Published:Updated:

டிரஸ் கோதிக் முதல் ஷான் டெய்ட் வரை...! - மனஅழுத்தம் பாதித்த கிரிக்கெட் வீரர்கள் #NoMoreStress

தினேஷ் ராமையா

மனநலன் சார்ந்த பிரச்னைகள் பற்றிப் பேசும்போது கிரிக்கெட் உலகில் அதிகம் விவாதிக்கப்படுவது இங்கிலாந்து வீரர்கள் பற்றித்தான்.

Marcus Trescothick
Marcus Trescothick

சர்வதேச கிரிக்கெட் தரும் புகழ் பற்றி நாமெல்லாம் அறிந்திருக்கிறோம். ஆனால், அதற்காக கிரிக்கெட் வீரர்கள் கொடுக்கும் விலை மிகவும் பெரியது. சாமானியர்களுக்குக் கிடைக்கும் பிரைவசி, புகழ் வெளிச்சத்தில் இருக்கும் அவர்களுக்குக் கிடைக்க வாய்ப்பில்லை. இது பிரபலங்கள் எல்லோருக்கும் உள்ள பிரச்னைதான் என்றாலும், `கிரிக்கெட்டில் உடல்நலத்தைவிட மனநலனே முக்கியம்' என்கிறார்கள் சக்சஸ்ஃபுல் வீரர்கள் பலரும்.

Stress
Stress
Pixabay

மனநலன் சார்ந்த பிரச்னைகள் பற்றிப் பேசும்போது கிரிக்கெட் உலகில் அதிகம் விவாதிக்கப்படுவது இங்கிலாந்து வீரர்கள் பற்றித்தான். ஜோனாதன் டிராட், டிரெஸ்கோதிக் முதல் அலெக்ஸ் ஹேல்ஸ் வரை இங்கிலாந்து வீரர்கள் பலரும் மனஅழுத்தத்தால் பாதிக்கப்பட்டு மீண்டுள்ளனர்.

அலெக்ஸ் ஹேல்ஸ்

அண்மையில் நடைபெற்று முடிந்த உலகக் கோப்பை தொடருக்காக அறிவிக்கப்பட்ட இங்கிலாந்து அணியில் அலெக்ஸ் ஹேல்ஸ் இடம்பெற்றிருந்தார். ஆனால், கடைசி நேரத்தில், `தனிப்பட்ட சில காரணங்களால் தொடரிலிருந்து விலகிக்கொள்வதாக' அறிவித்தார் ஹேல்ஸ். பொதுவாக கிரிக்கெட் வீரர்களுக்கு உலகக்கோப்பை தொடரில் பங்கேற்பது கனவாகவே இருக்கும்.

Alex Hales
Alex Hales
Twitter

ஆனால், அந்தத் தொடரிலிருந்தே விலகுவதாக வீரர் ஒருவர் அறிவிக்கவேண்டிய அளவுக்கு மனஅழுத்தத்துக்கு ஆளானார். இன்னும் சொல்லப்போனால், கிரிக்கெட்டிலிருந்து காலவரையற்ற இடைவெளி எடுத்துக்கொள்வதாக அறிவித்து ரசிகர்களுக்கு மேலும் அதிர்ச்சி கொடுத்திருக்கிறார் அலெக்ஸ் ஹேல்ஸ்.

ஜோனாதன் டிராட்

கடந்த 2013-ம் ஆண்டு இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வந்தது. அந்தத் தொடருக்கு முன் இங்கிலாந்தில் நடைபெற்ற இரு அணிகளுக்கும் இடையிலான `ஆஷஸ் டெஸ்ட்' தொடரை 3-0 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி வென்றது. அந்தத் தொடரின் கடைசி போட்டியின் முதல் இன்னிங்ஸில் 40 மற்றும் இரண்டாவது இன்னிங்ஸில் 59 ரன்கள் எடுத்துச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தார் டிராட். ஆனால், ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின்போது முதல் போட்டி முடிந்ததும் நாடு திரும்பினார்.

Jonathan Trott
Jonathan Trott
ICC

2016-ம் ஆண்டு வெளியான `அன்கார்டட்' (Unguarded) புத்தகத்தில் அந்தச் சம்பவம் குறித்து டிராட் விரிவாகவே பதிவு செய்திருந்தார். ``மைதானத்துக்குள் செல்வதிலிருந்து தப்பிக்க பல்வேறு யோசனைகள் எனக்குத் தோன்றின. `காருடன் தேம்ஸ் நதியில் இறங்கிவிடலாமா? வேகமாகச் சென்று மரத்தில் மோதிவிடலாமா?' என்றுகூடச் சிந்தித்தேன்'' என்று மனஅழுத்தம் பாதித்த அந்தச் சம்பவங்கள் குறித்து நினைவுகூர்ந்துள்ளார்.

மார்கஸ் டிரஸ்கோதிக்

ஜோனாதன் டிராட்டுக்கு 2013-ம் ஆண்டு ஏற்பட்ட நிலை டிரஸ்கோதிக்குக்கு 2006-ல் ஏற்பட்டது. ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இங்கிலாந்து அணியில் இடம்பிடித்திருந்த அவர், முதல் டெஸ்ட் போட்டி தொடங்குவதற்கு முன்பே இங்கிலாந்து திரும்பினார். அதற்கு முன் `ஸ்கை ஸ்போர்ட்ஸ்' என்ற ஊடகத்துக்கு அளித்த பேட்டியில், `வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதால் நாடு திரும்புவதாகத்' தெரிவித்திருந்தார். அந்தத் தொடருக்குப் பிறகு அவர் இங்கிலாந்து அணிக்காக விளையாடவில்லை.

கிரிக்கெட்டைப் பொறுத்தவரை உங்களுக்கு விளையாட்டுத் திறன் 10 முதல் 20 சதவிகிதம் இருந்தால் போதும். ஆனால், மனவலிமை 80-லிருந்து 90 சதவிகிதம் இருக்க வேண்டும்.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் கிளென் மெக்ராத்

`தனக்கு மனநலன் சார்ந்த பிரச்னை ஏற்பட்டுள்ளது' என்பதைத் தாமதமாக உணர்ந்துகொண்ட அவர், சிகிச்சைகள் எடுத்துக்கொண்டு அதிலிருந்து மீண்டார். பின்னர், இங்கிலாந்து உள்ளூர் அணியான சோமர்ஸெட்டுக்காக போட்டிகளில் பங்கேற்றார். தனக்கு ஏற்பட்ட நிலை குறித்து ஒருமுறை மனம்திறந்த டிரஸ்கோதிக், `என்ன பிரச்னை என முதலில் எனக்குத் தெரியவில்லை. அதனால்தான் வைரஸ் தொற்று எனக்கூறி ஆஸ்திரேலியாவிலிருந்து நாடு திரும்பினேன். ஆனால், அது மனஅழுத்தம் என்று உணரத் தொடங்கியபிறகே உண்மை என்ன என்பதை உணர்ந்தேன். அதுகுறித்து என்னிடம் நேரடியாகப் பேசிய சிலர், `இங்கிலாந்து அணிக்காக விளையாடுகிறாய்; நல்ல ஊதியம் கிடைக்கிறது, புகழும் கிடைக்கிறது. அப்படியிருக்கும்போது உனக்கு என்ன பிரச்னை?' என்று நகையாடினர்.

சிலநேரங்களில் உடலில் காயங்களை ஏற்படுத்திக்கொள்ளவும் முயற்சி செய்திருக்கிறேன். காயம் ஏற்பட்டிருந்தால், எனக்கு ஏற்பட்ட பாதிப்பு குறித்து மற்றவர்கள் அறிந்திருப்பார்கள். ஆனால், மனரீதியான பிரச்னை என்பதால் மற்றவர்கள் என்னைப் புரிந்துகொள்ள வாய்ப்பில்லாமல் போனது' என்றார். இங்கிலாந்து அணியின் சிறந்த தொடக்க ஆட்டக்காரர்களுள் ஒருவராகத் திகழ்ந்த டிரஸ்கோதிக் அந்த அணிக்காக 76 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய நிலையில், மனஅழுத்தத்தின் காரணத்தால் தன்னுடைய கரியரை முடிவுக்குக் கொண்டுவர வேண்டிய சூழல் ஏற்பட்டது.

Marcus Trescothick
Marcus Trescothick
Cricket.com.au

2006-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவிலிருந்து நாடு திரும்பிய பிறகு, அதே ஆண்டில் மீண்டும் அந்நாட்டுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இங்கிலாந்து அணியில் டிரஸ்கோதிக் இடம்பெற்றிருந்தார். இந்த முறை இரண்டு பயிற்சிப் போட்டிகளில் மட்டுமே விளையாடிய அவர், `மனஅழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாகக்' கூறி மீண்டும் நாடு திரும்பினார். அதன் பின்னர், 2008-ம் ஆண்டில் சர்வதேசக் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்தார்.

ஷான் டெய்ட்

ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளரான டெய்ட், 2007-ம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்ற உலகக்கோப்பை தொடரில் அந்த அணி சாம்பியன் பட்டம் வெல்ல முக்கியக் காரணமாக இருந்தவர். அந்தத் தொடரில் 23 விக்கெட்டுகளை வீழ்த்திய அவர், அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருந்தார். வித்தியாசமான பௌலிங் ஆக்‌ஷன், வேகம் இவை இரண்டும் வேகப்பந்து வீச்சில் டெய்ட் சாதிக்க முக்கியக் காரணங்களாக இருந்தன. ஆனால், பௌலிங் ஆக்‌ஷன் காரணமாக அடிக்கடி காயங்கள் ஏற்பட்டதால் தொடர்ச்சியாக அவதிப்பட்டு வந்தார். அந்தக் காயங்களால் மனதளவில் துவண்டுபோன டெய்ட், 2008-ம் ஆண்டு தனது 24-வது வயதில் திடீரென ஓர் அறிவிப்பை வெளியிட்டார். `கிரிக்கெட்டிலிருந்து சிறிய இடைவெளி எடுத்துக்கொள்வதாக அவர் அறிவித்தது ஆஸ்திரேலியா மட்டுமன்றி உலக கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. `மனமும் உடலும் புத்துணர்ச்சி பெறுவதற்காக இந்த இடைவெளியை எடுத்துக்கொள்வதாக' அறிவித்தார்.

Shaun Tait
Shaun Tait
Cricket.com.au

2009-ம் ஆண்டு முதல்தர கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் 2011-ம் ஆண்டு ஒருநாள் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறப்போவதாக அறிவித்த அவர், 2016-17 வரை டி20 போட்டிகளில் விளையாடி வந்தார். 2017-ம் ஆண்டு தனது 34-வது வயதில் அனைத்துவிதமான போட்டிகளிலிருந்தும் ஓய்வை அறிவித்தார்.

கிரிக்கெட்டிலிருந்து இடைவெளி எடுத்துக்கொள்வதாக அறிவித்தபோது பேசிய டெய்ட், `இது கடினமான முடிவு என்பது எனக்குத் தெரியும். ஒரே இரவில் இந்த முடிவை நான் எடுத்துவிடவில்லை. சில காலமாக என்னைத் தொந்தரவு செய்துகொண்டிருந்த பிரச்னை இது. கிரிக்கெட்டிலிருந்து எடுத்துக்கொள்ளும் இந்த இடைவெளி எனது மனதுக்கும் உடலுக்கும் புதிய உத்வேகத்தைக் கொடுக்கும் என்று நம்புகிறேன். மனஅழுத்தம் தந்த பிரச்னைகளால் விளையாட்டில் என்னால் முழுமையாகக் கவனம் செலுத்த முடியவில்லை. முழுமனதோடு விளையாடாவிட்டால் சக வீரர்களுக்கும் ஆஸ்திரேலிய கிரிக்கெட்டுக்கும் நான் உரிய மரியாதை கொடுக்கவில்லை என்றாகிவிடும்' என்றார்.

மைக்கேல் யார்டி

இங்கிலாந்து ஆல்ரவுண்டரான மைக்கேல் யார்டி, 2011-ம் ஆண்டு உலகக் கோப்பை தொடரின் காலிறுதிப் போட்டிக்கு முன் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். இலங்கை அணிக்கு எதிரான அந்தப் போட்டிக்கு முன்னதாக, தொடரிலிருந்து தாம் விலகுவதாக அறிவித்து அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.

Michael Yardy
Michael Yardy

கொழும்புவில் போட்டி தொடங்க இருந்த சில நாள்களுக்கு முன் கடும் மனஅழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி போட்டியிலிருந்து விலகினார். இங்கிலாந்து திரும்பியதும் இதுகுறித்து பேசிய யார்டி, `உலகக் கோப்பைத் தொடர் போன்ற முக்கியமான ஒரு தருணத்தில் அணியிலிருந்து விலகுவதாக நான் எடுத்த முடிவு எளிதானதல்ல. ஆனால், அது சரியான முடிவு என்றே நான் நினைக்கிறேன். அதேபோல், அதற்குப் பின்னால் இருக்கும் காரணங்கள் குறித்து நேர்மையாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்'' என்று கூறியிருந்தார்.

இதேபோல் உங்களுக்கும் ஏதேனும் மனநலம் சார்ந்த சந்தேகங்கள், சிக்கல்கள் இருந்தால் தீர்வு தேடித் தரக் காத்திருக்கிறது விகடன்!

உங்களுடைய பிரச்னைகளைப் பற்றி விவரமாக எழுதி,

mentalhealth@vikatan.com

என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள். அதற்கான தீர்வுகள் நிபுணர்களிடம் கேட்கப்பட்டு விகடன் இணையதளத்தில் விரைவில் பகிரப்படும்.

#NoMoreStress