தொடர்கள்
லைஃப்ஸ்டைல்
Published:Updated:

புத்துயிர்ப்பு: ஒரு பெண் எழுத்தாளரின் சுயபரிசோதனை

புத்துயிர்ப்பு
பிரீமியம் ஸ்டோரி
News
புத்துயிர்ப்பு

நான் என் அகத்தையே எழுதுகிறேன். அழகு என்பது வெளியில் இல்லை. அது உள்ளிருந்தே உற்பத்தியாகிறது' என்கிறார் நிலீனா.

நிலீனா மாத்தாயைத் தெரியாதவர்கள் அநேகமாக யாரும் இருக்கமாட்டார்கள். அவருடைய ஒரு கதையையும் நான் இதுவரை படித்ததில்லை என்று சொல்பவர்களின் எண்ணிக்கை மிக மிகச் சொற்பமாக இருக்கும். அந்தச் சொற்பமானவர்கள் அநேகமாக எழுத்தறிவு பெறாதவர்களாக இருப்பார்கள். இந்தியாவில் அப்படிப்பட்டவர்கள் இன்னமும் இருக்கிறார்கள்தானே..?

அழகிய நாய்க்குட்டிகளும் விதவிதமான பறவைகளும் மெலிதாகக் கொஞ்சி சத்தமிட்டுக் கொண்டிருக்கும் ஓர் அறையில் அமர்ந்து எழுதுவதால்தான் நிலீனாவின் எழுத்துகள் வசீகரமானவையாக இருக்கின்றனவா? அவர் மேஜை முழுக்க நிரம்பியிருக்கும் வண்ண வண்ண மலர்களின் வாசம்தான் அவர் எழுத்தின் வாசமா? நிலீனாவின் மெலிந்த, அழகிய விரல்களின் வழியே வருவதால்தான் அவர் எழுத்துகள் அழகாக இருக்கின்றனவா?

ஒரு மாலைப்பொழுதில் நண்பர்களோடு அமர்ந்து தேநீர் அருந்தியபடி இதை நீங்கள் விவாதித்து மகிழலாம்.

பொக்ரானில் வெற்றிகரமாக இந்தியா அணு ஆயுதப் பரிசோதனையை நிகழ்த்தி ஆர்ப்பரித்துக்கொண்டிருந்தபோது நிலீனா ரோஜா இதழ்கள் மிதக்கும் ஒரு சிறிய குளியல் தொட்டியில் நறுமணத் தைலம் தடவிய உடலோடு இறங்கிக்கொண்டிருந்தார். டர்க்கி டவலோடு வெளியில் வந்து, தன் புருவங்களை உயர்த்தியபடி, ‘அதென்ன பொக்ரான்?’ என்று அவர் கேட்டதை, புகழ்பெற்ற மாதமிருமுறை இலக்கிய இதழ் தன் தலையங்கத்தின் தலைப் பாகவே குறிப்பிட்டிருந்தது.

‘நிலீனாவின் படைப்புலகில் அரசியல், அணு ஆயுதம் போன்ற சலிப்பூட்டக்கூடிய செய்திகளை நீங்கள் பார்க்க முடியாது. மாறாக, இந்தச் சலிப்பூட்டும் உலகிலிருந்து உங்களை விடுவித்து, எல்லாவற்றையும் மறக்கச் செய்து, முற்றிலும் மாயமான ஓர் உலகுக்குள் உங்களைக் கடத்திச் சென்றுவிடும் ஆற்றல் அவரிடம் உண்டு’ என்று நமக்கெல்லாம் தெரிந்த கறாரான அந்த விமர்சகரும்கூட அதே இதழில் ஒரு நீண்ட கட்டுரையொன்றில் குறிப்பிட்டிருந்தார்.

புத்துயிர்ப்பு
புத்துயிர்ப்பு

`நான் என் அகத்தையே எழுதுகிறேன். அழகு என்பது வெளியில் இல்லை. அது உள்ளிருந்தே உற்பத்தியாகிறது' என்கிறார் நிலீனா. `எழுதும்போது நான் என் ஜன்னலை மட்டுமல்ல, வெளியுலகையும் மூடி விடுகிறேன். என் அகத்தோடு புறவுலகமும் அதில் உள்ளவையும் குறுக்கிடுவதை நான் விரும்புவதில்லை. எழுத்து அழகுதான். அதே நேரம் அது ஒரு வலியும்கூட. கொந்தளிப்பான மனநிலையில்தான் நான் எழுதுகிறேன். எழுதி முடித்து பேனாவைக் கீழே வைக்கும்போது நிம்மதி எனக்குள் படர்கிறது' என்கிறார் நிலீனா. ‘ஒரு படைப்பாளருக்கு அகப் போராட்டங்களே முக்கியம்’ என்று சரியாகவே செல்கிறார் அந்த விமர்சகர்.

1959-ம் ஆண்டு, திருவனந்தபுரத்தில் நடைபெற்ற காவல்துறை துப்பாக்கிச் சூட்டில் ஃபுளோரி என்னும் கர்ப்பிணி கொல்லப்பட்டார். உலகின் முதல் கம்யூனிச அரசு கேரளாவில் அமைந்ததைப் பொறுக்க மாட்டாமல் மூண்ட கலவரத்தின்போது இது நடந்தது. அரசைக் கலைக்க வேண்டும் என்று சொல்லி கலவரத்தில் ஈடுபட்டவர்களை விட்டுவிட்டு அப்பாவி ஃபுளோரியைக் கொல்லலாமா என்று முழங்கியபடி மாணவர் களும் பொதுமக்களும் பேரணியில் சென்றனர். ‘அவர்களோடு நானும் முதன்முறையாக நீண்ட தொலைவுக்கு நடந்துபோனேன். அன்றைய தினம் பார்த்து ‘ஹை ஹீல்ஸ்’ அணிந்து சென்றதுதான் நான் செய்த தவறு. என் காலை அது நன்றாகப் பதம் பார்த்துவிட்டது. பல நாள்கள் காயம் ஆறவேயில்லை. போராட்டம், பேரணி போன்ற சொற்களை இன்று கேட்டாலும் அந்தக் காயம்தான் முதலில் எனக்கு நினைவுக்கு வரும். இது எனக்கான களமல்ல என்று அன்றே ஒதுங்கிவிட்டேன்’ என்று ஒரு பேட்டியில் நினைவுகூர்ந்தார் நிலீனா.

இதை வாசித்த அந்த விமர்சகர் நெகிழ்ந்து போனார். ‘நிலீனா மென்மையானவர். ஒரு மலர் எவ்வாறு விரிகிறது என்பதை அவதானித்து எழுதும் ஆற்றல் கைவரப்பெற்றவர். போராட்டம், அரசியல், பேரணி, மனித உரிமை ஆகியவற்றையெல்லாம் அவரிடம் கொண்டு செல்லாதீர்கள். ஒரு துப்பாக்கி எப்படி வெடிக்கும் என்று அவரிடம் கேட்காதீர்கள்’ என்று அவர் சினந்து எழுதும்படி ஆயிற்று.

ஒரு பெரிய கோட்டையைக் கட்டிக்கொண்டு உலகிடமிருந்து துண்டித்துக் கொண்டு வாழும் ஒவ்வொருவரும் நிலீனா மாத்தாய்தான்.

அஜிதாவுக்கும் நிலீனாவுக்கும் ஒரே வயது. ஒரே இடத்தில் அருகருகில் வசித்தவர்கள். ஒரே பள்ளியில் ஒன்றாகப் படித்தவர்கள். நிலீனாவின் சுயசரிதையில் இது பதிவாகியிருக்கிறது. இந்த அஜிதாவுக்கு என்ன ஆனதோ தெரியவில்லை, வர்க்கப் போராட்டம், ஏகாதிபத்தியம், நவ காலனியம் என்றெல்லாம் பேசத் தொடங்கி இறுதியில் ஒரு நக்சல் போராளியாகவே மாறிவிட்டார். கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளை அவர் சிறையிலும் கழிக்க நேர்ந்தது. அஜிதாவை நிலீனா துல்லியமாக நினைவில் வைத்திருந்து எழுதியிருப்பது வியப்புக்குரியது. ‘நானும் அஜிதாவும் ஒரே மாதிரியான கம்மல் அணிந்திருந்தோம். நாங்கள் பேசும்போது எங்கள் கம்மல்கள் அழகாகக் காற்றில் அசைந்தாடியதை இப்போதும் என்னால் கண்கள் மூடிப் பார்க்க முடிகிறது.’

நிலீனாவைப் பின்பற்றி பின்னர் அஜிதாவும் தன் நினைவுக்குறிப்புகளை எழுதி வெளியிட்டார் என்றாலும், அது ‘மிகவும் தட்டையாக’ இருந்ததையும் ‘அழகியல் கூறுகள் அற்று வறட்டுத்தனமாகவும் இயந்திரகதியிலும்' இருந்ததையும் உலகமே காணநேர்ந்தது. என்னதான் அருகருகில் அமர்ந்து படித்தாலும், என்னதான் நெருங்கிப் பழகினாலும் நிலீனாவைப் போல அஜிதாவால் கவித்துவமாக ஒரேயொரு காட்சியைக்கூட வடித்துக்கொடுக்க முடியவில்லை. நிலீனா வுக்குக் கிடைத்த ‘உள்ளொளி தரிசனம்’ அவருடன் படித்த ஒரே காரணத்துக்காக மற்றவர்களுக்கும் கிடைக்கும் என்று எதிர்பார்க்க முடியாதல்லவா?

1992 டிசம்பர் 6 அன்று பாபர் மசூதி இடிக்கப்பட்டுக்கொண்டிருந்தபோது நிலீனா மும்பையில் மிகுந்த எதிர்பார்ப்புகளிடையே நடைபெற்றுக்கொண்டிருந்த ‘மிஸ் இந்தியா’ அழகுப் போட்டியின் நடுவராக அமர்ந்திருந்தார். கேரளாவிலிருந்து ஒரு பெண் இப்படி நடுவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது வரலாற்றில் அதுவே முதன்முறை. ஆனால், நிலீனாவின் சாதனை என்பது அது மட்டுமேயல்ல. இறுதிச்சுற்றில் தேர்வான ஆறு பெண்களையும் கவனமாக ஆராய்ந்து இறுதியில் ஓர் இஸ்லாமியப் பெண்ணை வெற்றியாளராக அறிவித்தார் நிலீனா. அந்தப் பெண்ணின் இரு கன்னங்களிலும் முத்தமிட்டு அவள் தலையில் கிரீடத்தை வைத்த பிறகு பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியில், ‘அழகுக்கு மதமில்லை’ என்று நிலீனா அறிவித்தது மறுநாள் பல செய்தித்தாள்களில் இரண்டாம் பக்கத்தில் (முதல் பக்கத்தை மஸ்ஜித் பிடித்துக்கொண்டுவிட்டது) இடம் பெற்று கவனம்பெற்றது.

`மதத்தையும் மனிதத்தையும் கடந்த அழகியல் என்பது வேறொன்றுமில்லை, அது ஆன்மிகம்தான்' என்று அதே கறார் விமர்சகர் ஒரு கோட்பாட்டு விளக்கத்தைத் தொடங்கி வைத்தார். வாதம், எதிர்வாதம், பிரதிவாதம் என்று அது நீண்டு நீண்டு சென்றது. பின்னர் தொகுக்கப்பட்டு, தனிநூலாகவும் வெளிவந்தது. அதற்கு நிலீனா ஒரு நீண்ட அணிந்துரையையும் அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

எமர்ஜென்சியின்போது எழுத்தாளர்கள், அறிவுஜீவிகள், பத்திரிகையாளர்கள் என்று அனைவரும் பெரும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக நேர்ந்தது. நடு இரவில் கதவு தட்டப்பட்டு, உறக்கம் கலையாமல் எழுந்துவந்து திறந்தவர் களை நிறுத்தி வைத்து, `நீங்கள் யார் பக்கம்...' என்று கேட்கப்பட்டது. நிலீனாவும் இதிலிருந்து தப்பவில்லை. `நீங்கள் யார் பக்கம்' என்று ஒரு காவலர் கேட்டதும் நிலீனா அந்தக் காவலரைப் பார்த்து மென்மையாகப் புன்னகைத்தார். ‘நான் எப்போதும் அழகின் பக்கம்தான். அழகியலின் பக்கம்தான்’ என்றார். மறுநாள் காலை எலுமிச்சைத் தேநீர் அருந்தும்போது, பல படைப்பாளர்கள் கைது செய்யப்பட்ட செய்தியைக் கண்டு திடுக்கிட்டுப்போனார் நிலீனா.

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையில் போர் மூண்ட அன்றுதான், தன் இணையைப் பிரிந்து வாடும் காதல் கிளி பற்றிய நிலீனாவின் இன்றும் அடிக்கடி மேற்கோள் காட்டப்படும் அந்தக் கவிதையும் வெளிவந்தது. ‘நான் எழுதுவது வேறுவகையான போர் குறித்து. என் கவிதை உலகின் ஆன்மாவை, அந்த ஆன்மாவின் எல்லையை நான் போரிட்டுக் காக்கிறேன். என் ஆயுதம் என் பேனா’ என்று சுயசரிதையில் குறிப்பிட்டார் நிலீனா.

நிலீனாவின் இந்த வரிகளைப் பல போராளிக் கவிஞர்கள் தங்கள் கவிதைத் தொகுப்பின் முதல் பக்கத்தில் அச்சிட்டுக்கொண்டார்கள்.

`என் உலகம் வேறு. அதில் உங்கள் உலகைப் புகுத்தாதீர்கள்' என்று தன் தோள்களை அழகாகக் குலுக்கிக்கொள்கிறார் நிலீனா. `நிலீனா நம் காலத்து வரம். அவர் ஓர் அபூர்வமான மலர்' என்கிறார் அந்த விமர்சகர். `இலக்கியத்தை மாசுப்படுத்தாதீர்கள். கலைகளைத் தூய்மையாக இருக்கவிடுங்கள்' என்று தலையங்கம் எழுதுகிறது அந்த இலக்கிய இதழ். நிலீனாவின் மேஜையிலிருக்கும் மலர் கூஜாவின் மீது ஒரு பட்டாம்பூச்சி வந்து அமர்கிறது. நிலீனா தன் பேனாவை மென்மையாகத் திறக்கிறார்.

‘ஒரு பெண் எழுத்தாளர் தன்னை விமர்சித்துக்கொள்கிறார்’ என்னும் தலைப்பில் சாரா ஜோசப் எழுதியிருக்கும் மலையாள சிறுகதையில் இடம்பெறும் பாத்திரம் நிலீனா மாத்தாய். இதை நீங்கள் யாரை மனத்தில் வைத்து எழுதினீர்கள் என்று கேட்டால், `நம் அனைவரையும்தாம்' என்கிறார் சாரா ஜோசப்.

`ஒரு பெரிய கோட்டையைக் கட்டிக்கொண்டு உலகிடமிருந்து துண்டித்துக்கொண்டு வாழும் ஒவ்வொருவரும் நிலீனா மாத்தாய்தான். சமூகத்தின் குரலை நீங்கள் அலட்சியம் செய்தால், உங்களைச் சுற்றியுள்ளவர்களின் துயரங்களில் நீங்கள் பங்கெடுக்கத் தவறினால், மக்களைப் பாதிக்கும் சிக்கல்களில் உங்களால் ஒரு தெளிவான நிலைப்பாட்டை எடுக்க முடியாது என்றால் நீங்களும் ஒரு நிலீனா. உலகில் என்ன நடந்தாலும் நான் என் கலைத் தவத்தைக் கலைக்கமாட்டேன் என்று நீங்கள் கண்களை மூடிக்கொண்டால் நீங்கள் ஒரு நிலீனா' என்கிறார் சாரா ஜோசப்.

ஏன் நிலீனாவை ஒரு பெண்ணாகப் படைக்க வேண்டும் என்று கேட்டால் சாரா ஜோசப் அளிக்கும் விடை இது. `உங்கள் கேள்வி நியாயமானது. என்னை நெருங்காதே, என் உலகம் வேறு என்று நத்தை போல் சுருங்கிக்கிடக்கும் படைப்பாளர்களில் ஆண்களே அதிகம் என்பதை ஏற்கிறேன். இருந்தும் ஒரு பெண்ணாக நான் பெண் படைப்பாளர்களோடு உரிமையோடு சண்டையிட விரும்புகிறேன். அவர்களைப் பிடித்து உலுக்கி இந்த உலகுக்குக் கொண்டுவரத் துடிக்கிறேன். நீங்களும் ஏன் இப்படி மாறிப்போய் இருக்கிறீர்கள் என்று கோபத்தோடு கேட்க விரும்புகிறேன். எனக்குள் நிலீனா இருக்கிறாரா என்று எழுதும் ஒவ்வொருவரும் சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்று விரும்புகிறேன்.'