மற்ற எபிசோடுகள்
Published:Updated:

கற்பிதங்கள் களையப்படும்! - எதார்த்த தொடர் - 2 - விருப்பப்படி உட்காரும் உரிமை உங்களுக்கு இருக்கிறதா?

கற்பிதங்கள் களையப்படும்
பிரீமியம் ஸ்டோரி
News
கற்பிதங்கள் களையப்படும்

- கீதா இளங்கோவன்

‘பெண்களுக்கு தான் விரும்பியவாறு வீட்டில் உட்கார முடிகிறதா?’ நண்பரிடம் பேசிக் கொண்டிருந்தபோது இந்தக் கேள்வியை கேட்டேன். ‘என்னங்க கேள்வி இது? அவங்க வீட்டுல அவங்க வசதிப்படி உட்கார வேண் டியதுதானே? அதை யாரு வேணாம்னு சொல்லப் போறாங்க?’ என்று நக்கல் அடித் தார். ‘உங்கள் வீட்டுப் பெண்கள்கிட்ட கேட்டுப் பாருங்களேன்’ என்று புன்னகையுடன் சொல்லிவிட்டு நகர்ந்தேன்.

- கீதா இளங்கோவன்
- கீதா இளங்கோவன்

நிஜமாகவே வீட்டில் நம் வசதிப்படி உட்கார முடிகிறதா தோழிகளே? குறிப்பாக ஆண்கள் இருக்கும் வீட்டில். இதைப் பற்றி யோசிக்கும்போது கொஞ்சம் அதிர்ச்சியாகக் கூட இருந்தது. பெண் அடக்க ஒடுக்கமாக உட்கார வேண்டும் என்று சொல்லிச் சொல்லியே, நம் வசதிப்படி உட்கார வேண்டும் என்பதுகூட நமக்கு மறந்து போய்விட்டதோ? கணவரே ஆனாலும், அவர் முன்னால் சுதந்திரமாக கால் மேல் கால் போட்டோ, ஆசுவாசமாக கால்களை நீட்டிக் கொண்டோ, முன்னால் இருக்கும் டீப்பாய், ஸ்டூலில் காலை தூக்கி வைத்தவாறோ எல்லாப் பெண்களாலும் உட்கார முடியுமா? நிச்சயமாக முடியாது. கணவர் அன்பானவராகவே இருக்கட்டும், `பொண்ணா லட்சணமா இருக்காம, அது என்ன அடக்கமில்லாம உட்கார்றா?’ என்ற கமென்ட் பலருக்கு மாமியார், மாமனார், நாத்தனார், ஏன் பெற்றோரிடமிருந்தும் வரும். சிலருக்கு கணவரிடமிருந்தேகூட வரலாம்.

வீட்டில் பெரியவர்கள் இருந்தால், அவர்கள் முன்பு அந்த வீட்டுப் பெண்கள் நாற்காலியில் உட்காரக் கூடாது என்பது பல குடும்பங்களில் எழுதப்படாத விதியாக இருக்கிறது. உட்கார வேண்டிய அவசியம் ஏற்பட்டால், தரையில் உட்காரலாம் என்ற தளர்வும் உண்டு. வயதில் பெரியவர்கள் மட்டும் என்றில்லை, தன்னை விட இளைய சகோதரன், மகன் முன்புகூட பெண்களால் சுதந்திரமாக, இயல்பாக இருக்க முடிவதில்லை. ஆடையை ஒடுக்கிக் கொண்டு சற்று வசதி குறைவாகத்தான் அமர்கிறார்கள். `கற்பு’ கருத்தாக்கங்களும், ஆடை கட்டுப்பாடு களும், பெண்களின் மூளையில், எந்நேரமும் அபாயசங்காக ஒலித்துக் கொண்டே இருக்கும் போது எங்கே வசதியாக உட்காருவது? புடவை என்றால் முந்தானையை சரியாக இழுத்துவிட்டுக் கொண்டும், கால் தெரியாமல் சரி செய்தவாறும் உட்காருவது, சுடிதார் என்றால் துப்பட்டாவை `ஒழுங்காக’ப் போட்டுக் கொள்வது, நைட்டி என்றால்கூட மேலே துண்டு போட்டுக்கொண்டும், கீழே இழுத்துவிட்டுக் கொண்டும் உட்கார வேண்டும்.

ஆண்கள் ஷார்ட்ஸ், பெர்முடாஸ் போட்டி ருந்தாலும், மேலே பனியன் அணியவில்லை என்றாலும்கூட, வீட்டுப் பெரியவர்களுக்கு எதிரில் சரிசமமாக நாற்காலிகளில் அமர்ந்து பேசலாம். எந்தப் பிரச்னையுமில்லை. இது ஆண் குழந்தைகளுக்கும் பொருந்தும். அதே நேரத்தில் ஒரு பெண் குழந்தை பெரியவர்களுக்கு எதிரில் சரிசமமாக நாற்காலியில் உட்கார்ந்து பேசினால், `கொஞ்சம் கூட மரியாதையே இல்லாம பெரியவங்க முன்னாடி உட்கார்ந்து பேசிகிட்டு இருக்கே? உள்ள போ’ என்று பல வீடுகளில் இப்போதும் கண்டிக்கத்தான் செய்கிறார்கள்.

கற்பிதங்கள் களையப்படும்! - எதார்த்த தொடர் - 2 - விருப்பப்படி உட்காரும் உரிமை உங்களுக்கு இருக்கிறதா?

எதிரில் பெரியவர்களே இல்லை என்றால்கூட, பெண்கள் கால் மேல் கால் போட்டு அமரக்கூடாது என்றுதான் பொதுப்புத்தி எதிர்பார்க்கிறது. குறிப்பாக, ஆண்களின் எதிரில் அப்படி உட்காரும் பெண், அடக்கம் இல்லாதவளாகவும், திமிர் பிடித்தவளாகவும் பார்க்கப் படுகிறாள். அலுவலகக் கூட்டங்களில்கூட ஆண்கள் வசதியாக சாய்ந்துகொண்டு கால் மேல் கால் போட்டு உட்கார்ந்திருப்பார்கள். ஆனால், பெண்கள் சற்றே ஒடுங்கி பவ்யமாக அமர்ந்திருப்பதைப் பார்க்கலாம். இதற்கு ஒரே விதிவிலக்கு அந்தக் கூட்டத்தை நடத்தும் உயரதிகாரியாக இருக்கும் பெண்கள் மட்டுமே.

ஒரு பெண் கால் மேல் கால் போட்டு அமர்ந்தால், அது அவள் பெற்றிருக்கும் அறிவின், துணிவின் தன்னம்பிக்கையின் வெளிப்பாடு. பொதுப் புத்தியின் பின்னால் இருக்கும் உளவியலோ, பெண் அப்படி இருந்துவிடக்கூடாது என்பதுதான். ஆணுக்கு சேவகம் புரியும் நிலையிலேயே அடக்க ஒடுக்கமாக இருக்க வேண்டும் என்றுதான் இந்த ஆணாதிக்க சமுதாயம் எதிர் பார்க்கிறது. இதன் வெளிப்பாடு தான், பெண் கால் மேல் கால் போட்டு உட்கார்ந்தால் கர்ப்பப்பை பாதிக்கப்படும் என்று அடிக்கடி பரப்பப்படும் அபத்தமான வாட்ஸ் அப் செய்திகள்.

பெண்கள் கல்வி அறிவு பெற்று, வேலைக்குப் போய் சம்பாதிக்கும் இன்றைய காலகட்டத்தில் கூட, பல வீடுகளில் நடக்கும் காதுகுத்து, வளைகாப்பு போன்ற நிகழ்ச்சிகளில் போடப்படும் நாற்காலிகள் ஆண் களுக்கு மட்டுமே. பெண்கள் அமர் வதற்கு தரையில் ஜமுக்காளம் விரித்து இருப்பார்கள். ஆண்கள் பேன்ட் அணிந்து கொண்டு தரை யில் உட்கார முடியாது என்று சப்பைக் கட்டு கட்டினாலும், சுடிதார் போட்ட, ஜீன்ஸ் போட்ட பெண்களும் ஜமுக்காளத்தில், தரையில்தான் உட்கார வேண்டும். கிராமப் புறங்களில், கல்யாண வீடுகளிலேயே இந்த நிலைமைதான், ஆண்களுக்கு நாற்காலி, பெண்களுக்கு ஜமுக்காளம்.

ஆண் எதிரில் பெண் உட்காருவதை ஆணுக்கான மரியாதைக் குறைவாகக் கருது கிறது ஆணாதிக்க பொதுப்புத்தி. இதன் நீட்சிதான் உள்ளாட்சி அமைப்புகளில் உறுப் பினராக இருக்கும் பெண்களையும், பஞ் சாயத்து தலைவிகளையும் நிற்க வைத்துப் பேசும் சில ஆண் அதிகாரிகளின் மனோபாவம். அவர்களை மக்கள் பிரதிநிதிகளாகவும், தலை வர்களாகவும் பார்க்காமல் பெண்களாகப் பார்ப்பதும், தன் குடும்பத்துப் பெண்களைப் போலவே அவர்களையும் மரியாதைக் குறை வாக நடத்துவதும் வன்மையாகக் கண்டிக்கத் தக்கது.

தோழர்களே, உட்காரும் உரிமை வேண்டும் என்ற துணிக்கடைகளிலும், சூப்பர் மார்க் கெட்டுகளிலும், பிற கடைகளிலும் வேலை பார்க்கும் விற்பனைப் பணியாளர்கள் குரல் எழுப்ப, அவர்களுக்கான மனித உரிமைகளை உறுதிப்படுத்த வேண்டுமென்று கேரள அரசு சட்டம் இயற்றியுள்ளது. தமிழக அரசும் சட்டத் திருத்தம் கொண்டு வந்துள்ளது. ஆனால், நம் வீடுகளில், பொதுவெளிகளில், மாண்புடன், அவர்கள் விரும்பியவாறு, வசதியுடன் உட்காரும் உரிமையை பெண்களுக்கு அளித்திருக் கிறோமா? இந்தக் கேள்வியை நம்மை நாமே கேட்டுக் கொள் வோம். தோழிகளிடமும் ஒரு கேள்வி, `ஆண்களுக்கு சமமா உட்கார முடியலையே’ என்று வருத்தப்படும் அதேவேளையில், வீட்டு வேலைப் பணியாளர்களுக்கு அந்த உரிமையை அளித்திருக்கி றோமா? வாய்ப்பு கிடைக்கும் இடங்களில் எல்லாம் சமத்துவத்தைச் செயல்படுத்தத் தொடங்கு வோம். மற்ற இடங்களில் குரல் எழுப்புவோம் தோழியரே.

- களைவோம்...