சென்னை எழும்பூர் ரயில் நிலையம். விடுமுறை தினம் நெருங்கியதால் மக்கள் கூட்டம் அலைமோதியது. பல்லவன் ரயிலின் அன்-ரிசர்வேஷன் பெட்டியில் ஏற, நீண்ட வரிசையில் பலரும் காத்திருந்தனர். நானும் அந்த வரிசையில் இணைந்துகொண்டேன். வரிசையில் எனக்கு அடுத்தபடியாக மாடர்ன் உடையில் ஒரு பெண் நின்றுகொண்டிருந்தார். நான் உட்பட வரிசையில் நின்ற எல்லாருமே, அவளைக் கவனித்தோம். சரியாக 3.15 மணிக்கு, வரிசையில் நின்றவர்களை காவல்துறையினர் ரயிலில் ஏற அனுமதித்தனர். நான் கூட்டத்தில் முண்டியடித்துக்கொண்டு ஏறி லக்கேஜ் வைக்க ஒதுக்கப்பட்டிருந்த மேல் பகுதியில் ஏறி அமர்ந்துகொண்டேன்.

வரிசையில் எனக்குப் பின்னால் நின்றவள், இன்னும் அதே கூட்டத்தில், ரயிலுக்கு வெளியே நிற்பதைக் கண்டேன். 10 நிமிடங்களுக்குப் பிறகு, ரயிலில் ஏறி ஒவ்வொரு சீட்டாகப் பார்த்துக்கொண்டே வந்தாள். ஒருவரும் இம்மி அளவுகூட நகர்ந்து இடம் தருவதாகத் தெரியவில்லை. ஜீன்ஸ் - டி ஷர்ட் என ஹை - ஃபையாக இருப்பவர், லக்கேஜ் வைக்கும் இடத்தில் அமருவாரா என்ற சந்தேகத்துடன் அவரைப் பார்த்தேன். ``மேல இடம் இருக்கா சிஸ்டர்?" என்று கேட்டார். நான் `ஆம்' எனத் தலையை அசைத்ததும், தன்னுடைய இரண்டடி ஹீல்ஸ் காலணியைக் கழட்டி கீழே வைத்துவிட்டு, லக்கேஜ் வைக்கும் இடத்தில் ஏறி என்னுடன் அமர்ந்துகொண்டார்.
ஐந்து நிமிடங்களுக்குள் அவருக்கு ஒரு போன் கால் வந்தது, ``பாப்பா அம்மா, டிரெயின் ஏறிட்டேன், நீ தூங்குறதுக்குள்ள வீட்டுக்கு வந்துருவேன்டா" என்று சொல்லி போனை கட் செய்தார். ஐந்து நிமிட அமைதிக்குப் பின், கால்களில் நான் அணிந்திருந்த மெட்டியைப் பார்த்து, ``உங்களுக்குக் கல்யாணம் ஆயிடுச்சா?" என்று பேச்சு கொடுக்க ஆரம்பித்தார். நான் என் குடும்பத்தைப் பற்றி சில தகவல்களைப் பகிர, அவர் தன்னுடைய கதையைச் சொல்ல ஆரம்பித்தார்...

``20 வயசுல லவ் மேரேஜ் பண்ணிகிட்டேன். சில மாசத்துல கர்ப்பமானேன். குழந்தை நல்லபடியா பொறந்தா போதும்னு நினைச்சேன். ஆனா, அந்தக் குழந்தை ஆம்பளப் புள்ளையா பொறக்கணும்னு வீட்ல நினைச்சாங்க. நான் வேகமா நடந்தா கூட, `பார்த்து வயித்துக்குள்ள இருக்க பையனுக்கு ஏதாவது ஆகப்போகுது’னு சொல்லுவாங்க. ஆரம்பத்துல இது எல்லா குடும்பத்திலும் இருக்கக்கூடிய எதிர்பார்ப்புதான்னு நினைச்சேன். ஆனா, நாள் போகப்போக, இந்த எதிர்பார்ப்பு பயத்தை மனசுக்குள்ள விதைக்க ஆரம்பிச்சது. அந்த பயத்துக்கு முற்றுப்புள்ளி வைக்குற அந்த நாளும் வந்துச்சு. ஒருநாள் முழுக்க பிரசவவலி. எந்த இடத்துல வலிக்குதுனு சொல்ல முடியாம, கட்டில் கம்பியைப் பிடிச்சு கத்துனேன். கடைசியா நான் விட்ட பெருமூச்சு என் குழந்தைக்கு இந்த உலகத்தை அறிமுகப்படுத்துச்சு.
கண்ணு முழிச்சு பார்த்தப்போ, ``பொண்ணு பொறந்துருக்கு"னு அம்மா சொன்னாங்க. மனசு முழுக்க பயம் பரவுச்சு. எல்லா வலியையும், எனக்குள்ள இருந்த பயம் மரத்துப்போக வெச்சிருந்துச்சு. குழந்தையைத் திரும்பிக்கூட பார்க்காம, அழுதுகிட்டே, 'அவரு எங்க'னு கேட்டேன்.``வந்து பார்த்துட்டு, தொட்டுக்கூட பார்க்காம போயிட்டான்"னு அம்மா சொன்னாங்க. அசையக்கூட முடியாத நான் எந்திரிச்சு உட்கார்ந்து தேம்பித் தேம்பி அழுதேன். கோபம், ஏமாற்றம், அழுகை என்ன உணர்வுனு சொல்ல முடியாத நிலை. அந்த நிலைமை எந்த அம்மாவுக்கும் வரக்கூடாது. கொஞ்சநாள்ல எல்லாம் சரியாருகிரும்னு நினைச்சேன். மூணு மாசம் வரை எந்தத் தொடர்பும் இல்ல. மூணு மாசம் கழிச்சு, அவங்க வீட்டுக்குப் போலாம்'னு சொன்னேன். கூட்டிட்டும் போனாங்க.
குழந்தைக்கு சாப்பாடு ஊட்டுறதல தொடங்கி குழந்தையை தூக்குறவரை ஏகப்பட்ட புறக்கணிப்புகள். நான் என்ன ஆசைப்பட்டாலும், ``பொட்ட புள்ளைய பெத்து வெச்சுட்டு இதெல்லாம தேவையா"னு பதில் வரும். குழந்தையை கணவர் தூக்கவே இல்ல. இதுல என் தப்போ, குழந்தையோட தப்போ எதுவும் கிடையாதுனு புரிய வைக்க எவ்வளவோ முயற்சி பண்ணேன். கெஞ்சிப் பார்த்தேன், அழுதேன், எதுவுமே அங்க இருந்த மனுசங்களோட மனசை மாத்தல. புறக்கணிப்புகள் நாளுக்குநாள் அதிகமாகவே அந்த வீட்ல இருக்க முடியாம குழந்தையைத் தூக்கிட்டு எங்க அம்மா வீட்டுக்கு வந்துட்டேன்.

குழந்தையோட கையைப் பிடிச்சு ரோட்டுல நின்னு நான் அழுத அழுகையை இப்போகூட மறக்க முடியல. என்னை நம்பி பிறந்தவளை நான் பார்த்துக்கணுங்கிற வைராக்கியம் மட்டும் இருந்துச்சு. யார் யாரோ ஆறுதல் சொன்னாங்க. எந்த ஆறுதலும் மூளைக்குள்ள போகல. எதைப் பத்தியும் யோசிக்காம வீட்டுலயே அடைஞ்சு கிடந்தேன். `ஒரு சில மாசம் போச்சு. திரும்பி கணவர் வீட்ல போயி பேசலாம்'னு வீட்ல சொன்னாங்க. அப்போகூட என் பொண்ணை, ஏத்துப்பாங்கனு சின்ன நம்பிக்கை இருந்துச்சு.' போயி பேசுனப்பவும் எந்தப் பதிலும் இல்லைனு திரும்பி வந்தவங்க சொன்னாங்க. ஒரு நாள் ராத்திரி முழுக்க என் மகளை மடியில போட்டுட்டு அழுதேன். அதுதான் அவள் புறக்கணிக்கப் பட்டதுக்காக நான் அழுத கடைசி அழுகை.
எந்தச் சூழ்நிலையிலும் அவளுக்காக நான் இருப்பேன்னு தீர்க்கமா முடிவு எடுத்தேன். விவாகரத்துக்கு நானே அப்ளை செஞ்சேன். வேலை தேட ஆரம்பிச்சேன். சென்னையில வேலை கிடைச்சது. குழந்தையை அம்மாகிட்ட விட்டுட்டு சென்னைக்கு வந்தேன். ஒவ்வொரு நாளும் மார்ல பால் கட்டி, நான் பட்ட வேதனையையும் அழுகையையும் இப்போகூட மறக்க முடியல. சென்னைக்கு வந்த புதுசுல, சிங்கிள் மதர்னு சொல்லி வீடு கேட்டேன். வீடு தரமாட்டோம்னு பல இடங்கள்ல சொன்னாங்க. அதுமட்டுமல்ல வேலைக்குப்போன இடத்துல என்னைச் சுற்றி இருந்த கேள்விகள், என்னை மன அழுத்தத்துக்குள்ள தள்ளுச்சு. வாழ்க்கையில நடந்த உண்மைகளைச் சொன்னா, சிங்கிள்மதர் தானனு திருமணம் ஆன சில ஆண்களே தப்பா அப்ரோச் பண்ணாங்க. கல்யாணமே ஆகலைனு பொய் சொன்னா, எப்போ மேரேஜ்ங்கிற கேள்வி. இது ரெண்டுக்கும் நடுவுல மாட்டிக்கிட்டு மூணு வருஷம் படாதபாடு பட்டேன்.

நான் கிராமத்துப் பொண்ணு. டிரஸ் தொடங்கி, ஆண்கள்கிட்ட பேசறது வரை நிறைய கட்டுப்பாடுகளோடு வளர்ந்தேன். என் சமுதாயம் என்ன கட்டுப்பாடுகளையெல்லாம் விதிச்சதுதோ, அத்தனைக்கும் கட்டுப்பட்டேன். உலகத்துக்கு பயந்து வாழ்ந்த என்னை, `சிங்கிள் மதர்'னு சொல்றா, இவ என்ன தப்பு பண்ணாளோ..? எப்போ பார்த்தாலும் வேலைக்காகப் பேசுறேன்னு சொல்லிட்டு யார்கிட்டயோ போன் பேசுறா... நிறைய ஆண் நண்பர்கள் இருக்காங்க...'னு ஆயிரம் வதந்திகளுக்குள்ள தள்ளுனாங்க. நான் தனியா அழும்போது, ஆதரவுக்கு வராத சமூகத்தைப் பத்தி நான் ஏன் கவலைப்படணும்னு எனக்காக நான் வாழ ஆரம்பிச்சேன்.
இதுக்கு மத்தியில் அவருக்கு இன்னொரு திருமணம் முடிஞ்சதுனு தகவல் வந்துச்சு. அதுக்கு முன்னாடி வரை நான் ஒரு சிங்கிள் மதர்னு சொல்ல எனக்கு சில தயக்கங்கள் இருந்துச்சு. அவருக்கு திருமணம் முடிஞ்சுருச்சுனு தகவல் தெரிஞ்சதுக்கு அப்புறம் நான் ரொம்ப தன்னம்பிக்கையோட சிங்கிள் மதர்னு சொல்லிக்க ஆரம்பிச்சேன். சோஷியல் மீடியா உட்பட எல்லா இடத்துலயும் சிங்கிள் மதர்னு பெருமையோட ஸ்டேட்டஸ் மாத்துனேன்.

இப்போ என் மகளுக்கு பத்து வயசு..." என்றவர், செல்போனின் வால் பேப்பரில் இருந்த மகளின் படத்தைக் காட்டினார். மழலை மாறாத தீர்க்கமான முகம். ``இப்படிப்பட்டவளை எப்படி வேணாம்னு சொல்லிட்டுப் போனான்னு தெரியல" என்றவரின் கண்கள் குளமாக இருந்தன. சமாளித்துக்கொண்டு பேச்சைத் தொடர்ந்தார். ``அப்பா பத்தின கேள்விகளை நிறைய முறை கேட்டுட்டா. போட்டோ காட்டச் சொல்லிக் கேட்டுருக்கா.
`என்னோட ஃப்ரெண்ட்ஸ்க்குலாம் அப்பா இருக்காங்க என் அப்பா எங்க'னு ஒருமுறை கேட்டா. பாரம் தாங்க முடியாம அப்பா இறந்துட்டதா அவகிட்ட பொய் சொல்லிட்டேன். அப்பா உயிரோட இல்லைங்கிற பொய்யை ஏத்துக்கத் தயாராக இருக்கும் அந்த சின்ன மனசு, அப்பா நம்மை வேணாம்னு விட்டுட்டுப் போயிட்டாங்கங்கிற உண்மையை ஏத்துக்குமானு தெரியல. ஆனா, அவளோட டீன் ஏஜ்ல எல்லா உண்மைகளையும் அவகிட்ட சொல்லணும்னு முடிவு பண்ணி வெச்சிருக்கேன். அப்போதான் யார் இல்லைனாலும் நம்மால வாழ முடியுங்கிற நம்பிக்கை அவளுக்கும் வரும்.
என்னோட பேரு யாஸ்... என் பொண்ணோட பேரு நூர். நான் ஒரு மீடியால வேலை செய்றேன். என் பொண்ணோட பெயரான நூர்ங்கிற பேருலதான் எழுதுறேன். பொறந்ததுமே புறக்கணிக்கப்பட்டவளை இந்த உலகமே கொண்டாடணுங்கிற ஆசை எனக்கு. ஒருத்தன் புறக்கணிச்சா என்ன? அவ பெயரை இன்னைக்கு ஆயிரக்கணக்கான மக்கள் கொண்டாடுறாங்க. எனக்கு இப்போ 31 வயசு. திருமண வாழ்க்கை முடிஞ்சு 10 வருஷம் ஆச்சு. `திருமணம் பண்ணிக்கலாம்'னுகூட சில ஆண்கள் கேட்டுருக்காங்க. எனக்கும்கூட அவங்களைப் பிடிச்சிருக்கும். ஆனா, அவங்க என் பொண்ணை எப்படிப் பார்த்துப்பாங்கன்னு கேள்வி வரும். அதனால இப்போ வரை நான் மறுதிருமணம் பண்ணிக்கல. ஆனா, என்னோட நிலைமை புரியாம, `சிங்கிள் மதர்னு சொல்ற, யார் யார் கூடவோ பைக்ல இறங்குறா'னு ஆயிரம் விமர்சனங்கள் வருது. எத்தனையோ ஆண்களோட தப்பான பார்வைகளை எதிர்கொள்றேன். அதைப் பத்தியெல்லாம் நான் வருத்தப்படுறதை விட்டுட்டேன். உண்மையைச் சொல்லணும்னா என்னை விமர்சிக்கிறவங்க யாரும், நான் அனுபவிச்ச வலிகளைக் கடந்து வரல. விமர்சனம் வரும்போது கோபப்பட்டு ரியாக்ட் பண்ணாம, சின்ன புன்னகையோட அந்த இடத்துலேருந்து நகர்ந்துருவேன்.

வெளி அடையாளங்களை வெச்சு நம்மை மதிப்பிடுறவங்களுக்கு நம்மைப் பத்தி என்ன தெரியும்? அடக்க ஒடுக்கமா இருந்தாலும் விமர்சனம் பண்ணுவாங்க. மாடர்ன் டிரெஸ்ல இருந்தாலும் விமர்சனம் பண்ணுவாங்க. ஆனா தனி மனுஷியா, எதிர்கால பயத்தோட வாழ்க்கையை எதிர்கொள்ற எனக்குதான் தெரியும் ஒவ்வொரு நாளும் எத்தனை வேதனைகளைக் கடந்து வர்றேன்னு. நான் அழ ஆரம்பிச்சா, என் ஒட்டுமொத்த குடும்பமும் உடைஞ்சு போயிரும். நான் பழைய வாழ்க்கையில இருந்து மீண்டு வந்துட்டதா நினைக்கிறாங்க. ஆனா, வாழப்பழகிட்டேன்ங்கிறது மட்டும்தான் உண்மை. இந்த வாழ்க்கை எனக்கானது, என் மகளுக்கானது.
சிங்கிள் மதரா ஒரு பொண்ணு இருந்தா. அவளைக் குறை சொல்ற மனநிலை மாறணும். அவங்கவங்க வாழ்க்கையைக் கொண்டாட எல்லாருக்கும் உரிமை இருக்குல சிஸ்டர்..." என்று அவர் முடித்தபோது, அவரின் ஆடையை மட்டுமே முதலில் கவனித்த நான், முதல்முறையாக நிமிர்ந்து அவரின் கண்களைப் பார்த்தேன். கலங்கிய கண்களை மறைத்து, உதடுகள் சிரித்தன. உண்மைதான், வாழ எல்லாருக்கும் உரிமை இருக்கிறது. கருத்து திணிப்புகளாலும், முன் தீர்மானங்களாலும் அதைத் தடுக்காமல் இருந்தால் போதுமானது.
மாற்றத்தை நம்மில் இருந்து தொடங்குவோம்!