லைஃப்ஸ்டைல்
ஹெல்த்
Published:Updated:

புத்துயிர்ப்பு: சுல்தானாவின் கனவு!

சுல்தானா
பிரீமியம் ஸ்டோரி
News
சுல்தானா

ரோக்கியா ஷஹாவத் ஹுசைன்

ஒரு நாள் எல்லா வேலைகளையும் முடித்துக்கொண்டு படுக்கையறையில் இருந்த சாய்வு நாற்காலியில் அமர்ந்தேன்.

அதன்பின் கண்களை மூடினேனா, இல்லையா என்று நினைவில்லை. உறங்கினேனா, விழித்துக்கொண்டிருந்தேனா என்றும் சொல்ல முடியவில்லை. வானில் ஆயிரம் நட்சத்திரங்கள் மினுமினுத்துக் கொண்டிருந்ததைப் பார்த்தேன்.

திடீரென்று ஓர் இளம்பெண் என் முன்னே தோன்றினாள். ‘காலை வணக்கம்’ என்றாள். `இரவு நெருங்கும் நேரத்தில் யாராவது காலை வணக்கம் சொல்வார்களா' என்று உள்ளுக்குள் சிரிப்பு வந்தாலும், ‘எப்படி இருக்கிறாய் சகோதரி சாரா?’ என்று கேட்டேன். ‘நன்றாக இருக்கிறேன்... சிறிது நேரம் உலாவுவோம், வருகிறாயா?’

'ஓ...' என்று நாற்காலியிலிருந்து எழுந்திருக்கும் போதுதான் யோசித்தேன். இந்தப் பெண் என் அறைக்குள் எப்படி வந்தாள்? என் நெருக்கமான தோழியின் பெயரான சாராவின் பெயரால் ஏன் இவளை அழைக்கிறேன்? இவள் சாரா அல்ல என்றாலும், ஏன் அதை மறுக்கவில்லை? தவிரவும், இரவு நேரத்தில் யார் உலாவப் போவார்கள்?

ஆச்சர்யம், சாரா சொன்னதுபோல நன்றாகவே விடிந்திருந்தது. வீதிகளில் ஒரே பரபரப்பு. எல்லோரும் நடந்துகொண்டும் பேசிக்கொண்டும் எதையாவது கடைகளில் வாங்கிக்கொண்டும் இருந்தனர். சாராவைப் பலருக்கும் தெரிந்திருந்தது. ஆனால், என்னை ஒருவருக்கும் தெரியவில்லை. எனக்கும் ஒருவரையும் தெரியவில்லை. என்னைச் சுட்டிக்காட்டி சில பெண்கள் ஏதோ பேசிக் கொண்டது போலவும் சிரித்துக்கொண்டது போலவும் இருந்தது. சாராவிடம் விசாரித்தேன்.

‘ஓ அதுவா... நீ ஓர் ஆண் போல நடந்து கொள்கிறாயாம்...’

இந்த நாடே ஓர் அழகிய பூங்காவாகத் திகழ வேண்டும் என்று அவர் விரும்புகிறார். எங்கள் ஒவ்வொருவரின் விருப்பமும் அதுதான். அதை நிறைவேற்ற அன்பும் உண்மையும் போதும்தானே?

`ஆண் போலவா?’

‘ஆமாம், அமைதியாக, நாணத்தோடு நடக்கிறாய் அல்லவா?’

‘இது புதிய இடம் போல இருக்கிறது. மேலும், நீ அழைத்தவுடன் பர்தா அணியாமல் அப்படியே வந்துவிட்டேன். அதுதான் ஒரு மாதிரியாக இருக்கிறது...’

சாரா என் விரல்களைப் பற்றிக்கொண்டாள். ‘கவலைப்படாதே. இது ‘லேடிலாண்டு.’ இங்கே பொதுவெளியில் ஆண்களைப் பார்க்க முடியாது. பர்தா, தயக்கம், அச்சம் எல்லாவற்றையும் உதறித் தள்ளிவிட்டு மகிழ்ச்சி யாக என்னோடு வா.’

சுல்தானா
சுல்தானா

‘அப்படியானால் ஆண்கள் எங்கே?’

‘அவர்கள் எங்கே இருக்கவேண்டுமோ... அங்கே இருக்கிறார்கள்.’

‘புரியவில்லையே...’

‘உன் உலகில் எப்படி பெண்களுக்கான ஜெனானா இருக்கிறதோ, அப்படி லேடிலாண்டில் ஆண்களுக்கு ஜெனானா இருக்கிறது. அவர்கள் அங்கேதான் இருப்பார்கள். பெண்கள் மகிழ்ச்சியாக அச்சமின்றி எங்கும் செல்லலாம்.’

லேடிலாண்டு உண்மையிலேயே ஆச்சர்யமூட்டுவதாக இருந்தது. சாரா ஓர் ஆய்வுக்கூடத்தில் பணியாற்றுகிறாள். வேலை நேரம் என்பது இரண்டு மணி நேரம் மட்டுமாம். ‘எட்டு மணி நேரம் வேலை என்று சொல்லிக்கொண்டு ஆறு மணி நேரம் வெட்டியாகப் பொழுதைப் போக்க நான் ஒன்றும் ஆண் இல்லை!' என்கிறாள் சாரா.

பூங்கா போலிருந்த வீதியைக் கடந்து சென்றோம். `இதுதான் என் வீடு, வா சமையலறையைக் காட்டுகிறேன்' என்றதும் ஆவலோடு உள்ளே போனேன். அது ஒரு தோட்டம். திரும்பும் பக்கமெல்லாம் காய்கறிகள் விளைந்திருந்தன. நெருப்பு, அடுப்பு எதுவும் இல்லை. ‘அதெல்லாம் தேவையில்லை. சமைப்பதற்குத் தேவையான வெப்பத்தை நாங்கள் நேரடியாகச் சூரியனிட மிருந்து எடுத்துக்கொள்வோம்’ என்றபடி அதற்கான சாதனங்களைக் காட்டினாள். முழு லேடிலாண்டுக்குமான கதிர்களை சேகரித்துவிட்டார்களாம். அதிலிருந்து ஒவ்வொரு வீட்டுக்கும் குழாய் வழியாக அனுப்புகிறார்களாம்.

‘வெப்பத்தைப் போலவே மழையையும் நாங்கள் போதுமான அளவுக்குச் சேகரித்து வைத்திருக்கிறோம். ஒவ்வொருவர் வீட்டுக்கும் மழைநீர் அனுப்பிவைக்கப்படும்.’

‘ஆச்சர்யமாக இருக்கிறது. யார் இதையெல்லாம் திட்டமிடுவது?’

‘எங்கள் ராணிதான். மக்களின் எல்லா அடிப்படைத் தேவைகளையும் அறிவியலைக் கொண்டு தீர்ப்பதுதான் அவர் அணுகுமுறை. வீடு, வேளாண்மை, நிர்வாகம், சட்டம் அனைத்துக்கும் அறிவியல்தான் எங்களுக்கு அடிப்படை. எங்களிடம் காவல்துறை இல்லை, நீதிமன்றம் இல்லை, சிறைச்சாலை இல்லை. யார் குற்றச்செயல் புரிந்தாலும் ஒரே தண்டனைதான். லேடிலாண்டிலிருந்து வெளியேற்றிவிடுவோம். ஒருவேளை அவர் திருந்தி மன்னிப்பு கேட்டால் மீண்டும் ஏற்றுக்கொள்வோம்.’

‘நீ எந்த மதத்தைப் பின்பற்றுகிறாய் சாரா?’

‘ஒவ்வொரு மனிதர் மீதும் அன்பு செலுத்து வோம். ஒவ்வொருவருக்கும் உண்மையாக நடந்துகொள்வோம். இதுதான் எங்கள் மதம். அறிவியலில் எங்கள் ராணிக்குப் பிடித்த ஒரு துறை, தாவரவியல். இந்த நாடே ஓர் அழகிய பூங்காவாகத் திகழ வேண்டும் என்று அவர் விரும்புகிறார். எங்கள் ஒவ்வொருவரின் விருப்பமும் அதுதான். அதை நிறைவேற்ற அன்பும் உண்மையும் போதும்தானே?’

`நீ உண்மையிலேயே ஓர் அதிசய உலகில்தான் வாழ்கிறாய் சாரா. சரி, ராணியையும் உங்கள் உலகின் அதிசய விதிகளையும் இங்குள்ள ஆண்கள் ஏற்றுக்கொண்டுவிட்டார்களா?’

` ‘எங்களுக்குத்தான் நாட்டை ஆளத் தெரியும். எங்களுக்குத்தான் சட்டம் தெரியும். எங்களிடம்தான் வீரம் இருக்கிறது' என்றெல்லாம் ஆரம்பத்தில் ஆண்கள் நம்பிக்கொண்டிருந்தது நிஜம். லேடிலாண்டு பரிசோதனை தோல்வியடையும் என்றுதான் அவர்களும் எதிர்பார்த்தனர். ஆனால், நாங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து அவர்கள் எதிர்பார்ப்பை உடைத்து நொறுக்கி ஒரு கனவு தேசத்தைக் கட்டியமைத்தோம். எல்லாப் பெண்களுக்கும் படிப்பு சொல்லிக் கொடுத்தோம். 21 வயதுக்கு முன்பு திருமணம் கூடாது என்று அறிவுறுத்தினோம். `இது உன் தேசம்; உன்னால் மட்டுமே இதை நீடித்திருக்கச் செய்ய முடியும்' என்று நம்பிக்கை யூட்டினோம். அவர்கள் அனைவரும் லேடிலாண்டின் பாதுகாவலர்களாக, நிர்வாகி களாக, ஆலோசகர்களாக, அறிஞர்களாக, அறிவியலாளர்களாக மாறினர். மிரண்டுபோன ஆண்கள் எங்களை ஏற்றுக்கொண்டுவிட்டனர். இப்படியொரு தேசத்தைத் தங்களால் உருவாக்க முடியாது என்னும் பேருண்மை அவர்களை அடக்கி வீழ்த்தியது!’

திகைப்பிலும் உற்சாகத்திலும் மூழ்கிக்கிடந்த என்னை உலுக்கி, `வா, உன்னை ராணியிடம் அழைத்துப் போகிறேன்' என்றாள் சாரா. ஒரு பலகையை எடுத்து கீழே இரண்டு பந்துகளைப் பொருத்தி (புவியீர்ப்பு விசையை முறியடிக்கும் வலுகொண்ட ஹைட்ரஜன் பந்துகளாம்), சில இறக்கைகளை மேலே ஒட்டியவுடன் ஆகாய கார் தயாரானது. ஏறி அமர்ந்ததுதான் தெரிந்தது. அது எப்போது கிளம்பியது, எப்படிப் பறந்தது, தரைக்கு எப்படி வந்தது என்றே தெரியவில்லை!

ராணி சாராவை நோக்கி கையசைத்தார். நான்கு வயதுக் குழந்தை அவர் கையைப் பிடித்தபடி நின்றுகொண்டிருந்தது. என்னை அறிமுகப்படுத்திக்கொண்டபோது ராணி புன்னகைத்தார். ‘நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவராக இருந்தாலும் சரி. நாங்கள் எல்லோரோடும் நட்போடு இருக்கவே விரும்புகிறோம். பெண்களை ஜெனானாவில் அடைத்து வைப்பவர்கள் மட்டும் விதிவிலக்கு. எந்த நாட்டையும் நாங்கள் ஆக்கிரமிக்க விரும்பவில்லை. வைரமும் வைடூரியமும் எங்களுக்குத் தேவையில்லை. இயன்றவரை ஆண்களைத் தவிர்த்துவிடுகிறோம். இயற்கையே எங்கள் செல்வம். அது எங்களை வாழவைக்கும்...’

நெகிழ்ச்சியோடு ராணியிட மிருந்து விடைபெற்றுக்கொண்டேன். சாரா பல்கலைக்கழகங்களுக்கும் ஆய்வுக்கூடங்களுக்கும் ஆலைகளுக்கும் அழைத்துச் சென்றாள். ஆகாய காரில் நானும் சாராவும் கைகோத்தபடி ஏறிக்கொண்டோம். பறந்துகொண்டே இருந்தேன். கண்களை மூடிக்கொண்டேன். ஆடுவது போலிருந்தது. கண்ணைத் திறந்து பார்த்தால் பழையபடி என் அறையில் சாய்வு நாற்காலியில் சரிந்து கிடக்கிறேன்.

‘சுல்தானாவின் கனவு’... 1905-ம் ஆண்டு, `தி இண்டியன் லேடீஸ்' மேகஸினில் வெளிவந்தது. பெண்களை ஆசிரியர்களாகக்கொண்டு பெண்களுக்காகத் தொடங்கப்பட்ட முதல் இந்திய இதழ் இது. எழுதியவர், வங்காளத்தைச் சேர்ந்த (இன்றைய வங்கதேசம்) ரோக்கியா ஷஹாவத் ஹுசைன் (1880-1932). பெண் விடுதலைக்காகத் தெற்காசியாவிலிருந்து ஒலித்த வலுவான குரல்களில் இவருடையது முதன்மையானது. பெண் கல்வி, பெண் உரிமை, பாலின சமத்துவம் ஆகியவை இவர் இயங்கிய துறைகளில் சில. எழுத்தோடு சேர்ந்து அரசியல் களப்பணிகளையும் மேற் கொண்டவர்.

ஒரு பெண்ணால் எழுதப்பட்ட முதல் இந்திய அறிவியல் புனைகதை, ‘சுல்தானாவின் கனவு'. எளிய கதைதான் என்றாலும் பேகம் ரோக்கியா அதில் பின்னியிருக்கும் காட்சிகளும் அவை வெளிப்படுத்தும் செய்திகளும் அழுத்தமானவை.

`ஆண்கள் அதிகாரமற்று போகும்போது பெண்கள் சுதந்திரமானவர்களாக வெளிவருகிறார்கள். ஆண்கள் இல்லாமல் போகும்போது ஆயுதங்களும் போர்களும் ஆக்கிரமிப்புகளும் இல்லாமல் போகின்றன. வன்முறை அடக்கப்படும்போது அமைதி மலர்கிறது. ஆண்கள் அமைதியாகும்போது வீரம், பெருமிதம், தேசியவாதம், புனிதம், வெறுப்பு எதுவும் தலை தூக்குவதில்லை. ஆண்மையை உயர்த்திப் பிடிக்க ஒருவரும் இல்லை என்பதால் பெண்மை என்றொன்று இல்லாமல் போகிறது. இனி பர்தா தேவைப்படாது' என்கிறார் சாரா.

ஆண்கள் ஜெனானாவில் அடைக்கப்படும்போது, அன்பும் உண்மையும் பலவீனங்களாக அல்லாமல் பலமாக வெளிப்படுகின்றன. அறிவியல் மானுடத்தின் வாழ்வியலாக முதன்முறையாக உயர்கிறது. ஆண்கள் ஜெனானாவில் அடைபட்டுக்கிடப்பதால் பாகுபாடுகள் மறைகின்றன. ராணியும் சாராவும் நட்போடு கைகுலுக்கிக்கொள்கிறார்கள். ஒரு சாராவோ, சுல்தானாவோ ராணியாக மாறினாலும் பெண் உலகம் மாறப்போவதில்லை. ஏனென்றால், அதன் விழுமியங்கள் உயர்வானவை. ஏனென்றால், அந்த விழுமியங்கள் பெண்களால் வளர்த்தெடுக்கப்பட்டவை.

ரோக்கியாவின் ஜெனானா ஒரு குறியீடு. ஆண்களை அல்ல, ஆணாதிக்கமே அதற்குள் அடைக்கப்படுகிறது. ஆண்கள் அல்ல, ஆணதிகாரமே அதற்குள் அடைக்கப்படுகிறது. ஆணதிகாரமே காலனியமாகவும் வெளிப்பட்டு இந்தியாவை அடிமைப்படுத்தி வைத்திருக்கிறது என்பதால் அந்த அதிகாரத்தைத் தனிமைப் படுத்த வேண்டியிருக்கிறது. லேடிலாண்ட்டில் நடப்பது அதுதான்.

சாய்வு நாற்காலியில் கண்களை மூடி அமர்ந்திருப்பவர் சுல்தானா அல்ல; ரோக்கியா. பெண் உலகின் பிரதிநிதியாக அவர் அங்கே கண்களை மூடி ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறார். நம்மில் எந்த சாரா அவரை எழுப்பப் போகிறார்? எந்த சாரா அவருடைய கையைப் பற்றி வெளியில் அழைத்துச் செல்லப் போகிறார்? எப்போது விடியல் வரும்?