மற்ற எபிசோடுகள்
Published:Updated:

கற்பிதங்கள் களையப்படும்! - 8 - கைப்பக்குவம்... கைமணம்... காலங்காலமாகச் சொல்லப்படும் பொய்களே!

கற்பிதங்கள் களையப்படும்
பிரீமியம் ஸ்டோரி
News
கற்பிதங்கள் களையப்படும்

எதார்த்த தொடர் - கீதா இளங்கோவன்

தோழியின் அக்கா அவர். சுவையாகச் சமைப்பார். எளிய குடும்பத்தில் பிறந்து, `பொம்பளப் புள்ளையைப் படிக்க வைக்கிறதா...’ என்ற தடையை மீறி, போராடிப் படித்தவர். முதல் தலைமுறை பட்டதாரியாகி வங்கி வேலைக்குப் போனவர். கஞ்சி போட்ட காட்டன் புடவையை நேர்த்தியாக உடுத்தி கம்பீரமாகப் பணிக்குச் செல்வார். நிறைய நூல்களை வாசிக்கும், விமர்சிக்கும், அறிவான வாசகியும்கூட. நீண்ட காலத்துக்குப்பின் சென்ற மாதம் தற்செயலாக அவரை சந்தித்தேன். மகிழ்ச்சியுடன் பேசினார். இப்போது பேங்க்கில் அசிஸ்டன்ட் ஜெனரல் மேனேஜராக (ஏஜிஎம்) இருப்பதாகச் சொன்னார். பெருமையாக இருந்தது. அருகில்தான் வீடு என்று அழைக்கவே, உடன் சென்றேன்.

நவீன அடுக்குமாடி குடியிருப்பு, அழகான ஃப்ளாட். என்னை உட்கார வைத்துவிட்டு, சமையலறைக்குச் சென்று பரபரப்பானார். கொஞ்ச நேரத்தில் சுடச்சுட பஜ்ஜி, தேங்காய்ச் சட்னி, டீயுடன் வந்தார். `எதுக்கு சிரமப்படறீங்கக்கா...’ எனக் கேட்க, `நல்லாயிருக்கே, மொதமொதலா வீட்டுக்கு வந்திருக்கே, உனக்கு எங்கையால செஞ்சு குடுத்தாதான் திருப்தி’ என்றார். வழக்கம் போல் சுவையாக இருந்தது. கணவருக்கும் நல்ல வேலை, இரண்டு மகன்கள் கல்லூரியில் படிக் கிறார்கள். `சமீபத்துல என்ன புக் படிச்சீங்க?’ என்று நான் கேட்க `வேலை, வீடுன்னு பிஸியா போயிட்டு இருக்கு. வேற எதுக்குமே நேர மில்லை’ என்றார். `உதவிக்கு யாரும் இல்லையா?’ என்றேன். `வீட்டைப் பெருக்கித் துடைச்சு, பாத்திரம் கழுவ, காலை நேரத்துல மட்டும் ஒரு அம்மா வேலைக்கு வருவாங்க. சமையல் எல்லாம் நானே பாத்துக்கறேன்’ என்றார். `பேங்க்ல ஏஜிஎம்னா நிறைய வேலை இருக்குமே, அந்த வேலையும் பார்த்துட்டு, மூணு வேளை சமைக்கறதும் சிரமமா இருக்குமே அக்கா’ என்று கேட்க, `கஷ்டம்தான். வீடு, வேலைன்னு ஓடி கிட்டே இருக்கறதாலே ரெஸ்ட்டே இல்ல, அடிக்கடி மைக்ரேன் வேற பாடாப் படுத்துது. புத்தகங்களைப் பத்தி நீ கேட்டப்புறம்தான் ஞாபகமே வருது. ஹும்... புக்கைத் தொட்டு வருஷக்கணக்காச்சு. எனக்கு வாசிக்கறது புடிக்கும்ங்கறதே மறந்து போச்சு கீதா’ என்று பெருமூச்சு விட்டவர், `என்ன செய்ய, அவருக் கும், பிள்ளைகளுக்கும் என்னோட கைப் பக்குவம்தான் பிடிக்குது. என் கையால நானே சமைச்சாதான் எனக்கும் திருப்தியா இருக்கு’ என்றார்.

கற்பிதங்கள் களையப்படும்! - 8 - கைப்பக்குவம்... கைமணம்... காலங்காலமாகச் சொல்லப்படும் பொய்களே!

இங்கே நிறைய பெண்கள் இந்தக் கற்பிதத் தில் சிக்கியிருக்கிறார்கள். `என் கையால நானே சமைச்சாதான் எனக்கு திருப்தி’, `என் கைப்பக்குவம் யாருக்கும் வராது’, `என் சமையல்தான் வீட்டுக்காரருக்கும், பிள்ளை களுக்கும் பிடிக்கும்’ என்றெல்லாம் அவர்கள் சொல்வதைக் கேட்டிருப்போம். சமையல் என்பது மிகப்பெரிய பொறுப்பு, தொடர்ச்சி யான வேலை. அதை, வீடுகளில் பெண்தான் செய்ய வேண்டும் என்று பொதுப்புத்தி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. நட்சத்திர ஹோட்டல்களில் செஃப்பாக பல ஆயிரங்கள் சம்பளம் பெறும் ஆண்கள் பேட்டியளிக்கும் போது `என் மனைவியின் சாம்பாருக்கு ஈடில்லை, என் அம்மாவின் மீன் குழம்பு மாதிரி வராது’ என்று சொல்வார்கள். இதன் உள்ளர்த்தம், `என் வீட்டில் அம்மாவும், மனைவியும்தான் சமைக்கிறார்கள்’ என்பது தான். சமையல் அற்புதமான கலை என்பதில் மாற்றுக் கருத்தில்லை. சமையலில் ஆர்வ முடைய பெண்கள் விரும்பும்போதெல்லாம் சமைப்பதில் ஆட்சேபனையுமில்லை. ஆனால், ஆர்வமிருக்கிறதோ இல்லையோ, குடும்பத்தில் சமையலை பெண்தான் செய்ய வேண்டும் என்று இந்த ஆணாதிக்க சமுதாயம் நிர்பந்தப் படுத்துவதில்தான் பிரச்னையே...

வெளிவேலைக்குச் செல்லாமல் வீட்டில் இருக் கும் இல்லத்தரசிகளிடம், `சமையல் உன் பொறுப்பு தான்’ என்று ஒப்படைப்பதில் குடும்பமும், சமுதாயமும் ஒருவழியாக வெற்றி பெற்று விட்டது. `உனக்கு அதை விட்டு வேறென்ன வேலை, ஆம்பள வேலைக்கு போய் சம்பாதிக்கிறான். நீ வீட்டுல தான இருக்கே’ என்று கேட்க, `சரிதானே, நாம வீட்டுல சும்மாதானே இருக் கோம்’ (வீட்டுல சும்மா இருக்கிறார்களா என்பது தனிக் கட்டுரைக்கான விஷயம், அது ஒருபுறம் இருக்கட்டும்) என்ற குற்றவுணர்வில், இல்லத்தரசிகளும் ரிட்டயர்மென்ட் இல்லா மல், காலத்துக்கும் சமைத்துக்கொண்டே இருக்கிறார்கள்.

ஆனால், வேலைக்குப் போகும் பெண்கள் பேச ஆரம்பித்துவிட்டார்களே, `நானும்தானே வெளியே போய் வேலை செஞ்சிட்டு வர்றேன், மூணு வேளையும் வடிச்சுக் கொட்ட என்னால ஆகாது’ என்று உரிமைக்குரல் எழுப்பு கிறார்களே என்று இந்த ஆணாதிக்கப் பொதுப்புத்திக்கு கவலை வந்துவிட்டது. அவர்களை அடக்குவதற்கு கண்டுபிடித்த ஆயுதம்தான் `கைப்பக்குவம், கைமணம்’ இத்தியாதி வகையறாக்கள். `உன் சமையல் மாதிரி வருமாம்மா, உன் கைப்பட்டாலே தனி ருசி வந்துருது’ என்று உணர்வுபூர்வமாகத் தாக்கும்போது, நம் பெண்கள் கொஞ்சம் மயங்கித்தான் போகிறார்கள். `ஆஹா, நான் அவ்வளவு சூப்பரா சமைக்கிறேனா’ என்ற கிறக்கத்தில், கரண்டியை கீழே வைக்க மறுக் கிறார்கள். சமுதாயமும் எதிர்பார்ப்பது அதைத்தானே. அப்பாடா, பெண் இனி சமை யலைக் கைவிடமாட்டாள் என்று ஆசுவாச பெருமூச்சு விடுகிறது.

தோழியரே, விழித்துக் கொள்ளுங்கள். பெண் சமையலைக் கைவிட்டுவிடக்கூடாது என்பதற்காக, காலங்காலமாகச் சொல்லப் பட்டு வரும் பொய்தான் இந்த `கைப்பக்குவம், கைமணம்’ என்பதெல்லாம். `அப்படியெல்லாம் இல்ல, எங்க பாட்டி செஞ்சா அந்த ருசியே தனிதான்’ என்று சொல்லும் தோழர்கள், ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். நாற்பது, ஐம்பது ஆண்டுகளாக ஒரே வேலையை தினமும் செய்யும்போது அதில் `எக்ஸலன்ஸ்’ எனப்படும் அபாரத்திறன் வரத்தான் செய்யும். அதற்காக சமையலை பெண் செய்தால்தான் ருசியாக இருக்கும், அவர்கள்தான் தொடர்ந்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்துவது, நம் பெண்களை வீட்டுக்குள் முடக்கும் நியாயமற்ற செயலன்றி அறிவுபூர்வமானது அல்ல.

அடித்தட்டுப் பெண்களும், அன்றாடம் பாடுபட்டு ஊதியம் பெறும் உழைக்கும் வர்க்கத்தினரும், விவசாய வேலைகள் செய் வோரும், உடலுழைப்பில் வாழும் தொழிலாளர் களான பெண்களும், `கைமணம், கைப்பக்குவம்’ என்ற கற்பிதத்தில் சிக்கிக்கொள்வதில்லை. அவர்களின் வீடுகளில் ஆணும் பெண்ணும், குழந்தைகளும் சேர்ந்தே சமைக்கிறார்கள். ருசியைத் தூக்கிப்பிடிக்காமல், வயிறு நிறை கிறதா, உழைப்புக்கும், உடலுக்கும் ஏற்ற உணவா என்பதில் மட்டும் கவனம் செலுத்து கிறார்கள். நகரத்தில் வேலை செய்யும் தொழிலாளர்கள், வீட்டில்தான் சமைக்க வேண்டும் என்ற நிர்பந்தத்தில் சிக்கிக் கொள்ளாமல், அவரவர் வேலை செய்யும் இடங்களில் உள்ள கடைகளில் சாப்பிட்டு வயிற்றை நிறைத்துக் கொள்கிறார்கள்.

கற்பிதங்கள் களையப்படும்! - 8 - கைப்பக்குவம்... கைமணம்... காலங்காலமாகச் சொல்லப்படும் பொய்களே!

கீழ் நடுத்தர, நடுத்தர, மேல்தட்டு பெண் களிடம்தான், கைப்பக்குவ, கைமண கற் பிதங்கள் நிறைந்திருக்கின்றன. ஏனென்றால், இவர்கள் உயர்கல்வி கற்று, வேலைக்குப் போய், பொருளீட்டி, உரிமைகள் குறித்த விழிப்புணர்வு உள்ளவர்கள். அவர்கள் சமை யலைக் கைவிட்டுவிட்டால், ஆணாதிக்க சமுதாயத்தின் பாடு திண்டாட்டமாகிவிடும். ஆகையால்தான், சமுதாயத்தின் உயரடுக்கில் உள்ள, ஆற்றலும், அதிகாரமும் (Empowerment) பெற்ற பெண்களான, அரசு உயரதிகாரிகள், வங்கிகளின் தலைவர்கள், பெரும் நிறுவனங் களின் இயக்குநர்கள், சினிமா நட்சத்திரங்கள், பல்துறை பிரபலங்கள் ஆகியோரிடம் பேட்டி எடுக்கும்போது, `வீட்டில் சமைப்பீர்களா? நீங்கள் சமைப்பதில் உங்கள் கணவருக்கும், குழந்தைகளுக்கும் பிடித்த உணவு வகை எது?’ என்ற கேள்விகள் தவறாமல் கேட்கப்படு கின்றன. `வீட்டில் சமைப்பதற்கெல்லாம் எனக்கு நேரமில்லை’ என்ற உண்மையைச் சொன்னால், `குடும்பத்துக்கு சமைக்கக் கூட துப்பில்லை, நீயெல்லாம் என்ன சாதனை பண்ணி என்ன?’ என்று சமூகம் இழிவாகப் பேசிவிடுமே என்ற பயத்தினால், ஒருவேளை அவர்கள் சமைக்காவிட்டாலும் கூட, `சமைப் பேன்’ என்று பொய் சொல்லி சமாளிக்க வேண்டியுள்ளது. சமைத்தால், மிகப்பெருமை யாக `நான் செய்யும் கத்திரிக்காய் காரக்கறி என் குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும்’ என்று தன் கைப்பக்குவத்தைத் தூக்கிப் பிடிக்கிறார்கள்.

தோழியரே உண்மை நிலையைப் புரிந்து கொள்ளுங்கள். மூன்று வேளையும் சமைத்துக் கொண்டே, ஒரு துறையில் முழு உழைப்பையும் நேரத்தையும் கொட்டுவது சாத்தியமில்லை. கரண்டியைக் கீழே வைத்துவிட்டு, சமைக்கும் பணியை மட்டுமல்ல... அது தொடர்பான முழுப்பொறுப்பையும் குடும்பத்தினருக்குப் பிரித்துக்கொடுங்கள். முடியவில்லையா, உங்கள் சம்பளத்தில் ஒரு பகுதியை அளித்து, சமையலுக்கு உதவியாளரை வைத்துக் கொள் ளுங்கள். அதற்கு வசதியில்லையா, அருகில் இருக்கும் மெஸ்ஸில் அவ்வப்போது வாங்கிக் கொள்ளும் ஏற்பாட்டையாவது செய்து கொள்ளுங்கள். சமையலிலிருந்து முடிந்தால் முழுவதுமாகவும், இல்லாவிட்டால் அவ்வப் போதும் விடுபட்டு, உங்களுக்குப் பிடித்த பணி களில் ஈடுபடுங்கள், மகிழ்ச்சியாக இருங்கள். இதை ஆரம்பிக்கும்போது, குடும்பத்திலிருந்து எதிர்ப்பு வரத்தான் செய்யும். பரவாயில்லை, உங்களுக்கான அங்கீகாரத்தை சமையலில் தேடாதீர்கள் தோழியரே. `கைப்பக்குவம், கைமணம்’ என்ற கற்பிதங்களிலிருந்து இன்றே விடுபடுங்கள்.

- களைவோம்...