லைஃப்ஸ்டைல்
தன்னம்பிக்கை
Published:Updated:

பெற்றோர்களுக்கும் குழந்தைகளுக்கும்: விபரீதம் ஆகும் விளையாட்டுகள்!

பெற்றோர்களுக்கும் குழந்தைகளுக்கும்
பிரீமியம் ஸ்டோரி
News
பெற்றோர்களுக்கும் குழந்தைகளுக்கும்

பாலியல் மருத்துவர் காமராஜ்

க்ரோஷியா நாட்டில் 16 வயது பருவத்தினர் - அதாவது பள்ளி செல்லக்கூடிய ஆண் பெண் குழந்தைகள் ஆபாசப் படங்களைப் பார்ப்பதால் ஏற்படும் மாற்றங்களை ஆய்வு செய்திருக்கிறார்கள். மிகப்பெரிய ஆய்வான இதில் 50 சதவிகிதத்துக்கும் மேல் பெண் குழந்தைகளும் பங்கேற்றனர்.

455 மாணவர்களை இன்டர்நெட் மூலம் சர்வே செய்திருக்கிறார்கள்.

858 மாணவர்களை வகுப்பறையில் ஸ்டடி பண்ணியிருக்கிறார்கள். அவர்கள் எவ்வளவு நேரம் ஆபாசப் படங்களைப் பார்க்கிறார்கள், அவர்களது படிப்பில் எவ்வளவு தூரம் சாதிக்கிறார்கள், மதம் சார்ந்த விஷயங்களை எவ்வளவு தூரம் நம்புகிறார்கள், மன அழுத்தம், பதற்றம், குடும்பச் சூழல், தன்னம்பிக்கை, மனநலம், உடல்நலம் பற்றிய விஷயங்களை ஆய்வுக்கு உட்படுத்தியிருக்கிறார்கள். இந்த ஆய்வின் முடிவில் பல்வேறு முடிவுகளை வெளியிட்டிருக்கிறார்கள்.

பெற்றோர்களுக்கும் குழந்தைகளுக்கும்: விபரீதம் ஆகும் விளையாட்டுகள்!

இந்த ஆபாசப் படங்கள், இளம் குழந்தைகளின்மீது பெரிய அளவுக்கு பிரச்னைகளைக் கொண்டு வருவதாகக் கண்டுபிடித்திருக்கிறார்கள். மன அழுத்தம், பதற்றம் உள்ளிட்ட பிரச்னைகளைத் தருவதாகவும், குறிப்பாக ஆண் குழந்தைகளுக்கு வன்முறைக் குணத்தை அதிகரித்திருப்பதாகவும் அறிந்திருக்கிறார்கள். இருவருக்கும் பாலியல் ஈடுபாட்டை அதிகரித்திருப்பதாகவும் இந்த ஆய்வு சொல்கிறது.

சமீபத்தில் ஊடகங்களை உலுக்கிய ஒரு செய்தியைக் கேள்விப்பட்டிருப்பீர்கள். ‘பாய்ஸ் லாக்கர் ரூம்’ என்ற பெயரில் இன்ஸ்டாகிராம் சாட் குரூப்பில் இந்த அத்துமீறல் அரங்கேறியிருக்கிறது. இத்தனைக்கும் ஊடரங்கில் வீடுகளுக்குள் முடங்கியிருக்கும் இந்த நேரத்தில் இப்படியொரு விஷயம் நடந்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. பள்ளிச் சிறுவர்கள் சக மாணவிகளைப் பற்றி நடத்திய அந்தரங்க, ஆபாச உரையாடல்கள், அவர்களைக் கூட்டுப் பாலியல் வன்முறைக்குள்ளாக்குவது எப்படி என்ற ஆலோசனைகள் என அது வக்கிரத்தின் உச்சம் என்றிருந்த நிலையில், அடுத்தடுத்த நாள்களில் வந்த செய்தி அதைவிடப் பேரதிர்ச்சியாக இருந்தது. இது அனைத்தின் பின்னணியிலும் இருந்தவர் ஒரு பெண்... தன் ஆண் நண்பரின் நடத்தையை சோதனை செய்ய நடத்திய நாடகம் என்று தெரிந்ததும் பெண்ணியக் குரல் எழுப்பியவர்களின் வாயெல்லாம் அடைத்துப்போயின. டெல்லி கமிஷன் ஃபார் வுமன் இதைப் பற்றிப் புகார் செய்து சைபர் செல்லின் க்ரைம் பிரிவினர் இதை விசாரித்திருக்கிறார்கள்.

பெற்றோர்களுக்கும் குழந்தைகளுக்கும்: விபரீதம் ஆகும் விளையாட்டுகள்!

சாதாரணமாக இந்த வயதில் பாலியல் உறவு பற்றித் தெரிந்துகொள்வதில் ஆர்வமிருந்தாலும், கூடவே ஒரு பயமும் இருக்கும். அத்துமீற அச்சமிருக்கும். இதற்கு முன் ஒரு கேம்கூட பிரபலமாக இருந்தது பலருக்கு நினைவிருக்கும். ஒரு பெண் ரயிலில் சென்றுகொண்டிருப்பார். அதிலுள்ள இளைஞர்கள் சிலர், குறிப்பிட்ட ஸ்டேஷனை அடைவதற்கு முன் அந்தப் பெண்ணைப் பாலியல் வன்முறைக்குள்ளாக்க வேண்டும் என்பது மாதிரியான அந்தச் சவால் விளையாட்டுக்கு அப்போதே விஞ்ஞானிகள், கல்வியாளர்கள் மத்தியில் கடுமையான எதிர்ப்பு கிளம்பியது.

இதுபோன்ற விளையாட்டுகள் விபரீதமாகி, பெண்கள் மீதான வன்முறையைத் தூண்டக் கூடியதாக இருக்கும், தவறான துணிச்சலைக் கொடுக்கும், பெண்களை போகப்பொருளாகப் பார்ப்பதை நியாயப்படுத்தும் என்றெல்லாம் மிகப்பெரிய விவாதத்துக்குள்ளானது.

17, 18 வயதில், பெண்ணைக் கடத்திச் சென்று வல்லுறவு கொள்வதைப் பற்றி யோசிக்கும் இளைஞர்களைப் பார்க்கும்போது நம் சமுதாயம் எவ்வளவு பெரிய ஆபத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது என்பதை உணர முடியும்.

ஏற்கெனவே விஞ்ஞான வளர்ச்சியின் மூலமாகக் கிடைத்த ஸ்மார்ட்போன், சாஃப்ட்வேர் போன்றவற்றையெல்லாம் தவறாகப் பயன்படுத்திப் பெண்களை மிரட்டுவது, அவர்களை ஆபாசமாகப் படம் எடுப்பது என அத்துமீறல்கள் தொடர்ந்துகொண்டிருக்கின்றன. இணையம் மூலம் பெண்களையும் குழந்தைகளையும் மிரட்டும் சைபர் புல்லியிங் பற்றி கடந்த இதழ்களில் நிறைய தகவல்களைப் பார்த்தோம். இதற்கெல்லாம் பொள்ளாச்சி சம்பவம், நாகர்கோவில் சம்பவம் எனப் பல சாட்சிகள்.

இவற்றையெல்லாம் மிஞ்சும் வகையில் பள்ளிக்கூடம் செல்லும் வயதிலுள்ள மாணவர்கள் இதுபோன்ற பாலியல் அத்துமீறல்களில் ஈடுபடுவதென்பது நம் சமூகம் ஆபத்தை நோக்கி நகர்ந்துகொண்டிருப்பதன் அடையாளம்.

உயர் நீதிமன்றம் ஆபாசப் படங்களுக்குத் தடை விதித்தாலும் அது முழுமையாக நடைமுறைக்கு வரவில்லை என்பதே உண்மை. தடையின்றி அவை கிடைத்துக்கொண்டுதான் இருக்கின்றன.

அடுத்து இது இயல்பான விஷயம் என்ற உணர்வைப் பலருக்கும் தருகிறது. உலக அளவில் ஆபாசப் படங்களைப் பார்ப்போரின் சராசரி வயது 11. இந்தியாவில் அந்த வயது 13. அந்த வயதிலேயே ஆபாசப் படங்களைப் பார்த்துப் பழகும்போது காட்சிகளில் வருபவை எல்லாம் தவறான விஷயங்கள் இல்லை என்ற எண்ணத்தை அவர்களுக்கு ஏற்படுத்துகிறது; நாமும் இப்படியெல்லாம் செய்தால் என்ன என்ற துணிச்சலையும் தருகிறது.

ஆபாசப் படங்கள் வருவதற்கு முன்பு 11, 12 வயதில் யாரும் இதையெல்லாம் நினைத்துக்கூடப் பார்த்திருக்க முடியாது. அரசல் புரசலாக செக்ஸ் வார்த்தைகள் சிலவற்றைக் கேட்டிருப்பார்களே தவிர, இவ்வளவு தூரம் செக்ஸ் பற்றிய விவாதமோ, பெரிய பிரச்னையோ வராமலிருந்தது. இன்று நிலைமை முற்றிலும் மாறியிருக்கிறது.

இப்போது பாய்ஸ் லாக்கர் ரூம், கேர்ள்ஸ் லாக்கர் ரூம் பற்றி இத்தனை விஷயங்கள் பேசுகிறோம். இதற்கெல்லாம் முன்பே ‘லாக்கர் ரூம் சிண்ட்ரோம்’ என்ற ஒன்று இருந்திருக்கிறது. இப்போது பரபரப்பைக் கிளப்பியிருக்கும் இந்த லாக்கர் ரூம்களோடு கொஞ்சமும் தொடர்பில்லாதது அது.

அதென்ன? அடுத்த இதழில்...