தன்னம்பிக்கை
லைஃப்ஸ்டைல்
Published:Updated:

பெற்றோர்களுக்கும் குழந்தைகளுக்கும்: குழந்தைகளின் கேள்விகளை எதிர்கொள்ளுங்கள்!

பெற்றோர்களுக்கும் குழந்தைகளுக்கும்
பிரீமியம் ஸ்டோரி
News
பெற்றோர்களுக்கும் குழந்தைகளுக்கும்

பாலியல் மருத்துவர் காமராஜ்

உலகம் முழுவதும் அதிகரித்துக் கொண்டிருக்கும் டீன்ஏஜ் கர்ப்பங்கள் குறித்து கடந்த இதழில் சொல்லியிருந்தேன்.

டீன்ஏஜ் கர்ப்பத்தை எதிர்கொள்ளும் குழந்தைகளில் 40 சதவிகிதம் பேரால் படிப்பைத் தொடர முடிவதில்லை என்று உலக அளவிலான புள்ளிவிவரம் சொல்கிறது.

டீன்ஏஜ் கர்ப்பம் என்பது ஒட்டு மொத்தமாக அந்தக் குழந்தையின் வாழ்க்கையையே சிதைத்துவிடக்கூடியது. அந்த அனுபவமும் அது தந்த வடுவும் அவர்களைக் காலத்துக்கும் குற்ற உணர்விலேயே வைத்திருக்கும். தவறான அந்தச் சம்பவத்தை உணர்ந்து உடலளவில் அதிலிருந்து மீண்டு வந்தாலும் பின்னாளில் திருமணம், ஆரோக்கியமான உறவு போன்றவை அவர்களுக்குச் சாத்தியப்படுவதில்லை. டீன்ஏஜ் கர்ப்பம் என்பது சம்பந்தப்பட்ட அந்தக் குழந்தையைத் தீவிரமான மன அழுத்தத்துக்குள் தள்ளுகிறது.

பெற்றோர்களுக்கும் குழந்தைகளுக்கும்
பெற்றோர்களுக்கும் குழந்தைகளுக்கும்

இளவயது கர்ப்பம் என்பது உடலளவி லான பிரச்னைகளுக்கும் காரணமாகிறது. டீன்ஏஜில் கர்ப்பம் சுமக்கும் அந்தப் பெண்ணும், அவளது வயிற்றிலிருக்கும் சிசுவும் உயிரிழக்க வாய்ப்புகள் அதிகம். அந்த வயதில் அந்தப் பெண் குழந்தைக்குத் தெரியாத உடல், மன ரீதியான பல குழப்பங்களை டீன்ஏஜ் கர்ப்பம் தந்துவிடும். ரத்தச்சோகை, குறைப்பிரசவம், பிரசவத்துக்குப் பிறகான மன அழுத்தம், நோய்த்தொற்று எனப் பல அபாயங்களை அந்தப் பெண்குழந்தை அடுக்கடுக்காகச் சந்திக்க வேண்டி வரலாம். எதிர்காலத்தில் உலகத்தை எதிர்கொள்வதிலும் இவர்களுக்குப் பிரச்னைகள் வரும். இவர்களே குழந்தைகளாக இருப்பதால், டீன்ஏஜ் கர்ப்பத்தில் இவர்களுக்குக் குழந்தை பிறக்கும்போது அந்தக் குழந்தையை கவனிப்பதும் இயலாததாகவே இருக்கும். டீன்ஏஜ் கர்ப்பத்தை எதிர்கொள்ளும் பலரும் வாழ்க்கையில் வறுமை நிலைக்குள் போவதையும் உலக அளவில் பரவலாகப் பார்க்க முடிகிறது. நல்ல வாழ்க்கை என்பது இவர்களுக்குக் கேள்விக்குறியாகவே இருக்கிறது. இவற்றையெல்லாம் எப்படிச் சரி செய்வது?

பிள்ளைகளுக்குப் பாலியல் கல்வியை போதிப்பதில் பெற்றோர் தமக்கிருக்கும் பங்கினை உணர வேண்டும். அதற்கான வாய்ப்புகளைப் பெற்றோர் தேடலாம். உதாரணத்துக்கு பாலியல் தொடர்பாகப் பத்திரிகைகளில் வந்த செய்தி, டி.வி அல்லது ரேடியோவில் அது பற்றிப் பேசப்பட்ட நிகழ்ச்சிகள் என எதையாவது அடிப்படையாக வைத்துப் பேச்சைத் தொடங்கலாம். சமையலறையில் வேலைபார்த்துக் கொண்டிருக்கும்போது அந்த உரையாடலை ஆரம்பிக்கலாம். கார் பயணத்தின்போது பேசலாம்.

பெற்றோர்களுக்கும் குழந்தைகளுக்கும்: குழந்தைகளின் கேள்விகளை எதிர்கொள்ளுங்கள்!

இந்த விஷயங்களைப் பெற்றோர் நேரடி யாகப் பிள்ளைகளிடம் பேசுவதே சரியானது. பூடகமாகவோ, சுற்றிவளைத்தோ பேசத் தேவையில்லை. அது உங்கள் டீன்ஏஜ் பிள்ளை களைக் குழப்பும்.

பிள்ளைகளின் பார்வையும் அபிப்ராயமும் இதில் அவசியம். அவர்கள் எதைத் தெரிந்து கொள்ள விரும்புகிறார்கள் என்பதையும் தெரிந்துகொள்ளுங்கள்.

சிகரெட்டும் குடியும் எப்படித் தவறான விஷயங்கள் என்று சிறு வயதிலேயே அறிவுறுத்துகிறோமோ, அதே போன்றதுதான் தவறான பாலியல் உறவுகளுக்குள் சிக்காமலிருக்க அறிவுறுத்துவதும்.

பாலியல் கல்வி என்பது வெறும் மருத்துவத் தகவல்களை போதிப்பது மட்டுமல்ல, அது உணர்வுகள் தொடர்பானதும்கூட என்ற தெளிவு பெற்றோருக்கு வேண்டும். பொறுப்பு, குடும்ப மதிப்பீடுகள், உறவுகள் என எல்லாவற்றையும் மனத்தில்கொண்டு இதை அணுக வேண்டும். குழந்தைகளுடன் பேசும்போது அதிகார தோரணை கூடாது. அது பயன்படாது. நட்பு கலந்த உரையாடல்தான் பலன் தரும்.

குழந்தைகள் கேள்விகள் கேட்பார்கள். அந்தக் கேள்விகளை எதிர்கொள்ளவும் நேர்மையான பதில்களைத் தரவும் பெற்றோர் தயாராக வேண்டும்.

`நான் செக்ஸுக்கு ரெடியா’ என்ற கேள்வி குழந்தைகள் மனத்தில் இருக்கலாம். டேட்டிங், காதல், புரொபோசல், தொடுவது, முத்தமிடுவது, செக்ஸ் தொடர்பான கேள்விகள் அவர்களுக்கு வரலாம். அவர்களுடைய நட்பில் சிக்கல்கள் இருக்கலாம். அதில் வன்முறைகளைச் சந்திக்கலாம். இப்படிக் குழந்தைகளின் பதின் பருவ பாலியல் சிக்கல்களைப் பெற்றோர் முதலில் புரிந்துகொள்ள வேண்டும்.

பெற்றோர்களுக்கும் குழந்தைகளுக்கும்
பெற்றோர்களுக்கும் குழந்தைகளுக்கும்

டீன்ஏஜ் குழந்தைகளின் தவறான நம்பிக்கைகளைத் தெளிவுபடுத்தி பெற்றோர் எப்படி அவர்களை நல்வழிப்படுத்துவது?

தாங்கள் என்ன நினைக்கிறோம் என்பதை வெளிப்படையாகவும் நேர்மையாகவும் பெற்றோர் பேச வேண்டும். பிள்ளைகளுக்கு ஏதேனும் தொடர்பு இருப்பதாகச் சந்தேகித்தால், அது குறித்த விஷயங்களைப் பேச வேண்டியதும் விதிமுறைகளை விதிக்க வேண்டியதும் அவசியம். அந்த விதிமுறைகள் பிள்ளைகளுக்கு மன அழுத்தத்தைத் தராதவையாக இருக்க வேண்டும். அவை வீட்டிலுள்ள அனைவரும் பின்பற்றுபவையாகவும் இருக்க வேண்டும்.

குறிப்பிட்ட நேரத்துக்குள் வீட்டுக்குத் திரும்புவது, இத்தனை மணி நேரம் வெளியில் இருக்கலாம், நண்பர்களுடன் பேச வெளியிடங்களுக்குச் செல்லாமல் வீட்டிலேயே பேசலாம் என்பது போன்ற இலகுவான விதிமுறைகளாக அவை இருக்கட்டும்.

பாலியல் தொடர்பான விஷயங்களில் எது உண்மை, எது பொய் என்பதை அவர்களுக்குப் புரியவைக்க வேண்டும். பாலியல் கல்வி என்பது டீன்ஏஜ் பிள்ளைகளைத் தூண்டி, சீக்கிரமே அவர்களை அந்த விஷயத்துக்குள் தள்ளிவிடும் என்பது பலரும் சொல்வது. உலக அளவில் நடத்தப்பட்ட ஆய்வுகள் என்ன சொல்கின்றன தெரியுமா?

இப்படிப்பட்ட உரையாடல்களால் உங்கள் பிள்ளைகள் வழக்கத்தைவிடச் சீக்கிரமே பாலியல் உறவுகளுக்குள் போய்விடுவதில்லை; மாறாக அவர்களைப் பல ஆபத்துகளிலிருந்து காப்பாற்றியிருக்கிறது என்கின்றன. உலக சுகாதார நிறுவனம், வேர்ல்டு அசோசியேஷன் ஆஃப் செக்ஸாலஜி, இந்தியன் அசோசியேஷன் ஆஃப் செக்ஸாலஜி எனப் பல அமைப்புகளும் இதையே பரிந்துரைக்கின்றன.

அதேபோல பாலியல் தொடர்பான விவாதங்கள், பிள்ளைகள் அந்த விஷயங்களில் அடிக்கடி ஈடுபடத் தூண்டுவதாகச் சொல்லப்படுவதும் தவறான கருத்து.

பாலியல் கல்வியை முழுமையாகப் பெற்றவர்கள், பால்வினை நோய்களிலிருந்து மட்டுமல்ல, தேவையற்ற உறவுகளில் சிக்கிக்கொள்வதிலிருந்தும் அவர்களைக் காப்பாற்றுகிறது. பாலியல் கல்வியெல்லாம் பயனற்றது என்ற வாதமும் இருக்கிறது. பாலியல் கல்வியை முறையாக போதிக்கிற பள்ளிகளில், பதின்ம வயது கர்ப்பங்களும், பால்வினை நோய்களும் குறைவதாகக் கண்டுபிடித்திருக்கிறார்கள்.

இதைக் கற்றுக்கொடுப்பதால் டீன்ஏஜ் பெண் குழந்தைகள் கர்ப்பமாகி விடுகிறார்கள் என்றும் பல பெற்றோர் நினைக்கிறார்கள். சிகரெட்டும் குடியும் எப்படித் தவறான விஷயங்கள் என்று அவற்றிலிருந்து விலகியிருக்க சிறு வயதிலேயே அறிவுறுத்துகிறோமோ, அதே போன்றதுதான் தவறான பாலியல் உறவுகளுக்குள் சிக்காமலிருக்க அறிவுறுத்துவதும். பெற்றோர் அதைச் செய்யாதபோது சமுதாயமும் சக வயதினரும் தவறான வழிகளுக்கு அழைத்துச் செல்லும் அபாயம் அவர்களுக்கு இருக்கிறது.

ஆகவே... அலர்ட் ஆகலாம் பெற்றோர்களே!