ஆமா சார், நீங்க பேப்பர் பாத்தீங்களா... வந்தவாசில ஒரே குடும்பத்துல 7 பேரு ஒருத்தனை ஒருத்தன் வெட்டிக்கிட்டு செத்துட்டான், ஆனா பரவால்ல குப்பம்மா காஞ்சிபுரத்துல அட்ஜஸ்ட் பண்ணிட்டா ஒரே பிரசவத்துல 7 குழந்தைங்க... இந்தக் காமெடியை பெரும்பாலானோர் பார்த்திருப்பீர்கள். வசூல் ராஜா எம்.பி.பி.எஸ் படத்தில் நடிகர் கமல்ஹாசன் கூறும் வசனம். இப்போது ஏன் சொல்கிறீர்கள் என்று கேட்பது புரிகிறது.
சில தினங்களுக்கு முன் பெண் ஒருவர்க்கு ஒரே பிரசவத்தில் 9 குழந்தைகள் பிறந்திருக்கிறது. எங்கு தெரியுமா?! மாலி என்றொரு நாட்டில்...
அந்த நாடு எங்கு இருக்கிறது என்றுதானே கேட்கிறீர்கள்... வாருங்கள் அந்நாட்டைப் பற்றி அலசி ஆராய்வோம்!

மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள ஒரு நாடுதான் மாலி. பத்தாம் நூற்றாண்டில் ஆப்பிரிக்காவின் பெர்பெர் என்ற இனத்தைச் சேர்ந்த ஒருவர் சஹாரா பாலைவனத்தின் தெற்கு எல்லையில் ஒரு ஊரை உருவாக்கினார். சஹாரா பாலைவனம் என்றதுமே புரிந்திருக்கும் அங்குள்ள பகுதி எப்படி இருக்குமென்று. பொருள்களை ஒரு பகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்குக் கொண்டு செல்ல ஒட்டகங்களையும், கழுதைகளையும் பயன்படுத்துவர். அப்படி, செல்லும் வழியில் வழிப்போக்கர்கள் தங்குமிடமாக இருந்த பகுதிதான் மாலி. வணிகர்கள், வழிப்போக்கர்கள் அதிகம் தங்க ஆரம்பித்ததும் ஒரு நகரமாகவே அது மாறியது. அங்கு, முஸ்லிம் கல்விக்கூடங்கள் கட்டப்பட்டன. வெளிநாடுகளிலிருந்து மக்கள் அங்கு வந்து தங்கிப் படிக்க ஆரம்பித்தனர்.
அச்சமயம், கொஞ்சம் கொஞ்சமாக புதிய உலகத்தை உருவாக்கும் எண்ணத்திலிருந்த வெள்ளையர்களுக்கு அடிமைகள் தேவைப்பட்டனர். அப்போது, ஆப்பிரிக்காவின் பல கறுப்பினத்தவர்களும் அடிமைகளாக்கப்பட்டனர். மாலி பகுதியில் உள்ள மக்களும் அடிமைகளாக்கப்பட்டனர். 1880-களில் பிரான்ஸின் கட்டுப்பாட்டுக்குள் இந்நகரம் கொண்டு வரப்பட்டது. கலானி நாடாக்கிக் கொண்டது. மாலி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள் அப்போது சூடானிய குடியரசு என அழைக்கப்பட்டு வந்தது.
பிரஞ்சு ஆதிக்கம் 1960-களில் முடிவுக்கு வர, சூடானிய குடியரசும், செனகலும் இணைந்து மாலி ஃபெடரேஷன் என்ற கூட்டாட்சி அங்கு உருவானது. பின், செனகல் விலக செப்டம்பர் 22, 1960 மாலி தனி நாடாக உருவானது. ஏறத்தாழ நூறாண்டுகள் அடிமைகளாக இருந்த மாலி விடுதலையடைந்தப் பின், பசி, பஞ்சத்தின் சோதனைக்குள் ஆட்கொண்டு விட்டது. அதிபராக பதவியேற்ற மோடிபோ கெயிட்டா என்பவரின் ஆட்சியும் சர்வாதிகாரத்தைக் கொண்டிருந்தது.

பசி, பஞ்சத்திற்கு எதிரான போராட்டத்தோடு அரசுக்கெதிரான போராட்டமும் தொடங்கியது. 1968-ல் நடைபெற்ற புரட்சியில் மோடிபோ கெயிட்டா சிறைபிடிக்கப்பட்டார். புரட்சிக்குத் தலைமை தாங்கிய மவுஸ்ஸோ டிராவோரே (Moussa Traore) என்பவர் அதிபராக பதவியேற்றார். இருந்தாலும் மாலி மக்களுக்கு எந்தவித நன்மைகளும் கிடைக்கவில்லை. ’ஒற்றைக் கட்சி’ என்ற முறை ஒழிக்கப்பட வேண்டும். ஜனநாயக ஆட்சி கொண்டு வர வேண்டும் என மக்கள் போராடினர். உயிர் நீத்தனர்.
இறுதியில் வெற்றி கிடைத்தது. மவுஸ்ஸோ அரசு கலைக்கப்பட்டது. ஜனநாயக ஆட்சி கொண்டு வரப்பட்டது. 1992-ல் நடைபெற்ற முதல் தேர்தலில் ஆல்ஃபா ஓமர் கொனாரே (Alpha Oumar Konare) வெற்றி பெற்றார். ஐந்தாண்டுகளுக்குப் பின் நடைபெற்ற தேர்தலிலும் அவரே வெற்றிப் பெற்றார். மாலியின் அரசியலமைப்புச் சட்டத்தின் படி ஒருவர் இரண்டு முறைக்குமேல் ஆட்சி வகிக்கக்கூடாது. 2002-ல் அவர் விலக அமாதொ டௌமானி டோரே (Amadou Toumani Touré) என்பவர் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவருக்கும் இரு முறை வாய்ப்பு வழங்கினார்கள் மாலி மக்கள். அதனால் 2007-ல் மீண்டும் இவரே அதிபரானார்.
90 சதவீதம் முஸ்லிம் மதத்தினவர் வாழும், மாலி நாட்டின் மிகப்பெரிய தொழில் விவசாயம்தான். இங்கு உற்பத்தி செய்யப்படும் பருத்தி பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

மாலி என்ற நாட்டை வரலாற்றில் தேடுபவர்கள் மான்ஸா மூஸா (Mansa Musa ) பற்றி அறியாமல் போக முடியாது. ஏன், அவரென்ன பில்கேட்ஸா இல்ல எலான் மஸ்கா என நீங்கள் கேட்கலாம். அவர்களை எல்லாம் தாண்டி உலகில் யாரும் எட்டிப்பிடிக்க முடியாத அளவிற்கு பெரும் பணக்காரராக வாழ்ந்தவர்தான் மான்ஸா மூஸா. 700 வருடங்களுக்கு முன் வாழ்ந்த அந்த மனிதரின் சொத்துமதிப்பு 400 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என்று சொல்கிறார்கள் ஆய்வாளர்கள். வறுமையான நாட்டில் இவ்வளவு வளத்தை எப்படிப் பெற்றார் என்ற கேள்வி எழலாம். அப்போது ஆப்பிரிக்கா முழுவதும் தங்கம், வைரச்சுரங்கங்கள் இருந்தன. தங்கம் கொழித்தது என்றுதான் சொல்ல வேண்டும்.
மாலி, முஸ்லிம்கள் அதிகம் வாழ்ந்த பகுதி என்பதால் இங்கு தான் உலகின் மிகப்பெரிய சுடாத மண்கல்லால் கட்டப்பட்ட சென்னேயின் பெரிய பள்ளிவாசல் (Great Mosque of Djenné) இருக்கிறது. இது ஆப்பிரிக்காவின் மிக முக்கியமான கட்டடங்களுள் ஒன்றாக இருக்கிறது.
சரி, இந்த நாட்டின் வரலாறு ஓகே. முதலில் சொன்ன ஒரே பிரசவத்தில் ஒரு பெண்ணுக்கு 9 குழந்தைகள் காரணத்தை சொல்லவில்லையே என நீங்கள் கேட்பது புரிகிறது. ஆப்பிரிக்காவின் பெண்களுக்கு கருவுறுவதில் சிக்கல் ஏற்படும் போது கொடுக்கப்படும் மருந்துகளின் காரணமாக கருமுட்டைகள் அதிகரித்திருக்கலாம் என்கிறார்கள். இதுமாதிரியான நிகழ்வு குழந்தைக்கும், தாயிற்கும் பிரச்னை. இருப்பினும் இந்தப் பெண் தற்போது நலமுடன்தான் இருக்கிறார்.

பொதுவாகவே, உலகில் பிறப்பு சதவீதம் அதிகமுள்ள நாடுகளில் 3-வது நாடாக மாலி இருக்கிறது. தற்போது 2 கோடி மக்கள்தொகையை கொண்ட இந்நாடு 2035ல் இரட்டிப்பாக உயருமாம். அதாவது 4 கோடியாகும் என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள். அந்த நாட்டு மக்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்று எண்ணிவிட வேண்டாம். இன்றும் இந்நாட்டின் ஒவ்வொரு பகலும் போராட்டத்தோடுதான் விடிகிறது. மாலியில் அடிமைமுறை ஒழிக்கப்படவில்லை. இந்தக் கொரோனா காலத்திலும் போராட்டங்கள் தொடர்வது கவலைக்குரிய விஷயமாகவே இருக்கிறது. சீக்கிரம் மாலி சுதந்திர கடலில் நீந்தட்டும்.
(பயணிப்போம்)