Published:Updated:

தினம் ஒரு திருக்குறள், தினம் ஓர் ஓவியம்... இன்ஸ்டாகிராமில் இயலின் இனிய முயற்சி! #SheInspires

சௌமியா
News
சௌமியா

''திருக்குறள் கருத்துகளை ஓவிய வடிவுல, சமூக வலைதளம் மூலமா மக்கள்கிட்ட கொண்டுபோகலாம்னு முடிவு பண்ணினேன். 'ஒரு நாள் ஒரு குறள்' ஓவிய முயற்சி ஆரம்பமானது."

Published:Updated:

தினம் ஒரு திருக்குறள், தினம் ஓர் ஓவியம்... இன்ஸ்டாகிராமில் இயலின் இனிய முயற்சி! #SheInspires

''திருக்குறள் கருத்துகளை ஓவிய வடிவுல, சமூக வலைதளம் மூலமா மக்கள்கிட்ட கொண்டுபோகலாம்னு முடிவு பண்ணினேன். 'ஒரு நாள் ஒரு குறள்' ஓவிய முயற்சி ஆரம்பமானது."

சௌமியா
News
சௌமியா

எண்ணங்களையும் உணர்வுகளையும் வெளிப்படுத்தும் ஓவியங்கள் அனைவரும் புரிந்துகொள்ளக்கூடிய கலை வடிவம். அந்த ஓவியத்தின் வழியே உலகப் பொதுமறையான திருக்குறளின் கருத்துகளை அனைவருக்கும் சொல்லி வருகிறார், பாண்டிச்சேரியைச் சேர்ந்த சௌமியா. தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இயல் என்ற பெயரில், தினமும் ஒரு திருக்குறளுக்கான விளக்கமாக இவர் வரைந்து வரும் ஓவியங்கள் வசீகரிக்கின்றன. இரண்டடி திருக்குறள்போல நறுக்கென்று பேசத் தொடங்கினார் சௌமியா.

''சொந்த ஊர் விழுப்புரம். வளர்ந்தது வேலூர். முதுநிலை எலெக்ட்ரானிக் மீடியா படிப்பை, பாண்டிச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் முடித்து சில நாள்கள் அங்கேயே கௌரவ விரிவுரையாளரா வேலைபார்த்தேன். இப்ப பாண்டிச்சேரியிலதான் வசிக்கிறேன். கடந்த 5 வருஷமா ஃப்ரீலான்ஸ் இல்லஸ்ட்ரேட்டரா (கணினியில் மாதிரி படங்கள்/கார்ட்டூன்கள் வரைபவர்) இருக்கேன்.

ஓவியங்கள்
ஓவியங்கள்

நான் சிங்கிள் மாம். என் எட்டு வயசு மகள், குட்டி ராணி, அட்சயா. என் அம்மாவும் தம்பியும் என்னோட இருக்காங்க" எனும் சௌமியா, மகள், அக்கா, அம்மா என்று பல பொறுப்புகளில் காலத்தை கடந்து செல்பவராக இருக்கிறார். இத்தனை பொறுப்புகளுக்கு இடையில் தினம் ஒரு திருக்குறளுக்கு ஓவியம் வரையும் நேரம் எப்படிக் கிடைக்கிறது இவருக்கு?

''ஓவியம் என்னோட அன்றாட வேலைகளில் ஒன்று. சாப்பிடுறோம், தூங்குறோம் என்பது மாதிரிதான் எனக்கு வரையுறதும். தினம் ஒரு திருக்குறள்னு வரைய ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடிகூட, தினமும் ஏதாவது வரைவேன். அது எனக்குத் தனி வேலையா தெரியாது'' என்கிறார் சௌமியா.

இன்ஸ்டாகிராம், முகநூல் என இளம் தலைமுறையினர் உலவும் இடங்களில் திருக்குறளை 'இயல்' என்ற பெயர்கொண்ட ஓவியராகக் கொண்டு சேர்க்கும் சௌமியா, அந்தப் பெயர் பற்றிக் கூறினார். ''தமிழின் மிக அழகான பெயர் 'இயல்'. உருவாக்கப்பட்ட, செயற்கையான விஷயங்கள் எதுவும் இல்லாம இயற்கையான, இயற்கையோடு இருக்குற விஷயங்கள்தான் இயல். இலக்கியங்கள்லயும் அதிகம் பயன்படுத்தப்பட்டிருக்கும் இந்த வார்த்தை, எனக்கு நெருக்கமான உணர்வைக் கொடுக்கும். அதான் அந்தப் பெயர்ல வரையுறேன்" என்கிறார்.

ஆங்கில வழியில் பள்ளிப் படிப்பை முடித்தாலும் தமிழின் மீதுதான் ஆர்வம் சௌமியாவுக்கு. எலெக்ட்ரானிக் மீடியா படித்தாலும் ஓவியங்கள்தான் உயிர் என்கிறார். ''தமிழின் தொன்மை, முக்கியத்துவம்லாம் என்னனு தெரியாம, ஸ்போக்கன் இங்கிலீஷ் இருந்தாதான் வேலைனு நம்பின தலைமுறைதான் நான். ஆனாலும் நம் வரலாற்றையும் முன்னோர்களையும் அறிந்துகொள்ளும் ஆர்வம் எனக்கு இருந்தது. அப்படித்தான் பல இலக்கியங்கள் வாசிக்க ஆரம்பிச்சேன். பழைமையின் மீதான வேட்கை அதிகரிச்சது.

குறள் 319
குறள் 319

இன்னொரு பக்கம், என் இல்லஸ்ட்ரேட்டர் வேலை ஏதேனும் கதை அல்லது கருத்தை காட்சிப் படமா மாற்றுவதா இருந்தது. என் ஆர்வத்தையும் வேலையையும் இணைச்ச புள்ளியில திருக்குறள் ஓவியம் ஐடியா பிறந்தது.

நான் வாசிச்ச இலக்கியங்கள்ல திருக்குறள்தான் மிகவும் ஈர்த்தது. திருக்குறள் கருத்துகளை ஓவிய வடிவுல, புதிய ஊடகமான சமூக வலைதளம் மூலமா மக்கள்கிட்ட கொண்டுபோகலாம்னு முடிவு பண்ணினேன். 'ஒரு நாள் ஒரு குறள்' ஓவிய முயற்சி ஆரம்பமானது. தினமும் ஒரு குறளை எடுத்துக்கிட்டு, அதுக்கான ஓவியத்தை வரைந்து, தமிழ், ஆங்கிலத்தில் அந்தக் குறளுக்கான விளக்கவுரையுடன் என் இன்ஸ்டா பக்கத்தில் போஸ்ட் செய்றேன். இந்த ஓவியங்களை என்னுடைய முனைவர் பட்ட ஆராய்ச்சியாகக் கொள்ளலாமானு, பல்கலைக்கழகங்களை அணுகி வர்றேன்.''

தினம் ஒரு குறள் என்றால் 1,330 நாள்கள். பெரிய கமிட்மென்ட். இதுவரை ஒருநாள்கூட தவறாமல் 460-க்கும் மேற்பட்ட குரல்களுக்கு ஓவியம் வரைந்துள்ளார் சௌமியா. ஜனவரி 1, 2020-ல் தொடங்கிய ஓவியத் தொடர் தடைகள் இன்றி தொடர்ந்து வருகிறது. எதிர்பார்த்தபடி ஆகஸ்ட் 23, 2023-ல் முடிக்கத் திட்டமிட்டுள்ளார்.

''கொரோனா ஊரடங்கில் வருமானம் பாதிக்கப்பட்டாலும், கிடைச்ச நேரம் திருக்குறள் ஓவியத்துக்கு வசதியா அமைஞ்சது. வரைய ஆரம்பிச்ச முதல் மூணு மாசம் தினமும் வரைவது கொஞ்சம் சிரமமா இருந்தது. இப்போது 9.00 - 5.00 ரெகுலர் வேலைகள் ஒரு பக்கம் போனாலும், தடையின்றி ஓவியத்தை தொடர முடியும் என்ற நம்பிக்கை வந்திருக்கு" என்கிறார் சௌமியா.

''திருக்குறள் இவ்வளவு பிடிக்கக் காரணம் அது கூறும் வாழ்வியல். திருக்குறளில் அக்காலத்து மனிதர்களின் உளவியலை எளிதா புரிஞ்சுக்க முடியும். குறள்களைத் தாண்டி வள்ளுவரையும் படிக்கத் தொடங்கினேன். அயோத்தி தாசர் ஆய்வு முதல் பல ஆய்வுகளையும் நூல்களையும் படிச்சிருக்கேன். வள்ளுவர் குறித்த தரவுகள் இன்னும் கிடைச்சா தெரிந்துகொள்ள ஆர்வமா இருக்கேன்'' என்கிறார்.

குறள் 327
குறள் 327

யதார்த்தமாக உரையாடும், இயல்பாக இலக்கியம் பேசும் இயலின் ஓவியங்களில் யதார்த்தத்தை விஞ்சிய சர்ரியலிஸ்டிக் வடிவைக் காணலாம்.

''சர்ரியலிஸ்டிக் ஓவியங்கள் ஓவியருக்கு ஒருவித சுதந்திரத்தை கொடுக்கும். மனிதருக்கு ரெண்டு கை, ரெண்டு கால் என்னும் விதிகளை உடைத்து உணர்வுகளை நேரடியா கடத்துவதுதான் என் நோக்கம். நம் ஊர்கள்ல அடிக்கடி பயன்படுத்தும் பழமொழிகள்ல விலங்குகளின் உவமையைக் காணலாம்.

'காக்கைக்கும் தன்குஞ்சு,' 'பாம்பு காது', 'நரி தந்திரம்'னு இவற்றை என் ஓவியங்கள்லயும் பயன்படுத்துறேன். பழமையின் மீது இருக்குற ஆர்வத்தால வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களுக்குச் சென்று அங்கிருக்கும் சுவரோவியங்கள ஆராய்ந்து வரையும் ஆசை இருக்கு. ஒரு முறை சித்தன்னவாசல் போய், அங்கே ஓவியம் வரைந்தது சிறந்த அனுபவமா இருந்தது'' என்பவர், தினமும் 4 மணிநேரம் ஒதுக்கி வரையும்போதும், தன் தேடலுக்கான முயற்சிகளை எடுக்கும்போதும், 'பொண்ணுக்கு எதுக்கு இதெல்லாம்' என்ற வார்த்தைகள், விமர்சனங்களையும் கடந்துள்ளார்.

சௌமியா
சௌமியா

''நிறைய கசப்பான சம்பவங்கள். ஆனா நம்ம கனவு, நம்ம இலக்குதான் முக்கியம்னு நம்பும்போது, எல்லா நெக்டிவிட்டியையும் கடந்து வந்துவிட முடியும். எனக்கு வான்காவுடைய ஓவியங்கள் ரொம்பப் பிடிக்கும். என் கல்லூரிப் பேராசிரியர் ராஜு சார், `உன் படைப்பு புதுமையா, தனித்துவமானதா இருக்கு. உனக்கு எப்படி தோணுதோ அப்படியே வரை'னு சொல்லி உற்சாகப்படுத்தினார். நான் ஓவியம் படிக்கலைன்னாலும், நானாக நான் வரைவதற்கு ராஜு சாரின் வார்த்தைகள்தான் காரணம்'' என்கிறார் சௌமியா.

குறள் ஓவியம் வளரட்டும்!