Published:Updated:

`கிரிக்கெட் மேட்ச்சா... ஹனிமூன் கேன்சல்!' - சர்வேயில் வெளியான இந்திய ரசிகர்களின் வெறித்தனம்

பிடித்தமான அணியினரின் முக்கிய ஆட்டம் நடக்கும் நாளில், தங்கள் ஹனிமூன் பயணத்தைக்கூட ரத்துசெய்துவிட்டு, ஸ்டேடியத்தில் இருப்பார்கள் ரசிகர்கள் என ஓர் ஆய்வு முடிவு தெரிவித்துள்ளது.

கிரிக்கெட் மைதானத்தில் ரசிகர்கள்
கிரிக்கெட் மைதானத்தில் ரசிகர்கள்

கடந்த புதன்கிழமையன்று, புக்கிங் டாட்காம் இணையதளம் நடத்திய ஆய்வில்... 42 சதவிகித இந்திய ரசிகர்கள், தங்களது ஆபீஸ் வேலையைத் தவிர்த்துவிட்டும் தங்களின் ஹனிமூன் திட்டத்தைக்கூட கேன்சல் செய்துவிட்டும் மேட்ச்சைக் காண்பதற்கு ஆர்வம் காட்டுகின்றனர் என்ற விவரம் தெரியவந்துள்ளது. இந்த ஆய்வு, இந்திய ரசிகர்கள் எந்த அளவுக்கு ஸ்போர்ட்ஸில் வெறித்தனமான காதல் கொண்டிருக்கிறார்கள் என்பதையே காட்டுகிறது.

கிரிக்கெட்
கிரிக்கெட்

நேரில் சென்று ஆட்டத்தைப் பார்த்தால், தங்களுக்குப் பிடித்தமான அணிக்கோ, வீரருக்கோ நிச்சயம் வெற்றி உண்டு என 88 சதவிகித கிரிக்கெட் ரசிகர்கள் நம்புகின்றனர். 79 சதவிகித கால்பந்தாட்ட ரசிகர்களும் இந்த நம்பிக்கையைக் கொண்டுள்ளனர்.

டைம்ஸ் ஆஃப் இந்தியாவுக்கு அளித்த பேட்டியில், "ரசிகர்களின் வசதிக்கேற்ற வகையில் பயணம், தங்குமிடம் எல்லாவற்றையும் சிறந்த முறையில் ஏற்பாடுசெய்து தருகிறோம். மேலும், அடுத்த ஆண்டு, மேட்ச்சுகள் ஆண்டாக இருக்கப்போகிறது" என ஹைப் ஏற்றுகிறார், புக்கிங் டாட்காம் இணையதள மேலாளர் ரிட்டு மெஹரோட்ரா.

கிரிக்கெட்
கிரிக்கெட்

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இறுதிப் போட்டிகளைப் பார்ப்பதற்குத் தடையாக இருந்தால், வேலையைக்கூட தியாகம் செய்யத் தயாராய் இருப்பதாக, இந்திய ரசிகர்களில் 41 சதவிகிதம் பேர் தெரிவித்துள்ளனர். உலக அளவில் 19 சதவிகித ரசிகர்கள் தங்களது ஹனிமூன் பயணத்தைக்கூட ரத்து செய்துவிட்டு கிரிக்கெட் மேட்சைக் காண ஆவலாய் இருப்பதாகத் தெரிவித்துள்ளனர். இவர்களில் 42 சதவிகிதம் பேர் இந்தியர்கள்!

டி.வி, மொபைல்களில் பார்ப்பதைவிட நேரில் சென்று பார்ப்பதையே ரசிகர்கள் பலரும் விரும்புகின்றனர். 18 வயதிலிருந்து 29 வயதுக்குள் இருக்கின்ற 22,603 இளம் ரசிகர்களிடையே இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. அதேபோல, கிரிக்கெட்டைக் காண 86 சதவிகிதம் பேரும், கால்பந்தைக் காண 51 சதவிகிதம் பேரும், டென்னிஸ் விளையாட்டுக்கு 31 சதவிகிதமும், ஹாக்கி 23 சதவிகிதமும் மோட்டார் ஸ்போர்ட்ஸை 18 சதவிகிதமும் நேரில் சென்று பார்க்கின்றனர்.

கிரிக்கெட்
கிரிக்கெட்

ரசிகர்களில் 37 சதவிகிதம் பேர், தங்கள் குடும்பத்துடன் நேரம் செலவிடுவதைவிட விளையாட்டைக் காண பயணிப்பதில்தான் அதிகம் விரும்புகின்றனர். 82 சதவிகிதம் பேர் விளையாட்டைக் காண்பதற்காக அதிகபட்சம் 5 முறை வரை பயணித்துள்ளனர். அதில், பத்தில் ஆறுபேர் எதிர்வரும் காலங்களில், தங்கள் அணியின் விளையாட்டை உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் சென்று காண்பதற்குத் தயாராக உள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.