லைஃப்ஸ்டைல்
தன்னம்பிக்கை
Published:Updated:

வாழ்க்கைக் கரையேற வங்கக் கடலில் ஒரு மனுஷி - நம்புசெல்வம்

 உழைக்கும் பெண்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
உழைக்கும் பெண்கள்

உழைக்கும் பெண்கள்

டலில் நீண்ட நேரம் பயணிப்ப தென்பது அத்தனை சுலப மானதல்ல. உப்புக்காற்றின் வாடை வயிற்றைப் புரட்டும். ஆனால், வயிற்றுப்பிழைப்புக் காக ஆபத்து நிறைந்த கடலில் பல்லாண்டு களாக மீன் பிடிக்கச்செல்கிறார் 45 வயதாகும் நம்புசெல்வம்.

பாம்பன் சின்னப்பாலம் கிராமத்தில் வாழும் நம்புசெல்வத்தின் கணவர் தர்மராஜ், கரையோர மீன்பிடிப்பைத் தொழிலாகக் கொண்டவர். இவர்களுக்கு மூன்று மகள்கள் மற்றும் ஒரு மகன். சீசனுக்குத் தகுந்தபடி நண்டு வலை, மீன் வலை போன்றவற்றுடன் கடலுக்குச் செல்லும் தர்மராஜ், மனைவியையும் துணைக்கு அழைத்துச் செல்வார்.

மீன் சீசன் இல்லாத நாள்களில் கடல் பாசி சேகரிக்கும் தொழிலுக்கும் இருவரும் சேர்ந்தே சென்றுவந்துள்ளனர். இப்படி உழைப்பால் மட்டுமே நிறைந்திருந்த வாழ்க்கையை புரட்டிப் போட்டது ஒரு கோர சம்பவம்.

கடனும் தேவைகளும் கழுத்தை நெரிக்கத்தொடங்க, கடலுக்குள் இறங்க முடிவெடுத்தார் நம்புசெல்வம்.

கடலில் சேகரித்த பாசியை விற்பனை செய்வதற்காகச் சென்றபோது சாலை விபத்தில் சிக்கினார் தர்மராஜ். ராமநாதபுரம், மதுரை நகரங்களில் பல்வேறு மருத்துவமனைகளில் பல மாதங்கள் சிகிச்சையளித்தும் தர்மராஜைக் காப்பாற்ற முடியவில்லை. அவர் இறந்தபிறகு பொறுப்பு மொத்தமும் நம்புசெல்வத்தின் மீதே விழுந்தது. ஒருபக்கம் குடும்பச்சுமை, இன்னொருபக்கம் தர்மராஜின் மருத்துவச் செலவுக்காக வாங்கிய கடன்... இதோடு, மூத்த மகளின் திருமணத்துக்காக வாங்கிய கடன் எனத் தேவைகள் கழுத்தை நெரிக்கத்தொடங்க, கடலுக்குள் இறங்க முடிவெடுத்தார் நம்பு செல்வம்.

நம்புசெல்வம்
நம்புசெல்வம்

நம்புசெல்வத்தைச் சந்திக்க சின்னப்பாலம் கிராமத்துக்குச் சென்றோம். வேலையை முடித்துவிட்டு வந்துவிடுவதாகச் சொல்லிவிட்டு படகை இழுத்துக்கொண்டு கடலில் இறங்கினார் நம்புசெல்வம். குறிப்பிட்ட தொலைவு சென்றவுடன் படகில் உள்ள வலையை நீரில் பாய்ச்சிவிட்டு, நீரோட்டத்தால் அவை இழுத்துச் செல்லப்படாமல் இருக்க பெரிய கல் ஒன்றையும் இணைத்து கடலில் போட்டுவிட்டு, கரைக்குவந்து வலையைத் தட்டிக்கொண்டே பேச ஆரம்பித்தார்.

``சின்ன வயசுல வலை விடுவதற்காக எங்க அப்பாவோட கடலுக்குப் போவேன். கல்யாணம் முடிஞ்ச பிறகு நானும் எங்க வீட்டுக்காரரும் சேர்ந்து கடலுக்குப் போனோம்.

முதல் நாள் வலையைக் கடல்ல பாய்ச்சிட்டு பக்கத்துல இருக்குற குருசடை தீவுல தங்கிடுவோம். மறுநாள் மீன் சிக்கிய வலைகளை எடுத்துக்கிட்டு வீட்டுக்கு வருவோம். நிறைமாச கர்ப்பிணியா இருந்தப்பவும் அப்படிப் போயிருந்தேன். திடீர்னு எனக்கு இடுப்பு வலி வந்துருச்சு. அவசர அவசரமா கரைக்கு வந்தப்பதான் ரெண்டாவது மக பிறந்தா. வாரத்துல நாலு நாள்கள் மீன்பிடிக்கப் போவோம். மீன் இல்லாத நேரத்துல பாசி எடுக்கப் போவோம். அப்படி எடுத்துவந்த பாசியை கம்பெனியில கொடுக்க போன என் வீட்டுக்காரர் விபத்துல சிக்கிட்டாரு. எவ்வளவோ முயன்றும் அவர காப்பாத்த முடியலை.

நம்புசெல்வம்
நம்புசெல்வம்

மூணு குழந்தைகளையும் என்ன நம்பி விட்டுட்டுப் போயிட்டாரு. அவரோட சேர்ந்து மீன்பிடிக்க போனப்ப பழகிட்ட தொழில்தான் இப்ப எங்களைக் காப்பாத்தி, கரை சேக்குது.

இடிஞ்சுபோற நிலைமையில இருக்கிற வீட்டுலதான் நானும் என் புள்ளைகளும் குடியிருக்கோம். வீட்டுப் பத்திரத்தை அடமானம் வெச்சு கடன் வாங்கி ரெண்டாவது மக கல்யாணத்தை நடத்திட்டேன். அந்தக் கடனை அடைக்கணும். ஒன்பதாவது படிக்கும் ஒரு மக... அவளுக்கும் ஏதாவது ஏற்பாடு செய்யணும். அதுக்காகத்தான் கடலுக்குப் போயிட்டு இருக்கேன். ஒரு நாளைக்கு நண்டு வலை விட்டுட்டு வந்தா 150 ரூபாயில இருந்து 400 ரூபாய் வரை கிடைக்கும். வாரத்துல நாலு நாளுதான் போக முடியும். இதுல கிடைக்கிற வருமானத்தைக் கொண்டுதான் வாழ்க்கையை நகர்த்திட்டு வர்றோம்’’ என்றவர், ``நாளைக்குக் காலையில வந்தீங்கன்னா எவ்வளவு நண்டு கிடைச்சிருக்குன்னு பார்க்கலாம்’’ என்று தகவல் தந்தார்.

மறுநாள் மீண்டும் சின்னப்பாலம் கடற் கரைக்குச் சென்றோம். காலையில் கடல் வற்றியிருந்ததால் நம்மையும் கடலுக்குள் நடக்கவைத்து அழைத்துச் சென்றார். இரண்டு கி.மீ தூரம் சென்றபின் முதல் நாளில் பாய்ச்சியிருந்த வலையை எடுத்தபோது அந்த வலையில் நண்டுகளும், சில கெளுத்தி மீன்களும் சிக்கியிருந்தன.

நம்புசெல்வம்
நம்புசெல்வம்

தாடை பகுதியில் முட்கள் நிறைந்த அந்த மீன் உயிருடன் இருந்தது. வலையிலிருந்து எடுக்கும்போது அவை மீண்டும் கடல் நீரில் பாய்ந்து செல்ல முயன்றது. அதைத் தடுக்க முயன்றபோது நம்புசெல்வத்தின் விரலில் கெளுத்தி மீன் முள் பாய்ந்தது. விரலிலிருந்து கொட்டிய ரத்தத்தைக் கடல் நீரில் கழுவியபடி தனது சேலையின் நுனியைக் கிழித்துக் கட்டினார். ஆனாலும், ரத்தம் வழிந்துகொண்டே இருந்தது. கரையில் தீ மூட்டி அதில் மீன் முள் குத்திய இடத்தைக் காட்டியபடி தனது வேதனையைப் போக்கி கொண்டே பேசினார்...

``இதெல்லாம் ஒண்ணுமில்லப்பா, அடிக்கடி ஆகறதுதான். இந்த மீனோட முள் குத்தினா மூணு நாளைக்கு வலி விடாது. வேற வேலையும் பாக்க முடியாது. அதனாலதான் இந்த மீனை நாங்க பிடிக்க மாட்டோம். இன்னிக்கு வேற வழியில்லை. நண்டும் கிடைக்கல. அதனால இந்த மீனை எடுத்தேன். இப்படி ஆயிடுச்சு. பரவால்ல சரியாகிடும்’’ என்கிறார் நம்புசெல்வம், இயல்பான நம்பிக்கையோடு.

ஆமாம்... நம்பிக்கைதானே உழைக்கும் மக்களின் வாழ்க்கையை நகர்த்துகிறது!