
ஆர்ட் ஆஃப் ஈட்டிங்!
ஆரோக்கியமான உணவுப்பழக்கம் என்பது அவ்வப்போது எட்டிப் பார்க்கிற எண்ணமாக இருக்கக்கூடாது. அது நம் நாடி, நரம்பு, ரத்தம், செயல், சிந்தனை என எல்லாவற்றிலும் நிறைந்திருக்க வேண்டும். அப்போதுதான் இலக்கை அடைய முடியும்.
‘‘நம்மில் பலரும் செய்கிற தவறுகளில் முக்கியமானது என்ன தெரியுமா... ஷாப்பிங் செய்யும்போது ஆரோக்கியக் கண்ணாடியைக் கழற்றிவைத்துவிட்டு, கண்ணைக் கவரும் கண்டதையும் வாங்குவதுதான். வாங்கிவிட்டதை வீணடிக்க வேண்டாமே எனச் சாப்பிடுவது போன்றவை உங்கள் ஆரோக்கிய இலக்கை அடைவதில் தடையை ஏற்படுத்தும். சில வீடுகளின் டைனிங் டேபிளைப் பார்த்தால் தெரியும்... தேவைக்கு அதிகமான பிஸ்கட், பிரிக்கப்படாத சிப்ஸ் பாக்கெட், சாக்லெட் இத்யாதி அயிட்டங்களால் நிறைந்திருக்கும். ஷாப்பிங் செய்யும்போதே சில விஷயங்களை கவனத்தில் கொண்டால், தேவையற்ற செலவையும் ஆரோக்கியக்கேட்டையும் தவிர்க்கலாம்'' என்கிறார் சென்னையைச் சேர்ந்த உணவு மற்றும் ஊட்டச்சத்து ஆலோசகரும், பிரபலங்களின் டயட்டீஷியனுமான ஷைனி சுரேந்திரன். ஹெல்தி ஷாப்பிங் செய்ய அவர் தரும் ஆலோசனைகள் இங்கே....

ஷாப்பிங் செய்யும்போது ஆரோக்கியமாகத் தேர்வு செய்வது எப்படி?
1. என்ன வாங்கப் போகிறீர்கள் என்பதை முன்கூட்டியே லிஸ்ட் போடுங்கள். காய்கறிகள், பழங்கள், கீரைகள், பருப்பு வகைகள் என அடுத்த ஒரு வாரத்துக்கான தேவையைப் பட்டியல் போட்டுக்கொண்டு ஷாப்பிங் செல்லுங்கள். எவ்வளவு வாங்கப் போகிறீர்கள் என்பதையும் முன்கூட்டியே முடிவு செய்துவிடுங்கள். இதனால் தேவையற்ற பொருள்களை, தேவையற்ற அளவுகளில் வாங்குவதைத் தவிர்க்கலாம்.

2. ஆரம்பத்தில் கொஞ்சம் சிரமமாகத் தெரியலாம்... பழகிவிட்டால் இதைவிட பெஸ்ட் பிளான் வேறில்லை என்பீர்கள். அடுத்த ஒரு வாரத்துக்கு காலை உணவு, மதிய உணவு, இரவு உணவுக்கு என்னென்ன சமைக்கலாம் எனத் திட்டமிடுங்கள். குழந்தைகள் உட்பட, குடும்பத்தார் அனைவரையும் இந்தத் திட்டமிடலில் ஈடுபடுத்துங்கள். வெரைட்டியாக சமைப்பதும், தேவையற்றதை வாங்கிக்குவிப்பதைத் தவிர்ப்பதும் சாத்தியப்படும்.
3. ஷாப்பிங் செய்யும்போது ஒவ்வொரு பொருளின் லேபிளின் மீதும் குறிப்பிடப்பட்டுள்ள ஊட்டச்சத்து தொடர்பான தகவல்
களை கவனிக்கத் தவறாதீர்கள். நார்ச்சத்து, வைட்டமின், தாதுச்சத்துகள் அதிகமாக உள்ளபடியும், கொழுப்பு, சோடியம் மற்றும் சர்க்கரை போன்றவை குறைவாக உள்ளபடியும் தேர்வுசெய்ய வேண்டும் (அதாவது dietary fiber, vitamins, and minerals போன்றவை அதிகமாகவும், saturated fat, trans fat, sodium, and added sugars போன்றவை குறைவாகவும் இருக்க வேண்டும்).
4. பொருள்களின் எக்ஸ்பைரி தேதி / எந்தத் தேதிக்குள் உபயோகிக்க வேண்டும் என்பதை கவனிக்கத் தவறாதீர்கள்.
5. யாரெல்லாம் உபயோகிக்கக்கூடாது என்ற தகவலைப் பாருங்கள்.

6. யாருக்கு, எந்த அளவு என்ற குறிப்பு உள்ளதா எனப் பாருங்கள்.
7. ப்ரிசர்வேட்டிவ் மற்றும் அடிட்டிவ்ஸ் இல்லாமல் தயாரிக்கப்பட்டதா என்று பாருங்கள்.
8. அந்தந்த சீசனில் கிடைக்கும் காய்கறிகள், பழங்களை வாங்கிப் பயன்படுத்துங்கள். அவை, சுலபமாக மற்றும் விலை குறைவாகக் கிடைப்பதோடு, சுவையும் மணமும் அதிகமிருக்கும்.
9. குழந்தைகளுடன் ஷாப்பிங் செல்லும்போது அவர்களுக்கான பண்டங்களை வாங்கிக் கொடுப்பதில் கறாராக ஓர் அளவைக் கடைப்பிடியுங்கள். கண்டதையும் வாங்கிக் கொடுக்க வேண்டாம்.
10. சாப்பிட்டு முடித்த பிறகு ஷாப்பிங் செய்வதை வழக்கமாகக் கொள்ளுங்கள். பசியோடு ஷாப்பிங் செய்யும்போது நம்மையறியாமல் தேவையற்றதையும் ஆரோக்கியமில்லாதவற்றையும் வாங்கும் மனநிலையில் இருப்போம் என்கிறது உளவியல்.
- பழகுவோம்