ஆசிரியர் பக்கம்
பைக்ஸ்
கார்ஸ்
Published:Updated:

‘‘எனக்கு ட்ரெயினரும் இல்லை; எதிரியும் இல்லை; போட்டியும் இல்லை!’’

சூர்யா
பிரீமியம் ஸ்டோரி
News
சூர்யா

- ராயல் என்ஃபீல்டு ஜிடி கப் சாம்பியன் சூர்யா

சூர்யா
சூர்யா
‘‘எனக்கு ட்ரெயினரும் இல்லை; எதிரியும் இல்லை; போட்டியும் இல்லை!’’

சூர்யாவுக்கு அப்போது 5 வயது இருக்கும். அவனது தந்தை தனது காரில் சூர்யாவை ஒரு ஹில் டிரைவ் கூட்டிச் சென்றார். சூர்யா ரொம்ப ஹேப்பி. கண்ணிமைக்காமல் கவனித்துக் கொண்டே வந்தான். அவன் வேடிக்கை பார்த்தது – கார் விண்டோ வழியாக பாதைகளையோ… இயற்கைக் காட்சிகளையோ அல்ல! அப்பா எப்படி ஸ்டீயரிங் திருப்புகிறார்; எந்த இடத்தில் பிரேக் பிடிக்கிறார்; கியர் லீவரை எந்த இடத்தில் பயன்படுத்துகிறார்; மிரரை எப்போதெல்லாம் பார்க்கிறார். இப்படித்தான் இருந்தது அவனது வேடிக்கையும் கவனமும்!

கார்/பைக் ஓட்ட நினைப்பவர்களுக்கு வேண்டுமானால், இது ஆரம்பப் புள்ளியாக இருக்கலாம். ஆனால், இந்தக் கவனமும் ஆர்வமுமே அவரை இன்றொரு புரொஃபஷனல் ரேஸராக நம் முன் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது. சூர்யாவுக்கு இப்போது 29 வயது. 2016–ல் ரேஸ் பைக் முறுக்க ஆரம்பித்தவர், இப்போது நோவிஸ் கேட்டகிரி, ஒன்மேக் ரேஸ்கள் என்று பல ரேஸ்களில் சாம்பியன். சென்னை, பெங்களூரு, கோவை என்று எந்த ஏரியாவில் ரேஸ் நடந்தாலும், அங்கே சூர்யாவின் பைக் ‘வ்வ்ர்ர்ரூம்’ எனப் பறந்து கொண்டிருக்கும்.

இவரின் ரூக்கி ரேஸ் பெர்ஃபாமன்ஸைப் பார்த்து, சூர்யாவை இரு கரம் கூப்பி வரவேற்றது ஹோண்டா ஃபேக்டரி டீம். இது தவிர டிவிஎஸ் ரேஸிங், யமஹா சாம்பியன்ஷிப்பையும் விட்டு வைக்கவில்லை சூர்யா. 2019–ல் டிவிஎஸ் நடத்திய எண்ட்யூரன்ஸ் கப் ரேஸிங்கில் சாம்பியன்ஷிப் தட்டினார். 2020–ல் MMSC Drag நேஷனல் சாம்பியனும் சூர்யாதான். 2021–ல் 301 – 400 சிசி ப்ரோ ஸ்டாக் கேட்டகிரி நேஷனல் சாம்பியன்ஷிப்பில், 2–வது இடம் வந்து போடியம் ஏறியிருக்கிறார் சூர்யா. இதில் விஷயம் என்னவென்றால், டாப் ரேஸர்கள் கலந்து கொண்ட அந்த ரேஸ் போட்டியில், அதிவேக லேப் ரெக்கார்டையும் உடைத்துச் சாதனை செய்திருக்கிறார். (1.51.454 விநாடிகள்). பல வளைவு வெளிவுகளைக் கொண்ட MMRT ரேஸ் ட்ராக்கை இத்தனை குறைந்த பட்ச வேகத்தில் அச்சீவ் செய்வது சாதாரண விஷயமில்லைதானே!

எம்ஆர்ஃப் நடத்திய ரேஸ்களையும் விட்டு வைக்கவில்லை; ப்ரோ ஸ்டாக் நேஷனல் சாம்பியன்ஷிப்பில் வின்னர் ஆகி… தொடர்ச்சியாக 2022–ல் நடந்த ராயல் என்ஃபீல்டு ஜிடி கப் அமெச்சூர்டு ரேஸிங்கில் சாம்பியன்ஷிப் அடித்து கெத்தாக ட்ராக்கில் பைக் ஓட்டிக் கொண்டிருக்கிறார் சூர்யா.

165 சிசி ப்ரோ ஸ்டாக் கேட்டகிரியில் கில்லியாக, பல போடியம் ஏறியவராக, அதிவேக லேப் ரெக்கார்ட் கொண்டவராக என்று பல சாதனைகள் செய்து, அடுத்த ஆண்டும் ராயல் என்ஃபீல்டு ஜிடி ப்ரோ கேட்டகிரிக்கு ரெடியாகிக் கொண்டிருக்கும் சூர்யாவுடன் ஒரு சின்ன சிட் சாட் செய்தேன்.

‘‘எனக்கு ட்ரெயினரும் இல்லை; எதிரியும் இல்லை; போட்டியும் இல்லை!’’

‘‘ஹாய் சூர்யா… உங்களைப் பற்றிச் சொல்லுங்கள்! எப்படி பைக் ஓட்டுற ஆர்வம் வந்தது? என்னென்ன பிரச்னைகளைச் சந்திச்சீங்க?’’

‘‘நான் சென்னையைச் சேர்ந்த அக்மார்க் ரேஸன். 2016–ல்தான் முதன் முதலாக பைக் ஆக்ஸிலரேட்டர் முறுக்க ஆரம்பிச்சேன். சின்ன வயசில் இருந்தே கார்/பைக்ஸ்தான் இஷ்டம். இதுக்குக் காரணம், என் அப்பாதான். அவருக்கு கார்கள்னா உயிர். நிறைய கார் கலெக்ஷன்களில் ஆர்வம் அவருக்கு. லாங் ட்ரிப்புக்கு அடிக்கடி என்னைக் கூட்டிட்டுப் போவார். அதுதான் நீங்க இன்ட்ரோலேயே சொல்லியிருக்கீங்களே… எல்லாப் பசங்களும் வெளிய வேடிக்கை பார்த்தா… நான் ஸ்டீயரிங், பிரேக், க்ளட்ச்னு நுன்னிப்பா கவனிப்பேன். அப்படித்தான் எனக்கு கார்/பைக் ஓட்ட ஆர்வம் வந்துருக் கணும்னு நினைக்கிறேன்.

ஏழு வயசுலேயே பைக் ஓட்ட ஆரம்பிச்சேன். எட்டு வயசுலேயே கார் ஓட்ட ஆர்வம் வந்துடுச்சு. அந்த வயசுல அது டூ மச்னு எனக்குத் தெரியும். வீட்ல திட்டினாங்க. ‘சின்னப் பையன் இதெல்லாம் பண்ணக் கூடாது; லைசென்ஸ் வாங்கினப்புறம்தான்’னு சொன்னாங்க. எனக்கு கார்/பைக் ரெண்டுமே ஓட்டப் பிடிச்சது. ஆனால், கார் கொஞ்சம் காஸ்ட்லி. அதுனால என் கவனத்தை பைக்ஸ் பக்கம் திருப்பிட்டேன். வீட்டுக்குத் தெரியாம பைக் ஓட்டக் கத்துக்கிட்டேன்.

10–ம் வகுப்புப் படிக்கும்போது, என் தாத்தா சொன்னார். ‘எதுலயாச்சும் சென்ட்டெம் வாங்கினா உனக்கு பைக் வாங்கித் தர்றேன்’னு சொன்னார். சொன்ன மாதிரியே வாங்கினேன். இதில் தாத்தாவுக்கும் அப்பா–அம்மாவுக்கும் சண்டை. ‘சின்னப் பையனைக் கெடுக்காதீங்க’னு என் அப்பா – தாத்தாவுக்கு அட்வைஸ். நான் அடம்பிடிச்சு, ஒரு வழியா ஸ்கூட்டி பெப் ப்ளஸ் வாங்கச் சொல்லி அடம்பிடிச்சேன். அதுக்கப்புறம் இளைஞன் ஆனப்புறம் நானாகவே பைக் ட்ரிப் போக ஆரம்பிச்சேன். இப்படித்தான் எனக்கு பைக் ஓட்டுற ஆர்வம் வந்துச்சு!’’

‘‘ரேஸ் ட்ராக்கில் எப்படி நுழைஞ்சீங்க? என்னென்ன பிரச்னைகளைச் சந்திச்சீங்க? யார் உங்க ட்ரெய்னர்?’’

‘‘எனக்கு வேகமா பைக் ஓட்டணும்னு ரொம்ப ஆசை. ஆனா அதுக்கு ரோடு சரியான இடம் இல்லைங்கிறது எனக்குத் தெரியும். ட்ராக்தான் அதுக்குச் சரியான சாய்ஸ். எப்படியாச்சும் ட்ராக்கில் ஓட்டிடணும்னு ஆசை. ஒரு தடவை என் நண்பனோட கேடிஎம் நடத்துற ட்ராக் டே அப்படிங்கிற பைக் ரேஸ் ஈவென்ட்டுக்குப் போயிருந்தேன். அவனோட பைக்கைத்தான் கடன் வாங்கிட்டுப் போயிருந்தேன். ‘எனக்கு வேகமா போகணும்’ அவ்வளவுதான். பைக் ரேஸிங் ரூல்ஸ்… எத்திக்ஸ்லாம் தெரியாது. அங்க வேகமா போன ஒருத்தங்களைப் பார்த்து… அவங்ககிட்ட கேட்டுக் கத்துக்கிட்டேன். அவ்வளவுதான். அவரை வேணா என்னோட ஃபர்ஸ்ட் ட்ரெயினர்னு சொல்லலாம். MMRT–ல் நடந்த அந்த ரேஸில்.. .ஆச்சரியம்… நான் எந்த இடத்திலும் கீழே விழுந்து க்ராஷ் ஆகவே இல்லை. கார்னரிங்கிலும் அவர் பண்ணதைப் பார்த்துக் காப்பி அடிச்சுத்தான் பண்ணேன். அப்போதான் எனக்குள்ள இருக்கிற ரேஸன் கண் விழிச்சான்! எனக்கே ஆச்சரியம். எந்த ட்ரெயினருமே இல்லாம… நானே பைக் ரேஸ் ஓட்டக் கத்துக்கிட்டேன்!

‘‘எனக்கு ட்ரெயினரும் இல்லை; எதிரியும் இல்லை; போட்டியும் இல்லை!’’
‘‘எனக்கு ட்ரெயினரும் இல்லை; எதிரியும் இல்லை; போட்டியும் இல்லை!’’

அப்போதான் எனக்கு ரேஸ் பைக்குக்கும், ஸ்ட்ரீட் பைக்குக்கும் வித்தியாசம் தெரிஞ்சது. அதாவது, ரோட்ல பைக் ஓட்டுறதுக்கும்… ட்ராக்கில் பைக் ஓட்டுறதுக்கும் வித்தியாசம் தெரிஞ்சது! 7 வருஷத்துக்கு முன்னாடி என்கிட்ட கேட்டா… ஸ்ட்ரீட் பைக்ஸ் ஓட்டுறதுல இருக்கிற சுகம் எதுலயும் இல்லைனு சொல்லிட்டு இருந்தேன். ஆனா, இப்போ கேட்டா ரேஸ் பைக் ஓட்டுறதுல… காத்தைக் கிழிச்சுக்கிட்டு ட்ராக்கில் 100 கிமீ–க்கு மேல் பறக்குறதுல இருக்கிற சுகம் எதுலயும் இல்லைனு தோணுது.

எல்லோர் வீட்லயும் போலத்தான். எங்க வீட்லயும் நான் ரேஸ் ஓட்டப் போறேன்னு தெரிஞ்சதும் செம எதிர்ப்பு. சொந்தக்காரங்களும் அட்வைஸ் பண்ணினாங்க. அடம்பிடிச்சதால, கொஞ்சம் கொஞ்சம் பணம் கொடுத்தாங்க அப்பா. அப்புறம் நானே சொந்தமா வேலைக்குப் போய்… ஃபைனான்ஸியல் பிரச்னைகளை, ரைடிங் கியர் வாங்குறது.. மத்த செலவுகள்னு அது மூலமாகவே தீர்த்துக்கிட்டேன். இப்போ எங்க அப்பா அம்மா எல்லோருக்குமே நான் ஒரு ரேஸன் என்பதில் பெருமைதான்!’’

‘‘இப்போ நினைச்சாலும் பெருமைப்படுற விஷயம்?’’

‘‘பல ட்ராக் ரெக்கார்டுகள் இருந்தாலும், இதைத்தான் இப்போதும் இன்ட்ரஸ்ட்டிங் அனுபவமாகப் பார்க்கிறேன். 2021–ல் 400 சிசி கேட்டகிரி நேஷனல் சாம்பியன்ஷிப் ரேஸ் நடந்துக்கிட்டிருக்கு. செகண்ட் ரவுண்டில், எம்ஆர்எஃப் கம்பெனி புது காம்பவுண்ட் டயர்கள் ப்ரொவைடு பண்ணாங்க. என்னைப் போன்ற ரேஸர்கள் எல்லோருக்குமே அந்த டயர் புதுசு! ஆனா ஒரு அதிசயம் – நான் அந்த ரவுண்டில் அந்த சிசி கேட்டகிரியில் அந்த டயர்களை வெச்சுத்தான் ஃபாஸ்ட்டஸ்ட் லேப் ரெக்கார்டு பண்ணி முடிச்சேன். இது 0.600 விநாடிகள், எனக்குப் பின்னால் வந்த ரைடரைவிட அதிகம். இது எனக்கு இப்போ நினைச்சாலும் புல்லரிக்கும்!’’

‘‘ரேஸிங் துறையில் நண்பர்கள், எதிரிகள். ட்ராக்கில் யார் உங்களுக்கு முக்கியமான போட்டி? பிடிச்ச ரேஸர்… பிடிச்ச பைக்?’’

‘‘எனக்கு ரொம்பப் பிடிச்ச ரேஸர்னா… நிச்சயமா அது ராஸிதான். என்னோட ட்ரீம் பைக்னு சொன்னா, டுகாட்டி V4 சூப்பர் லஜேரா. எனக்கு ஏகப்பட்ட நண்பர்கள் இருக்காங்க ரேஸிங்கில். ஆனால், எதிரிகள்னு சொல்லிக்கிற அளவுக்கு யாரும் இல்லை. ஒருவேளை – நான் இன்னும் வளரலையோனு தெரியலை. ஆனா, இன்னொண்ணு தெளிவா சொல்வேன். ரேஸ் ட்ராக்கில் எனக்குக் கடுமையான போட்டினா யார் தெரியுமா? அது நான்தான்! ஆம், நான்தான் எனக்குப் போட்டி. இது எனக்குனு இல்லை; எல்லோருக்குமே அப்படித்தான். உங்களை நீங்களே போட்டியா நினைச்சு பைக் ஓட்டிப் பாருங்க. செம எக்ஸ்பீரியன்ஸ் கிடைக்கும்!’’