஒரு முறைகூட தாம்பத்திய உறவே நிகழ வில்லை என சொல்லிக் கொண்டு வருபவர்களைப் பார்க்கிறேன். அதாவது உடல்ரீதியான நெருக்க மெல்லாம் இயல்பாக இருக்கும், தாம்பத்திய உறவு மட்டும் நிகழ்ந்திருக்காது. ஏசெக்ஸுவல், தன்பாலின ஈர்ப்பாளர்களைப் போலவே சமீப காலமாக ‘டெமிசெக்ஸுவல்’ என்றொரு பிரிவினரையும் அதிகம் பார்க்கிறேன். அதாவது இவர்களுக்கு ஒரு நபரின்மீது எமோஷனலான பந்தம் ஏற்பட்டால் மட்டுமே தாம்பத்திய உறவுக்கு உடலும் மனதும் ஒத்துழைக்கும்.

விரைப்புத்தன்மை இல்லாதது பலரும் எதிர்கொள்கிற பிரச்னை. இவர்களால் சுய இன்பம் செய்ய முடியும். ஆனால், மனைவி யுடன் உறவில் ஈடுபட முடியாது. விந்து முந்துதல் பிரச்னையும் பெரும்பாலான ஆண் களுக்கு இருக்கிறது. அதிகம் பேசப்படாத இன்னொரு பிரச்னை ‘தாமதமான விந்து வெளியேற்றம்' (Delayed ejaculation). தாம்பத்திய உறவில் பலமணி நேரம் ஈடுபட்டாலும் விந்து வெளியேறாது. இது மனைவிக்குக் கடுமையான வலியையும் அசௌகர்யத்தையும் தரும் என்பதால் அந்த ஆண், தாம்பத்திய உறவையே தவிர்க்க நினைப்பார்.

 வசுந்தரா ஜெகன்,  காமராஜ்,  சுனிதா மேனன்
வசுந்தரா ஜெகன், காமராஜ், சுனிதா மேனன்

அடுத்ததாக மிகக்குறைந்த செக்ஸ் ஆர்வம். இளைஞர்களிடம் காணப்படும் செக்ஸுவல் பிரச்னைகளுக்கு மாறிப்போன அவர்களது வாழ்க்கைமுறை, உணவுப்பழக்கம், ஸ்ட்ரெஸ் என பல காரணங்களைச் சொல்லலாம். இன்றைய இளைஞர்களுக்கு 30 ப்ளஸ்ஸில் திருமணம் நடக்கிறது. அதுவரை செக்ஸ் அனுபவம் இல்லாதவர்களாக இருந்து, திடீரென திருமண உறவுக்குள் நுழையும்போது அவர்களது அனுபவமின்மையும் பதற்றமும் அவர்களது தாம்பத்திய ஆர்வத்தைத் தடுக்கின்றன. பதற்றத்துடன் உறவில் ஈடுபடும் ஆண்களுக்கு அதில் முழுமையாக ஈடுபட முடியாமல் போகும்.

திருமணமானதிலிருந்தே தாம்பத்திய உறவில் ஈடுபாடில்லை, வருடங்கள் கடந்தும் தாம்பத்திய உறவே நிகழவில்லை என்றால் மகிழ்ச்சியற்ற அந்த மணவாழ்க் கையை முறித்துக்கொள்வதில் தவறில்லை. ஆனால், ஆரம்ப காலத்தில் தாம்பத்திய உறவு நன்றாக இருந்து, சில வருடங்கள் கழித்து அதில் ஆர்வமில்லாமல் போகும் போது அதை விவாகரத்துக்கான காரணமாகப் பார்க்க வேண்டியதில்லை.

என்னிடம் கவுன்சலிங் வருபவர்களில் உடல்ரீதியான பிரச்னைகள் இருக்கலாம் என சந்தேகப்படுகிற ஆண்களை சிறுநீரகவியல் மருத்துவரைப் பார்க்கச் சொல்வேன். மற்றவர் களுக்கு பதற்றத்தையும் படபடப்பையும் குறைக்கும் ‘காக்னிட்டிவ் பிஹேவியரல் தெரபி’ கொடுக்கப்படும். பிரசவத்துக்குப் பிறகோ, மெனோபாஸுக்கு பிறகோ குறையும் ஆர்வம், உறவையே அனுமதிக்காத வாஜினிஸ்மஸ் பாதிப்பு, உறவுக்குப் பிறகு அதீத வலி, ரத்தப்போக்கு என பெண் களுக்கும் பாலியல்ரீதியான பிரச்னைகள் இருக்கின்றன.

பிரச்னைகளுடன் வரும் பெண்களை மகப் பேறு மருத்துவரைப் பார்க்கச் சொல்வேன். அதன் பிறகு ஆண்களுக்கு ‘ஸ்டாப், ஸ்டார்ட்’ பயிற்சியும், பெண்களுக்கு ‘கெகல்’ பயிற்சியும் கற்றுத்தரப்படும். எனவே செக்ஸில் பிரச்னை வரும்போது உடனடியாக விவாகரத்து என யோசிக்காமல் தெரபி, கவுன்சலிங், சிகிச்சைகளை முயன்று பார்த்துவிட்டு முடிவு செய்ய லாம்’’ என்கிறார் சுனிதா மேனன்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism