`யாமிருக்க பயமேன்' என்ற தைரியத்தை நடுத்தர வர்க்க மக்களுக்குக் கொடுப்பதில் இறைவனுக்கு அடுத்து தங்கத்துக்கு முக்கிய இடமுண்டு. மஞ்சள் உலோகமான தங்கத்தின் மீது நம்மூர் மக்களுக்கு, குறிப்பாகப் பெண்களுக்குப் பிரியம் அதிகம். குழந்தைகளைக் கொஞ்சினால்கூட `தங்கமே... தங்க மயிலே...' என்றுதான் கொஞ்சுவார்கள். இன்றுவரை சமூக அந்தஸ்தைக் காட்ட பெரும்பான்மையான மக்கள் பயன்படுத்தும் பலவற்றுள் பிரதான இடம் தங்கத்துக்குத்தான்.
தங்கள் வீட்டை விட்டுச் செல்லும் மகளோ, வேறு வீட்டில் இருந்து தங்கள் வீட்டிற்கு வரும் மருமகளோ குறைவான தங்கம் அணிந்து வருவது இழுக்கு எனும் தவறான பொதுப் புத்தி இன்னமும் நிறைய குடும்பங்களில் இருப்பதை நாம் பார்க்கிறோம். இதை எதுவும் சொல்லாமலே தங்கத்தின் அருமை எல்லோரும் அறிந்ததுதான். அதைச் சேர்க்க நாம் செய்யும் விஷயங்கள் பற்றித்தான் இந்தப் பகுதியில் பேசப்போகிறேன்.

மாத பட்ஜெட்டில் நகைச்சீட்டுக்கென ஒரு தனி இடம் மத்திய தர குடும்பங்களிலும் உண்டு. `ரெண்டு பொண்ண பெத்து வெச்சிருக்கேன். இப்போ இருந்தே சேர்த்தாதானே நாளைக்கு கையைக் கடிக்காமல் கல்யாணம் பண்ணிக் கொடுக்க முடியும்' எனச் சொல்லும் பல தோழிகள் சூழ் உலகு இது.
தங்க நகைச்சீட்டு கட்டி சிறுகச் சேர்ப்பது பிரச்னை இல்லை. ஆனால், உங்கள் மாத பட்ஜெட்டில் சேமிப்புக்கு என நீங்கள் ஒதுக்கும் பணம் முழுவதையும் நகைச்சீட்டு கட்டுவதற்கு மாத்திரமே ஒதுக்குவது தவறு. அத்துடன் அது சரியான சேமிப்பு முறையும் அல்ல.
`இவங்க எனக்குன்னு கொடுக்கறதுல செலவு போக மிஞ்சியது எல்லாத்தையும் நகை சீட்லதான்டி போடுறேன்' என்கிறாள் ஹோம் மேக்கர் தோழி ராஜி. வேலைக்குப் போகும் மற்றுமொரு தோழியான சுமதி, `மாசம் 10,000 ரூபாயை அப்படியே நான் நகைச்சீட்டுலதான் இன்வெஸ்ட் பண்றேன் தெரியுமா?' எனச் சொல்லி சிரிக்கிறாள்.
அதென்ன நகைச்சீட்டு?
நகைச்சீட்டு என்பது சூப்பர் ஸ்டார் போலதான்; தனி அறிமுகம் தேவையில்லை. பெரும்பாலான பெண்கள் முதலீடு என நினைத்து தவணை முறையில் மாதம் மாதம் சிறிது சிறிதாகப் பணம் சேர்த்து, குறிப்பிட்ட கால முடிவில் செலுத்திய தொகைக்கான நகையை வாங்கிக் கொள்வதுதான் நகைச்சீட்டு. சிறு கிராமங்கள் தொடங்கி பெருநகரங்கள் வரையிலும் பெருவாரியான மக்கள் நம்பிக் கட்டும் இதுபோன்ற நகைச்சீட்டு, சேமிப்பா அல்லது முதலீடா என்ற தெளிவு நம்மிடம் கிடையாது. அத்துடன் இவ்வகை சீட்டுகளில் உள்ள நடைமுறை சிக்கல்களைப் பற்றிய புரிந்துணர்வும் இல்லை.
சீட்டு சிக்கல்கள்
* சீட்டுக் காலம் முடிவதற்கு முன்பாகவே சீட்டை நிறுத்தும் பட்சத்தில் அதற்குத் தனி கட்டணங்கள் உண்டு. கூடவே பாதியில் நிறுத்தப்படும் சீட்டுக்கான நகையை சிற்றூர் மற்றும் கிராமங்களில் இருக்கும் பெரும்பாலான நகைக்கடைகள் உடனடியாகக் கொடுப்பதில்லை.
* பல கடைகளில் சீட்டுத் தொகைக்கு ஈடாகத் தங்க நாணயங்கள் அல்லது பிஸ்கட்கள் கொடுக்கப்படுவதில்லை. ஆபரணங்கள்தான் வாங்க வேண்டும். அதற்கும் செய்கூலி, சேதாரம், ஜி.எஸ்.டி எல்லாம் போட்ட பின்தான் கொடுப்பார்கள். அதனால் சேமிப்பு என்ற கோணத்தில் பார்த்தால் வாடிக்கையாளர்களுக்கு இது லாபமான சேமிப்பு எனச் சொல்ல முடியாது.
* பல கடைகளில் எத்தனை மாதங்கள் சீட்டு போட்டு வந்தாலும் சரி, கடைசி தவணை எந்த நாளில் முடிகிறதோ அன்றைய தங்கத்தின் விலைக்குத்தான் நகை வாங்க முடியும். உதாரணமாக, சீட்டு முடிந்து சில மாதங்களுக்குப் பின் நகை வாங்கும்போது, கடைசி தவணை கட்டிய நாளில் தங்கத்தின் மதிப்பு என்னவாக இருந்ததோ அதே விலைக்குத்தான் வாடிக்கையாளர்கள் நகை வாங்க முடியும். இதிலிருக்கும் பெரும் சிக்கல், ஒருவேளை வாடிக்கையாளர் நகை வாங்கும் நாளன்று தங்கத்தின் அன்றைய சந்தை விலை, கடைசித் தவணையின் போதிருந்த விலையைவிடக் குறைவாக இருந்தாலும் லாபம் அடையப்போவது கடைக்காரர்தான்.
* ஆபரண தங்கம் அழகுக்காக வாங்கலாம். ஆனால், அது ஒரு நல்ல முதலீடா என்றால், இல்லை என்கின்றார்கள் வல்லுநர்கள். ஏனெனில், நாம் வாங்கிய ஆபரணத்தை விற்கும்போது செய்கூலி, சேதாரம் கழிந்தது போகத்தான் வாங்குவார்கள். அதிலும் பல கடைகளில் பழைய தங்கம் என்று இன்னும்கூட பணத்தை குறைப்பது உண்டு. இதனால் லாபம் என்பது பெரிய அளவில் இருக்கும் என்று சொல்ல முடியாது.
இத்தனை சிக்கல்கள் இருக்கின்றதே, அப்படி எனில் நகைச்சீட்டு கட்டாமல் தங்கம் எப்படி சேர்க்க முடியும் என்ற கேள்வி எழலாம். அதற்கு வேறு வழி உள்ளது தோழிகளே!
தங்கத்தில் முதலீடு என்பதே நீண்டகால அடிப்படையில் செய்வதுதான். தங்கத்தில் முதலீடு செய்வதற்கான வழிமுறைகளில், கோல்டு இ.டி.எஃப் பரிந்துரைக்கேற்றது.
கோல்டு இ.டி.எஃப் (Gold Exchange Traded Fund)
நகைச்சீட்டு கட்டுவதைவிட அதே பணத்தை பேப்பர் கோல்டு எனப்படும் கோல்டு இ.டி.எஃப்பில் முதலீடு செய்யலாம். மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்வது போன்றதுதான் இது.
* நாம் செலுத்தும் பணத்துக்கு ஏற்ற யூனிட்டுகள் நமது கணக்கில் சேர்க்கப்படும்.
* மாதம் மாதம் கையில் பணம் சேரும்போதெல்லாம் நாம் அதைக் கொண்டு நமக்குத் தேவையான யூனிட்டுகளை வாங்கலாம்.
* இந்த முதலீட்டின் மூலம் உங்களுக்குத் தங்கம் கிடைக்காது; பணம்தான் திரும்பக் கிடைக்கும். கோல்டு இ.டி.எஃப் யூனிட்டுகளை வாங்கிய பிறகு, அந்த யூனிட்டுகளை எப்போது விற்க நினைக்கிறீர்களோ, அப்போது விற்கலாம்.
* எதிர்காலத்தில் பிள்ளைகளின் திருமணத் தேவைக்காகத் தங்கம் வாங்க நினைப்பவர்கள் சிறுகச் சிறுகச் சேர்ப்பதற்கு கோல்டு இ.டி.எஃப் சிறந்த முதலீடு.
* சிறுகச் சேர்த்த யூனிட்டுகளை நீங்கள் விற்கும்போது அன்றைய சந்தை மதிப்பீட்டில் தங்கத்தின் விலை என்னவோ அந்தப் பணம் உங்களுக்குக் கிடைக்கும். ஆனால், இதில் முதலீடு செய்ய டீமேட் அக்கவுன்ட் வேண்டும் என்பதால் பலரும், குறிப்பாகப் பெண்கள் இதை அவ்வளவாக விரும்புவதில்லை. ஆனால், முதலீடு எனும் கோணத்தில் சீட்டைவிட இதன் மூலமாக நாம் கூடுதல் லாபம் அடைவோம்.
`Brokerage இற்கென செலவு செய்ய முடியாது. ஆனாலும் பேப்பர் கோல்டில் முதலீடு செய்ய ஆசை' எனச் சொல்லும் ஆளா நீங்கள்? எனில் குறிப்பிட்ட கால இடைவெளியில் ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா வெளியிடும் தங்கப்பத்திரம் /`சவரின் பாண்ட்' எனப்படும் சவரின் கோல்டு பாண்ட் (SGB) உங்களுக்கானது.
SGB (Sovereign Gold Bond) - தங்கப் பத்திரங்கள்
இந்த ஆண்டுக்கான முதல் தங்கப் பத்திரங்கள் விற்பனை இப்போது தொடங்கியுள்ளது. பிப்ரவரி 1-ம் தேதி தொடங்கிய விற்பனை 5-ம் தேதி வரை நடைபெறுகிறது. இம்முறையில் ஒரு கிராம் தங்கத்தின் விலை, விற்பனை தொடங்குவதற்கு இரு நாள்களுக்கு முன் RBI-ஆல் அறிவிக்கப்படும்.
* இதன் மூலம் தனி நபரொருவர் ஒரு நிதியாண்டில் ஒரு கிராம் முதல் 4,000 கிராம்கள் வரையிலும் தங்கத்தில் முதலீடு செய்யலாம்.
* இதில் 24 காரட் தங்கம் கிராம் ஒன்றின் விலை 4,912 எனவும், ஆன்லைன் மூலம் வாங்கும்போது கிராமுக்கு ரூ. 50 தள்ளுபடி என்ற அடிப்படையில் கிராம் ஒன்றின் விலை 4,862 எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
* குறிப்பிட்ட தபால் நிலையங்கள் மற்றும் வங்கிகளின் மூலமும் இம்முதலீட்டை மேற்கொள்ளலாம். இதற்கும் டிமேட் அக்கவுன்ட் தேவை.
* இத்திட்டத்தின் கீழ் கிடைக்கும் முழு பலனையும் பெற முழுமையாக எட்டு வருடங்கள்வரை காத்திருக்க வேண்டும் என்றாலும் 5, 6, 7-வது ஆண்டுகளுக்குப் பிறகு சில நிபந்தனைகளுக்குட்பட்டு நாம் இத்திட்டத்தில் இருந்து வெளியேறலாம்.
* எட்டு ஆண்டுகள் கழித்து விற்கும்போது கிடைக்கும் லாபத்துக்கு, மூலதன ஆதாய வரி கிடையாது.
* இந்தத் திட்டத்தில் பாண்டின் மீதான முதலீட்டை திரும்பப் பெறும்போது நகைச்சீட்டுபோல தங்கம் கிடைக்காது.
* தங்கப் பத்திரங்களைத் திரும்ப ஒப்படைக்கும்போது, முந்தைய வாரத்தின் சராசரி தங்க விலை அடிப்படையில் பணமாகக் கிட்டும்.
* மைனராக இருக்கும் குழந்தைகளுக்காகத் தாயோ, தந்தையோ முதலீடுகளைச் செய்ய முடியும்.
* நாம் செய்யும் முதலீட்டுக்கு ஆண்டொன்றுக்கு 2.5% வட்டி கிடைக்கும்.
* இந்தப் பத்திரங்களைக் கடன்களுக்கான பிணையமாகவும் (Collateral) பயன்படுத்தலாம்.
ஏனைய தங்க முதலீடுகளைக் காட்டிலும் ஆண்டு ஒன்றுக்கு கூடுதலாக 2.5% வட்டி கிடைக்கும் என்பதால், மற்ற திட்டங்களைவிட இதை சிறந்த திட்டம் எனலாம்.