Election bannerElection banner
Published:Updated:

கங்கனாவை விளாசிய ஜெயா பச்சன்... பாலிவுட்டில் பெருகும் ஆதரவு!

கங்கனா ரனாவத்
கங்கனா ரனாவத்

''உணவிட்டது என்று நீங்கள் குறிப்பிடுவது, அந்த இரண்டு நிமிட ரோல்கள், அயிட்டம் நம்பர் பாடல்கள், ஹீரோக்களுடன் சமரசம் செய்துகொண்ட பின்னர் கிடைக்கும் ரொமான்டிக் சீன்கள்... இவற்றையா?''

சமீபத்தில் ராஜ்ய சபா 'ஜீரோ ஹவரி'ல் பேசிய சமாஜ்வாதி கட்சியின் எம்.பி ஜெயா பச்சன், இந்தியாவில் பொழுதுபோக்குத் துறைகள், சமூக வலைதளங்களில் இழிவுபடுத்தப்படுவதாகவும் அரசு இத்துறைகளைக் காக்க முன்வர வேண்டும் என்று கூறினார். இதையடுத்து எழுந்த சர்ச்சைகளை அடுத்து, இப்போது அவரின் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது.

ஜூன் மாதம் தற்கொலை செய்துகொண்ட நடிகர் சுஷாந்த் சிங் பற்றிய செய்திகள், பாலிவுட்டில் இன்னும் ஓய்ந்தபாடில்லை. அதைச் சுற்றி தினம் ஒரு சர்ச்சை, தினம் ஒரு செய்தி எனத் தடதடத்துக்கொண்டிருக்கிறது பாலிவுட்.

ஜெயா பச்சன்
ஜெயா பச்சன்
Bollywood Hungama

இந்நிலையில் சுஷாந்த்தின் தற்கொலையைத் தொடர்ந்து பல கருத்துகளைத் தெரிவித்துவரும் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத், பாலிவுட்டில் போதைப்பழக்கம் மலிந்துள்ளதாகத் தெரிவித்தார். அதைப் பற்றிய விசாரணை முன்னெடுக்கப்பட்டால், பல முதன்மை நடிகர்கள் 'கம்பி எண்ண' வேண்டியிருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதைத் தொடர்ந்து, லோக்சபாவில் நடிகரும் பா.ஜ.க எம்.பி-யுமான ரவி கிஷன், பாலிவுட் போதைப் பழக்கத்தின் பிடியில் உள்ளதாகப் பேசியதைத் தொடர்ந்து, அதற்குப் பதிலளிக்கும் வகையில் ராஜ்ய சபாவில் ஜெயா பச்சன் பேசினார்.

''ஒரு சிலரின் போதைப் பழக்கத்தால், மொத்த பாலிவுட் சினிமாவையும் அவதூறு சொல்லக் கூடாது. சினிமா துறையிலிருந்து வந்த லோக்சபா உறுப்பினரே அந்தத் துறைக்கு எதிராகப் பேசியபோது எனக்கு அதிர்ச்சியாகவும் அவமானமாகவும் இருந்தது. இது 'உணவளித்த கையையே கடிக்கும்' விதமானது என்ற பொருள்படும் வகையில் ஒரு பழமொழியையும் அவர் குறிப்பிட்டார்.

இதைத் தொடர்ந்து, இந்தப் பிரச்னைக்குள் மீண்டும் வந்த கங்கனா ரனாவத், "ஜெயா பச்சனின் பெண்ணோ பையனோ இதுபோல் பாதிக்கப்பட்டாலும், இப்படித்தான் அவர் பேசுவாரா?' என்று கேள்வி எழுப்பினார்.

'ஜெயா ஜி, ஒருவேளை என்னிடத்தில் உங்கள் மகள் ஸ்வேதா பச்சன் இருந்து, என்னைப்போல் டீன் வயதில் மது கொடுக்கப்பட்டு துன்புறுத்தப்பட்டிருந்தாலும், உங்கள் மகன் அபிஷேக் பச்சன் தொடர் ஒடுக்குமுறைகளுக்கு ஆளாகி ஒருநாள் சுஷாந்த் போல தூக்கில் தொங்கி உயிரை மாய்த்துக்கொண்டாலும், இதேபோல்தான் நீங்கள் பேசுவீர்களா? எங்களுக்குக் கொஞ்சம் கருணை காட்டுங்கள்" என்று பதிவிட்டிருந்தார். அதற்குப் பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

Kangana Ranaut
Kangana Ranaut

பாலிவுட் நடிகை ஸ்வரா பாஸ்கர் கங்கனாவுக்கு பதிலளிக்கும் விதமாக, "உங்களுடைய சர்ச்சைக்குரிய கருத்துகளையும் எண்ணங்களையும் உங்களுடனே வைத்துக்கொள்ளுங்கள். நம்மைவிட வயதில் முதியவர்களை மதிக்க வேண்டும் என்பதே நம் இந்திய கலாசாரத்தில் முதலில் கற்றுத்தரப்படும் பாடம்" என்று கங்கனாவை கண்டித்திருந்தார். மேலும், இன்னும் பல திரை பிரபலங்களும் ஜெயா பச்சன் குறித்த கங்கனா ரனாவத்தின் வார்த்தைகளுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்தி திரைப்படத்துறையை இழிவாகப் பேசிய பலரை எதிர்த்துக் குரல் கொடுத்த ஜெயா பச்சனை பாலிவுட்டில் பல நடிகர், நடிகைகள் பாராட்டி வர, கங்கனாவும் தன் அதிரடி ஸ்டேட்மென்ட்களை நிறுத்திக்கொள்ளவில்லை.

''உணவிட்டது என்று நீங்கள் குறிப்பிடுவது, அந்த இரண்டு நிமிட ரோல்கள், அயிட்டம் நம்பர் பாடல்கள், ஹீரோக்களுடன் சமரசம் செய்துகொண்ட பின்னர் கிடைக்கும் ரொமான்டிக் சீன்கள்... இவற்றையா? பாலிவுட்டுக்கு உண்மையான ஃபெமினிஸத்தை கற்றுக்கொடுத்தவள் நான். நான் பெற்றிருக்கும் புகழ் என் திறமையால் பெற்றது" என்று படபடத்துள்ளார்.

சர்ச்சை தொடர்கிறது பாலிவுட்டில்!

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு