Published:Updated:

நிமிடத்துக்கு 80 முறை துடுப்பு... டைமிங்தான் விஷயமே... களைகட்டும் பாம்பு படகுப் போட்டி!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
பாம்பு படகுப் போட்டி
பாம்பு படகுப் போட்டி ( Image by Seb Powen from Pixabay )

பொருளாதாரரீதியாக எவ்வளவு தடைகள் வந்தாலும், பாம்பு படகுப் போட்டி மீதான காதல், கேரளக்காரர்களுக்குக் குறைந்து விடவில்லை. தற்போது, பாம்பு படகுப் போட்டி ஐ.பி.எல் போல சுவாரஸ்யம் பெற்றுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

சுதந்திர தினம் வந்துவிட்டால் கூடவே இன்னொன்றும் நினைவுக்கு வரும். அது... கேரளாவில் நடைபெறும் பாரம்பர்ய பாம்பு படகுப் போட்டிகள்தான். சுதந்திரத்தினத்தை முன்னிட்டு கேரளாவில் ஆலப்புழை, கோட்டயம், கொல்லம் உள்ளிட்ட மாவட்டங்களில் பல்வேறு கிராமங்களில் பாம்பு படகுப் போட்டி நடைபெறும். அவற்றில் ஆலப்புழையில் நடைபெறும் நேரு டிராஃபி படகுப் போட்டி புகழ்பெற்றது.

Vikatan

இந்தப் போட்டியில் வெற்றி பெறுவதைச் சேட்டன்கள் கௌரவமாக கருதுவார்கள். யானை போல கேரளத்தின் இன்னொரு அடையாளமாக பார்க்கப்படுவது பாம்புப்படகு. இதை கேரளக்காரர்கள் 'சுண்டன்வல்லம்' என்கிறார்கள். படகுகளில் தங்கத்தகடுகள் பொருத்தி அழகு பார்ப்பவர்களும் உண்டு. சில நிமிடங்களில் முடிந்து விடும், படகு பந்தயத்துக்கு பின்னால், நாள்கணக்கில் பயிற்சியும் உழைப்பும் இருக்கின்றன. எவ்வாவற்றுக்கும் மேலாக அதிகளவிலான பணத் தேவையும் உள்ளது.

இந்தப் படகு சுமார் 138 அடி நீளம் இருக்கும். படகுக்கு 100 முதல் 120 வல்லம் வலிப்பவர்கள் தேவை. வல்லம் வலிப்பவர்களை உற்சாகப்படுத்த படகின் மத்திய பகுதியில் சிலர் நின்று கொண்டு 'வஞ்சிப்பாட்டு' பாடுவார்கள். பாட்டு வேகமெடுக்க வேகமெடுக்க படகின் வேகமும் அதிகரிக்கும். போட்டிகளில் வெற்றி பெறும் அணிகளுக்கு லட்சக்கணக்கில் பரிசுத் தொகையும் உண்டு.

படகுப் போட்டி
படகுப் போட்டி

படகுவலிப்பவர்களுக்கு கால்பந்து வீரர்களுக்குரிய உடல் தகுதி தேவை. படகு போட்டி சீஸன் தொடங்குவதற்கு, 15 நாள்களுக்கு முன்னதாக பயிற்சியை தொடங்குகிறார்கள். தினமும் இரு வேளை பயிற்சி அளிக்கப்படுகிறது. காலை 5 மணிக்கு எழுந்தவுடன் முளைவிட்ட பயிர்களைச் சாப்பிட்டுவிட்டு சிறிது நேரம் அனைவரும் உடற் பயிற்சியில் ஈடுபட வேண்டும். உடற்பயிற்சி முடித்தவுடன், படகு வலிக்கும் பயிற்சி தொடங்கும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

நேரு டிராஃபிக்கான போட்டி 1.4 கிலோ மீட்டர் தொலைவு கொண்டது. காலையில் 3 முறை 1.4 கிலோ மீட்டர் தொலைவை கடந்து பயிற்சி பெறுவார்கள். காலை பயிற்சி 9 மணிக்கு முடிவடையும். காலை உணவாக பாலப்பம், சுக்கு காபி வழங்கப்படும். பிறகு, வீரர்கள் ஓய்வு எடுப்பார்கள்.

மதியம் அரிசி சாதம், பொறித்த மீன்கள், அவித்த மீன்கள் உணவாக வழங்கப்படும். மாலை 3 மணிக்கு மீண்டும் பயிற்சி தொடங்கும். 6 மணிக்குள் மீண்டும் 1.4 கிலோமீட்டரை மூன்று முறை கடந்து பயிற்சியில் ஈடுபடுவார்கள். இரவு உணவாக அரிசி சாதத்துடன் கோழிக்குழம்பு வழங்கப்படும்.

படகுப் போட்டி
படகுப் போட்டி
Image by Seb Powen from Pixabay

பயிற்சியில் ஈடுபடும் அனைவருக்கும் சத்தான உணவு அவசியம் என்பதால், அசைவ உணவுகளையே வீரர்கள் அதிகம் உண்பர். தினமும் 100 முதல் 150 பேருக்கு இத்தகைய சத்தான உணவு வழங்க வேண்டும். உணவுக்கே லட்சக்கணக்கில் செலவாகும். இதனால், பொருளதார ரீதியாக தாக்குப்பிடிக்க முடியாமல், கேரளாவில் காலங்காலமாக இயங்கிய படகு கிளப்புகள் மறைந்து விட்டன.

கோட்டயத்தைச் சேர்ந்த நவஜீவன் படகு கிளப், நேரு டிராஃபி போட்டியில் 1997, 2003-ம் ஆண்டு கோப்பையை தட்டிச் சென்றது. நிதி நெருக்கடி காரணமாக இந்த அணியும் பல ஆண்டுகள் போட்டிகளில் பங்கேற்கவில்லை. 15 நாள்கள் பயிற்சி பெற நாள் ஒன்றுக்கு உணவுக்கு மட்டுமே ரூ.30,000 செலவாகிறது. இந்த ஆண்டு ஸ்பான்ஷர்ஷிப் கிடைத்திருப்பதால் நவஜீவன் படகு கிளப் மீண்டும் களம் காண்கிறது.

Vikatan

பாம்பு படகுப் போட்டியில் 'ஓர்ஸ்மேன்' என்று அழைக்கப்படும் படகு வலிப்பவர்கள்தான் இதயம் போன்றவர்கள். டைமிங்கும் ரொம்ப முக்கியம். படகு வலிக்கும் அத்தனை பேரும் ஒரே சமயத்தில் துடுப்பு போட வேண்டும். ஒரிருவர் டைமிங் மிஸ் செய்தாலும் வெற்றி பெறுவது கடினம். நிமிடத்துக்கு 80 முறை துடுப்பு போடும் திறமை வேண்டும். ராணுவம், கடற்படை, போலீஸ் போன்றவற்றில் இருந்து படகு வலிப்பவர்களை அழைத்து வந்து, உள்ளுர் மக்களையும் சேர்த்து அணியை தயார் செய்வர். கெஸ்ட்டாக வருபவர்களுக்கு தங்கும் வசதி, உணவு அளித்து நாளொன்றுக்கு ரூ.1,000 பேட்டாவாக கொடுக்கிறார்கள். இதரச் செலவுகள் தனி.

பொருளாதார ரீதியாக எவ்வளவு தடைகள் வந்தாலும் , பாம்புப்படகுப் போட்டிகள் மீதான காதல் கேரளக்காரர்களுக்குக் குறைந்து விடவில்லை. தற்போது, பாம்புப் படகுப் போட்டி ஐ.பி.எல் போல மாற்றப்பட்டுள்ளது. கொல்லம் பிரெசிடென்ட் படகுப் போட்டி, நேரு டிராபி படகுப் போட்டி போன்றவைகள் ஒருங்கிணைக்கப்பட்டு சாம்பியன்ஸ் போட் லீக் (சி.பி.எல்) தொடர் தொடங்கப்பட்டுள்ளது. சி.பி.எல் தொடரின் மொத்த பரிசுத் தொகை 5.9 கோடி ரூபாய்.

கேரளாவில் மழை
கேரளாவில் மழை

ஆகஸ்ட் 10-ம் தேதி தொடங்கவிருந்த நேரு டிராஃபி படகு போட்டியில் பேக்வாட்டர்ஸ் நைட்ஸ், பேக் வாட்டர் வாரியர்ஸ், தண்டர் ஓர்ஸ் என 9 சி.பி.எல் அணிகள் உள்பட, 23 படகுகள் பங்கேற்கவிருந்தன. ஆலப்புழை புன்னமடா ஏரியில் நடக்கவிருந்த தொடக்க விழாவில் சச்சின் பங்கேற்பதாக இருந்தது. தற்போது, கேரளாவில் மழை வெளுத்து வாங்குவதால் நேரு டிராஃபி மற்றும் சி.பி.எல் போட்டிகளை ஒத்தி வைத்துள்ளதாக கேரள அரசு அறிவித்துள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு