மற்ற எபிசோடுகள்
Published:Updated:

கற்பிதங்கள் களையப்படும்! - 10 - வசதியான உடையா... வயதுக்கேற்ற உடையா..?

கற்பிதங்கள் களையப்படும்
பிரீமியம் ஸ்டோரி
News
கற்பிதங்கள் களையப்படும்

எதார்த்த தொடர் - கீதா இளங்கோவன்

நளினி முகநூலில் அறிமுகமான தோழி, தென் கோடியிலுள்ள சிறு நகரத்தைச் சேர்ந்தவர். முற்போக்கு சிந்தனை, தனியார் நிறுவனத்தில் வேலை, சுவாரஸ்யமான பதிவுகள் என்று துடிப்பான இளம்பெண். சுடிதார், ஜீன்ஸ், ஸ்கர்ட் என்று விதவிதமான உடைகளை அணிந்து போட்டோ போடுவதை ரசிப்பேன். நேரில் பார்த்ததில்லை. அவ்வப்போது இன்பாக்ஸில் பேசிக்கொள்வோம். உடை தொடர்பாக ஆலோசனைகளும் கேட்பேன். மகிழ்ச்சியாக உதவுவார். திடீரென முகநூலிலிருந்து காணாமல் போய்விட்டார். அவரின் எண் என்னிடம் இல்லாததால் தொடர்பு கொள்ளவும் முடியவில்லை.

ஒரு வருடத்துக்குப் பிறகு பொதுநிகழ்ச்சியொன்றில் பேச மதுரைக்குப் போயிருந்தேன். எங்கிருந்தோ வந்து கைகளைப் பிடித்துக் கொண்டார். உங்களைப் பார்ப்பதற்காகத்தான் வந்தேன் என்றார். தழையத் தழையப் புடவை, ஒற்றைப்பின்னல், பூச்சரம், கழுத்தில் கனமான நகைகள் என்று ஆளே மாறிப் போயிருந்தார். `என்னாச்சுப்பா?’ என்றேன். `கல்யாண மாயிருச்சுக்கா’ என்று கண்ணீரை மறைத்துக் கொண்டு சிரித்தார். `அவரு நல்லவருதான். ஆனா, வீட்டுக்கு வந்த பொண்ணு சேலைதான் கட்டணும்னு அவங்க வீட்டுல எல்லாரும் சொல்றாங்க. அதுதான் வழக்கமாம். நைட்டிகூட `உங்க ரூம்ல போட்டுக்கோ, வெளிய வர்றப்ப சேலை கட்டிட்டு வா’ன்னு அத்தை சொல்றாங்க. எப்பவாவது அம்மா வீட்டுக்குப் போகும் போது இவர் இல்லாத நேரமா பார்த்து, ஆசைக்கு சுடிதார் போட்டுட்டுக் கழட்டி வச்சிருவேன்’ என்றார், மெல்லிய குரலில். மனம் கனத்தது.

பெண்ணுக்கு கல்யாணமாகிவிட்டால் புடவைதான் கட்ட வேண்டும் என்று இன்றும் பல குடும்பங்கள் நிர்பந்தித்துக் கொண்டுதான் இருக்கின்றன. பெண்ணானவள் கல்யாணத் துக்குப் பிறகு மனைவியாக, மருமகளாக ஆகி விடுகிறாள், எனவே வயதுக்கேற்ற மாதிரி உடை உடுத்த வேண்டும் என்கிறார்கள். இதிலேயே முரண்பாடு இருக்கிறது. 21 வயதில் ஒரு பெண்ணுக்கு கல்யாணம் செய்துவிட்டால் அதற்குப் பிறகு அவள் சேலை கட்ட வேண்டும் என்பதும், 30 வயது வரை கல்யாணம் செய்து கொள்ளாமல் இருக்கும் பெண் விருப்பப்படி உடை அணியலாம் என்பதிலும் எந்த லாஜிக் கும் இல்லையே? இந்த வயதுக்கேற்ற உடை என்ற கற்பிதம் பெண்களிடம்தான் பெரும் பாலும் வலியுறுத்தப்படுகிறது. 80 வயதிலும் ஷார்ட்ஸும், டி-ஷர்ட்டும் அணியும் ஆணை, `அவருக்கென்னப்பா மைனரு. இந்த வயசுலயும் ஜாலியா இருக்காரு’ என்று லேசாக கலாய்த் தாலும், அவரை உற்சாகப்படுத்தவே செய்கிறது இந்தச் சமூகம். அதுவே 50 வயதுப் பெண் வீட்டில் நைட்டி போட்டாலும், `மகளுக்கு கல்யாணம் பண்ணி மாப்பிள்ளை எடுத்தாச்சு. வயசுக்கேத்தமாதிரி புடவை கட்டாம நைட்டி என்ன வேண்டிக் கெடக்கு’ என்று கமென்ட் அடிக்கும் இந்த ஆணாதிக்க சமூகம்.

ஒன்று தெளிவாகப் புரிகிறது. பெண்கள் மேல் திணிக்கப்படும் `வயதுக்கு ஏற்ற உடை’ என்ற கற்பிதம் அவர்கள் வயதை முன்னிறுத்திச் சொல்லப்படுவதில்லை. வாழ்க்கையில் அவர்கள் ரோல் மாறும்போது `அதற்கேற்றவாறு நடந்து கொள்’ என்று சொல்லப்படுகிறது. அதாவது `இப்ப நீ ஒருத்தனோட மனைவி, இந்த வீட்டு மருமக. கண்டதையும் போடாம பாந்தமா புடவை கட்டிக்கோ’ `உனக்கு பத்து வயசுல பையன் இருக்கான். இன்னும் என்ன ஜீன்ஸும் டாப்ஸுமா சுத்திகிட்டு இருக்கே’ `மாப்பிள்ளை எடுத்தாச்சு. வீட்டுக்கு மரு மகளும் வந்துட்டா. அவங்க சொந்தக்காரங்க வந்துபோகும்போது நீ நைட்டியோட இருந்தா நல்லாவா இருக்கும்? சின்னதா கொண்டை போட்டு புடவை கட்டிக்கோ’, `பாட்டி ஆகிட்டே. இப்போ போய் சுடிதார் போட்டா சகிக்காது’ - இப்படி அனைத்து வயதுப் பெண் களையும், அவர்கள் அணியும் உடைகளையும், எல்லாக் காலத்திலும் விமர்சித்துக் கொண்டே இருக்கிறது பொதுபுத்தி.

ஆண்களை எண்ணிப் பாருங்கள். `நீ ஒரு குழந்தைக்குத் தகப்பன். இனி ஜீன்ஸ் டி-ஷர்ட், பெர்முடாஸ் எல்லாம் போடக்கூடாது’ என்றோ, `மகனுக்கு கல்யாணம் ஆகி மருமக வீட்டுக்கு வந்துட்டா இனி கைலியெல்லாம் கட்டாதே’ என்றோ, `தாத்தா ஆயிட்டேல்ல. வேஷ்டி கட்டினாதான் பாந்தமா இருக்கும்’ என்றோ யாரும் சொல்வதில்லை. ஆண்கள் எல்லா வயதிலும், ரோல்களிலும் விருப்பமான உடைகளை அணிந்து கொண்டு வசதியாகத் தான் உலவுகிறார்கள். அப்புறம் பெண்ணுக்கு மட்டும் எதற்கு இந்தக் கற்பிதம்?

கற்பிதங்கள் களையப்படும்! - 10 - வசதியான உடையா...
வயதுக்கேற்ற உடையா..?

தனக்கு வசதியான உடைகளை பெண்கள் தேர்வு செய்து அணிய ஆரம்பித்துவிட்டால் அப்புறம் கலாசாரத்தை யார் கட்டிக் காப்ப தாம்? முதலில் எது கலாசாரம் என்பதில் யாருக்கும் தெளிவில்லை. அது ஒருபுறம் இருக்க, பெண்கள் தங்கள் உடைகளில்தான் கலாசாரத்தைக் கட்டிக் காக்க வேண்டும் என்று பொதுபுத்தி எதிர்பார்க்கிறது. அதற்காகத்தான் பல்வேறு வழிகளில் அவர் களை அச்சுறுத்துகிறது, நிர்பந்திக்கிறது. அதில் ஒன்றுதான் `வயதுக்கேற்ற உடை’ என்ற கற் பிதம். அந்த உடை பெண்களுக்கு சௌகர்ய மாக இருக்கிறதா என்பதையெல்லாம் இந்த ஆணாதிக்க சமுதாயம் பொருட்படுத்துவ தில்லை. எளிமையாகச் சொன்னால், இங்கு கலாசார உடையென்பது சேலைதான். பெண் புடவை அணிந்தால் யாருக்கும் எந்தப் பிரச் னையும் இல்லை. அதை மாற்ற முற்படும்போது தான் பொதுபுத்தி கடுமையாக எதிர்க்கிறது.

புடவை உழைக்கும் பெண்களுக்கு ஏற்ற உடையில்லை. கட்டட வேலை, வயல் வேலை, பெட்ரோல் பங்க் வேலையாகட்டும், அலுவலகத்தில் கணினி வேலை செய்யும் பெண்ணாக இருக்கட்டும், யாருக்கும் ஏற்றதாக இல்லை. கொஞ்சம் பணமும், போனும் வைத்துக் கொள்ளக்கூடிய வகையில் குறைந்த பட்ச வசதிகூட புடவையில் இல்லை. வேக மாக நடந்து செல்லும்போதும், பஸ், டிரெயின், ஆட்டோவில் பயணிக்கும் போதும், சைக்கிள், டூவீலர், கார் ஓட்டும் போதும், உடலைச் சுற்றியுள்ள ஐந்தரை மீட்டர் துணி பெண் களுக்கு பலவகையிலும் தொந்தரவாகத்தான் உள்ளது. புடவை விலகிவிடக்கூடாதே என்று கவனம் அதில் இருக்கும்போது தன் முழு ஆற்றலுடன் பெண்களால் எப்படி உழைக்க முடியும்? புடவை எனக்குப் பிடித்திருக்கிறது என்று விரும்பிக் கட்டுபவர்கள் கட்டிக் கொள்ளட்டும். ஆனால், `புடவை எனக்குப் பிடிக்கவில்லை, வசதியாக இல்லை’ என்று கருதுபவர்களையும் `வயதுக்கேற்ற உடை’ என்ற கற்பிதத்தைச் சொல்லி, அணிய நிர்பந்திப்பது மனித உரிமை மீறல் தோழர்களே.

- கீதா இளங்கோவன்
- கீதா இளங்கோவன்

காலம் மாறிக்கொண்டே இருக்கிறது. 30 ஆண்டுகளுக்கு முன்பு நான் அரசுப் பணியில் சேர்ந்தபோது சுடிதாரில் சென்றேன். `அரசுப் பணிக்கு சுடிதாரில் வருவதா... சேலை கட்ட வேண்டாமோ’ என்ற குரல்கள், `அப்படி ஒரு ரூல் இருக்கா? எனக்குத் தெரியாதே. எந்த ரூல்னு சொல்லுங்களேன் தெரிஞ்சுக்கிறேன்’ என்று நான் சிரித்துக்கொண்டே கேட்டபோது அடங்கிப்போயின. இன்று அரசுப் பணிகளில் சுடிதார் அணிந்து ஏராளமான பெண்கள் பணி புரிவதைக் காண மகிழ்ச்சியாக இருக்கிறது.

அனைத்து வயதுப் பெண்களும் தமக்கு விருப்பமான உடையை அணிவதை இயல் பாக்க வேண்டும் தோழர்களே. இளம் வயதில் வறுமையினாலும், குடும்பத்தின் கட்டுப்பாடு களாலும் தனக்குப் பிடித்த சுடிதாரையோ, ஜீன்ஸ், டி-ஷர்ட்டையோ, கையில்லா சட்டை யையோ, ஸ்கர்ட்டையோ, மேக்ஸியையோ அணிய இயலாத பல பெண்கள், தான் சம்பாதிக்கும்போது, வசதி வந்த பிறகு வாங்கி அணிய விரும்புவார்கள். அப்போதும் வயதைக் காரணம் காட்டி தடை போடுவதில் எந்த நியாயமுமில்லை. பேசுபவர்கள், விமர்சிப்பவர்களைப் புறக்கணித்துவிட்டு உங்களுக்குப் பிடித்த உடைகளை, உங்களுக்கு வசதியான ஆடைகளை அணிந்து கம்பீரமாக நடைபோடுங்கள் தோழிகளே!

- களைவோம்...