
ஹம்சத்வனி
சாகித்ய அகாடமி விருது வென்ற முதல் தமிழ்ப் பெண் எழுத்தாளர்; களப்பணி மூலம் புனைவுக் கதைகள் எழுதிய முன்னோடி
“1977-ம் ஆண்டு எட்டயபுரத்தில் நடந்த பாரதி விழாவில் நான் முதன்முறையாக ராஜம் கிருஷ்ணனைச் சந்தித்தேன். அவர் எழுத்தாளர் பொன்னீலனிடம் ஆட்டோகிராப் வாங்கிக்கொண்டு நின்றிருந்ததைப் பார்க்கையில் ஆச்சர்யமாக இருந்தது. சங்க இலக்கியங்களுக்குப் பின் நெய்தல் நிலத்தின் கதைகள் அவ்வளவாக உயிரோட்டத்துடன் சொல்லப்படவில்லை என்கிற என் வருத்தத்தை அவரிடம் சொன்னேன். கடற்கரை மனிதர்கள் பற்றிய புனைவு எழுத விரும்புவதாகவும் களப்பணிக்கு மீனவர் கிராமம் ஒன்றுக்கு அழைத்துச் செல்ல முடியுமா என்றும் அவர் என்னிடம் கேட்டார். அடுத்த நாளே அவரையும் அவர் கணவரையும் இடிந்தகரை கிராமத்துக்கு அழைத்துச்சென்றேன். நாங்கள் அறிமுகம் செய்துவைத்த வீட்டுக்குள் சரசரவென சென்றவர் அங்கிருந்த பெண்களிடம் சகஜமாக உரையாடத் தொடங்கிவிட்டார். ஒன்றரை மணிநேரம் அங்கிருந்து வெளியே வரவில்லை. அதுதான் ராஜம் கிருஷ்ணன். களப்பணி என்று வந்துவிட்டால், மக்களுள் ஒருவராகவே மாறிவிடுவார்” என்று அறிமுகச் செய்தி தருகிறார் எழுத்தாளரும் மானுடவியல் ஆய்வாளருமான பேராசிரியர் ஆ.சிவசுப்பிரமணியன்.

எங்கோ நான்கு சுவர்களுக்குள் நாற்காலியில் அமர்ந்து எழுதுவது மட்டுமே இலக்கியமல்ல என்பதை அழுத்தமாகப் பதிவு செய்தவர் எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன். 1925-ம் ஆண்டு முசிறியில் பிறந்தார். பள்ளிக் கல்வியை முடிக்கும் முன்பே 15 வயதில் ராஜத்துக்கு, அந்தக் காலத்தைய வழக்கப்படி திருமணம். கணவர் முத்துகிருஷ்ணன் மின்துறைப் பொறியாளர் என்பதால், தொடர்ச்சியாகத் தமிழகம் முழுவதும் வெவ்வேறு இடங்களில் பணியாற்றும் சூழல் அமைய, மனைவி ராஜமும் மகிழ்வுடன் பயணமானார். புதிய ஊர்களில் மனைவியின் தனிமையை விரட்டும் வகையில் எழுத ஊக்குவித்தார் முத்துகிருஷ்ணன். சார்லஸ் டிக்கென்ஸ், ஜேன் ஆஸ்டென் என ஆங்கில எழுத்தாளர்களின் படைப்புகளை வாசித்து உள்வாங்க தொடங்கினார். திருமணம் முடிந்து நான்கு ஆண்டுகள் கழித்து, 1944-ம் ஆண்டு ராஜம் கிருஷ்ணனின் முதல் ஆங்கிலச் சிறுகதை இந்திய சிவிக் கார்ப்ஸ் நூலில் பதிப்பிக்கப்பட்டது. அப்போது அவருக்கு வயது 20.
முறையான பள்ளிக்கல்வியற்ற, கல்லூரியில் காலடித்தடம்கூடப் பதிக்காத ராஜம், இன்று உலகமே போற்றும் எழுத்தாளராக வளர அவரது விடாமுயற்சியும் தன்னம்பிக்கையும் கடின உழைப்பும்தான் காரணம்.
200 சிறுகதைகள், மூன்று வாழ்க்கை வரலாற்று நூல்கள், 20 வானொலி நாடகங்கள், 20-க்கும் மேற்பட்ட புதினங்கள் எழுதி தமிழ் மொழியின் போற்றத் தக்க பெண் எழுத்தாளர்களில் ஒருவராகத் திகழ்பவர் ராஜம்.
1946-ம் ஆண்டு முதல் ராஜம் கிருஷ்ணனின் தமிழ் சிறுகதைகள் பல்வேறு இதழ்களில் வெளியாகத் தொடங்கின. அவரது கதைமாந்தர்கள் அன்றாடம் நாம் காண்பவர்களாக, கடந்து செல்பவர்களாகவே இருந்தார்கள். பெரும்பாலும் பெண்களை மையப்படுத்தி, அவர்களது போராட்டங்களைச் சொல்பவை யாக இருப்பவை ராஜத்தின் படைப்புகள்.
1950-ம் ஆண்டு, நியூயார்க் ஹெரால்டு டிரிப்யூன் நடத்திய சர்வதேச சிறுகதைப் போட்டியில் பரிசு வென்றது ராஜம் கிருஷ்ணனின் சிறுகதை. கூட்டுக் குடும்பம் ஒன்றில் வாழச்செல்லும் பெண்மணி ஒருவரது வாழ்க்கைப் போராட்டத்தைச் சொன்ன `பெண் குரல்' ராஜம் கிருஷ்ணனின் முதல் புதினமாக 1953-ம் ஆண்டு வெளிவந்தது.
கணவரது பணியை முன்னிட்டு பயணித்த இடங்களையே கதைக்களமாகக்கொண்டு புனைவுகள் எழுதத் தொடங்கினார் ராஜம். குந்தா மின்சார நிலையத்தில் கணவர் பணியாற்றியபோது நீலகிரி மாவட்டப் பழங்குடிகளான படுகரை ஆராய்ந்து எழுதிய நாவல்தான் ‘குறிஞ்சித் தேன்’. அவரது பிரபல புதினமான ‘முள்ளும் மலர்ந்தது’, சம்பல் பள்ளத்தாக்கின் முடிசூடா மன்னனான ராபின் ஹுட் பாணி கொள்ளைக்காரன் டாகு மான்சிங்கின் கதையை வெளிச்சம் போட்டுக் காட்டியது. இந்த நாவலை எழுத காவல் துறையால்கூட நெருங்க முடியாத கொள்ளையன் மான்சிங்கை ராஜம் நேரில் சந்தித்து பேட்டி கண்டிருக்கிறார் என்பது ஆச்சர்யம்!

ராஜம் கிருஷ்ணனின் கதையில் வரும் மனிதர்கள் ரத்தமும் சதையுமாக வாழ்ந்தவர்கள்; அவர் நேரில் கண்டவர்கள்; தங்கள் வாழ்க்கையின் சிறு துளி ஒன்றை அவரோடு பகிர்ந்துகொண்டவர்கள். இது ராஜத்தின் எழுத்தில் நேர்மையை, உண்மையைக்கொணர்ந்தது.
பெண்களின் மேன்மைக்காக வெறும் எழுதுகோலை மட்டுமே கையில் கொண்டு போராடாமல், களத்திலும் பணியாற்றிவர் ராஜம் கிருஷ்ணன்.
நீலகிரி மாவட்ட படுகர் இன மக்களை நேரில் சந்தித்து, கள ஆய்வு செய்து அவர்களின் வாழ்க்கை முறையை மையமாக வைத்து ராஜம் கிருஷ்ணன் எழுதிய ‘குறிஞ்சித் தேன்’ புதினம், உவரி பகுதி மீனவர்களின் வாழ்க்கையை மையமாகவைத்து பின்னப்பட்ட ‘அலைவாய்க்கரையில்’, உப்பளத்தின் உழைக்கும் மனிதர்களின் உவர் வாழ்க்கைச் சுவையை வெளிச்சம் போட்டுக் காட்டிய ‘கரிப்பு மணிகள்’, சிவகாசியின் தீப்பெட்டி தொழிற்சாலைகளில் வெடிமருந்துக்கிடையே வளர்ந்த சின்னஞ்சிறு குழந்தைகளின் வலியை உணர்த்திய ‘கூட்டுக் குஞ்சுகள்’, உசிலம்பட்டி பகுதிகளில் பெண் பிஞ்சுகளை நஞ்சு தந்து கொன்ற அவலத்தைத் தோலுரித்துக் காட்டிய ‘மண்ணகத்துப் பூந்தளிர்கள்’, தஞ்சை, நாகை என காவிரி டெல்டா பகுதிகளின் சேற்றில் உழன்று சோற்றைப் பார்த்த எளிய வேளாண் குடிகளின் கதையைச் சொன்ன ‘சேற்றில் மனிதர்கள்’, பெண்ணுரிமை, நில உரிமைப் போராளியாக சைக்கிளில் நாகைப் பகுதிகளில் வலம்வந்து சமூகத்துக்காகவே உயிரையும் தந்த மணலூர் மணியம்மாளின் தியாகத்தை வெளிக்கொணர்ந்த ‘பாதையில் பதிந்த சுவடுகள்’ என அவரது எழுத்து ஒவ்வொன்றும் சமூக சிக்கல்களைப் பேசியது. மக்களின் குரலாக, மனிதத்தின் எதிரொலியாக இருந்தது.
`அலைவாய்க்கரையில்' புதினத்தின் முன்னுரையில், “நாவல் புனைகதைதான். ஆனால், மனித வாழ்க்கையின் பல்வேறு பிரச்னைகளிலும் நிலைகளிலும் ‘பிரத்யட்சங்கள்’ எனப்படும் உண்மை வடிவங் களைத் தரிசித்த பின்னர் அந்த அனுபவங்கள் எனது இதயவீணையில் மீட்டிவிட்ட ஸ்வரங்களைக்கொண்டு நான் இசைக்கப் புகும் புதிய வடிவையே நாவலென்று கருதுகிறேன். இவ்வாறு புதிய புதிய அனுபவங்களை நாடி புதிய புதிய களங்களுக்குச் செல்கிறேன்” என்று எழுதியிருக்கிறார் ராஜம்.
‘அலைவாய்க்கரையில்’ புதினத்தை 1978-ம் ஆண்டு இறுதிவாக்கில் அவர் தன் கணவருடன் சென்று இடிந்தகரை, உவரி பகுதிகளில் ஆய்வு செய்ததை விவரிக்கிறார் சிவசுப்பிரமணியன். “எந்தத் தயக்கமும் இன்றி மீன் வலைக்குவியல்மீது அமர்ந்தவாறு மீனவர்களிடம் உரையாடுவதையும், மீன்பிடி வள்ளங்களிலிருந்தும் கட்டுமரங்களி லிருந்தும் அள்ளிவரும் மீன்களைக் கையால் தூக்கிப்பிடித்து அவற்றின் பெயர் குறித்து விசாரிப்பதையும், கடற்கரைப் பெண்களுக்கிடையே நிகழும் வாய்ச்சண்டைகளை ஓரமாக நின்று அவதானிப்பதையும் கண்டு வியப்படைந்துள் ளேன்” என்று `காலச்சுவடு' இதழில் ராஜம் கிருஷ்ணனுக்கு எழுதிய அஞ்சலிக் கட்டுரையில் குறிப்பிடுகிறார் அவர்.
அவருடன் ‘கரிப்பு மணிகள்’ நாவல் எழுதியபோது களப்பணியாற்றிய பத்திரிகையாளர் சிகாமணி, “அவர் மனத்தில் என்ன ஓடிக்கொண்டிருக்கிறது, எந்த கதைமாந்தர் எப்படி தோன்றுவார் என்பது நமக்குத் தெரியாது. ஆனால், கதாபாத்திரம் நாவலில் உயிர்பெற்று வரும்போது அவ்வளவு ஆச்சர்யமாக இருக்கும். அந்தந்த பகுதியின் வட்டார வழக்கை, சட்டென பிடித்துக் கொள்ளக்கூடிய திறமை அவரிடம் உண்டு. அவரது நாவல்களில் கதாபாத்திரங்கள் பேசும் மொழி வெகு இயல்பாக அந்த வட்டார வழக்காகவே இருக்கும்” என்று கூறுகிறார்.
ராஜம் கிருஷ்ணனின் இறுதி நாள்கள் கசப்பானவை; வலி நிறைந்தவை...
1973-ம் ஆண்டு, அவரது ‘வேருக்கு நீர்’ படைப்புக்கு சாகித்ய அகாடமி விருது வழங்கி கௌரவித்தது. இதன் மூலம் சாகித்ய அகாடமி விருதுபெற்ற முதல் பெண் எழுத்தாளர் என்ற பெருமையைப் பெற்றார் ராஜம் கிருஷ்ணன். விடுதலைக்குப் பின்னான சூழலில் காந்திய சிந்தனைகளின் முக்கியத்துவம் பற்றிப் பேசியது இந்தப் படைப்பு. `உள்ளார்ந்த காந்தியவாத சிந்தனை கொண்டவர் ராஜம்' என்று சொல்கிறார் அவரைப் பின்னாளில் `அமுதசுரபி' இதழுக்குப் பேட்டி கண்ட சித்ரா பாலசுப்ரமணியம்.
பெண்களின் மேன்மைக்காக வெறும் எழுதுகோலை மட்டுமே கையில் கொண்டு போராடாமல், களத்திலும் பணியாற்றியவர் ராஜம் கிருஷ்ணன். “கிழக்கு தாம்பரத்தில் அவர் குடியிருந்த தெருவில் உள்ள குழந்தை களை ஊருக்குச் செல்லும் பெற்றோர் இவரிடமே விட்டுச் செல்வார்கள், இவரும் அந்தக் குழந்தைகளுக்கு உணவு சமைத்து பள்ளிக்குக் கட்டித்தந்து வழியனுப்புவார்” என்று சொல்கிறார் சிவசுப்பிரமணியன்.
1976 முதல் 1980-ம் ஆண்டு வரை தேசிய இந்தியப் பெண்கள் ஃபெடரேஷன் அமைப்பின் தலைவராகப் பணியாற்றினார்.
1979-ம் ஆண்டு, ரஷ்ய அரசின் அழைப்பை ஏற்று அங்கு சென்ற உயர்நிலைப் பெண்கள் குழுவில் இடம்பெற்றார் ராஜம். ரஷ்யப் பயணம் அங்குள்ள பெண்களின் நிலையையும் இந்தியப்பெண்களின் நிலையையும் ஒப்பிட்டுப் பார்க்க அவருக்கு நல்லதொரு வாய்ப்பாக அமைந்தது. தொடர்ந்து இலங்கை, பிராக் போன்ற இடங்களுக்கும் பயணமானார். கலைமகள் நாராயணசாமி ஐயர் விருது, ஆனந்த விகடன் நாவல் விருது, சோவியத் நாடு நேரு விருது, இலக்கியச் சிந்தனை விருது, பாரதிய பாஷா பரிஷத் விருது, 1987-ம் ஆண்டு தமிழ்நாடு அரசு வழங்கிய இலக்கிய விருது, 1991-ம் ஆண்டு தமிழக அரசின் திரு.வி.க விருது, ஷஸ்வதி நஞ்சங்குடு திருமலம்பா விருது என விருதுகள் வாங்கிக்குவித்தார் ராஜம். 1993-ம் ஆண்டு, தமிழ் சாகித்ய அகாடமியின் கௌரவ ஆலோசகராகவும் பதவி வகித்தார். ஜப்பானிய மொழியில் இவரது நூல் ஒன்று மொழியாக்கம் செய்யப்பட்டதை நினைவுகூர்கிறார் சிவசுப்பிரமணியன்.
பெண் விடுதலை குறித்து தொடர்ச்சியாக கட்டுரைகளும் எழுதிவந்தார் ராஜம்.
1981 முதல் 1984 வரை இந்தியப் பெண்கள் ஃபெடரேஷனின் துணைத் தலைவராகவும் பதவி வகித்தார் ராஜம். தன் ‘விலங்குகள்’ படைப்பில் இப்படி எழுதிச் செல்கிறார் ராஜம்... ‘பெண் மென்மையானவள்; உலகில் அவளது வீடு மட்டுமே அவளுக்குப் பாதுகாப்பானது - கண்ணுக்குத் தெரியாத இந்த விலங்குகளைக் கொண்டே அவள் சிறைவைக்கப்படுகிறாள்’.
கணவர் முத்துகிருஷ்ணன் பக்கவாத நோயால் தாக்கப்பட, நிலைகுலைந்து போனார் ராஜம். பேனாவுக்கு மை நிரப்பக்கூட கணவரை எதிர்நோக்கி இருந்தவர், 2002-ம் ஆண்டு, அவர் இறந்த பின் கசப்பான அனுபவங்களை எதிர்கொண்டார். கிழக்கு தாம்பரத்திலுள்ள அவரது வீட்டை உறவினர்கள் அபகரித்துக் கொள்ள, அவரது பொருள்கள், எழுதிக் கொண்டிருந்த படைப்புகள் அத்தனையும் தொலைத்துவிட்டு நிர்க்கதியாக நிற்கும் சூழல் உருவானது. அதன்பின் மயிலாப்பூர் இளைப்பாற்றி மாதா கோயில் தெரு, துரைப்பாக்கம், திருவான்மியூர் என வாடகை வீடுகளுக்கு மாறினார்.
“திருவான்மியூரில் எந்தப் பொருளும் இல்லாத ஒரு காலியான பழைய வீட்டில் அவரைப் பேட்டி கண்டபோது உடைந்து போனேன்” என்று சொல்கிறார் சித்ரா பாலசுப்ரமணியம். இதற்குமேல் உதவிக்கு ஆளின்றி அவரால் தனியே வாழ இயலாத நிலை வந்தபோது மூத்த கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் நல்லகண்ணுவின் வழிகாட்டலில் முன்னாள் காவல்துறை அதிகாரி திலகவதி, நீதியரசர் சந்துருவின் மனைவியான எழுத்தாளர் பேராசிரியர் பாரதி ஆகியோர் உதவியுடன் விஷ்ராந்தி இல்லத்தில் அனுமதிக்கப்பட்டார்.
உடல்நலம் மோசமானதால் அங்கிருந்து போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ராமச்சந்திரா மருத்துவ மனையில் வயதான ஆதரவற்ற பெண்மணி ஒருவரை அனுமதிக்க வேண்டும் என்ற வேண்டுகோளை உடன் பணியாற்றிய மருத்துவர் ஒருவர் வைத்தபோது, வரும் நபர் யார் என்றே தெரியாமல்தான் அனுமதித்தார் மருத்துவர் மல்லிகேசன்.
“அவர் ஓர் எழுத்தாளர் என்பதே எனக்குத் தெரியாது. அவரது நூல்களை அதன்பின்தான் வாசித்தேன். சிகிச்சை முடித்து அனுப்பினால், செல்வதற்கு வேறு இடம் அவருக்கு இல்லை என்பது தெரிந்ததும் மருத்துவக்கல்லூரி வேந்தரிடம் மருத்துவமனையிலேயே அவரை வைத்துக்கொள்ள அனுமதி கோரினேன். என் பணி அவ்வளவே. வேந்தரின் ஒப்புதல்தான் இறுதி மூச்சுவரை ராஜம் கிருஷ்ணனை ராமச்சந்திரா மருத்துவமனை ஒரு ரூபாய் கூட கட்டணம் இல்லாமல் பாதுகாக்க உதவியது” என்று சொல்கிறார் மல்லிகேசன்.
`ராஜம் கிருஷ்ணனின் இறுதி நாள்கள் கசப்பானவை; வலி நிறைந்தவை' என்று பதிவு செய்கிறார் அவரை இறுதி காலத்தில் கவனித்துக்கொண்ட பத்திரிகையாளர் சிகாமணி. “வெகு நாள்கள் அவரது தொடர்பு இல்லாமல்தான் இருந்தேன். ஆனால், வசிக்க வீடுகூட இன்றி சிரமப்படுகிறார் என்பது தெரிந்ததும் என்னால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. அவரைத் தேடிச் சென்றேன். தி.நகர் மருத்துவமனை, திருவான்மியூர் வீடு, ராமச்சந்திரா மருத்துவமனை என்று அவரை ஒவ்வோர் இடமாக வசதிக்குத் தக்க மாற்றினோம். இறுதிவரை அவரை எழுதச் சொல்லி உற்சாகப்படுத்தினேன். ஏதோ செலவுக்கு ஆகட்டுமே என்று நினைத்தாரோ என்னவோ அவரும் படுக்கையில் இருந்தே கட்டுரைகள் எழுதிவந்தார். அவரது நூல்களை நாட்டுடமையாக்குவதில் அவருக்கு விருப்பமே இல்லை. அதனால் பதிப்பகத்தார் மறுபதிப்பு செய்ய இயலாமல் சிரமப்படுவார்கள் என்று சொல்லி மறுத்தார். நாங்கள்தான் விடாப்பிடியாக இரா.ஜவஹர், சின்னக் குத்தூசி போன்றவர்கள் மூலம் அவரது நூல்களை நாட்டுடமையாக்க முயன்றோம். அதில் கிடைத்த மூன்று லட்ச ரூபாய் பணத்தை வங்கியில் சேமித்தோம். அவரது மருத்துவச் செலவுக்கு ராமச்சந்திரா மருத்துவமனை அந்தப் பணத்தை எடுத்துக்கொள்ள வேண்டும் என்பது அவரது ஆசையாக இருந்தது. இப்போதுவரை அதையேதான் நானும் வலியுறுத்துகிறேன்” என்று குறிப்பிடுகிறார் சிகாமணி.
“ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமையன்று ராஜம் அம்மாளைப் பார்க்க ஜெயக்குமார் - பகவதி தம்பதி மருத்துவமனைக்கு மயிலாப்பூரிலிருந்து வருவதுண்டு. ஜெயக்குமார், செம்மொழி ஆய்வு நிறுவனத்தில் பணியாற்றியவர்; பகவதி, ஆசிரியர். இருவரும் ராஜம் கிருஷ்ணனுக்குத் தேவையானவற்றை வாங்கிக்கொண்டு வந்து வாரம் தவறாமல் பார்த்துச் செல்வார்கள். இத்தனைக்கும் அவர்கள் ராஜம் அம்மாளுக்கு உறவினரோ, நண்பரோகூடக் கிடையாது. அவரது எழுத்தால் ஈர்க்கப்பட்டு அவரைத் தேடிவந்தவர்கள்” என்று நன்றியுடன் நினைவுகூர்கிறார் சிகாமணி.
ஆண் எழுத்தாளர்களுக்குக் கிடைக்கும் அங்கீகாரமும் பெருமையும் பெண் எழுத்தாளர்களுக்குக் கிடைப்பதில்லை என்ற உள்ளார்ந்த சினம் ராஜம் கிருஷ்ணனுக்கு உண்டு என்று பதிவு செய்கிறார் பத்திரிகையாளர் சிகாமணி. அதே போல கள இலக்கியம், இலக்கியமே அல்ல; அது வெறும் அறிக்கைதான் என்று அவரது நாவல்கள் மீது வைக்கப்பட்ட மோசமான விமர்சனங்களும் அவரது மனத்தை காயப்படுத்தின என்றும் சொல்கிறார் அவர். மக்களது எழுச்சியை, அவர்களது போராட்டத்தைப் பதிவு செய்து அதைக்கொண்டாடியவர் ராஜம் கிருஷ்ணன். 2014 அக்டோபர் 20 அன்று போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையிலேயே உயிர் நீத்தார் 90 வயதான ராஜம். அவரது விருப்பத்தின்படி அவரது உடல் அந்த மருத்துவமனைக்கே வழங்கப்பட்டது. தமிழின் தலையாய எழுத்தாளரின் இறுதி நாள்கள் அவருக்கு மட்டுமல்ல... நமக்கும் ஒரு பாடம் சொல்லித் தருகிறது. அது, ‘செல்லும் இடமெல்லாம் அன்பையே விதைத்துச் செல்லுங்கள். அது எப்படியும் உங்களைத் தேடி வரும்!’