என்டர்டெயின்மென்ட்
ஹெல்த்
லைஃப்ஸ்டைல்
தன்னம்பிக்கை
தொடர்கள்
Published:Updated:

சேவைப் பெண்கள்! 9 - என் வாழ்க்கை மக்களுக்கானதாகவே இருக்கட்டுமே!

வெரோணிக்கா
பிரீமியம் ஸ்டோரி
News
வெரோணிக்கா

ஒடுக்கப்பட்ட மக்களின் அடையாளம் வெரோணிக்கா

ன் வீடு என்றில்லாமல் சமூகமும் என் வீடே என்று வாழும் நம்பிக்கைக்குரிய சேவை மனுஷிகளின் தன்னலமற்ற வாழ்வை அடையாளப்படுத்தும் தொடர் இது. இந்த இதழில் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையைச் சேர்ந்த வெரோணிக்கா.

சாதி ரீதியாக ஒடுக்கப்பட்ட, பொருளாதார ரீதியாக நலிவடைந்த மக்களின் குரலாகவும், அவர்களின் வாழ்வில் வெளிச்சம் பாய்ச்சும் சுடராகவும் இருப்பவர் வெரோணிக்கா. ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்ததாலேயே ஏராளமான சாதிய பாகுபாடுகளை எதிர் கொண்டவர், சாதிய ஏற்றத்தாழ்வுகளைக் களைய போராட்டக்களத்தில் இறங்கினார்.

25 ஆண்டுகளுக்கும் மேலாக அந்தக் கனலின் தாக்கம் குறையாத நிலையில், பல்வேறு சேவைப் பணிகளால் ஏராளமான பெண்களின் வாழ்க்கையை முன்னேற்றியிருக்கிறார்.

வெரோணிக்கா
வெரோணிக்கா

“பூர்வீகம் தேவகோட்டை தாலுகா திருப்பாக்கோட்டை. ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஏழ்மையான விவசாயக் குடும்பம் எங்களுடையது. நாலு தங்கச்சி, ஒரு தம்பி. ஸ்கூல்ல எங்களைத் தனியாதான் உட்கார வெப்பாங்க. தனி பானையிலதான் நாங்க தண்ணி குடிக்கணும். ஆதிக்க சாதியினர் தோட்டத்துல எங்க சமூகத்தினர் விவசாயக் கூலிகளா வேலை செய்தாங்க. உடம்பு சரியில்லைனாக்கூட லீவ் எடுக்க அனுமதி தரமாட்டாங்க. அவங்க தரும் சொற்ப காசுக்கு அசிங்கமான பேச்சு, அடினு நிறைய அவமானங்களைத் தாங்கிக்கணும்.ஆதிக்க சாதியினர் சிலரின் கீழ்த்தரமான செயல்களால எங்க முன்னோர்கள் ரொம்பவே கஷ்டப்பட்டிருக்காங்க. அவங்களைப் பகைச்சுகிட்டா, ஊரைவிட்டு ஒதுக்கி வெச் சுடுவாங்க. இப்படிக் கண்கூடா பார்த்த, எதிர் கொண்ட சாதிப் பாகுபாடுகளால ரொம்பவே கலங்கினேன். ‘நம்ம சாதிக்காரங்களுக்கு மட்டும் ஏன் இப்படி நடக்குது?’ன்னு சின்ன வயசுலயே எனக்குள் நிறைய கேள்விகள் எழுந்துச்சு”

- பள்ளிப்படிப்பைக்கூட முழுமையாக முடிக்காதவர், தனது சமூக மக்களுக்கு எதிரான அநீதிகளுக்கும், அடிப்படைத் தேவைகளுக்குமான போராட்டங்களில் தலைமை ஏற்று பல்வேறு பிரச்னைகளுக்கும் தீர்வுகளைப் பெற்றுக்கொடுத்திருக்கிறார். இதன் நீட்சியாக, 1996-ல் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் திருப்பாக்கோட்டை பஞ்சாயத்து வார்டு உறுப்பினராக வெற்றி பெற்றுள்ளார். பஞ்சாயத்துக் கூட்டங்களில் உட்கார அனுமதிக்காமல் புறக்கணிப்படுவது, ஏளனப் பேச்சுகள், புறக்கணிப்புகள் என, அதிகார, ஆணவ வர்க்கத்தின் சாதிப் பாகுபாடுகளைத் தொடர்ந்து எதிர்கொண்டார் வெரோ ணிக்கா. அவற்றையெல்லாம் மீறி, தனது சமூக மக்களின் குடியிருப்புகளில் முதல் முறையாக மின்சாரம், குடிநீர், சாலை வசதிகள் கிடைக்க வழிவகை செய்து புதிய விடியலை ஏற்படுத்தியிருக்கிறார்.

“ஆரம்பத்துல சாதி ரீதியா என்னை எதிர்த்த மாற்று சமூகப் பெண்கள் பலரும், அவங்களோட நலனுக்கும் சேர்த்தே நான் போராடுறேன்னு புரிஞ்சுகிட்டு என்னோடு கரம் கோத்தாங்க. மக்களின் அடிப்படைத் தேவைகளுக்கும், பெண் களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளுக்கும் பெண்களைத் திரட்டி நிறையவே போராடினோம். ஒவ்வொரு முறையும் பாலியல் ரீதியா பாதிக்கப் பட்ட பெண்களின் குடும்பங் களுக்கு நிதியுதவியும், குற்ற வாளிகளுக்குத் தண்டனையும் வாங்கிக்கொடுக்க இரவு பகலா போராடியிருக்கேன். அப்போதும், மக்களின் உரிமை களுக்குப் போராடும் போதும் நிறைய அடக்குமுறைகளை எதிர்கொண்டேன். 2001-ல் நடந்த உள்ளாட்சித் தேர் தல்ல ஒன்றிய கவுன்சிலர் பொறுப்புக்கு வேட்புமனுத் தாக்கல் செய்தப்போ, சூழ்ச்சி செஞ்சு என்னை வெளிய தள்ளி அவமானப்படுத்தினாங்க. போலீஸ் ஸ்டேஷன், சிறை வாசம், நீதிமன்றம், தனிப்பட்ட தாக்குதல், அச்சுறுத்தல்னு எவ்வளவோ பார்த்துட்டேன். எந்த இடத்திலும் என்னை சமரசம் செஞ்சுக்கல.

சாதிய ஒடுக்குமுறை, ஏற்றத்தாழ்வு இல்லாத நிலையைக் கல்வியாலதான் மாத்த முடியும். அதனால, சுத்துவட்டார கிராமங்கள்ல டியூஷன் சென்டர்கள் ஆரம்பிச்சு, ஏழைக் குழந்தைகளின் கல்வி முன்னேற்றத்துக்கு உதவினோம். குழந்தைத் தொழிலாளர் முறைக்கு எதிரா பெற்றோர்கள்கிட்ட விழிப்புணர்வு ஏற்படுத்தினோம். ஆதிக்க சாதியா இருந்தாலும் பொருளாதார ரீதியா பின்தங்கியும், கணவனோட கொடுமையாலும் கஷ்டப்படும் பெண்கள் பலரின் முன்னேற்றத்துக்கும் சேர்த்தே நிறைய வேலைகளைச் செய்யுறோம். குடும்ப வன்முறை, பாலியல் வன்கொடுமை போன்ற பிரச்னைகள்ல இருந்து மீளவும், முன்னெச்சரிக்கையுடன் இருக்கவும் மகளிர் காவல்துறையினர் உதவியுடன் பெண்களுக்கு விழிப்புணர்வு கொடுக்கிறோம். அவங்களுக்கு இலவச சட்ட உதவி கிடைக்கவும் வழிவகை செய்றோம்” என்பவர், அந்தப் பணிகளுக்காக ‘விடியல் மகளிர் மேம்பாட்டுச் சங்க’த்தை

20 ஆண்டுகளாக நடத்திவருகிறார்.

ஒடுக்கப்பட்ட, சமூக ரீதியாக பின்தங்கிய மக்களின் முதல் பிரச்னையே நிரந்தரமான இருப்பிடம் இல்லாததுதான். அதற்குத் தீர்வு காணும் வகையில், தொய்வின்றி அதிகாரி களிடம் முறையிட்டு, பல்வேறு சாதிகளைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு நிரந்தர மனைப் பட்டா பெற்றுக்கொடுத்துள்ளார் வெரோணிக்கா. அவர்களில் பெரும்பாலானோ ருக்கு அரசின் நிதியுதவியைப் பெற்றுக்கொடுத்து வீடு கட்டவும் உதவியிருக்கிறார்.

இயற்கை விவசாயம் செய்வதற்கு ஊக்கப் படுத்தியும், தையல் மற்றும் கால்நடை வளர்ப்புக் கான பயிற்சி கொடுத்தும் பல ஆயிரம் பெண்களுக்கு சுயதொழிலுக்கான அடித் தளத்தை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார். சமூக நலத்துறை மூலம் தையல் இயந்திரம் பெற்றுக்கொடுத்து, தையல் பயிற்சி கொடுத்து ஏராளமான கைம்பெண்களுக்கு வேலை வாய்ப்புக்கு உதவியுள்ளார். அரசின் சார்பில் பெண்கள் முன்னேற்றத்துக்குக் கிடைக்கும் உதவிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்து கிறார். உள்ளாட்சி அமைப்புகளிடம் அனுமதி பெற்று, நிலமற்ற ஒடுக்கப்பட்ட சமூகப் பெண்கள் புறம்போக்கு நிலத்தில் விவசாயம் செய்ய உதவுவது, பெண்கள் குழுவுடன் நீர்நிலைகளைத் தூர்வாருவது, தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் ஆக்கபூர்வமான கேள்விகளைக் கேட்டு பதில் பெறுவது என இவரின் சமூகப் பணிகள் நீள்கின்றன. சேவைப் பணிகளுக்காகத் திருமணம் செய்து கொள்ளாமல் சுழன்று கொண்டிருக்கிறார் வெரோணிக்கா.

“என்னோட வாழ்வாதாரத்துக்கு தையல், விவசாய வேலைகள் செய்யுறேன். கடந்த 50 வருஷங்களுக்கு முன்னாடி ஒடுக்கப்பட்ட சாதியினர் மனிதர்களாவே நடத்தப்படாத அவலம் இருந்துச்சு. அந்த நிலையும், சாதி ரீதியான ஒடுக்குமுறைகளும் இன்னிக்கு கணிசமா குறைஞ்சுடுச்சு. ஆனா, அந்தப் பாகு பாடுகளோட வடிவம் வேறு விதமா மாறி யிருக்கு. பொதுச் சொத்துகளை நிர்வகிக்கும் உரிமை, மக்கள் பிரதிநிதியாகும் வாய்ப்பு, சொத்துரிமை மற்றும் நிலவுரிமைகள்ல ஒடுக்கப்பட்ட மக்களுக்கு இன்றும் முழுமை யான பகிர்வு வழங்கப்படறதில்ல. இந்த நிலை யெல்லாம் மாறி, எல்லா சமூக மக்களும் ஒண்ணா இணைஞ்சு வாழும் சூழல் உருவாக ணும். அது அவ்வளவு எளிதான காரியமில்லை. ஆனாலும், அந்த மாற்றங்களுக்காக எஞ்சிய வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து இயங்குவேன்”

- வெரோணிக்காவின் உள்ளத்திலிருந்து வரும் வார்த்தைகள், அவரது லட்சியத்தின் பிடிப்பைக் கூட்டுகின்றன.

அக்காவின் உதவியால் சுயமா வாழறோம்!

சேவைப் பெண்கள்! 9 - என் வாழ்க்கை மக்களுக்கானதாகவே இருக்கட்டுமே!

வெரோணிக்காவால் பயன் பெற்ற வர்களில் ஒருவரான அருள்மேரி, “நானும் சிவகங்கை மாவட்டம் தான். அதிகாரிங்ககிட்ட எங்க உரிமை களுக்காகத் தைரியமா பேசக் கத்துக்கொடுத்தாங்க வெரோணிக்கா அக்கா. அவங்க வழிகாட்டுதலால, மகளிர் சுய உதவிக்குழு தொடங்கி விசேஷங்களுக்கு சமையல் பாத்திரங்களை வாடகைக்கு விட்டு ஓரளவுக்கு வருமானம் பார்க்கிறோம். கூட்டுறவு சங்கத்தின் உதவியுடன் மாடு வாங்கிக் கொடுத்தாங்க. நிறைய கஷ்டங்களைக் கடந்து, ஏராளமான பெண்கள் சுயமா வாழறத்துக்கு அக்கா ரொம்பவே உதவியிருக்காங்க” என்கிறார் நிறைவுடன்.