வரலாறு நாம் அனைவருமே பத்தாம் வகுப்பு வரை படித்த ஒரு பாடம். பள்ளிப் பருவத்தில் வரலாறு சிலருக்குப் பிடித்த பாடமாகவும் சிலருக்கு மனப்பாடம் செய்து எப்படியாவது ‘பாஸ்’ ஆனால் போதும் என்ற பாடமுமாகவே இருந்திருக்கும். என் பள்ளிப் பருவத்தில் எனக்கு வரலாற்று பாடம் என்றாலே பெரும் பயம். இந்த வருடங்களை, தேதிகளை எல்லாம் நினைவில் வைத்திருக்கவே இயலாது என்பதுதான் காரணம். கணக்கு பாடமோ எனக்கு கிலோ என்ன விலை என்பதால் நம்பர்கள் மீதே ஒரு அலர்ஜி. கணக்கு பாடத்தில் இருந்து தப்பித்து வந்தால் வரலாறு, இயற்பியல், வேதியியல் என்று எல்லா பாடங்களிலும் இந்த நம்பர்கள் வந்து என்னை விரட்டி விரட்டி துரத்தியது. பொறியியல் படிக்கச் சென்ற போது அங்கேயும் பொறியியற் கணிதம் (Engineering Mathematics) என்று ஒரு பாடம் வந்து என் மூன்று வருட நித்திரையைத் தொலைத்தது.
பள்ளிப் பருவம் முழுவதுமே என் அம்மா வரலாற்று நாவல்களை பெரும் விருப்பத்தோடு வாசித்துக்கொண்டிருப்பார். நேரம் கிடைக்கும் போது எல்லாம் அவரை புத்தகமும் கையுமாகப் பார்க்கலாம். எனக்கு இத்தனை கசப்பாக இருக்கும் ஒரு பண்டம், எப்படி அம்மாவுக்கு அத்தனை தித்திப்பாக இருக்கிறது என்பது என் மனதில் ஒரு கேள்வியாக என்னுள் பயணித்துக் கொண்டேயிருந்தது.

வரலாறு என்றால் என்ன, வரலாறு எவ்வாறு நிகழ்கிறது, அது எப்போது நிகழ்கிறது, வரலாற்றை நாம் காண இயலுமா, வரலாற்றை நாம் உணர இயலுமா... வரலாறு எப்படி இத்தனை பெரிய பெரிய புத்தகங்களில் சிறைப்பட்டு கிடக்கிறது. வரலாறு எப்படி இந்தப் புத்தகங்களில் வந்து அகப்பட்டது என்கிற என் கேள்விகளுக்கு பல காலம் பதில் கிடைக்காமலேயே அலைந்து திரிந்தேன்.
என் பால்ய காலம் முழுவதும் இந்தியாவின் மிக நவீன நகரங்களில் ஒன்றான மும்பையில் கழிந்தது. வாழ்க்கை எங்களை அங்கிருந்து மதுரைக்குத் துரத்தி விட்டது. மதுரைக்கு வந்த சில ஆண்டுகள், 'இது மிகவும் பழைய ஊர்' என்கிற எண்ணம் என் மனதில் ஓர்ஒவ்வாமையாகவே இருந்தது. மனித மனம் எப்போதுமே நவீனம் நோக்கியே ஈர்க்கப்படும். என் மனதும் மும்பை நகரத்தை ஓர் ஏக்கத்துடன் ஏந்தி நின்றது.
வரலாறு என்றால் என்ன என்று வாசித்து அறிந்து கொள்ள அரசு நூலகங்கள் நோக்கி சென்றேன். அங்கே தேடித்தேடி கலிகோ பைண்டிங்கில் தூசு படிந்த புத்தகங்களை எடுத்து நெடியேற வாசிக்கத் தொடங்கினேன்.
அங்கிருந்த புத்தகங்களில் ‘கடந்த காலத்தை பற்றி எழுதியவை ஆராய்ச்சி செய்து பொருள் விளக்கம் கொடுக்கப்பட்ட நிகழ்ச்சி தொகுப்பு’, ‘எடுத்துக்காட்டுகள் மூலம் பெறப்படும் தத்துவமே வரலாறு’, ‘வரலாறு என்பது கடந்த கால அரசியல் ஆகும், அரசியல் என்பது இன்றைய வரலாறு ஆகும்’, ‘வரலாறு என்பது மாமனிதர்களின் வாழ்க்கைச் சரித்திரமே ஆகும்’, ‘வரலாறு என்பது கடந்த காலத்திற்கும் நிகழ்காலத்திற்கும் இடையே நடைபெறும் முடிவற்ற பேச்சுவார்த்தை ஆகும்’ என்று ஒரு ஐம்பது பக்கங்கள் வாசிக்கும் முன்னே என் கழுத்தில் திருகு வலி வந்து சுளுக்கு எடுக்க நல்லெண்ணை வாங்கிக் கொண்டு மண்டபத்து கடை அருகே இருக்கும் ஒரு மூதாட்டியிடம் சென்றேன். சுளுக்கு சரியாவதற்கு முன்பே வரலாறு குறித்து நான் நூலகத்தில் வாசித்தது எல்லாம் மறந்து போய் விட்டது.
இது எல்லாம் நமக்கு ஒத்துவராது என்று முடிவு செய்து மெல்ல மதுரை நகரத்திற்குள் உலாவத் தொடங்கினேன். நான் வசித்த திருப்பரங்குன்றத்தில் இருந்து எப்படியும் தினசரி மதுரை டவுனுக்கு போக வேண்டிய வேலை இருக்கும். கல்லூரி காலத்திலும் நண்பர்களைச் சந்திக்க டவுனுக்குத் தான் சென்றாக வேண்டும். வேலைக்குச் செல்லும் காலத்திலும் நகரத்தில்தான் அலுவலகம். அதன் பின் சொந்தமாக தொழில் செய்த காலத்தில் தினசரி மதுரை நகரத்தின் ஒவ்வொரு வீதியிலும் சுற்றி அலைவதுதான் வேலையே.
இந்த அலைந்து திரிதலில்தான் மெல்ல மெல்ல மதுரை நகரம் என் வசப்பட்டது. இப்போது நான் மதுரை நகரத்தையே வாசிக்கத் தொடங்கினேன். மதுரை நகரமெங்கும் வரலாறு வியாபித்திருந்ததை என் கண்களை அகல விரித்து உள்வாங்கினேன்.
ஒரு நகரமே வரலாற்றின் சாட்சியமாக விளங்க இயலுமா, ஒரு நகரத்தின் எல்லா மூலை முடுக்கிலும் வரலாறு தஞ்சம் புக இயலுமா என்கிற கேள்விகளுக்கு மதுரையின் ஒவ்வொரு சதுர அடி நிலமும் பதிலளித்தது.
மதுரையில் நம் மூதாதைய மனிதர்கள் கற்கருவிகளுடன் வேட்டையாடிக் கொண்டிருந்தார்கள். இதே நிலப்பரப்பில் வாழ்ந்த நம் ஆதி மனிதர்கள் கறுப்பு சிவப்பு மட்கலன்களை பாவித்தார்கள் என்பதை அவர்களின் வசிப்பிடங்கள் உறுதிசெய்தன. துவரிமானில் கிருதுமால் நதி உருவாகும் இடத்தில் இருந்த மனிதர்களின் கைகளில் செதுக்கிச் செய்யப்பட்ட கருவிகள் வைத்திருந்தார்கள். விளாங்குடியிலும் பரவையிலும் அம்மிகள், உரல்கள், குழவிகள், மண்வெட்டிகள், கருக்கரிவாள்கள் என பெருங்கற்கால கருவிகள் புழங்கின.
பள்ளிச்சந்தைத் திடலின் நெசவும், துணிகளுக்குச் சாயம் காய்ச்சும் வேலையும் படுஜோராக நடைபெறுகிறது. கீழடியில் முத்துமணிகள் அணிந்த பெண்கள் யானைத் தந்தத்தால் செய்யப்பட்ட தாயக்கட்டைகளுடன் வீட்டுத் திண்ணைகளில் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்.
நகரின் மேற்குப்புறம் இருக்கும் கோட்டை சுவரில் இருந்து அகன்ற பாதை ஒன்று என்னை அழைத்துச் செல்கிறது. கடம்பமரங்கள் சூழ் அந்தப் பாதையை பின் தொடர்கிறேன். பாதை நெடுகிலும் மனிதர்கள் உரையாடிக் கொண்டிருக்கிறார்கள். சாலையோர வியாபாரிகள் ஏதோ ஒரு புதிய பொருளை விற்றுக் கொண்டிருக்கிறார்கள். அதனை வேடிக்கை பார்க்கவே கூட்டம் அலைமோதுகிறது. சிரிப்பும் பேச்சு சத்தமும் அந்த வெளியை உற்சாகமாக மாற்றுகிறது.
திண்டுக்கல் சாலையில் உள்ள சத்திரங்களின் திண்ணைகளில் லாந்தர் விளக்கொளியில் பேச்சு சத்தம் கேட்கிறது. முகச்சாடையை பார்த்தால் யாரோ அசலூர்காரர் போல் தெரிகிறது. விசாரித்துப் பர்த்தால் அவர் கிரேக்க தூதர் மெகஸ்தினஸ் என்றார்கள். மெகஸ்தினஸ் தன் ஊர்க் கதைகளை தர்க்கங்களை பற்றி விவரித்துக் கொண்டிருக்கிறார். மக்கள் அதனை சுவாரஸ்யமாக கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
அப்படியே மேலமாசி வீதிப்பக்கம் போனால் மெளரிய பேரரசின் அமைச்சர் கெளடில்யரை ஒரு குழு நகரம் எங்கும் அழைத்துச் செல்கிறது, இந்த நகரத்தின் அமைப்பை, பெருமைகளை அவருக்கு காட்டிக் கொண்டிருக்கிறது.
வைகை ஆற்றுப்பக்கம் யாழ்ப்பாணர்கள் பாடிக் கொண்டு இருக்கிறார்கள். சோலைகள் சூழ்ந்த திருமலை ராயர் படித்துறையில் யுவான் சுவாங் நீராடிவிட்டு அங்கிருப்பவர்களுடன் உரையாடிக் கொண்டிருக்கிறார். சீனாவின் தாயான மஞ்சள் நதியின் பெருமைகளையும் அந்த ஆற்றில் வரும் பெரும் வெள்ளங்களை பற்றியும் சீனாவின் முக்கிய திருவிழாக்கள் பற்றியும் பெருமிதம் பொங்கச் சொல்லிக் கொண்டிருக்கிறார்.
தமிழ்ச் சங்கத்தில் தமிழறிஞர்கள் கூடி நூல்களை அரங்கேற்றி தமிழ் மொழியையே கூர்தீட்டிக் கொண்டிருக்கிறார்கள். நற்றிணை, முல்லைப்பாட்டு, இன்னா நாற்பது, ஏலாதி எனக் காதில் தமிழ் பாய்கிறது. திருமலை நாயக்கர் அரண்மனையின் நாட்டியச் சாலையில் விறலியர் நடனங்கள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. கள்ளழகர் பல லட்சம் பேர் புடைசூழ மூன்றுமாவடியைத் தாண்டி கோரிப்பாளையம் நோக்கி வந்துகொண்டிருக்கிறார்.
கீழக்குயில்குடி மலையில் அமைந்துள்ள சமணப் பள்ளியில் பெண் ஆசிரியர் ஒருவர் பாடம் நடத்திக் கொண்டிருக்கிறார். சரவணபெலகுளாவில் இருந்து இங்கு பயில வந்த மாணாக்கர் சிலர் தீர்த்தங்கரரிடம் விடைபெற்று பெருவழிச்சாலையில் கிளம்புகிறார்கள்.

வைத்தியநாதய்யரும், ஆர்.எஸ்.நாயுடுவும் ஆலயப் பிரவேசத்தை திட்டமிட்டுக் கொண்டிருந்தார்கள். யாரோ ஒரு பெண்மணி ஓடிக் கொண்டிருந்தார், உற்றுப்பார்த்தால் அது சொர்ணத்தம்மாள், அவரை பிரிட்டிஷ் காவல்துறை நிர்வாணமாக்கி வயல் வெளியில் விரட்டிக் கொண்டிருந்தது. அவர் இருளில் ஓடி மறைகிறார்.
இந்த நகரமே வரலாறுதான் என்பதை மதுரை எனக்கு உணர்த்தியது. இன்று வரை உணர்த்திக் கொண்டேயிருக்கிறது... வேட்டை மனிதர்கள் நிலமாகவும் அதே நேரம் இன்றைய தொழில்நுட்ப யுகத்தின் சாட்சியமாகவும் தொடர்ச்சியான வரலாற்றை சுமந்து நிற்கிறது இந்த நகரம். ஒரு நகரம் வரலாறு நெடுகிலும் எப்படி இத்தனை உயிர்ப்போடிருந்தது என்பதை நினைக்கவே வியப்பாக இருக்கிறது.
மதுரையின் தொன்மையை இந்த நகரத்தின் தெருக்களில் நடமாடினால்தான் உணர இயலும். இந்த வரலாற்று நகரத்தில் நடக்கும் போது வரலாற்று பக்கங்களின் வாக்கியங்களின் மீது நடக்கும் உணர்வு ஏற்படுகிறது.
உலகம் முழுவதுமே மன்னர்களும் மதங்களும் வரலாற்று ஆசிரியர்களின் கைகளை பிடித்துக் கொண்டு வரலாற்றை உருவாக்கியிருக்கிறார்கள். அதனால்தான் வரலாறு என்பது ஆட்சி மாற்றங்களின் தொகுப்பாகவே இருந்து வந்துள்ளது. நவீன அரசுகள் உருவான பின்னும் அவைகள் பல்கலைக்கழங்களின் வழியே வரலாற்று துறைகளின் வழியே தங்களுக்கு வேண்டிய ஒரு மேன்மையான வரலாற்றை உருவாக்கவே முனைந்தன. சான்றாதாரங்கள், ஆவணங்கள், கருத்தரங்குகள் என் செவ்வியல் கருவிகளை கொண்டு அவர்கள் ஒரு சீரான செப்பனிடப்பட்ட வரலாற்றையே தயாரித்தார்கள். தேசம், தேசியம் என்கிற கருத்தாக்கங்களுக்கு இப்படியாக தயாரிக்கப்பட்ட வரலாறுதான் தேவைப்படுகிறது.

இன்று வரலாறு இந்த எல்லைகளை கடந்து வந்துள்ளது. வாய்மொழி வரலாறு, நாட்டுப்புறப் பாடல்கள், கதைகள், கதைப்பாடல்கள், புதிர்கள், விடுகதைகள், மக்களின் சொலவடைகள், எளிய மக்களின் நினைவுகள், கும்மிப்பாடல்கள், ஒப்பாரிகள் என இவைகளும் வரலாற்று உருவாக்கத்திற்கான முக்கிய சான்றுகளே என உலகம் முழுமையிலும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. இவற்றை உள்ளடக்கியப்பிறகு உலகம் முழுவதும் வரலாறு புதிய அர்த்தத்தைப் பெற்றுள்ளது.
இன்று கீழடியில் எளிய மக்கள் பாவித்த ஒவ்வொரு பொருளும் அவர்களின் மண் பானைகளில் இருக்கும் ஒவ்வொரு எழுத்தும் தமிழர்கள் வரலாற்றுக்குப் புதிய வெளிச்சத்தைப் பாய்ச்சிக் கொண்டிருக்கிறது. தமிழகத்தின் ஒவ்வொரு தொல்லியல் அகழ்வாய்வில் இருந்து வரலாறு புதிய அர்த்தம் பெற்றுக் கொண்டிருக்கிறது.
வாருங்கள் மதுரை எனும் வரலாற்று நகருக்குள் நாமும் பயணிப்போம்!