தன்னம்பிக்கை
தொடர்கள்
லைஃப்ஸ்டைல்
ஹெல்த்
Published:Updated:

அஞ்சறைப்பெட்டியிலிருந்தே தொடங்குகிறது அரசியல்! - பி.சுகந்தி

பி.சுகந்தி
பிரீமியம் ஸ்டோரி
News
பி.சுகந்தி

அரசியல் பெண்கள் - ஆறு கேள்விகள்

பி.சுகந்தி மாநில பொதுச்செயலாளர், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம்

பெண்களின் உரிமைகளுக்காகக் குரல் கொடுத்துவருபவர். பாதிக்கப்படும் பெண்களுக்கு ஆதரவாகக் களத்தில் போராடி வெற்றிகளைப் பெற்றவர். கடந்த சட்டமன்றத் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளராக

சென்னை, திரு.வி.க நகர் தொகுதியில் போட்டியிட்டு, கணிசமான வாக்குகளைப் பெற்றவர். அவருடனான சந்திப்பிலிருந்து...

ஆணாதிக்க அரசியல் என்று இருக்கிறது. பெண்ணாதிக்க அரசியல் இருக்கிறதா?

நம் சமூகத்தில் அனைத்து நடை முறைகளும் ஆணாதிக்கத்தால் கட்டமைக்கப்பட்டவையே. `ஆண் உயர்ந்தவர், பெண் தாழ்ந்தவள்' என்கிற சிந்தனை ஆண்டாண்டு காலமாக ஊறிப்போயிருக்கிறது. அரசியல் உட்பட அனைத்தும் ஆணாதிக்கத்தை மையப் படுத்தியே இருக்கின்றன. இதே சமூகத்தில் இருக்கும் பெண்களும் இயல்பாகவே ஆணாதிக்க சிந்தனைகளுடன் வளர்க்கப்படுகிறார்கள். அதுதான் யதார்த்தம்.

சாதாரண பெண்கள் எந்த மாதிரியான அரசியலைப் பேசுகிறார்கள்?

சாதாரண பெண்கள் பேசுகிற அத்தனையுமே அரசியல்தான். ஆனால், அவர்கள் பேசுவது அரசியல் என்பது அவர்களுக்குத் தெரியாது. குடங்களுடன் வீதிக்கு வந்து தண்ணீருக்காகப் போராடுவது, ரேஷன் கடை களில் மண்ணெண்ணெய் அளவு குறைக்கப்படுவதற்கு எதிராக சண்டை போடுவது என எல்லாமே அரசியல்தான். சுருக்கமாகச் சொல்லப்போனால், வீட்டின் அடுப்படியிலுள்ள அஞ்சறைப் பெட்டியி லிருந்தே அரசியல் தொடங்கிவிடுகிறது.

அஞ்சறைப்பெட்டியிலிருந்தே தொடங்குகிறது அரசியல்! - பி.சுகந்தி

சாதி அரசியல் என்பது கிராமப்புறப் பெண்களிடம் எந்த மாதிரியாக உள்ளது, நகர்ப்புறப் பெண்களிடம் எந்த மாதிரியாக உள்ளது?

கிராமப்புறப் பெண்களில் பலரிடம் சாதிய உணர்வு அதிகமாக இருக்கிறது என்பது ஒரு கசப்பான உண்மை. சாதி வன்முறை நிகழும் பல இடங்களில் பெண்கள் நேரடியாக வந்து சாதிய ஒடுக்குமுறையை நிகழ்த்துபவர்களாக இருக்கிறார்கள். ஆண்டாண்டுக் காலமாக சாதிய உணர்வு உரமூட்டி வளர்க்கப்பட்டதுதான் காரணம். சமீபகாலமாக, சாதியக் கட்சிகளால் பெண்கள் திரட்டப்படும் போக்கு அதிகரித்துவருகிறது. சென்னை போன்ற பெருநகரங்களில், நாசூக்காக சாதி பார்க்கிறார்கள். பக்கத்து வீட்டுக்குக் குடி வந்திருப்பவர்கள் என்ன சாதி என்பதைத் தெரிந்துகொள்வதற்கு விதவிதமான முயற்சிகளைக் கையாள்கிறார்கள்.

கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியலை சாதாரண பெண்கள் எப்படிப் பார்க்கிறார்கள்?

கம்யூனிஸ்ட் கட்சி என்றால் மக்களுக்காகப் போராடக்கூடிய கட்சி, நியாயத்துக்காகப் போராடுகிற கட்சி என்கிற எண்ணம் பொதுவான பெண்களிடம் உள்ளது. இது, ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும் பெண்களுக் காகவும் போராடுகிற கட்சி என்பதற்கு ஏராளமான உதாரணங்கள் உள்ளன. காஷ்மீர் மாநிலம் கத்துவாவில் ஒரு சிறுமி கோயிலில் வைத்து பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, கொலைசெய்யப்பட்ட சம்பவத்தை வெளியுலகுக்குக் கொண்டுவந்ததே, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.எல்.ஏ-வான யூசுப் தாரிகாமிதான்.

மதவாத அரசியலை பெண்கள் எப்படிப் பார்க்கிறார்கள்?

மாதர் சங்கம் சார்பில் சமீபத்தில் தமிழகம் முழுவதும் ஓர் ஆய்வு நடத்தினோம். அதில், பெண்கள் நடத்தும் கடவுள் வழிபாட்டு நிகழ்ச்சிகளுக்கு மத ரீதியான அமைப்புகள் எப்படியெல்லாம் உதவிசெய்கிறார்கள், அதன் மூலம் பெண்களை எப்படி மத ரீதியாக வசப்படுத்துகிறார்கள் போன்ற விவரங்களைத் திரட்டியுள்ளோம். இது, மிகவும் கவலைக்குரிய போக்கு.

ஜனநாயக மாதர் சங்கம் முன்னெடுக்கும் அரசியல் என்ன?

நம் அரசியல் சட்டம் அனைவருக்கும் வழங்கியுள்ள ஜனநாயகமும் சமத்துவமும் நிலைநாட்டப்பட வேண்டும் என்பதை நாங்கள் வலியுறுத்திவருகிறோம். அதற்காகப் போராடுகிறோம். நம் அரசியல் சட்டம் சொல்கிற கண்ணியமான வாழ்க்கையைக் குழந்தைகளால்கூட வாழ முடியவில்லை. இளம்பெண்கள் பாதுகாப்பற்ற சூழலில் இருக்கிறார்கள். இதற்காக நாங்கள் போராடுகிறோம். உணவு, வேலை போன்ற வாழ்வாதாரத்துக்கான போராட்டங்களையும் முன்னெடுக்கிறோம்.