தன்னம்பிக்கை
லைஃப்ஸ்டைல்
தொடர்கள்
Published:Updated:

பெற்றோர்களுக்கும் குழந்தைகளுக்கும்: இடம், பொருள், ஏவல் அறிந்து பேசுங்கள்!

பெற்றோர்களுக்கும் குழந்தைகளுக்கும்
பிரீமியம் ஸ்டோரி
News
பெற்றோர்களுக்கும் குழந்தைகளுக்கும்

பாலியல் மருத்துவர் காமராஜ்

குழந்தைகளின் பாலியல் உணர்வுகள் பற்றிய பயங்களையும் எதிர்பார்ப்புகளையும் பெற்றோர் முற்றிலுமாக விட்டுவிட வேண்டிய நேரமிது. டீன்ஏஜில் பிள்ளைகள் தனிமனிதர்களாக உருமாறிக்கொண்டிருப்பார்கள். உங்களுடைய எண்ணங்களை, அவர்கள் மேல் ஏற்றிப்பார்ப்பதை நிறுத்திவிட்டு, அவர்களைத் தனிமனிதர்களாகவே பார்க்க வேண்டிய தருணமிது. நீங்கள் போட்டிருக்கும் கண்ணாடி வழியே... உங்களின் எதிர்பார்ப்புகளின் வழியே அவர்களைப் பார்ப்பதை நிறுத்துங்கள். உங்கள் பிள்ளைகளுடனான உரையாடல்கள் அனைத்துமே எதிர்பார்ப்புகளின்றி இருக்க வேண்டும்.

பதின்ம வயதில் பிள்ளைகள் பாலியல் பற்றிய கண்டுபிடிப்புகளை முதன் முறையாகச் செய்கிறார்கள். பாலியல் தொடர்பான அவர்களுடைய சிந்தனைகள், பார்வைகளைப் புதிதாகக் கண்டுபிடிக்கிறார்கள். பிள்ளைகள் அவற்றைப் பற்றி பெற்றோரிடம் பேசும்போது, பெற்றோர் தம்மையோ, பிள்ளைகளின் சகோதரர்களையோ, நண்பர்களையோ, யாரேனும் பிரபலங்களையோ ஒப்பிட்டு, குழந்தைகளைத் திட்டுவதும் அட்வைஸ் செய்வதும் வழக்கம். இப்படிப்பேசுவது குழந்தைகளை உங்கள் பக்கம் திருப்பாது. பிள்ளைகள் புதிதாகக் கண்டுபிடிக்கும் விஷயங்களைப் பற்றிப் பேசாமல் தம்முடைய சிந்தனைகளைப் பற்றிப் பேசும்போது, குழந்தைகள் அடுத்தடுத்து பெற்றோரிடம் விவாதிக்கவே மாட்டார்கள். நம்முடைய தவறுகளிலிருந்து குழந்தைகள் கற்றுக்கொள்வார்கள் என்று பெற்றோர் நினைக்கிறார்கள். ஆனால், உண்மையில் குழந்தைகள் அப்படிக் கற்றுக்கொள்வதில்லை.

பாலியல் மருத்துவர் காமராஜ்
பாலியல் மருத்துவர் காமராஜ்

பள்ளிக்கூடத்தில் சினிமாவுக்கு அழைத்துச்செல்வது, தோழியின் வீட்டுக்குச் செல்வது எனப் புதிய அனுபவங்களைப் பதின்ம வயதினர் சொல்ல ஆரம்பிப்பார்கள். அப்போது பெற்றோர் அவற்றை முழுமையாகக் கேட்பதில்லை. ‘நானும் ஒருமுறை அப்படிப் போயிருந்தேன்... அப்போ இப்படி நடந்துச்சு...’ எனச் சொந்தக் கதைகளைப் பேச ஆரம்பிப்பார்கள்.

பாதுகாப்பு குறித்த அனைத்து விஷயங்களையும் பிள்ளைகளிடம் சொல்வது ரொம்ப முக்கியமானது என்று நினைக்கிறார்கள். ஆனால், பிள்ளைகள் அவற்றை உபயோகமான தகவல்களாகப் பார்ப்பதில்லை. தம் அனுபவங்களை முழுமையாகக் கேட்காததால், அடுத்தமுறை அப்படித் தோன்றும் எண்ணங்களைப் பெற்றோரிடம் பகிர்ந்துகொள்ள வேண்டாம் என்றே நினைப்பார்கள். அப்படிச் சொன்னால் பெற்றோர் உடனடியாகத் தங்கள் அனுபவங்களைச்சொல்லி, பிள்ளைகள் என்ன செய்ய வேண்டும்... என்ன செய்யக் கூடாது என அறிவுரை சொல்லத் தொடங்குவார்கள் என்று அவர்களுக்குத் தெரியும். குழந்தைகளுக்கு உடலளவிலோ, மனதளவிலோ எந்த ஆபத்தும் வந்துவிடக் கூடாது எனப் பெற்றோர் நினைக்கிறார்கள். ஆனால், மனிதர்கள் சந்தோஷத்தின் மூலமாகவும் வலிகளின் மூலமாகவும்தான் அனுபவங்களைப் பெறுகிறார்கள். அவற்றைத் தவிர்த்துவிட்டு வளர வேண்டும் என நினைப்பது சாத்தியமில்லை.

எதுவுமே பேசாமலிருப்பது, பேச ஆரம்பித்தால் நம் கதையைச் சொல்வது... இரண்டுமே தவறு. ஆரோக்கியமான வெளிப்படையான உரையாடல்தான் சரியானது.

பிள்ளைகள் பாலியல் குறித்த விஷயங்களால் ஈர்க்கப்படுவார்கள் என்று பெற்றோர் கணித்து வைத்திருக்கும் வயதுக்கு முன்பே அவர்கள் அவற்றைப் பற்றி பெற்றோரிடம் பேச ஆரம்பித்து விடுகிறார்கள். ஆனால், பல பெற்றோரும் அதைக் கவனிக்கத் தவறி விடுகிறார்கள். இன்னும் குழந்தைக்கு அந்த வயது வரவில்லை என நினைத்துக்கொள்கிறார்கள். அவர்களோ குறிப்புகளால் அந்த விஷயங் களைப் பெற்றோருக்கு உணர்த்திக்கொண்டே இருக்கிறார்கள்.

இந்தியாவில் குறிப்பாகத் தமிழ்நாட்டில் பெரும்பாலான பெற்றோருக்கு உறவுகள், பாலியல் குறித்த விஷயங்களைப் பிள்ளை களிடம் பேசுவதில் பெரிய தயக்கமும் பயமும் இருக்கிறது. ஆனால், குழந்தைகள் ஆரம்பகட்டத்தில் பேச ஆரம்பிக்கும்போது அதை ஊக்கப்படுத்திப் பேசினால் இருவருக்கும் இடையில் ஓர் இணக்கம் ஏற்படும். பேசாமலே இருந்து திடீரென ஒருநாள் சிக்கலான அந்த விஷயத்தைப் பற்றி பிள்ளைகள் பேசும் போது ஏற்படும் அதிர்ச்சியை இதன் மூலம் தவிர்க்கலாம்.

பெற்றோர்களுக்கும் குழந்தைகளுக்கும்
பெற்றோர்களுக்கும் குழந்தைகளுக்கும்

எதுவுமே பேசாமலிருப்பது, பேச ஆரம்பித்தால் நம் கதையைச் சொல்வது... இரண்டுமே தவறு. ஆரோக்கியமான வெளிப் படையான உரையாடல்தான் சரியானது.

திடீரென ஏற்படும் காதல், அது தரும் உணர்வு... இவையெல்லாம் பிள்ளைகளுக்குப் புதியவை. ஆனால், பெற்றோர் தாம் கேள்விப் படும் வதந்திகள், பார்க்கிற செய்திகள் அவை ஏற்படுத்தும் பயம் ஆகியவற்றைக் குழந்தைகளின் உணர்வுகளில் ஏற்றிப்பார்க்கிறார்கள். அப்படிச் செய்யாமல் குழந்தைகளிடம் இயல்பாக உரையாடுவதை வழக்கமாக்கிக் கொண்டால் பிள்ளைகளும் அப்படியான இயல்பான பகிர்தலுக்குத் தயாராவார்கள். அம்மாவிடமோ, அப்பாவிடமோ அவர்களின் டீன்ஏஜ் அனுபவங்களைப் பற்றி ஆர்வத்துடன் கேட்டுத் தெரிந்துகொள்ள நினைப்பார்கள். பெற்றோருடன் ரொம்பவே நெருக்கமாக இருக்கும் குழந்தைகள், அவர்களின் பாலியல் அனுபவங்களைப் பற்றிக்கூடக் கேட்க நினைக்கலாம். அப்படிப்பட்ட கேள்விகளை எதிர்கொள்ளும் பெற்றோர் அவற்றுக்கு உண்மையான பதில்களைத்தான் சொல்ல வேண்டும் என்ற அவசியமில்லை. ரொம்பவே அந்தரங்கமான விஷயங்களைப் பகிரத் தேவையில்லை. அது பெற்றோரின் உரிமையும் கூட. இந்தளவுக்குக் கூடவா பிள்ளைகளுடன் நெருக்கம் வளர்க்க முடியும் என்றால் முடியும், பொறுமையும் சரியான அணுகுமுறையும் இருந்தால்!

பெரும்பாலான பெற்றோர் பிள்ளைகளிடம் அளவுக்கதிகமாகப் பேசுகிறார்கள். பேச ஆரம்பித்தால் நிறுத்துவதில்லை. பிள்ளைகள் தம் பேச்சை விரும்புகிறார்களா என்றுகூடப் பார்க்காமல் பாடம் எடுக்கிறார்கள். ஏற்கெனவே பள்ளிகளில் ஆசிரியர்களின் பாடங்களையும் போதனைகளையும் கேட்கும் பிள்ளைகளுக்கு மீண்டும் பெற்றோர் எடுக்கும் பாடங்களையும் போதனைகளையும் கேட்க விருப்பம் இருப்பதில்லை.

பெற்றோர்களுக்கும் குழந்தைகளுக்கும்: இடம், பொருள், ஏவல் அறிந்து பேசுங்கள்!

பெற்றோர் குழந்தைகளுக்குத் தொடர்ச்சியாக அறிவுரைகள் சொல்லிக்கொண்டே இருப்பதற்கு நான்கு விதமான பயங்களே அடிப்படை. அவை...

1. குழந்தைகள் பொதுவாகச் செய்யக்கூடிய தவறுகளாலும் முடிவுகளாலும் பாலியல் தொடர்பான தவறான விஷயங்களில் மாட்டிக்கொள்வார்களோ என்ற பயம்.

2. சில நேரங்களில் வாழ்க்கையை மிரட்டும் அளவுக்கு அல்லது வாழ்க்கையையே புரட்டிப் போடும் அளவுக்கு ஏதேனும் சிக்கலில் மாட்டிக்கொள்ளலாம். காதலில் விழுவது, கர்ப்பமாவது, ‘நேர்கொண்ட பார்வை’ படத்தில் வருவதுபோல எதிர்பாராத பிரச்னைகளில் மாட்டிக்கொள்வது போன்ற கற்பனைகள் பெற்றோர் மனத்தில் தோன்றும்.

3. அடுத்தது மதம்சார்ந்த கட்டுப்பாடுகள், சமூக போதனைகள், கலாசாரம் வலியுறுத்தும் கோட்பாடுகள்... பிள்ளைகள் அவற்றைக் கடைப்பிடிக்க வேண்டும் என்ற பெற்றோரின் துடிப்பு.

4. என்ன பேசினாலும் குழந்தைகளைக் கட்டுப்படுத்த முடியாது என்பது பெற்றோருக்குத் தெரியும். அது அவர்களது பேச்சின் வழியே வெளிப்படும். பிள்ளைகள் தவறான நபரைக் காதலித்து விடுவார்களோ, தவறான விஷயங்கள் ஏதேனும் நடந்துவிடுமோ என்ற பயம்.

இதற்கெல்லாம் என்னதான் தீர்வு?

பதின்பருவப் பிள்ளைகள் பேசும்போது அறிவுரை சொல்வதையும் பேசுவதையும் நிறுத்திவிட்டு அவர்கள் சொல்வதை முழுமையாகக் கவனிக்க வேண்டும். எதற்கெடுத்தாலும் போதனை செய்யக்கூடாது. ‘நான் பேசவில்லை என்றால் என் குழந்தைக்கு விஷயங்கள் எப்படிப் புரியும்... யார் கற்றுக் கொடுப்பார்கள்?’ எனக் கேட்கலாம். ஆனால், தேவையில்லாத இடங்களில் தேவையற்ற விஷயங்களைப் பற்றியே தேவையில்லாமல் பேசிக்கொண்டிருந்தால் பிள்ளைகள் உடல் ரீதியாக, உணர்வுரீதியாக... இவ்வளவு ஏன்... உரையாடலில்கூட பெற்றோரிடமிருந்து ஓர் இடைவெளியை அமைத்துக்கொள்வார்கள். இது பெற்றோருக்குக் கடுமையான மன உளைச்சலை ஏற்படுத்தும். நேற்று வரை அம்மாவிடமும் அப்பாவிடமும் நெருக்கமாக இருந்த குழந்தைகள் திடீரென விலகிச்செல்வதை உணர முடியும். இந்த இடைவெளியைத் தவிர்க்க பெற்றோர் ஓர் இடைவெளி (பர்சனல் ஸ்பேஸ்) கொடுத்துதான் ஆக வேண்டும்.

  • குழந்தைகள் இருக்கும் அறைக்குள் செல்வதற்கு முன் கதவைத் தட்டிவிட்டு அவர்கள் அனுமதித்த பிறகே செல்ல வேண்டும்.

  • பிள்ளைகள் அவர்களின் நண்பர்களுடன் இருக்கும்போது பெற்றோரும் கூடவே இருப்பதைத் தவிர்க்க வேண்டும். பிள்ளைகளின் உரிமைகளில் பெற்றோர் தலையிடுகிறார்கள் என்ற எண்ணத்தை ஏற்படுத்தக் கூடாது.

  • பிள்ளைகள் பெற்றோரிடம் பேசவில்லை என்றால் கொஞ்சம் அமைதி காக்கலாம் தவறில்லை. அதைப் பெரிய பிரச்னையாக்கி ‘இப்பல்லாம் என்கிட்ட எதுவுமே சொல்றதில்லை’ என்று வளர்க்க வேண்டியதில்லை. அந்த இடைவெளி எந்த பாதிப்பையும் ஏற்படுத்திவிடாது.

  • இடம், பொருள், ஏவல் அறிந்து அவர்களிடம் பேச வேண்டும். அதாவது டி.வி பார்க்கும்போது, குடும்பத்துடன் வெளியே போகும்போது... இப்படியான சில தருணங்களில் பெற்றோர், பிள்ளைகளிடம் மனம்விட்டுப் பேசலாம்.