Published:Updated:

குளு குளு... ஸ்விஸ்! #MyVikatan

Switzerland
News
Switzerland

காரில் செல்லும் போதே, சுவிஸின் அழகை ரசித்தபடி செல்லலாம். அதோ பாருங்கள்... உயரமான அந்த மலையின் ஒரு பக்கம் பசுமை; மறு பக்கம் பாறை... பாதி வரை பனி... அந்த அழகே தனி!

'ஆல்ப்ஸ் மலையின் சிகரத்தில்

அழகிய ரைன் நதி ஓரத்தில்

மாலைப் பொழுதின் சாரத்தில்

மயங்கித் திரிவோம் பறவைகள் போல்...'

- சிவந்த மண்ணின் இந்த வரிகள்தாம் இந்தப் பனிபடர்ந்த மலைகளைப் பார்க்கும்போது நமக்கு ஞாபகத்தில் வருகிறது. நம்மூர் மலை வாசஸ்தலங்களுக்குச் சென்றாலுங்கூட, அங்கு 'வியூ பாயிண்ட்' என்ற இடத்திற்குச் சென்று பார்த்தாலே, ரம்மியமான காட்சிகளை நம் கண்களுக்கு விருந்தாக்க முடியும். மனித வாழ்வுக்கு மிகவும் உகந்த, உலகின் முன்னணி நாடுகளுள் ஒன்றான சுவிட்சர்லாந்திலோ, நீங்கள் நிற்குமிடத்திலிருந்து எங்கு திரும்பினாலும் இயற்கைக் காட்சிகள்தாம். பனிபடர்ந்த மலைகள்தாம். இப்படி இனிய காட்சிகள் மூலம் கண்களுக்குள் புகுந்து, பரவசம் மனத்தை நிறைக்கும்!

நமது தமிழ்நாட்டின் நிலப்பரப்பில் மூன்றில் ஒரு பகுதியையும், மக்கட்தொகையில் ஒன்பதில் ஒரு பங்கையும் கொண்ட சிறிய நாடுதான் சுவிட்சர்லாந்து. 'மூர்த்தி சிறிதென்றாலும் கீர்த்தி பெரிது. 'என்பதற்கிணங்க, வங்கித் தொழிலை வளப்படுத்திய இந்நாடு, அபரிமிதமான பால் உற்பத்தியைக் கொண்டு, சாக்லெட் தயாரிப்பிலும் கோலோச்சுகிறது. ஆல்ப்ஸின் அழகும், சட்ட திட்டங்களை மதித்து நடக்கும் அந்நாட்டு மக்களும், இயற்கையின் கொடையும் அந்நாட்டைச் சிறப்புக்குரியதாக ஆக்கியுள்ளன.

சரி. இன்று நாம் 'ஸ்டூஸ்'(Stoos) என்றழைக்கப்படும் மலைப்பகுதிக்கு ஒரு விசிட் அடித்து வருவோமா? வாருங்கள். வந்து காரில் ஏறுங்கள். இந்த மலையானது 'ஜூரிக்' நகரிலிருந்து ஒரு 45 நிமிட டிரைவ் தூரமே. காரில் செல்லும் போதே, சுவிஸின் அழகை ரசித்தபடி செல்லலாம். அதோ பாருங்கள். உயரமான அந்த மலையின் ஒரு பக்கம் பசுமை. மறு பக்கம் பாறை. பாதி வரை பனி. அந்த அழகே தனி. இதோ. இடது புறம் பாருங்கள். நீண்டு கிடக்கும் அந்த ஏரியையும். அதன் தூய்மையையும்.

ஏரிக்கு அப்புறமும் இப்புறமும் படிப்படி வரிசையில் வீடுகள். ஏரியில் சலனமின்றி நீந்திக் கொண்டிருக்கும் ஃபெர்ரிகள். ஓர் இடத்திலாவது ஏரி நீரில், காற்றில் அடித்து வரப்பட்ட குப்பை, கூளங்களோ, பிளாஸ்டிக் பைகளோ மிதக்கவில்லை. அவ்வளவு சுத்தம். அரசும், மக்களும் தூய்மையைப் பேணுவதில் தாய்மையுடன் செயல்படுவதே காரணம். மக்கள் கூடும் அனைத்து இடங்களிலும், தேவைக்கேற்ப கழிவறைகள். தேவைக்கு அதிகமாகவே குப்பைக் கூடுகள். அழகழகாய் மெட்டலிலும். ஃபைபரிலும். நாய் வளர்ப்போர் அதிகமென்பதால், அவற்றின் கழிவுகளுக்கென்று தனியான ஃபைபர் கூடுகள். அவற்றுக்கு அருகிலேயே, வண்ணப்பைகள். அவற்றின் கழிவுகளை எடுத்து வர. இந்த நாடு இவ்வளவு சுத்தமாக இருப்பதற்கு இவையும் காரணங்கள்.

வீடுகளனைத்தும், பெரும்பாலும் ஒரே உயரத்திலும், ஒரே வண்ணத்திலும், அடுத்தடுத்த உயரங்களில் அமைந்துள்ளதிலேயே ஒரு தனியழகு மிளிர்கிறது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

நீண்ட, நிமிர்ந்த சாலைகளைப் பாருங்களேன். எந்த இடத்திலாவது, சாலையின் தளத்திலிருந்து, உயர்ந்தோ, தாழ்ந்தோ இல்லாத மேன் ஹோல்கள். காரின் ஹாரனுக்கும், பிரேக்கிற்கும் இங்கு அதிக வேலையேயில்லை. இதோ பிரிகிறதே ஒரு சாலை. இதில் சென்றால், மற்றொரு மலை முகட்டை அடையலாம். அங்கும், உயரத்திற்குச் சென்றால், உறைந்து கிடக்கும் பனியே நம்மை வரவேற்கும். இதோ இந்த மரத்தைப் பாருங்கள். கடந்த வாரம் பார்த்தபோது இது ரோஸ் கலரில் பூத்த பூக்களுடன், அழகு காட்டி நின்றது. இப்பொழுதோ அடர்ந்த பழுப்பு நிறமாகக் காட்சியளிக்கிறது. அடுத்த 15 நாட்களில், பச்சை நிற இலைகளாக மாறி நம்மை வரவேற்கும். நம் ஊர்களில், செடிகள் துளிர்த்துத் தளிர்த்து அப்புறம்தானே பூக்க ஆரம்பிக்கும்?. இங்கோ...பூத்துக் குலுங்கி அப்புறந்தான் தளிர் விட்டு இலைகளுடன் தழைக்கின்றன. அதனால்தான், ஐரோப்பாவிலும், அமெரிக்காவிலும் 'ஸ்ப்ரிங்' என்றழைக்கப்படும் நம் வசந்தம், மிகுந்த சிறப்புப் பெறுகிறது.

இதோ வந்தாயிற்று நம் மலையின் அடிவாரத்திற்கு. இன்று சனிக்கிழமை விடுமுறை என்பதாலும், சீதோஷ்ணம் நன்றாக இருப்பதாலும், கூட்டம் அலைமோதுகிறது. டிக்கெட் மற்றும் மேலே செல்வதற்கான சிறப்பு ரோப் கார் நிலையமும் கீழே உள்ளன. எதிரே கார்கள் நிறுத்துவதற்கான இடம் முழுமையாகக் கார்களால் நிரம்பி விட்டது. எனவே, எங்கள் காரைச் சற்றுத் தள்ளி உள்ள இடத்தில் நிறுத்திவிட்டு, நிலையம் வந்து டிக்கட் வாங்கிக்கொண்டோம். ஓ. கட்டணம் தானே. ஒருவருக்கு 22 ஃபிராங்க் (நம் இந்திய ரூபாயில் 1540. ஸ்விஸ் சீசன் டிக்கட் உள்ளவர்களுக்கு இதில் பாதிக்கட்டணம்).

இதோ அந்த சிறப்பு ரோப் காரை அடைகிறோம். அதனைச் சிறப்பு கார் என்றழைக்கக் காரணமிருக்கிறது. சுமார் 10 நிமிடப் பயணந்தான், 1300 மீ உயரமுள்ள ஸ்டூஸ் என்ற இடத்தை அடைய. சில இடங்களில் செங்குத்தாக ஏறுகிறது. ஆனாலும் நமக்கு அது தெரிவதில்லை. நமது இருக்கைகள் எந்திரங்களால் சரி செய்யப்பட்டு, காரில் அல்லது ரயிலில் அமர்ந்து செல்வதைப் போலவே உள்ளது. உலகிலேயே, அதிக செங்குத்தான உயரத்தில் பயணம் செய்யும் ரோப் கார் இதுவே என்கிறது அவர்களின் விபரக்குறிப்பு. ஆனால் நாம் அமரும் இருக்கையும், நிற்குமிடமும் ரொடேட் ஆகிக் கொண்டிருப்பதால், நாம் இருக்குமிடம் சம தளமாக உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதோ வந்து விட்டது ரோப் கார். மூன்று, நான்கு கம்பார்ட்மெண்டுகளாக உள்ளது. ஓரங்களில் உட்கார இருக்கைகள். நடுவில் நின்று கொள்ளலாம். ஒரு கம்பார்ட்மெண்டில் 15, 20 பேர் பயணம்செய்யலாம். பெரும்பாலும், இதில் வருபவர்கள் கைகளில் 'ஸ்கீ' என்ற பனி சறுக்கு விளையாடத் தேவையான உபகரணங்களுடனேயே வருகின்றனர். ரோப் கார் வந்துநின்றதும், ஒழுங்கு படுத்த ஆட்களோ, ரோப் காரை ஓட்ட ஓட்டுநரோ கிடையாது. ஏனெனில், அதற்குத் தேவையுமில்லை. வருபவர்கள் தாங்களாகவே வரிசையில் நிற்கின்றனர். ரோப் கார் தானாகவே இயங்குகிறது. சரி. உள்ளே வந்து விடுங்கள். அதோ கேட்கும் சப்தம் ரோப் காரின் கதவுகள் மூடப் போவதன் அறிகுறி. ம். புறப்பட்டு விட்டது. ஒரே சீரான வேகம். இரு புறமும் உள்ள வீடுகள் பின்னோக்கி ஓட, நாம் மேலே போகிறோம். மேலே போகப்போக...எதிரில்...பக்கவாட்டில் உள்ள மலைகளின் முகடுகள் நம் காட்சிப் பொருளாகின்றன. என்ன ஆயிற்று? திடீரென எதுவும் தெரியவில்லை?.

ஓ. நம் ரோப் கார் 'டன்னல்' என்றழைக்கப்படும் மலைக் குகைக்குள் புகுந்து வந்ததாலா? நம் பயணத்தில், இது போன்ற மூன்று, நான்கு டன்னல்களைத் தாண்டி வருகிறோம். குறிப்பிட்ட உயரத்தைத் தாண்டியதும் இரு புறமும் நம் கண்ணுக்கு விருந்தாவது வெண் பனி வயல்களே.

இதோ. நம் ஸ்டூஸ் ஸ்டேஷன் வந்து விட்டது. இரு புறமும் உள்ள பிளாட்பாரத்தில், இடது புறக் கதவுகள் திறக்க நாம் இறங்குகிறோம். அனைவரும் இறங்கியதும் அக்கதவுகள் மூடிக் கொள்ள, வலது புறக்கதவுகள் திறந்து, கீழே செல்லத் தயாராக நிற்பவர்களை அழைத்துக் கொண்டு, புறப்படுகிறது ரோப் கார்.

இங்குள்ளவர்கள்தான் எவ்வளவு கண்ணியமாகச் செயல்படுகிறார்கள். நம்மூரில் எல்லோருக்கும் அவசரம். எல்லாவற்றிலும் முறைகேடு. 'நீ முந்தி நான் முந்தி' என்ற தேவையற்ற போட்டி மனப்பான்மை. அவையெதுவுமே இங்குள்ள மக்களிடம் இல்லை. எனவே அனைத்திலும் ஓர் ஒழுங்கு மிளிர்கிறது.

Switzerland
Switzerland

சரி. பார்த்து வாங்க. புதிதாகப் பெய்த பனியில் நடப்பது எளிது. புஸ்...புஸ் என்று கால்கள் உள்ளே போகும். நடப்பதில் ஓர் ஆனந்தம் மனதில் இழையும். நாள் பட்டு, இறுகிய பனி என்றால் வழுக்க ஆரம்பித்து விடும். பரவாயில்லை. நாம் நடப்பது இரவு பெய்த புதுப் பனியில்தான். இருந்தாலும் கவனமுடன் இருப்பது நல்லதல்லவா?

கொஞ்ச தூரம் நடந்து சென்றால், மீண்டும் ஒரு ஸ்டேஷன் வருகிறது. அங்குள்ள திறந்த ரோப்கார்களில், கைகளில் ஸ்கீ உபகரணங்களுடன் ஏறிச் செல்பவர்கள், ஒரு குறிப்பிட்ட உயரத்தைஅடைந்ததும், அப்படியே உபகரணங்கள் மூலம் பனியில் சறுக்கிக் கீழிறங்குகிறார்கள். அப்படிச்செய்வதில், பெரியவர்கள், சிறியவர்கள் என்ற பாகுபாடெல்லாம் இல்லை. மிகச் சிறுவர்கள் கூட, உற்சாகமுடன், உரிய உடைகளுடன் விளையாடுவது கண் கொள்ளாக் காட்சி. எந்திரங்கள் மூலம்பனியை நிரவி விடுகிறார்கள் - அவர்கள் விளையாட ஏதுவாக.

இவற்றைப் பார்த்தபடி, நாம் நடந்து செல்லவும் பாதைகள் உண்டு. ஆங்காங்கே, நம் வசதிக்காக கைகாட்டிகள் உண்டு. அவற்றில் விபரங்களைக் குறித்து வைத்திருக்கிறார்கள். நாம் தடம் மாறிப் போகாமல் இருப்பதற்காக. நல்ல தார்ச்சாலைகளிலும் நடக்கலாம். விரும்பினால், பனியிலும் நடந்துவிளையாடலாம்.

என்ன சார். ரொம்பவும் குளிர்கிறதா? சரி வாருங்கள்... திரும்பி விடுவோம். பார்த்து மட்டும் வாருங்கள். இந்த இடத்துப் பனிகளெல்லாம் இறுகிப் போய் உள்ளன. வழுக்கக் கூடும்.

அன்பான வாசகர்களே. உங்களையெல்லாம் பனிமலையில் சற்றே இளைப்பாற வைத்ததில் எமக்குத் திருப்தியே. எம்மோடு பயணம் வந்த உங்களுக்கெல்லாம் நன்றி.

- ரெ.ஆத்மநாதன்

(காட்டிகன், சுவிட்சர்லாந்து)