Published:Updated:

`அந்தாளு எனக்கு நேரா நின்னு சுயஇன்பம் செஞ்சுக்கிட்டிருந்தான்...' | ஜன்னலோரக் கதைகள் - 7

வன்முறை
News
வன்முறை

அம்மாகூட இருக்கும்போதே இப்படியான விஷயம் நடந்துச்சு. ஓப்பனா அழுகவும் முடியல, கேள்வி கேட்கவும் முடியல. நான் வேலைக்கு வந்ததுக்குப் பிறகு, என் சொந்த மாமா என்கிட்ட பாலியல் அத்துமீறல் பண்ண ட்ரை பண்ணாரு.

Published:Updated:

`அந்தாளு எனக்கு நேரா நின்னு சுயஇன்பம் செஞ்சுக்கிட்டிருந்தான்...' | ஜன்னலோரக் கதைகள் - 7

அம்மாகூட இருக்கும்போதே இப்படியான விஷயம் நடந்துச்சு. ஓப்பனா அழுகவும் முடியல, கேள்வி கேட்கவும் முடியல. நான் வேலைக்கு வந்ததுக்குப் பிறகு, என் சொந்த மாமா என்கிட்ட பாலியல் அத்துமீறல் பண்ண ட்ரை பண்ணாரு.

வன்முறை
News
வன்முறை

ஊரப்பாக்கம் ரயில் நிலையம். ஒரு திருமண வரவேற்பு நிகழ்ச்சியை முடித்துவிட்டு, இரவு 8 மணிக்கு ரயில் நிலையம் வந்தேன். இரவு நேரம் என்பதால் ரயில் நிலையத்தில் கூட்டம் பெரிதாக இல்லை. அங்கொன்றும், இங்கொன்றுமாக ஆள்கள் அமர்ந்திருந்தார்கள். ரயில் வர பத்து நிமிடங்கள் இருப்பதாக அறிவிப்பு செய்தார்கள். அங்கிருந்த புங்கை மரத்தின் அருகில் அமர்ந்தேன். மாடர்ன் டிரஸ் அணிந்த ஒரு பெண், மிடுக்காக நடந்து வந்தாள். ரயில் வந்ததும் போன் பேசிக்கொண்டே ரயிலில் ஏறினாள்.

ரயில்
ரயில்

நான், பெண்கள் பெட்டியில் ஏறிக்கொண்டேன். அந்தப் பெட்டியில் பத்து பேர்தான் இருந்தோம். அதனால் ஆளுக்கொரு ஜன்னல் சீட்டில் அமர்ந்திருந்தார்கள். காலையிலிருந்து ஓய்வில்லாமல் ஓடிய களைப்பை ஒவ்வொரு பெண்ணின் முகத்திலும் காண முடிந்தது. ரயில் நகர்ந்தது. காற்று, ஜன்னல் கம்பிகளைத் தாக்கி வேகமாக உள்நுழைந்தது.

பார்வையற்ற தம்பதி, ஊதுவத்தி விற்றுக்கொண்டே வந்தார்கள். யாரும் வாங்காததால் பாட்டு பாடிக் கொண்டே ஓர் ஓரமாக சீட்டில் அமர்ந்தார்கள். ரயில், தாம்பரம் ரயில் நிலையத்திற்குள் வந்தது. மாடர்ன் ஆடை அணிந்த அந்தப் பெண், பொதுப் பெட்டியில் இருந்து இறங்கி, வேகமாக எங்கள் பெட்டியில் ஏறினாள். பெட்டியில் ஏறியது முதல் சீட் என்பதால், எனக்கு எதிரில் இருந்த சீட்டில் அமர்ந்து கொண்டாள். அவள் படபடப்பாக இருப்பதை, பார்க்கும்போதே உணர முடிந்தது. கைப்பையில் இருந்து தண்ணீர் பாட்டிலை எடுத்துக் குடித்தாள். பாதி தண்ணீர் வெளியில்தான் சிந்தியது. வாட்டர் பாட்டிலை மடியில் வைத்தவள், ஜன்னல் பக்கமாகத் திரும்பிக் கொண்டாள்.

பெண்
பெண்

அவளின் கண்கள் கலங்கியிருந்தன. நிமிடத்திற்கு ஒருமுறை கண்களை, விரல்களால் துடைத்தாள். அவள் அழுது கொண்டிருப்பது உறுதியானது. முதலில் எதுவும் தனிப்பட்ட காரணமாக இருக்கும் என்று அமைதியாக இருந்தேன். ஆனால், பல்லாவரம் வரும் வரையில் அழுகை நிற்கவில்லை. அழுவதை பார்த்துக் கொண்டு அமைதியாகவும் இருக்க முடியவில்லை. சின்ன தயக்கத்தோடு, `என்னாச்சுப்பா, எதுவும் பிரச்னையா?' என்று அவளின் கைகளைப் பற்றினேன். முதலில் எதுவும் இல்லை என்ற தொனியில் வேகமாகத் தலையை அசைத்தாள். அதன் பின் என்ன நினைத்தாளோ தெரியவில்லை, என் அருகில் வந்து தோளில் சாய்ந்து கொண்டாள்.

இந்த முறை கொஞ்சம் சீரியஸாக, `என்னப்பா... ஏன் அழறீங்க?' என்று கேட்டேன். விம்மிக்கொண்டே, `ரெண்டு பெட்டி முன்னாடி இருந்த ஜெனரல் கோச்ல ஏறுனேன்க்கா. அந்தப் பெட்டியில் ஒரேயோரு ஆம்பிளைதான் இருந்தாரு. சரி இறங்கலாம்னு நினைக்கிறதுக்குள்ள ட்ரெயின் எடுத்துட்டாங்க. தாம்பரம் வந்ததும் இறங்கி மாறிப்போம்னு இருந்தேன். அந்த ஆள் என்னை மேலும், கீழுமா பார்க்கிறதை கவனிச்சிட்டேன். அதனால அவர் பக்கம் பார்க்கறதை தவிர்த்துட்டு ஜன்னல் பக்கமா திரும்பினேன். திடீர்னு நிமிர்ந்து பார்த்தப்போ அந்தாளு எனக்கு நேரா நின்னு சுய இன்பம் செஞ்சுக்கிட்டிருந்தார். அப்படியே மனசு படபடத்துருச்சு. என்னைச் சுத்தி என்ன நடக்குதுனு நான் ரியலைஸ் பண்றதுக்குள்ள தாம்பரம் ரயில் நிலையம் வரவே, சட்டுனு கீழே இறங்கி ஓடிட்டான்.

பாலியல் கொடுமை
பாலியல் கொடுமை
சித்தரிப்புப் படம்

அந்த நபரை என்னால எதுவும் பண்ண முடியல. அது கோபமாக மாறி, அழுகையா வருது. என்ன பண்றதுனே தெரியல. அதான் இந்தப் பெட்டிக்கு ஓடி வந்துட்டேன் . இத நான் வெளியில சொன்னா, என்னோட டிரஸ்ஸை குறை சொல்லுவாங்க, இது எதுக்கு ராத்திரி நேரத்துல ஜெனரல் கோச்ல ஏறுச்சுனு சொல்லி என்னை குற்ற உணர்ச்சிக்குத் தள்ளுவாங்களே, தவிர்த்து அந்த ஆள் பண்ணது தப்புனு சொல்ல மாட்டாங்க. இதுல என்னோட தப்பு என்னக்கா இருக்கு? ஒரு பொண்ணுக்கு ஜெனரல் கோச்ல ஏறுற சுதந்திரம்கூட இல்லையா? இல்ல, ஜெனரல் கோச்ல ஏறுற பொண்ணுகிட்ட என்ன வேணா பண்ணலாம்னு தைரியமா?' என்ற அவளின் வார்த்தைகளில் அவ்வளவு கோபம். ஆனாலும், கண்களிலிருந்து கண்ணீர் வடிந்து கொண்டே இருந்தது.

`இந்த மாதிரியான பாலியல் வன்கொடுமையை நான் சந்திக்கிறது முதல்முறை இல்லக்கா... பஸ்ல போறப்போ பின்னாடி நின்னு உரசுறது, கூட்டமான இடத்துல நகர்ற மாதிரி இடிக்கிறது, தெரியாம கைபடுற மாதிரி மேல இடிக்க வர்றது, கோயில் திருவிழாக்கள்ல இடிச்சுட்டுப் போறதுனு நிறைய ஃபேஸ் பண்ணிருக்கேன்க்கா. ஸ்கூல், காலேஜ் படிக்கிறப்போ, இந்த மாதிரியான விஷயங்களை எதிர்த்து கேள்வி கேட்குற தைரியம் இல்ல. அதைவிட, நான் கிராமத்துல பொறந்து, வளர்ந்த பொண்ணு. வீட்ல கெஞ்சி, கூத்தாடிதான் பக்கத்து ஊர்ல இருக்கிற ஸ்கூலுக்கு போயிட்டு இருந்தேன். இந்த மாதிரியான சம்பவம் பஸ்ல நடந்துச்சுன்னு தெரிஞ்சா, 'பஸ்ல போயி படிக்க வேணாம்'னு சொல்லி, உள்ளூர்ல இருக்க ஸ்கூல்ல சேர்த்து விட்டுருவாங்க. அதனால வீட்ல எதுவுமே சொன்னது இல்ல. ஆனா, ஒவ்வொரு சம்பவமும் எவ்வளவு ஸ்ட்ரெஸ்ஸை கொடுத்துருக்கு தெரியுமாக்கா? எத்தனையோ நாள் போர்வையை மூடிட்டு இருட்டுக்குள்ள அழுதுருக்கேன். இதனால எத்தனை நாள் என்னோட படிப்பு பாதிக்கப்பட்டிருக்குனு தெரியுமாக்கா?

பாலியல் வன்கொடுமை
பாலியல் வன்கொடுமை

ஒரு டைம், நானும் என் அம்மாவும் டிராவல் பண்ணும்போதுகூட, இப்படியான ஒரு சூழல். நான் தைரியமா இருக்கேன். எல்லாத்தையும் ஃபேஸ் பண்ணிருவேன்னுதான் எங்க வீட்ல என்னைய வேலைக்கே அனுப்பறாங்க. நிம்மதியா இருக்காங்க. ஆனா, அம்மாகூட இருக்கும்போதே இப்படியான விஷயம் நடந்துச்சு. ஓப்பனா அழுகவும் முடியல, கேள்வி கேட்கவும் முடியல. நான் வேலைக்கு வந்ததுக்குப் பிறகு, என் சொந்த மாமா என்கிட்ட பாலியல் அத்துமீறல் பண்ண ட்ரை பண்ணாரு. அப்போ அவரை தைரியமா எதிர்த்தேன். அப்போ இருந்து, நான் தைரியம் ஆகிட்டேன்னு நினைச்சுட்டு இருந்தேன்க்கா. எனக்கு கூடுதல் நம்பிக்கை வர்றதுக்காகதான் இந்த மாதிரியான மாடர்ன் டிரஸ் போடறேன். ஆனாலும் இப்போ இந்தச் சம்பவம் நடந்திருக்கு.

அப்போ பொண்ணுங்களோட டிரஸ்ல தப்பு இல்ல. பொதுவா சுடிதார் போட்ட பொண்ணுங்க, இந்த மாதிரியான விஷயங்கள் நடக்கும்போது, மானத்துக்கு பயந்து அமைதியா இருப்பாங்கன்னும், மாடர்ன் டிரஸ் போட்ட பொண்ணுங்க ஈஸியா எடுத்துப்பாங்கன்னும் நினைக்கிறாங்க. அவங்களோட தப்புக்கு நம்ம டிரஸ்ஸை காரணமா சொல்லி எஸ்கேப் ஆகுறாங்க. அதனாலதான் யூனிஃபார்ம் போட்ட பொண்ணுங்களுக்கும் 60 வயசு பாட்டிக்கும் பாலியல் வன்கொடுமை நடக்குது' என்று அவள் உடைந்து அழுதபோது, எனக்கு நடந்த சில கசப்பான அனுபவங்கள் மனசுக்குள் வந்தன. நீண்டநாள் வெளியில் சொல்ல முடியாமல், மனதுக்குள் அழுத்திய சம்பவங்களை திருமணத்திற்குப் பின் என் கணவனிடம் ஒருமுறை சொல்லி அழுதேன். அப்படி புலம்பும் சுதந்திரம்கூட இங்கு எல்லா பெண்களுக்கும் கிடைப்பதில்லை. என் தோள் மீது சாய்ந்து அழுத அவளை, என்ன சொல்லித் தேற்றுவது என்று உண்மையில் தெரியவில்லை.

பெண்
பெண்

`ஆண் சமுதாயம் அப்படித்தான்... நாம்தான் கவனமாக இருக்கணும்'னு என் பாட்டி காலத்தில் சொன்ன அதே டயலாக்கை நான் சொல்ல விரும்பவில்லை தான். ஆனாலும், அப்படியான சூழல்தானே இன்னமும் இருக்கிறது. வேலைக்குச் செல்வதும், சோஷியல் மீடியா பயன்படுத்த அனுமதிப்பதையும்தானே பெண்களுக்கான சுதந்திரமாக இந்தச் சமுதாயம் காட்சிப்படுத்துகிறது. அப்படிப்பட்ட சமுதாயம் மீது கோபப்பட்டு புலம்புவதைவிட என்ன மாற்றத்தை நாங்கள் செய்துவிட முடிகிறது? பெண்களை துப்பட்டா போடச் சொல்வதும், `அதையும் உங்க பாதுகாப்புக்காகத்தான் சொல்றோம்' எனச் சொல்லி எங்களின் பாதுகாவலர்களாக உங்களை வெளிக்காட்டிக் கொள்வதும், சோஷியல் மீடியாவில் ஒரு பெண் முற்போக்குத்தனமான பதிவுகளைபோடும்போது `சாட்டையடி பதிவு தோழி' என்று கமென்ட்ஸ் பதிவிடுவதும்தான் ஆண்மையா...? ஆண்மை என்பது கண்ணியம் மட்டுமே.

ஒரு பெண்ணுக்கு நிகழும் பாலியல் வன்கொடுமை என்பது, ஆயிரம் முறை தற்கொலையிலிருந்து மீண்டதற்கான வலிக்கு நிகரானது. அவர்களின் உடல் உறுப்பு மீது வெறுப்பை ஏற்படுத்துவது. தன் இயலாமை மீது கோபத்தை ஏற்படுத்துவது. அது விதைத்த பயம் எத்தனையோ பெண்களின் தூக்கத்தை இல்லாமல் செய்திருக்கிறது. சிறு வயதில் ஏற்பட்ட பாலியல் வன்கொடுமை அவளின் முதுமை வரை நீங்காத மனஅழுத்தத்தைத் தரக்கூடியது. எத்தனையோ பெண்கள் திருமண பந்தத்தில் நாட்டம் இல்லாமல் போவதற்கு உங்களின் சில நிமிட இன்பம் காரணமாக இருக்கிறது என்பதை தவறு செய்யும் ஆண்கள் புரிந்து கொள்ளுங்கள். நீங்கள் பாலியல் இச்சையோடு அணுகும் பெண்ணுக்கு கனவுகள் இருக்கலாம், தேவைகள் இருக்கலாம் அதற்காக குடும்பத்தில் அவள் போராடி வெளியில் வந்திருக்கலாம். அவளின் சிறகுகளை உங்கள் கைகளால் பிய்த்து எறிந்து விடாதீர்கள்.

பெண்
பெண்

உங்கள் வாழ்க்கையிலும் அம்மா, மனைவி, அக்கா என பல்வேறு உறவுகளில் பெண்கள் பயணித்திருப்பார்கள். ஒரே ஒரு முறை, `பாலியல் அத்துமீறல் எதிர்கொண்டு இருக்கிறாயா' என்கிற கேள்வியை, தோழமையோடு கேட்டுப்பாருங்கள். ஒவ்வொரு பெண்ணுக்குள்ளும் பகிர்வதற்கு வலி நிறைந்த ஆயிரம் கதைகள் இருக்கின்றன. அப்படியான கதைகளின் வலி, அடுத்த முறை பெண்களை தப்பான கண்ணோட்டத்தில் பார்க்கும் எண்ணத்தையும் அணுகும் எண்ணத்தையும் நிச்சயம் மாற்றும். பெண்கள் மனநிலை பற்றிய தெளிவை ஆண்களுக்குள் விதைக்கும் என்ற நம்பிக்கையோடு உங்களின் சகோதரி விடைபெறுகிறேன்!