
இணைந்த கைகள்
``என் வெற்றிக்குப் பின்னால் அவரும், அவர் வெற்றிக்குப் பின்னால் நானும் இருக்கேன்'' என்கிற ஸ்ருதி, தன் கணவர் நாராயணனுடன் இணைந்து டேக்வாண்டோவில் இதுவரை 17 கின்னஸ் சாதனைகள் படைத்திருக்கிறார்.
கொரியன் நாட்டு தற்காப்புக் கலையான டேக்வாண்டோ 90 சதவிகிதம் கால்களைப் பயன்படுத்தியே செய்யப்படுகிறது.

``என் கணவர் நாராயணன் மெக்கானிக்கல் இன்ஜினீயர். சென்னையில் வேலை பார்த்தவர், பொழுதுபோக்குக்காகத்தான் தற்காப்புக் கலையான டேக்வாண்டோ பயிற்சி எடுத்தார். அதில் முழுமையான தேர்ச்சி அடைஞ்சதும், ஆர்வம் அதிகமாகி, வேலையை உதறிட்டு, மதுரையில உள்ள அவர் வீட்டு மொட்டை மாடிலேயே மற்றவர்களுக்குக் கற்பிக்க ஆரம்பிச்சாராம். பல கட்ட தோல்விகளுக்குப் பிறகு கின்னஸ் அவர் கைவசப்பட்டிருக்கு. அவருக்கும் எனக்கும் திருமணம் நடந்த பிறகுகூட அவரை நான் கராத்தே மாஸ்டர்னு நினைச்சுட்டு இருந்தேன்னா பார்த்துக்கோங்க'' என்று சிரிக்கிற ஸ்ருதி, தற்காப்புக்காக மட்டுமே டேக்வாண்டோவைக் கற்றாராம்.
``என் கணவர் கல்வி நிறுவனங்களில் டேக்வாண்டோ பயிற்சி அளிப்பார். பெண்கள் இந்தக் கலையை கத்துக்க முன்வர்றதில்லைன்னு வருத்தப்படுவார். நாம இந்தக் கலையில ஒரு முன்னுதாரணமா இருக்கலாமேன்னு தோணுச்சு. கடுமையான பயிற்சிக்குப் பிறகு, மதுரைச் சுற்றுவட்டாரப் பெண்கள் முன்னிலையில் என் திறமையை வெளிப்படுத்தினேன். என்னைப் பார்த்த பல பெண்கள் டேக்வாண்டோ கத்துக்க ஆரம்பிச் சாங்க'' என்கிறவர், குழந்தை பேற்றுக்குப் பிறகு பயிற்சியாளராக மாறியிருக்கிறார்.

``என் கணவர் மாதிரி நானும் கின்னஸ் சாதனை செய்யணும்னு ஆசைப்பட்டேன். எங்க வீட்ல கடும் எதிர்ப்பு. ஆனா, புகுந்த வீட்ல என்னை ஆதரிச்சாங்க. பலகட்டப் பயிற்சிகள் எடுத்தேன். கைகளில் குறிப்பிட்ட அளவு எடையுடன் கையை மடக்கி முழங்கையை வைத்து டார்கெட் செய்யும் பேடில் அடிக்க வேண்டும். அப்படி ஒரு நிமிடத்தில் 211 முறை விரைவாகச் செய்து நானும் கின்னஸ் அடிச்சேன். என் கணவர் ஏற்கெனவே 14 கின்னஸ் ரெக்கார்டு வைச்சிருந்தார். நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து கின்னஸ் செய்ய, எட்டு மாதங்கள் பயிற்சி எடுத்தோம்.
நானும் என் கணவரும் ஒரு நிமிடத்தில் தலா 77 கிக்குகள் செய்து கின்னஸ் சாதனை படைச்சோம். கடந்த ஜனவரி 20-ம் தேதிதான் கின்னஸ் படைச்சோம். அன்னிக்கு எங்க கல்யாண நாள் என்கிறது கூடுதல் சிறப்பு. கணவன் மனைவி இணைஞ்சு தற்காப்புக் கலைகளில் கின்னஸ் சாதனை புரிஞ்ச ஒரே ஜோடி நாங்கதான்!'' என்று ஸ்ருதி பூரிக்க, அதை ஆமோதிக்கிறார் நாராயணன்.