Published:Updated:

விடாது வெர்ஸ்டப்பன்!

ஃபார்முலா 1
பிரீமியம் ஸ்டோரி
ஃபார்முலா 1

ரேஸ்: ஃபார்முலா 1

விடாது வெர்ஸ்டப்பன்!

ரேஸ்: ஃபார்முலா 1

Published:Updated:
ஃபார்முலா 1
பிரீமியம் ஸ்டோரி
ஃபார்முலா 1

கிரேட் பிரிட்டன், ஆஸ்திரியா என இரண்டு கிராண்ட் ப்ரீ பந்தயங்களையும் அடுத்தடுத்து வென்ற ஃபெராரிக்கு ஜூலை மாதத்தின் மூன்று ரேஸ்களையும் வெவ்லதற்கான நல்ல வாய்ப்பு இருந்தது. ஆனால் வழக்கம்போல் ஃபெராரி எதிர்பார்த்ததைப்போல் எதுவும் நடக்கவில்லை. பிரான்ஸில் வெற்றி பெற இருந்த மிகச் சிறந்த வாய்ப்பை இழந்தார் சார்ல் லெக்லர்க். இதனால், லெக்லர்க்கை விட 63 புள்ளிகள் முன்னிலை பெற்றிருக்கிறார் நடப்பு சாம்பியன் மேக்ஸ் வெர்ஸ்டப்பன்.

பிரிட்டிஷ் கிராண்ட் ப்ரீ

இதுவரை நடந்திருக்கும் 12 ரேஸ்களில் மிகச் சிறப்பானது இந்த ரேஸாகத்தான் இருக்கும் சில்வர்ஸ்டோன் சர்கியூட்டில் டாப் டூ பாட்டம் பெரும் யுத்தங்கள் அரங்கேறின. அனைவரையும் உறைய வைத்த விபத்து, உலக சாம்பியனுக்கு ஏற்பட்ட சிக்கல், முதல் 3 இடங்களுக்கு நடந்த மிரட்டலான போட்டி என டிராமாக்கள் நிறைந்த இந்தப் பந்தயத்தை வென்று தன் முதல் ஃபார்முலா ஒன் வெற்றியைப் பதிவு செய்தார் ஃபெராரியின் கார்லோஸ் சைன்ஸ். சனிக்கிழமை தகுதிச் சுற்றில் மிகச் சிறப்பாகச் செயல்பட்டு போல் பொசிஷனை வென்றவர், அந்தச் சிறப்பான செயல்பாட்டை ஞாயிற்றுக்கிழமையும் தொடர்ந்தார்.

ரேஸ் தொடக்கத்திலேயே ஒரு மிகப்பெரிய அசம்பாவிதம் நடந்தது. முதல் வளைவிலேயே ஜார்ஜ் ரஸல், ஜோ குவான்யூ ஆகியோரின் கார்கள் மோத, டிராக்கில் இருந்து வெளியேறி சில முறை சுழன்று, தலைகீழாகச் சென்று தடுப்புகளில் மோதியது ஜோ குவான்யூவின் கார். அவரை காரிலிருந்து வெளியேற்றுவதே மிகவும் கடினமான விஷயமான இருந்தது. நல்ல வேளையாக அவருக்கு எந்தப் பிரச்னையும் ஏற்படவில்லை.

ரேஸின் தொடக்கத்திலேயே தன் முன்னிலையை இழந்திருந்தார் சைன்ஸ். ஆனால் முதல் லேப் முடியும் முன்பே ரேஸ் நிறுத்தப்பட்டதால், மீண்டும் தொடங்கியபோது அனைவரும் முந்தைய இடங்களில் இருந்தே ரேஸை மீண்டும் தொடங்கினர். இம்முறை தன் முன்னிலையைச் சிறப்பாகத் தக்க வைத்துக் கொண்டார் சைன்ஸ். பத்தாவது லேப்பில் முன்னிலை பெற்றிருந்தாலும் வெர்ஸ்டப்பனால் அதைத் தக்க வைத்துக் கொள்ள முடியவில்லை. டயர் பஞ்சர் ஆனதால், அவர் விரைவிலேயே பிட் எடுக்க வேண்டி இருந்தது. அதேபோல் செர்ஜியோ பெரஸின் முன் விங்கிலும் சேதம் ஏற்பட்டது. அதனால், அவருமே தொடக்கத்தில் பின்தங்கினார். பெரஸால் ஓரளவு தன் இடத்தை மீட்க முடிந்தாலும், வெர்ஸ்டப்பனால் முடியவில்லை.

ஒருகட்டத்தில் ஃபெராரி அணியின் அறிவுரையால் லெக்லர்க்கை முந்த அனுமதித்தார் சைன்ஸ். அதனால், இந்த ரேஸை வெற்றி பெறும் நிலைக்கு முன்னேறினார் லெக்லர்க். இருந்தாலும் 40-வது லேப்பில் எஸ்டபன் ஓகான் விபத்தில் சிக்கியதால், சேஃப்டி கார் வரவழைக்கப்பட்டது. இதைப் பயன்படுத்தி சைன்ஸ், பெரஸ், லூயிஸ் ஹாமில்ட்டன் போன்றவர்கள் புதிய டயரோடு வெளியேறினர். லெக்லர்க்கை ஃபெராரி அழைக்கவில்லை. அதனால், ரேஸ் தொடங்கியதும் அவர்கள் அனைவரும் லெக்லர்க்கை முந்திவிட்டனர். கடைசி கட்டத்தில் பெரஸ் முயற்சி செய்திருந்தாலும், அதை முறியடித்து தன் முதல் வெற்றியைப் பதிவு செய்தார் சைன்ஸ். இது அவருடைய 150-வது ரேஸ்!

இவ்வளவு களேபரங்கள் நடக்க, கடைசிக் கட்டத்தில் அனைவரின் கவனத்தையும் தன் பக்கம் திருப்பினார் மிக் ஷூமேக்கர். கடைசி லேப்பில் ஏழாவது இடத்துக்காக நடப்பு சாம்பியன் வெர்ஸ்டப்பன் உடன் கடுமையாக முட்டி மோதினார். அவரால் மேக்ஸை முந்த முடியவில்லை என்றாலும், ஃபார்முலா 1 கரியரில் முதல் முறையாக புள்ளிகள் பெற்றார் மிக்!

வெர்ஸ்டப்பன், சார்ல் லெக்லர்க், செர்ஜியோ பெரஸ்
வெர்ஸ்டப்பன், சார்ல் லெக்லர்க், செர்ஜியோ பெரஸ்
விடாது வெர்ஸ்டப்பன்!

ஆஸ்திரியன் கிராண்ட் ப்ரீ

ரெட் புல் அணியின் ஹோம் ரேஸ் என்பதால் வெர்ஸ்டப்பன், பெரஸ் ஆகியோரின் மீது அதீத எதிர்பார்ப்பு இருந்தது. சமீபத்திய ரேஸில் அவர் கையே ஓங்கியிருந்ததால், இந்த ரேஸில் அவர் வெற்றி பெற்றுவிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் எதிர்பார்த்ததைப் போல் வெர்ஸ்டப்பனால் வெற்றியை ஈட்ட முடியவில்லை. முதல் முறையாக போல் பொசிஷனில் இருந்து தொடங்காமலேயே ஒரு ரேஸை வென்றார் சார்ல் லெக்லர்க்.

ஸ்பிரின்ட் ரேஸ் இருந்ததால், தகுதிச் சுற்று வெள்ளிக் கிழமையே நடந்தது. Q1, Q2 சுற்றுக்களில் லெக்லர்க் கை ஓங்கியிருந்தாலும், Q3-ல் சிறப்பாக செயல்பட்டு ஸ்பிரின்ட் ரேஸுக்கான போல் பொசிஷனை வென்றார் வெர்ஸ்டப்பன். செர்ஜியோ பெரஸ் ஐந்தாவது இடம் பிடித்தார். ஆனால், Q2 சுற்றில் டிராக் லிமிட்டை மீறியதால், அவரின் லேப் நேரங்கள் நிராகரிக்கப்பட்டது. அதனால் அவர் 13-வது இடத்திலிருந்து தொடங்க நேரிட்டது. லெக்லர்க், சைன்ஸ் முறையே இரண்டாவது, மூன்றாவது இடங்களைப் பிடித்தனர்.

ஸ்பிரின்ட் ரேஸில் வெர்ஸ்டப்பனுக்குப் பெரிய போட்டி இருக்கவில்லை. சைன்ஸ், லெக்லர்க் இருவரும் இரண்டாவது இடத்துக்குக் கடுமையாக போட்டியிட்டுக் கொண்டிருந்ததால், வெர்ஸ்டப்பன் எளிதாக ஸ்பிரின்ட்டை வென்றார். சைன்ஸ் கடும் போட்டியளித்தாலும் லெக்லர்க் இரண்டாவது இடத்தை தக்க வைத்துக் கொண்டார். 13-வது இடத்திலிருந்து தொடங்கிய பெரஸ், சிறப்பாகச் செயல்பட்டு ஐந்தாவது இடம் பிடித்தார்.

ஸ்பிரின்ட்டில் இருந்த வேகம் வெர்ஸ்டப்பனிடம் பிரதான ரேஸில் இல்லை. ஒருகட்டத்தில் லெக்லர்க், சைன்ஸ் இருவருமே வெர்ஸ்டப்பனை முந்திவிட்டனர். எவ்வளவு முயன்றும் வேகத்தைக் கூட்ட முடியாததால், மூன்றாவது இடத்துக்கு அவர் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சைன்ஸின் இன்ஜினில் ஏற்பட்ட கோளாறு அவருக்கு இரண்டாவது இடத்தைப் பெற்றுக் கொடுத்தது. பெரஸுக்கு முதல் லேப்பிலேயே பிரச்னை ஏற்பட்டது. ஜார்ஜ் ரஸலுடன் அவர் காத மோத, அந்தச் சேதாரத்தில் இருந்து மீண்டு வர முடியாததால், அவர் ரேஸிலிருந்து ஓய்வு பெற்றார்.

சில்வர்ஸ்டோன் போல, ரெட் புல் ரிங்கிலும் ஃபார்முலா 1 ரசிகர்களின் கவனத்தைத் தன் பக்கம் ஈர்த்தார் ஹாஸ் டிரைவர் மிக் ஷூமேக்கர். முந்தைய வாரம் நடப்பு சாம்பியன் வெர்ஸ்டப்பனுடன் மல்லுக் கட்டியவர், இந்த முறை 7 முறை சாம்பியன் லூயிஸ் ஹாமில்ட்டனுக்குச் சவால் கொடுத்தார். பல லேப்கள் ஷூமேக்கரை முந்த முடியாமல் தடுமாறினார் ஜாம்பவான் ஹாமில்ட்டன். ஒவ்வொரு முறையும் தனக்கு முன்னால் இருந்த மற்றொரு ஹாஸ் வீரர் கெவின் மேக்னசனைப் பயன்படுத்தி, அவர் கொடுத்த 'tow' மூலம் ஹாமில்ட்டனை சிறப்பாக டிஃபண்ட் செய்தார். ஒருவேளை பல நிமிடங்கள் மிக் காரின் பின்னால் தேங்காமல் இருந்திருந்தால் ஹாமில்ட்டன், வெர்ஸ்டப்பனுக்கே சவால் விட்டிருப்பார். அவ்வளவு சிறப்பாகச் செயல்பட்ட மிக், ஆறாவது இடம் பிடித்து அசத்தினார்.

இந்த ரேஸை வென்றதன் மூலம், செர்ஜியோ பெரஸைப் பின்னுக்குத் தள்ளி இரண்டாவது இடத்துக்கு முன்னேறினார் லெக்லர்க்.

பிரெஞ்சு கிராண்ட் ப்ரீ

அற்புதமான இடத்தில் இருந்து புள்ளிகளைத் தாரை வார்த்துக் கொடுப்பது ஃபெராரி அணிக்கு வாடிக்கையாக இருக்கிறது. இந்த ரேஸிலும் அதுவே நடந்தது. முதலிடத்தில் எந்தப் பிரச்னையும் இல்லாமல் சென்று கொண்டிருந்த லெக்லர்க், திராட்டில் கோளாறால் டிராக்கிலிருந்து வெளியேறி தடுப்புகளில் மோதினார். நல்ல வெற்றி வாய்ப்பை வெர்ஸ்டப்பனுக்குத் தட்டில் வைத்துப் பரிசளித்தார்.

புதிய பவர் யூனிட் எடுத்ததால், கார்லோஸ் சைன்ஸ் கிரிட்டின் கடைசியில் இருந்தே ரேஸைத் தொடங்கவேண்டும் என்ற நிலை ஏற்பட்டது. அதனால், அவரைப் பயன்படுத்தி லெக்லர்க்குக்கு போல் பொசிஷனை வென்று கொடுத்தது ஃபெராரி. சைன்ஸ் தகுதிச் சுற்றில் பங்கேற்றிருக்க வேண்டிய அவசியமே இல்லை. இருந்தாலும் அவரை Q3 சுற்றுக்கு முன்னேற வைத்தது அவர் அணி. அங்கு அவருக்கான ஒரே வேலை, லெக்லர்க்கின் காரை tow செய்வது. Q3-ல் முதல் முறை லெக்லர்க் டைமிங் லேப் முயற்சி செய்த போது செக்டார் 1-ல் tow செய்ய வைத்தது ஃபெராரி. இருந்தாலும் செக்டார் இரண்டில் லெக்லர்க்கின் வேகத்தை விட வெர்ஸ்டப்பனின் வேகம் அதிகமாக இருந்தது. அதனால், அடுத்த டைமிங் லேப்பில் செக்டார் இரண்டில் சைன்ஸை tow செய்ய வைத்தனர். அதன் பலனாக அந்த நாளின் அதிவேக லேப்பை பதிவு செய்து போல் பொசிஷன் வென்றார் லெக்லர்க். ஆனால் அது எதற்கும் உதவவில்லை.

அணிகள் புள்ளிப் பட்டியல் 1. ரெட்புல் 396 2. ஃபெராரி 314 3. மெர்சிடீஸ் 270 4. ஆல்பைன் 93 5. மெக்லரன் 89 6. ஆல்ஃபோ ரோமியோ 51 7. ஹாஸ் 34 8. ஆல்ஃபா டௌரி 27 9. ஆஸ்டன் மார்ட்டின் 19 10. வில்லியம்ஸ் 3

லேப் 6-ல் வெர்ஸ்டப்பன் ஒரேயொரு முறை லெக்லர்க்கை முந்த முயற்சி செய்தார். அவ்வளவுதான். அதைத் தவிர்த்து அவர் பெரிதாக சவால் கொடுக்கவில்லை. போகப்போக அந்த இடைவெளி கூடவே செய்தது. ஆனால், 18-வது லேப்பில் திராட்டில் பிரச்னை ஏற்பட்ட, 11-வது வளைவில் டிராக்கை விட்டு வெளியேறி தடுப்பில் மோதினார் லெக்லர்க். அதனால் அவர் ரேஸிலிருந்து விலக நேரிட்டது. அதன்பிறகு வெர்ஸ்டப்பனுக்கு எந்தப் பிரச்னையும் வரவில்லை. மிகவும் எளிதாக ரேஸை வென்று, சாம்பியன்ஷிப்பில் தன் முன்னிலையையும் அதிகப்படுத்திக் கொண்டார்.

லெக்லர்க் கார்தான் ஒருபக்கம் சொதப்பல் என்றால், சைன்ஸ் விஷயத்தில் விமர்சனத்துக்குள்ளான முடிவு ஒன்றை எடுத்தது ஃபெராரி. சைன்ஸ் உயிரைக் கொடுத்து பெரஸை முந்தி போடியம் இடத்துக்குள் நுழைந்தார். அப்படியே ஹாமில்ட்டனையும் முந்திவிடுவார் என்று எதிர்பார்த்த நிலையில், அடுத்த லேப்பிலேயே அவரை இரண்டாவது முறையாக பிட்டுக்குள் அழைத்தது ஃபெராரி. அவர் மீடியம் டயரில் இருந்ததாலும், அந்த டயரின் நிலை சற்று மோசமாக இருந்ததாலும் ரிஸ்க் எடுக்க வேண்டாம் என்று கூறப்பட்டது. ஆனால் அது சைன்ஸுக்கே ஏற்றுக் கொள்வதாக இல்லை.

வெர்ஸ்டப்பன் முதலிடம் பெற, ஹாமில்ட்டன் இரண்டாவது இடம் பெற்றார். விர்ச்சுவல் சேஃப்டி கார் பற்றிய அறிவிப்பு சரியாக பெரஸுக்குத் தெரிவிக்கப்படாமல் போக, அந்த நொடிப்பொழுதில் அவரை முந்தினார் ரஸல். கடைசி வரை பெரஸ் முயற்சி செய்தும் அவரால் மூன்றாவது இடத்துக்கு முன்னேற முடியவில்லை. இந்த சீஸனில் முதல் முறையாக இரண்டு மெர்சிடீஸ் டிரைவர்களும் போடியம் ஏறினார்கள்.

 லூயிஸ் ஹாமில்ட்டன்
லூயிஸ் ஹாமில்ட்டன்
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

டிரைவர்கள் புள்ளிப் பட்டியல்

1. மேக்ஸ் வெர்ஸ்டப்பன் 233

2. சார்ல் லெக்லர்க் 170

3. செர்ஜியோ பெரஸ் 163

4. கார்லோஸ் சைன்ஸ் 144

5. ஜார்ஜ் ரஸல் 143

6. லூயிஸ் ஹாமில்ட்டன் 127

7. லாண்டோ நாரிஸ் 70

8. எஸ்டபன் ஓகான் 56

9. வால்ட்டேரி போட்டாஸ் 46

10. ஃபெர்னாண்டோ அலோன்சோ 37

11. கெவின் மேக்னசன் 22

12. டேனியல் ரிக்கார்டோ 19

13. பியர் கேஸ்லி 16

14. செபாஸ்டியன் வெட்டல் 15

15. மிக் ஷூமேக்கர் 12

16. யூகி சுனோடா 11

17. ஜோ குவான்யூ 5

18. லான்ஸ் ஸ்டிரோல் 4

19. அலெக்சாண்டர் ஆல்பான் 3

20. நிகோலஸ் லடிஃபி 0

21. நிகோ ஹல்கென்பெர்க் 0