தன்னம்பிக்கை
தொடர்கள்
லைஃப்ஸ்டைல்
ஹெல்த்
Published:Updated:

நான் நானாகவே பெற்ற வெற்றி இது! - சம்யுக்தா விஜயன்

சம்யுக்தா விஜயன்
பிரீமியம் ஸ்டோரி
News
சம்யுக்தா விஜயன்

மாற்றம்

``பொள்ளாச்சிதான் என் பூர்வீகம். டெய்லர் வேலை செய்துவந்த எங்கப்பா, குடும்ப வறுமையை மீறி என்னையும் அண்ணன் தம்பிகளையும் கான்வென்ட்டில் படிக்க வெச்சாங்க. வித்தியாசமாக இருந்த என் உடல்மொழி மற்றும் பழக்கவழக்கங்களைப் பத்தி குடும்பத்தினர் எந்தக் குறையும் சொன்னதில்லை. டான்ஸ் உட்பட நான் ஆசைப்பட்ட விஷயங்களைக் கத்துக்க ஊக்கம் கொடுத்தாங்க.

இன்ஜினீயரிங் கவுன்சலிங்ல, தமிழகத்தில் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோரில் 100-வது இடம் பிடிச்சேன். கோவை பி.எஸ்.ஜி காலேஜ்ல இன்ஜினீயரிங் படிச்சேன். பெண் தன்மையுள்ள என் செயல்பாடுகளால் நிறைய புறக்கணிப்புகளை எதிர்கொண்டேன். இதனாலேயே முதல் வருஷம் படிப்பில் சரியா கவனம்செலுத்த முடியலை. `என்னைக் கிண்டல் செய்தவங்க முன்னாடி நல்ல நிலைக்கு உயர்ந்து காட்டணும்; அது, படிப்பால் மட்டுமே சாத்தியமாகும்’னு உறுதியா நம்பினேன். நல்லா படிச்சு, கேம்பஸ் இன்டர்வியூல தனியார் நிறுவனத்துல வேலை வாங்கினேன். அந்த நிறுவனத்திலும், அமேசான் நிறுவனத்தின் சென்னை மற்றும் பெங்களூரு கிளைகளிலும் தொழில்நுட்ப வல்லுநராக சில ஆண்டுகள் வேலை செஞ்சேன். 2010-ம் ஆண்டில், சில வருத்தங்களுடன் வெளிநாடு போயிட்டேன். மீண்டும் இந்தியா திரும்பியதிலிருந்து தொடர்ந்து மதிப்புடன் வாழ்கிறேன்” - பெருமிதத்துடன் பேசும் சம்யுக்தா விஜயன், சமூகப் புறக்கணிப்புகளைப் புறந்தள்ளி சாதித்திருக்கும் முன்னோடி திருநங்கை. அமேசான் நிறுவனத்தில் உயர் பொறுப்புகளைத் திறம்படச் செய்தவர், இப்போது ஸ்விகி நிறுவனத்தின் முதன்மை தொழில்நுட்பத் திட்ட மேலாளராக பெங்களூரில் பொறுப்பேற்றிருக்கிறார். அவரோடு ஓர் உரையாடல்...

வருத்தத்துடன் வெளிநாடு செல்ல காரணம்?

இந்தியாவில் வேலைபார்த்துட்டு இருந்தப்போ நிறைய புறக்கணிப்புகளைச் சந்திச்சேன். மேற்கொண்டு இங்க இருந்தால், நான் நானாக இருக்க முடியாதுன்னு நினைச்சேன். ஐரோப்பிய கண்டத்திலுள்ள லக்சம்பர்க் நாட்டிலுள்ள அமேசான் நிறுவனக் கிளைக்கு டிரான்ஸ்ஃபர் வாங்கிட்டுப்போனேன். அங்க நடந்த அலுவலக நிகழ்ச்சி ஒன்றில், மூன்றாம் பாலினத்தவர்கள் உட்பட எல்லோரும் தங்கள் வாழ்க்கைத்துணையைக் கூட்டிட்டுவந்து அறிமுகப்படுத்தினாங்க. அது எனக்கு ஆச்சர்யத்தையும் நம்பிக்கையையும் கொடுத்துச்சு.

அடுத்து, அமேசான் நிறுவனத்தின் அமெரிக்கக் கிளையில் இணைந்தேன். ஒன்றரை வருஷத்திலேயே எனக்கு கிரீன் கார்டு கிடைச்சது. அங்க, மூன்றாம் பாலினத்தவர்களுக்கென பிரத்யேகக் குழுக்கள் இருந்துச்சு. பெண்ணாக மாறி, எனக்குப் பிடிச்ச மாதிரி வாழணும்னு முடிவெடுத்தது அப்போதான். என் முடிவை வீட்டில் சொன்னப்போ, `நீ எப்படி வந்தாலும் சரி, எப்போ வந்தாலும் சரி... சந்தோஷமா வீட்டுக்கு வா, எப்போதும் உனக்கு ஆதரவா இருப்போம்’னு சொன்னாங்க. பிறகு, என் நிறுவனத்தின் இன்ஷூரன்ஸ் மூலமாகவே ஆபரேஷன் செய்துகிட்டு திருநங்கையா மாறினேன்.

உங்கள் வீட்டுக்குச் சென்றபோது...

திருநங்கையா மாறிய பிறகு, 2016-ம் ஆண்டு தீபாவளிக்கு ஊருக்குப் போனேன். எல்லோரும் என்னை சந்தோஷமா வரவேற்றாங்க, கவனிச்சுக்கிட்டாங்க. பிறகு ஒரு வருஷம் கழிச்சு என் தம்பி கல்யாணத்துக்குப் போனேன். `இதுதான் என் பொண்ணு’ன்னு எங்கம்மா எல்லோர்கிட்டயும் என்னை அறிமுகப்படுத்தி சந்தோஷப்பட்டாங்க. இதுக்கிடையே, என் பெயரை மாத்திக்கலாம்னு அம்மாகிட்ட ஆலோசனை கேட்டேன். `நீ பொண்ணா பிறந்திருந்தா சம்யுக்தானு பெயர் வெச்சிருப்பேன்’னு சொன்னாங்க. அதே பெயரை வெச்சுக்கிட்டேன். இப்போ நான் நானாகவே இருக்கிறேன்; உழைக்கிறேன்; வெற்றிபெற்றிருக்கேன்.

நான் நானாகவே பெற்ற வெற்றி இது! - சம்யுக்தா விஜயன்

ஸ்டார்ட் -அப் தொடங்கியது பற்றி...

நல்ல நிலைக்கு உயர்ந்துட்டேன்னு நம்பிக்கையுடன் 2017-ம் ஆண்டு இந்தியா திரும்பினேன். அமேசான் நிறுவனத்தின் பெங்களூரு கிளையில் வேலை. அங்க மூன்றாம் பாலினத்தவர் களுக்கான குழுவைத் தொடங்கியதுடன், திருநங்கைகளுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்திக்கொடுக்கவும் முயன்றேன். அந்த நோக்கத்தை விரிவுபடுத்த, `Toutestudio’ என்கிற ஸ்டார்ட்-அப் நிறுவனத்தைத் தொடங்கினேன். திருநங்கைகளின் ஃபேஷன் டிசைன், மேக்கப் மற்றும் ஹேர்ஸ்டைலிங் போன்ற திறமைகளைத் தொடர்ந்து ஊக்குவிக்கிறேன்.

இந்தியாவில் மூன்றாம் பாலினத்தினரின் முன்னேற்றத்துக்கு உங்கள் ஆலோசனை...

2014-ம் ஆண்டு, இந்தியாவில் மூன்றாம் பாலினத்தவருக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுச்சு. `ஆணாக அல்லது பெண்ணாக அல்லது மூன்றாம் பாலினத்தவராக தங்களுக்குப் பிடித்த பெயரில் செயல்பட அவர்களுக்கு உரிமையுள்ளது. கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் மூன்றாம் பாலினத்தவர் களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும்’னு அப்போ உச்ச நீதிமன்றம் தீர்ப்பு சொன்னது. ஆனா, அதன்படி எதுவும் நடக்கலை. இட ஒதுக்கீடு உறுதிசெய்யப்பட்டால்தான், மூன்றாம் பாலினத்தவர் பல்வேறு உயர் பொறுப்புகளுக்கு முன்னேற முடியும். இப்போது, தமிழகத்துல செயல்படாமல் இருக்கும் திருநங்கைகள் நல வாரியமும் நல்ல முறையில் செயல்படணும்

மூன்றாம் பாலினத்தவர்கள் மட்டுமல்ல... கறுப்பா இருக்கிறவங்க, குண்டா இருக்கிறவங்க, மாற்றுத்திறனாளிகள்னு கொஞ்சம் வித்தியாசமா இருக்கிற எல்லோருக்குமே சமூகத்தில் புறக்கணிப்புகள் இருக்குது. கிண்டல் பண்றவங்களுக்கு நம்ம வலி தெரியாது. அதே நேரம், நம்மளோட குறைபாடுகள்னு அவங்க நினைக்கிற விஷயங்களைத் தாண்டி நாம நல்ல நிலைக்கு உயர்ந்துட்டா, கிண்டல் பண்ணிய சமூகம் நம்மை பெருமையா பேச ஆரம்பிச்சுடும். இதுக்கு நானும் ஓர் உதாரணம் என்பதில் பெருமிதம். அப்படி ஓர் இடத்துக்கு வர புலம்பல் எந்த வகையிலும் பயன் தராது. திறமையை வளர்த்துக்கணும்; நிறைய உழைக்கணும். உயர்வு நிச்சயம் வரும்!”