Published:Updated:

பிரேக் அப்புக்குப் பிறகு ஃபிரெண்ட்ஷிப்... ஓகேவா?

``எத்தனை புத்திசாலியா இருந்தாலும், இனிமே அந்தப் பொண்ணு நம்ம வாழ்க்கையில இல்லவே இல்லைன்னு முடிவெடுக்கிறப்போ, அந்த ஃபீலிங் மனசோட ஆணிவேர் வரைக்கும் அசைச்சுப் பார்த்துட்டுத்தான் போகும். இதுல லவ் பண்ண பொண்ணுகூட ஃப்ரெண்டா தொடர்றது எல்லாம் ப்ராக்டிகலா சரிப்பட்டு வராது..."

Love
Love

'பிரேக் அப் ஆயிடுச்சு. இப்ப நல்ல ஃப்ரெண்ட்ஸா இருக்கோம்' - இந்த டயலாக்கை சினிமா செலிப்ரிட்டிகள்தான் சொல்லிக் கேட்டுக்கொண்டிருந்தோம். தற்போது நம் வீட்டு இளைய தலைமுறையினர் சிலரும் சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள். யதார்த்தத்தில் பிரேக் அப்புக்குப் பிறகான ஃப்ரெண்ட்ஷிப் சரிதானா; சாத்தியம்தானா? இருபதுகளில் இருக்கிற இளைஞர்களிடமே கேட்டோம்.

'' 'இந்தக் காதல் கல்யாணத்துல முடியுறது கஷ்டம்', 'நம்ம ரெண்டு பேருக்கும் ஒத்துவராது', 'ஏதோ ஒரு வேகத்துல காதலைச் சொல்லிட்டோம். பிரிஞ்சுடலாம்', 'பேரன்ட்ஸ் ஒத்துக்கவே மாட்டேங்கிறாங்களே'னு ஒரு காதல் பிரேக் அப் ஆகறதுக்கு, பெற்றோரின் சாதி, மதத்துல ஆரம்பிச்சு எங்களோட பேஷன் வரைக்கும் எத்தனையோ காரணங்கள் இருக்கலாம். ஆனா, காதல் எல்லா காலத்துலேயும் மனசு சார்ந்த உணர்வுதான். அதனால, எத்தனை புத்திசாலியா இருந்தாலும், இனிமே அந்தப் பொண்ணு நம்ம வாழ்க்கையில இல்லவே இல்லைன்னு முடிவெடுக்கிறப்போ, அந்த ஃபீலிங் மனசோட ஆணிவேர் வரைக்கும் அசைச்சுப் பார்த்துட்டுத்தான் போகும். இதுல லவ் பண்ண பொண்ணுகூட ஃப்ரெண்டா தொடர்றது எல்லாம் ப்ராக்டிகலா ஒத்தே வராது'' - தேங்காய் உடைத்ததுபோல சொல்கிறார் ஓர் இளைஞர்.

Love
Love

''நான் லவ் பண்ணிக்கிட்டிருந்தப்போ, என் லவ்வர்தான் 'பிரேக் அப் பண்ணிக்கலாம்; ஃப்ரெண்டா இருக்கலாம்'னு சொன்னா. வேற வழியில்லாம நானும் சரின்னு சொல்லிட்டேன். பிரேக் அப்புக்குப் பிறகு அவ நார்மலா, தோழியா ஆயிட்டா. ஆனா, என்னால அப்படியிருக்க முடியல. அவ சாதாரணமா சிரிச்சுப் பேசினாகூட காதலா சிரிக்கிற மாதிரி இருந்துச்சு. கொஞ்ச நாள் ரொம்ப மனஉளைச்சலோட அந்த நட்பைத் தொடர்ந்தேன். பிறகு, அந்த நட்பை நான் துண்டிச்சுட்டேன்'' என்கிறார் வருத்தமுடன் இன்னொருவர்.

''இது சம்பந்தப்பட்டவர்களைப் பொறுத்து மாறும்க்கா. அவங்க லவ் பண்ணும்போது எந்த லிமிட்ல பழகினாங்க அப்படீங்கிறது இதுல ரொம்ப முக்கியம். எல்லைக்குள்ள பழகியிருக்காங்கன்னா, நட்பா இருக்கிறதுல பெரிய தடுமாற்றம் வராது. ஆனா, எல்லை தாண்டி பழகியிருந்தா, நட்பெல்லாம் சாத்தியமே இல்ல. மறுபடியும் காதல்ல விழறதுக்குத்தான் அதிக வாய்ப்பிருக்கு'' - இது இருபதுகளின் மத்தியில் இருக்கிற இளம்பெண்ணின் கருத்து.

''சான்ஸே இல்ல. ரெண்டு பேரும் சேர்ந்து பிரேக் அப் முடிவெடுத்திருந்தாலும்கூட, நட்பா இருக்கிறது ரொம்பக் கஷ்டம். லவ் பண்றப்போ போன அதே இடங்களுக்கு ஃப்ரெண்டாவும் போவோம். அப்போ, அந்தப் பழைய விஷயங்கள் எல்லாம் நினைவுக்கு வந்துடும். நட்பெல்லாம் சான்ஸே இல்ல'' - இது இன்னொருவர் கருத்து.

''சினிமா நடிகர்களுக்கு இது ஓகே. அவங்களுக்குக் கிடைக்கிற எக்ஸ்போஷர் நிறைய இருக்கும். அதனால இதுபோன்ற சூழ்நிலைகளைக் கையாளவும் அவங்களுக்குத் தெரியும். பிரேக் அப்புக்குப் பிறகான நட்பு அவங்களுக்கு ஓகே. நமக்கு எல்லாம் இது சாத்தியப்படாது. உயிருக்கு உயிரா லவ் பண்ணியிருப்போம். பிரேக் அப் சொல்லிட்டு நண்பர்களா அந்த உறவைத் தொடர்வது எல்லாம் ரொம்ப வலிக்கும்'' - இது ஒரு தெளிவான இளம்பெண்ணின் கருத்து.

உளவியல் நிபுணர் லட்சுமி பாய் என்ன சொல்கிறார் ?

'காதலிப்பது, பிரேக் அப் சொல்வது, அதற்குப் பிறகும் நட்பைத் தொடர்வது எல்லாம் சம்பந்தப்பட்ட ஆண், பெண் விருப்பத்தையும் மெச்சூரிட்டியையும் பொறுத்தது. பொதுவாக, ஆண், பெண் நட்பு இணையில் ஒருவருக்குத் திருமணமான பின்னரும் அவர்கள் அந்த நட்பைத் தொடரும்போது அதில் பிரச்னை எதுவும் இல்லை. ஆனால், இவர்கள் ஆரம்பத்தில் நண்பர்களாக இருந்து, பிறகு காதலர்களாக மாறி, பிரேக் அப் ஆகி, மீண்டும் நண்பர்களாகத் தொடரும் சூழலில், திருமண பந்தத்தின் மூலம் புதிதாக இணைந்திருக்கும் துணைக்கு, இவர்களின் நட்பு குழப்பமாகப் படலாம். இந்தக் குழப்பம் காலப்போக்கில் சந்தேகமாகிவிடலாம். தவிர, வாழ்க்கைத்துணை ஒருவேளை சரியில்லாதபட்சத்தில், 'காதலித்த நபரையே திருமணம் செய்துகொண்டிருக்கலாமே' என்ற ஏக்கமும் வரலாம். பிரேக் அப்புக்குப் பிறகு நட்பு கூடாது என்றில்லை. சம்பந்தப்பட்டவர்களுக்கு அதற்கான மனமுதிர்ச்சி இருக்கிறபட்சத்தில் ஓகேதான்!''

Vikatan