
பெண் என்பவள் இப்படியிருக்க வேண்டுமென்று ஆண் மனதிலும், ஆண் என்பவன் இப்படி யிருக்க வேண்டுமென்று பெண் மனதிலும் ஒரு கட்டமைப்பு இருக்கிறது. அப்படியில்லாத பட்சத்தில் உருவ கேலி நடைபெறுகிறது.
உடல் தொடர்பான விமர்சனங்களையும், கேரக்டர் தொடர்பான விமர்சனங்களையும் சந்திக்காத பெண்கள், இதுவரை பிறக்காதவர்களாகத்தான் இருக்க முடியும். சிரித்தால், அமைதியாக இருந்தால், பேசினால், பருமனாக இருந்தால், ஒல்லியாக இருந்தால் என எல்லாவற்றுக்கும் கேலி... சிலர் தங்களுடைய எதிர்ப்பை புத்திசாலித்தனமாக வெளிப்படுத்திவிட்டு, அந்த நெகட்டிவ் சூழலைக் கடந்து விடுகிறார்கள். ஆனால், பெரும்பான்மை பெண்கள் இந்தச் சூழலைக் கடக்கத் தெரியாமல் தவறான முடிவுகளை எடுத்து விடுகிறார்கள். உருவகேலி என்பது உள்ளூர் பெண் முதல் உலக அழகி வரை எந்தப் பெண்ணையும் விட்டு வைப்பதில்லை.
சமீபத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனாகூட, தன்னுடைய பேட்டி ஒன்றில், ‘`தொடர்ந்து ஷூட்டிங் இருந்தால் மெலிந்து விடுகிறேன். அப்போது ‘என்ன உன் உடம்பு ஆம்பளை மாதிரி இருக்கு’ என்கிறார்கள். ஷூட்டிங் இல்லாத நேரங்களில் கொஞ்சம் எடை போட்டாலும் ‘என்ன குண்டாகிட்டீங்க’ என்கிறார்கள். நான் பேசினாலும் ட்ரோல் செய்கிறார்கள். பேசாமல் இருந்தாலும் கமென்ட் செய்கிறார்கள். நான் என்னதான் செய்வது; வேண்டுமானால், சினிமாவை விட்டு விலகி விடட்டுமா’’ என்று ஆதங்கப்பட்டிருந்தார். ராஷ்மிகா ஒரு செலிபிரிட்டி என்பதால், அவர் காயப்பட்டதும், எதிர்வினையாற்றியதும் வெளிப் படையாகத் தெரிகிறது. அதன் காரணமாக அவருக்கு ஆதரவான குரல்களும் எழுகின்றன. ஆனால், மற்ற பெண்களின் நிலைமை..? விமர்சிப்பவர்களை எதிர்த்து நிற்பதா; அப்படிச் செய்தால் அடுத்து என்னென்ன பிரச்னை செய்வார்களோ; இப்படிப்பட்டவர்கள் இருக்கு மிடத்தை விட்டே போய்விடலாமா... இப்படிப் பலவற்றையும் நினைத்து மனம் குமைந்து கொண்டிருப்பவர்களுக்கான சிறு வெளிச்சத்தைத் தரும் முயற்சிதான் இந்தக் கட்டுரை!

உருவத்தைவிட உயர்ந்தவை உலகத்தில் நிறைய இருக்கின்றன!
சமூக ஆர்வலர் சுகிர்த ராணி, ‘`பெண் என்பவள் இப்படியிருக்க வேண்டுமென்று ஆண் மனதிலும், ஆண் என்பவன் இப்படி யிருக்க வேண்டுமென்று பெண் மனதிலும் ஒரு கட்டமைப்பு இருக்கிறது. அப்படியில்லாத பட்சத்தில் உருவ கேலி நடைபெறுகிறது. மனிதர்களை அவர்களுடைய உடலைக் கொண்டோ, நிறத்தைக் கொண்டோ வேறு எதைக்கொண்டும் தீர்மானிக்கக் கூடாது. ஒரு மனிதரின் ஆளுமையை அவர்களின் எண்ண மும், செயல்களும்தான் முடிவு செய்யும். அந்த ஆளுமைதான் அழகே... உருவ கேலி ஆண் களுக்கும் நடக்கிறது. அதனால் இதை ஒரு சமூக பிரச்னையாகத்தான் நாம் அணுக வேண்டும். ஊடகம், முற்போக்கு சிந்தனை உடையவர்கள், சமூக ஆர்வலர்கள் ஆகியோர் தங்களுடைய கலையின் மூலமாகவும், படைப்புகள் மூலமாகவும், மாற்று சிந்தனைகள் மூலமாகவும் இதை மாற்றுவதற்கு தொடர்ந்து முயல வேண்டும். பெற்றோர்கள், சக மனிதர்களை சமமாக நடத்துவதே அறிவு என்றும், இந்த அறிவுதான் அழகு என்றும் பிள்ளைகளுக்குக் கற்றுத்தந்து வளர்க்க வேண்டும். உருவத்தைவிட உயர்ந்தவை இந்த உலகத்தில் நிறைய இருக்கின்றன. இதில் நாம் நேரத்தைச் செலவிட வேண்டிய அவசிய மில்லை’’ என்று அழுத்தமாகப் பதிவு செய்கிறார்.

அடுத்தவரிடம் சான்றிதழ் எதிர்பார்க்காதீர்கள்!
‘`இது ட்ரோல் யுகம். ஒரு யூடியூப் இன்டர்வியூவில் வருகிற பின்னூட்டங் களிலேயே அவ்வளவு வக்கிரம்... அவர்களில் பெரும்பான்மையினர் சம்பந்தப்பட்டவர் களுக்கு அறிமுகமற்றவர்களாக இருக்கவே வாய்ப்புகள் அதிகம். அதே நேரம், இந்த உருவ கேலியைச் செய்வது சக சிறார்கள்தான் என்பதையும் நாம் கருத்தில் கொள்ள வேண் டும். இவர்களை ஐந்திலேயே சரி செய்ய வேண்டியது பெற்றோர்களின் பொறுப்பு.விமர்சனத்தில் இரண்டு வகைகள் இருக் கின்றன. ஒன்று, நம் குறைகளைச் சுட்டிக் காட்டும் ஆக்கபூர்வமான விமர்சனம். நம்மை யாராவது ஆக்கபூர்வமாக விமர்சனம் (Constructive criticism) செய்தால், அதை கருத்தில் வாங்கி தவற்றைத் திருத்திக் கொள்ள லாம். ஒருவேளை அந்த விமர்சனம் கேலி முலாம் பூசி வந்தாலும் கூட ஏற்றுக்கொள்ள லாம். இரண்டாவது, அழிக்கும்விதமான விமர்சனம் (Destructive criticism). உருவ அளவில் மாற்ற முடியாத விஷயங்களை கேலி செய்வது, பேசிய விஷயங்களைத் திரும்பத் திரும்பச் சொல்லி கேலி செய்வதெல்லாம் இந்த வகையில் வரும். இதுதான் ராஷ்மிகா வுக்கு நடந்திருப்பது. இப்படிப்பட்ட நபர்களிடம் கோபப்படவும் கூடாது; இவர்கள் முன்னிலையில் அழவும் கூடாது. ‘அட போங் கப்பா’ என்று கடந்து விட வேண்டும். அதே நேரம், ‘அட போங்கப்பா’ என்று நாம் நினைப்பதை அவர்களுக்குத் தெரியப் படுத்தவும் கூடாது.
தன்னை ‘அழகானவள்/ன்’, ‘அறிவானவள்/ன்’, ‘நல்லவள்/ன்’ என்று அடுத்தவரிடம் சான் றிதழ் எதிர்பார்த்தால், இதுபோன்ற விமர்சனங் களால் அதிகம் காயப்படுவோம். விமர்சனங் களையும், விமர்சிப்பவர்களையும் ‘ஐ நோ வாட் ஐ யம்’ என்று கடந்து செல்லப் பழகுங்கள்’’ என்கிறார் உளவியல் ஆலோசகர் சித்ரா அரவிந்த்.
அந்த ஆயுதத்தை உடைத்துப் போடுங்கள்!
தன் அனுபவத்தைப் பகிரும் நடிகை சுருதி பெரியசாமி, ‘`நான் டஸ்கி ஸ்கின் டோனில் இருப்பதால் சின்ன வயதில் என் நிறத்தை வைத்து நிறைய பாடி ஷேமிங் செய்திருக்கிறார்கள். மாடலிங் பண்ண ஆரம்பித்தபோதுகூட, நிறைய விமர்சனங்களை எதிர் கொண்டேன். வாய்ப்புகள் மறுக்கப் பட்டிருக்கின்றன. விமர்சனங் களுக்கு பயந்து நான் வீட்டில் உட் கார்ந்திருந்தால் நடிகை என்ற அங்கீகாரமே எனக்கு கிடைக்காமல் போயிருக்கும். விமர்சனங்களைத் தாண்டி என் கனவுக்காக நான் ஓடி னேன். என் வெற்றிதான் விமர் சனங்களுக்கான பதில் என நம்பி னேன். உருவ கேலி சம்பந்தப்பட்ட வரின் ஆழ்மனது வரை தாக்கத்தை ஏற்படுத்தி அவரைச் செயல்பட விடாமல் தடுக்கும் என்பதை மக்கள் யோசிக்க வேண்டும். நம்மை விரும்பாதவர்கள் நம் வளர்ச்சியைத் தடுக்க கையிலெடுக்கும் ஒரே ஆயுதம் விமர்சனம்தான். அதை உடைத்துப் போடுங்கள்’’ என்கிறார் வருத்தமும் கோபமுமாக.

ஒல்லியாக இருந்தாலும் ஆரோக்கியமாக இருக்கிறேன்!
“என் ஒல்லியான உடல் தோற்றத் தைப் பார்த்து, ‘பென்சில் மாதிரி இருக்க’, ‘பல்லி மாதிரி இருக்க’ என்றெல்லாம் கமென்ட்ஸ் வரும். சில கமென்ட்ஸ், என் தன்னம்பிக் கையை மொத்தமாக உடைத்துப் போட்டதுண்டு. ஆனாலும், திறமைக்கு மட்டும் மரியாதை கிடைத்தால் போதும் என நினைத்து, தொடர்ந்து இயங்கினேன். எனக்கு குழந்தை பிறந்தபோது 20 கிலோ எடை கூடி, மறுபடியும் குறைத்தேன். அதற்கும் கமென்ட்ஸ். எப்படி இருந்தாலும் பாடி ஷேமிங் பண்ணு வார்கள் என்பதை பிறகுதான் தெளிவாகப் புரிந்து கொண்டேன். நான் ஒல்லியாக இருந்தாலும், ஆரோக்கிய மாகவே இருக்கிறேன். எனக்கு இப்படியிருப்பது பிடித்திருக்கிறது. ட்ரோல் செய்பவர்களைத் திருத்துவது என் வேலையில்லை’’ - யூடியூபர் ஹரிஜாவின் வார்த்தைகளில் தன்னம்பிக்கையும் தெளிவும்.
யாருக்கும் உரிமையில்லை!
‘`தைராய்டு காரணமாக உடல் எடை கூடி, நிறம் மங்கி... என்னைக் கண்ணாடியில் பார்க்க எனக்கே பிடிக்காமல் போனது. என் தோழிகளும், உறவினர்களுமே என்னை பாடி ஷேமிங் செய்தார்கள். அதற்கு பயந்து வீட்டிலேயே முடங்கினேன். என் கரியரில் நான்கு வருடங்களைத் தொலைத்துவிட்டேன். மறைந்த இயக்குநர் ஜனநாதன், ‘லாபம்’ திரைப்படத்தில் எனக்கு உதவி இயக்குநர் வாய்ப்பு கொடுத்து, என் தாழ்வு மனப்பான்மையை உடைத்தார். நம்பிக்கையுடன் சமூக வலைதளங்களில் இயங்க ஆரம்பித்தேன். ஒரு பக்கம் மக்கள் என்னைக் கொண்டாடினாலும், இன்னொரு பக்கம் பாடி ஷேமிங்கும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. என் உடலை நான் ரசிக்கிறேன். இந்தப் பக்குவம் எனக்கு வர நான்கு வருடங்கள் ஆகியிருக் கின்றன. ஒருவருடைய உடல், ஆரோக்கியம், அழகு எல்லாமே அவரின் தனிப்பட்ட விஷயங்கள். அக்கறை என்ற பெயரில் அதில் தலையிட யாருக்கும் உரிமை யில்லை’’ என்று அழுத்தம் திருத்தமாகச் சொல்கிறார் நடிகை ‘காதல்’ சரண்யா.
விகடன் கருத்துக்கணிப்பு
ராஷ்மிகா மந்தனாவின் ஆதங்கம் குறித்து, ஃபேஸ்புக்கில் வாசகர் களின் கருத்துகளைக் கேட்டிருந்தோம். 80 சதவிகிதத்துக்கும் மேற்பட்டவர்கள், ‘விமர்சனங்களைப் புறந்தள்ளுங்கள்’ என்று அவரை ஆற்றுப்படுத்த, மற்றவர்கள் ‘விமர்சனங்களை எதிர்த்து நில்லுங்கள்’ என்று தைரியமூட்டியிருந்தார்கள்.
