Published:Updated:

நாடுகளின் கதை - 9 மாலத்தீவு: சொர்க்க பூமிக்குப் போகலாம் வாருங்கள்!

மாலத்தீவு | Maldives
News
மாலத்தீவு | Maldives

மாலத்தீவின் அழகில் மயங்காதவர்கள் யாரும் இருக்க முடியாது, ஐபிஎல் பாதியில் நிறுத்தப்பட்டதும், கிரிக்கெட் வீரர்கள் பலர் மாலத்தீவை நோக்கிப் பயணித்தனர். சமீபத்தில் தமிழக அரசியல்வாதிகளில் சிலர் கூட தனி விமானம் மூலம் மாலத்தீவில் தரையிறங்கினர்.

Published:Updated:

நாடுகளின் கதை - 9 மாலத்தீவு: சொர்க்க பூமிக்குப் போகலாம் வாருங்கள்!

மாலத்தீவின் அழகில் மயங்காதவர்கள் யாரும் இருக்க முடியாது, ஐபிஎல் பாதியில் நிறுத்தப்பட்டதும், கிரிக்கெட் வீரர்கள் பலர் மாலத்தீவை நோக்கிப் பயணித்தனர். சமீபத்தில் தமிழக அரசியல்வாதிகளில் சிலர் கூட தனி விமானம் மூலம் மாலத்தீவில் தரையிறங்கினர்.

மாலத்தீவு | Maldives
News
மாலத்தீவு | Maldives

சினிமா பிரபலங்கள் முதல் விளையாட்டு வீரர்கள், அரசியல்வாதிகள் வரை வசதி படைத்தவர்கள் பலரின் பொழுதுபோக்குத் தலங்களின் பட்டியலில் இந்த நாடு இருக்கும்... ஒருமுறையாவது இங்கு சென்றுவிடமாட்டோமா என்ற சாமானியனின் ஏக்கத்திற்குப் பின்னாலும் இந்த நாடு இருக்கும்... ஆம், வர்ணிக்க வார்த்தைகளற்ற மாலத்தீவு தான் அந்த நாடு. அப்படி, மாலத்தீவில் என்ன இருக்கிறது? இதன் வரலாறு என்ன? எப்படிச் செல்வது? எவ்வளவு செலவாகும்? இப்படிப் பலக் கேள்விகள் உங்களுக்குள்ளும் ஏற்கெனவே எழுந்திருக்கலாம்? எல்லாவற்றையும் அலசி ஆராய்வோம்.

மாலத்தீவு எனும் சொர்க்கம்

மாலத்தீவு | Maldives
மாலத்தீவு | Maldives

பார்க்கும் திசையெங்கும் அழகிய கடல், நெஞ்சைக் கவரும் இயற்கைக் காட்சிகள், அழகான கடற்கரைகள், கடலுக்கு அடியில் உணவு, ஆழ்கடல் நீச்சல் (scuba diving) என தன்னைத் தேடி வருபவரின் மனங்களை புத்துணர்ச்சியாக்கும் எல்லா அழகியலையும் கொண்டது தான் மாலத்தீவு. இது, இந்தியப் பெருங்கடலில் 20க்கும் அதிகமான பவளத்தீவுகளையும், 1000க்கும் அதிகமான சிறிய தீவுகளையும் உள்ளடக்கிய தீவு நாடு.

கன்னியாகுமரி எல்லையிலிருந்து 700 கி.மீ தொலைவில் உள்ள மாலத்தீவின் தலைநகரம் மாலே (Malé). மாலத்தீவில் 5 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் மீன்பிடிப்பதை முக்கியத் தொழிலாக வைத்திருக்கிறார்கள்.

மாலத்தீவு வரலாறு

மாலத்தீவு குட்டி நாடாக இருந்தாலும் இந்த நாட்டுக்குத் தனிப் பாரம்பரியம் உள்ளது. ஆரம்பத்தில் கிராவரு என்ற தமிழர்கள் அங்கு ஆட்சி புரிந்ததாக ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பின்னர் சோழர்கள் ஆட்சிக் காலத்தில் அவர்கள் ஆட்சியின் கீழ் நீண்ட காலமாக மாலத்தீவு இருந்துள்ளது. இதன் பிறகு சிங்களவர்கள் மாலத்தீவை கைப்பற்றி ஆட்சி செய்துள்ளனர். அப்போது, அங்கு பரவலாக புத்த மதம் பின்பற்றப்பட்டுள்ளது.

தொலைகிழக்குப் பகுதிகளுக்குச் சென்ற அரேபிய வணிகர்கள், தங்கள் பயணத்தின் நடுவே மாலத்தீவில் தங்கிச் செல்வதை வழக்கமாக்கிக் கொண்டனர். முஸ்லிம்களுக்கு மாலத்தீவு மிகவும் பிடித்து விட்டது. அங்கு, தங்களது ஆதிக்கத்தைச் செலுத்தி ஆட்சியில் அமர்ந்தனர். 1153-ம் ஆண்டு சுல்தான் ஆட்சி முறை வந்தது. அங்குள்ள மக்கள் அனைவரும் இஸ்லாமியர்களாக மாறத்தொடங்கினர்.

மாலத்தீவு | Maldives
மாலத்தீவு | Maldives

போர்ச்சுக்கீசியர் வருகை!

16-ம் நூற்றாண்டில் ஐரோப்பிய ஆதிக்க சக்திகள் பலவும் இந்தியப் பெருங்கடலில் உள்ள வணிகத்தில் பெரும் பகுதியை தங்கள் கைவசமாக்கிக் கொண்டார்கள். பிரிட்டன், பிரான்ஸ், போர்ச்சுகல், ஹாலந்து, டென்மார்க், ஸ்பெயின் என பல நாடுகளுக்கும் இதில் பெரும் போட்டி நிலவியது.

ஏற்கெனவே மேற்கிந்தியாவில் இருந்த கோவாவில் அழுத்தமாகக் காலூன்றியிருந்த போர்ச்சுக்கீசியர்கள், இந்தியப் பெருங்கடலில் லாபத்தை ஈட்டும் வணிக வழித்தடங்களில் தங்களுக்கு நிச்சயம் பங்கிருக்க வேண்டும் என்ற தீர்மானத்துக்கு வந்திருந்தார்கள். அவர்கள் மாலத்தீவி மீது கண் வைத்தனர். 'உங்களுக்காக சின்னதாக ஒரு கோட்டையும், தொழிற்சாலையும் கட்டிக் கொள்ளலாம்' என்று அனுமதி அளித்தார் அப்போதைய மாலத்தீவு மன்னர். போர்ச்சுக்கீசிய ஒட்டகம் மாலத்தீவில் நுழைந்தது. 1558-ம் ஆண்டில் போர்ச்சுக்கீசியர்கள் மாலத்தீவு தேசத்தைக் கைப்பற்றினார்கள்.

கிடைத்தது விடுதலை!

முகம்மது தகுருஃபானு அல் ஆஜம் (Muhammad Thakurufaanu Al Auzam) என்பவர் தனது சகோதரர்களையும், நண்பர்களையும் சேர்த்துக் கொண்டு மாலே நகரில் ஆட்சி செய்த போர்சுக்கீசியர்கள் மீது தொடர்ந்து கொரில்லாத் தாக்குதல் நடத்தினார். இதில் அத்தனை போர்ச்சுக்கீசிய ஆட்சியாளர்களும் கொலை செய்யப்பட்டனர்.

இந்த வெற்றியை, தேசிய தினமாக இன்றளவும் மாலத்தீவு கொண்டாடுகிறது. முகம்மது தகுருஃபானுவுக்கு ஓர் நினைவகமும் எழுப்பப்பட்டது. இவர்தான் அடுத்த சுல்தான் சாம்ராஜ்யத்தை நிறுவினார். உதீமு என்ற பெயர் கொண்ட அந்த சாம்ராஜ்யம் அடுத்த 120 வருடங்களுக்கு மாலத்தீவை ஆட்சி செய்தது.

பின் மாலத்தீவு, 1654 முதல் டச்சுக்காரர்கள் வசமும், 1887-ல் பிரிட்டனின் கட்டுப்பாட்டிலும் இருந்தது. 1965-ம் ஆண்டில் ஆங்கிலேயர்களிடமிருந்து இந்தக் குட்டி நாடு விடுதலை பெற்றது.
மவ்மூன் அப்துல் கையூம் (Maumoon Abdul Gayoom)
மவ்மூன் அப்துல் கையூம் (Maumoon Abdul Gayoom)

1968-ம் ஆண்டு சுல்தான் ஆட்சியிலிருந்து குடியரசாக மாறியது. மாலத்தீவுகளின் முதல் குடியரசுத் தலைவராக இப்ராஹிம் நசீர் என்பவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1978-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் மவ்மூன் அப்துல் கையூம் (Maumoon Abdul Gayoom) அதிபராகத் தேர்வு செய்யப்பட்டு 30 ஆண்டுகள் தொடர்ந்து பதவியில் இருந்தார். 2008-ல் பொதுத் தேர்தலில் கையூமை தோற்கடித்து முகம்மது நஷீத் குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் ஒரு கடல்வாழ் உயிரின விஞ்ஞானி. சுற்றுச்சூழல் தொடர்பான செயல்பாடுகளில் நிறைய ஆர்வம் காட்டினார். சுறா வேட்டைக்குத் தடை விதித்தார். அரசு நிறுவனங்கள் தனியார் மயமாக்கப்பட்டன. 'உயர்ந்து கொண்டிருக்கும் கடல் மட்டத்தில் அழியும் முதல் பகுதியாக மாலத்தீவு இருக்கலாம்' என்று ஆய்வுகள் சொன்னது. இதனால், தடுப்பு நடவடிக்கைக்கு நிதி உருவாக்கினார்.

இந்தியா - மாலத்தீவு உறவு

மாலத்தீவு தனி நாடாக இருந்தாலும் இந்தியக் கலாசாரத்தோடு ஒன்றிணைந்த பகுதி ஆகும். குறிப்பாக, தமிழ் மற்றும் மலையாள கலாசாரம் கொண்ட நாடாக மாலத்தீவு திகழ்கிறது. அங்கு மலையாளம் முக்கிய மொழியாகவும் இருக்கிறது.

மாலத்தீவு இந்தியாவுக்கு மட்டுமல்ல இலங்கைக்கும் அருகிலுள்ள நாடு. இதை மனதில் கொண்டுதான் இந்தியா, மாலத்தீவுடனான நல்லுறவைத் தொடர வேண்டியிருந்தது. 1988 நவம்பர் மாதம் இலங்கையிலிருந்து ஆயுதங்களுடன் ஒரு போராளிக் குழு மாலத்தீவில் ஊடுருவியது.

மாலத்தீவில் ராஜீவ் காந்தி
மாலத்தீவில் ராஜீவ் காந்தி

மாலே நகரிலுள்ள விமான நிலையத்தை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தார்கள். அவர்களது மற்றொரு முக்கிய நோக்கம் அதிபர் ’மவ்மூன் அப்துல் கையூமைக் கைது செய்வது’. ஆனால், அதை அவர்களால் செய்யமுடியவில்லை. காரணம், அவர் இந்தியாவில் தஞ்சம் புகுந்துவிட்டார்.

அப்போது இந்தியப் பிரதமராக இருந்தவர் ராஜீவ் காந்தி. மாலத்தீவு அரசுக்கு ஆதரவாக ராணுவ வீரர்களை அனுப்பி வைத்தார். அடுத்த சில மணி நேரங்களிலேயே மாலத்தீவு அரசைப் பற்றியிருந்த ஆபத்து நீங்கியது. போராளிகளை இந்திய ராணுவம் ஒடுக்கியது. இந்தியாவுக்கு பாராட்டுகள் குவிந்தன. அப்போதைய அமெரிக்க அதிபர் ரீகன், “இந்தியப் பெருங்கடல் பகுதியில் அமைதி நிலவ இந்தியா மதிக்கத்தக்க பங்களிப்பைச் செய்திருக்கிறது’’ என்றார். தலைநகர் மாலேவில் இந்திரா காந்தி நினைவு மருத்துவமனை எழுப்பப்பட்டது.

ஏப்ரல் 2006-ல் இந்தியக் கடற்படை ஒரு மிகச்சிறந்த போர்க் கப்பலை மாலத்தீவுக்குப் பரிசளித்தது. மாலத்தீவு அரசின் வேண்டுகோள் காரணமாக இந்தியா அந்த நாட்டில் தனது 2 ஹெலிகாப்டர்களை பாதுகாப்புக்கு நிரந்தரமாக நிறுத்தி வைத்தது.

தற்போது, மாலத்தீவில் மிகப்பெரிய பாலம் மற்றும் 3 தீவுகளை இணைக்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்கு ரூ.3,745 கோடி நிதியுதவியை இந்தியா வழங்கும் என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார்.

மாலத்தீவு செல்லலாம்!

மாலத்தீவின் அழகில் மயங்காதவர்கள் யாரும் இருக்க முடியாது, ஐபிஎல் பாதியில் நிறுத்தப்பட்டதும், கிரிக்கெட் வீரர்கள் பலர் மாலத்தீவை நோக்கி பயணித்தனர். சமீபத்தில் தமிழக அரசியல்வாதிகளில் சிலர் கூட தனி விமானம் மூலம் மாலத்தீவில் தரையிறங்கினர். 'சரி, அங்கு எப்படிப் போவது என்பதைச் சொல்லுங்கள்' என்று தானே கேட்கிறீர்கள்.

மாலத்தீவு
மாலத்தீவு

மாலத்தீவிற்கு சென்னையிலிருநந்து விமானம் மூலம் செல்லலாம். 3 மணி நேரப் பயணம்தான். சீசனுக்கு ஏற்ப டிக்கெட் விலை. குறைந்தது ரூ.5 ஆயிரம் முதல் அதிகபட்சமாக 25 ஆயிரம் வரை ஆகலாம். கேரள மாநிலம் கொச்சியில் இருந்து கப்பல் மூலமாகவும் மாலத்தீவிற்கு செல்லலாம். ஆனால், 2 நாட்கள் பயண நேரம். நம், இந்தியர்களுக்கு விசா முன்னதாகவே பதிவு செய்ய வேண்டும் என்ற அவசியமில்லை. பயணம் செய்தாலே 90 நாள்களுக்கான விசா வழங்கப்படும். அதற்காக ஒரிஜினல் பாஸ்போர்ட் உள்ளிட்ட சில ஆவணங்களும் தேவை. சோகமான விஷயம், தற்போது கொரோனா என்பதால் மாலத்தீவிற்குச் செல்ல அனுமதி இல்லை. ஆனாலும், சில பணக்காரர்கள் தங்கள் பலத்தை வைத்து அங்கு செல்வதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது, அங்கு தினசரி கொரோனா பாதிப்பு 1000+.

(பாதுகாப்புடன் பயணிப்போம்)