கம்போடியா, லாவோஸ், வியட்நாம் போன்ற கம்யூனிச நாடுகள் சூழ்ந்திருக்க இன்றளவும் மன்னராட்சி நடக்கும் ஒரு நாடு தாய்லாந்து (Thailand). இதற்குப் பின்பு இருக்கும் வரலாற்றை சுருக்கமாக முதலில் பார்த்துவிடுவோம்.
ராமா மன்னர்கள்
தொன்மையான வரலாற்றைக் கொண்ட தாய்லாந்தை பல்வேறு சாம்ராஜ்யங்கள் ஆண்டு வந்தன. இருப்பினும் 1782-ல் தொடங்கிய சக்ரி சாம்ராஜ்யம்தான் தாய்லாந்தின் முதல் அத்தியாயமாகப் பார்க்கப்படுகிறது. இந்த சம்ராஜ்யத்தை உருவாக்கியவர் முதலாம் ராமா என்றழைக்கப்படும் (Rama I) புத்தயோத்ஃபா என்பவர் தான். முதலாம் ராமா தாய்லாந்தின் வரலாற்றை மாற்றி எழுதிய பிரம்மா. பாங்காக் நகரை தலைநகராக்கியது, தாய்லாந்து மொழிக்கு வரிவடிவம் கொடுத்தது இவர் தான். இன்றளவும் மக்களால் பெரிதும் போற்றப்படும் மன்னர் இவர்.
இவரையடுத்து மிகவும் புகழ்பெற்றவர் ஐந்தாம் ராமா (Rama V) என்றழைக்கப்பட்ட சுலாலங்கன் (Chulalongkorn) இவர், நாட்டை நவீனமாக்கினார். பல புது தொழில்நுட்ப யுக்திகளை நாட்டில் அறிமுகப்படுத்தினார். உற்சாகமாக நாட்டில் இவர் செய்த சீர்திருத்தங்களால் 'அன்பான மன்னர்' என்று மக்களால் அழைக்கப்பட்டார்.

தாய்லாந்து நாடு பிரிட்டிஷ், ஐரோப்பியர்களின் கண்களில் படவில்லையா? யாரும் இந்நாட்டை கைப்பற்றவில்லையா?
ஆம், ஐந்தாம் ராமா மன்னரின் பல்வேறு அணுகுமுறையால் தென்கிழக்கு ஆசியாவில் காலனி ஆதிக்கத்திற்கு உட்படாத ஒரே நாடாக இருக்கிறது சியாம் என்ற தாய்லாந்து.
காப்பியங்கள் கடல் கடந்து செல்லும்... அப்படித்தான், வாணிபம் செய்ய தாய்லாந்திற்கு சென்ற இந்தியர்கள் கூடவே ராமாயணத்தையும் எடுத்துச் சென்றுள்ளார்கள். அங்கு ராமாயணம் வேரூன்றிவிட்டது. இதன் தாக்கத்தால் மன்னர்கள் ராமா என்று அழைக்கப்பட்டனர். தாய்லாந்தில் அயோத்தி என்ற நகரம் கூட இருக்கிறது. பழமையான மாரியம்மன் கோயில் இங்கு மிகவும் பிரபலம்.
புத்த நகரம்

ராமாயணம், அயோத்தி, மாரியம்மன் என்று சொன்னாலும் தாய்லாந்து ஒரு புத்தபூமி. கிட்டத்தட்ட 30,000 புத்த மடாலயங்கள் இங்கு உள்ளது. உலகத்தின் மிகப்பெரிய புத்தர் சிலைகளில் சில தாய்லாந்தில் தான் வானோக்கி நிற்கின்றது. கிட்டத்தட்ட, 7 கோடி மக்கள் வாழும் தாய்லாந்தில் 95% மக்கள் புத்த மதத்தை பின்பற்றுபவர்கள் என்றால் யோசித்துக் கொள்ளுங்கள். தாய்லாந்தின் எல்லா வீதிகளிலும் புத்த சாயல் தான்.
அரிசி எனும் கடவுள்
தாய்லாந்து மக்கள் இரண்டு விஷயங்களை எப்போதும் சகித்துக் கொள்ளமாட்டார்கள். முதலாவது தங்கள் மன்னரை பற்றி அவதூறு பேசுவது. இரண்டாவது அரிசியைப் பழிப்பது. ஒரு குழந்தை அரிசி உணவு சாப்பிட்டுவிட்டு அதன் மூலம் வயிறு வலி என்று சொல்வது கூட அரிசியைப் பழிப்பதாம். அப்படிக் கூறினால் அந்த மக்களுக்கு மிகுந்த கோபம் வந்துவிடுமாம். அரிசியை உணவாகப் பார்க்காமல் கடவுளாகவே பார்க்கிறார்கள் தாய் மக்கள்.

தாய்லாந்து அரிசி புகழ்பெற்றது. உலகில் இந்தியாவிற்கு அடுத்து அதிக அரிசி ஏற்றுமதி செய்யும் நாடு இதுதான். உலகில் 30% அரிசி இங்குதான் உற்பத்தியாகிறது. ஆண்டுதோறும் "விதை வழங்கும் விழா" மன்னர் முன்னிலையில் பிரமாண்டமாக நடைபெறும். இவ்விழாவில் மன்னர் தன் கையால் வழங்கும் விதை நெல்களை விவசாயிகள் தங்கள் விதை நெல்லோடு சேர்த்து விதைக்கின்றனர். இதனால், விளைச்சல் அதிகரிக்கும் என்பது அவர்களின் நம்பிக்கை. அபின் என்ற போதைப்பொருள் தயாரிக்கப்பயன்படும் ஓபியெம் என்ற அபினிச் செடியும் இங்கு அதிகமாக வளர்க்கப்படுகிறது என்பது கூடுதல் தகவல்.
தமிழர்களின் பாரம்பர்யம்
தாய்லாந்தின் அதிகாரப்பூர்வ மொழியாக ”தாய்” மொழி இருக்கிறது. இந்த மொழி கெமர், பல்லவ கிரந்தம் மொழியை அடிப்படையாகக் கொண்டு கட்டமைக்கப்பட்ட மொழி. இதில் பல்லவ கிரந்தம் என்பது தமிழ்நாட்டின் பல்லவர்களைக் குறிப்பிட்டு தமிழைக் குறிப்பதாக சில ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். தாய் மொழியில் பேசும் சில வார்த்தைகள் கூட தமிழ் மொழியோடு ஒத்துப் போவதாக இருக்கும். தமிழர்களின் சங்க கால கூத்து, பொம்மலாட்டங்கள், சிலம்பம் வீர பயிற்சிகள் தாய்லாந்தின் வழக்கத்திலும் இருந்து வருகிறது.
தமிழ் மன்னன் ராஜேந்திர சோழன் தன் பெரும்படையுடன் தாய்லாந்தை உள்ளடக்கிய பகுதியை கைப்பற்றியதால் தான் ”கடாரம் கொண்டான்” என்ற பட்டமும் கிடைத்ததாக வரலாறு சொல்கிறது. (தாய்லாந்து ஒரு தமிழ்நாடு போலத் தான்)
தாய்லாந்தின் பெரும்பாலான குடும்பங்களில் பெண்களே தலைமை தாங்குகிறார்கள். தலைமுறை தலைமுறையாக 'தாய்வழிச்சமூகம்' அது. அழகு, அறிவு, தைரியம் கொண்ட தேவதைகள் தாய்லாந்து பெண்கள்.
தாய்லாந்தின் பட்டாயா நகரைப் பற்றி பலவிதக் கதைகள் கூறப்படுவதுண்டு. 'அங்கு பாலியல் தொழில் தலைவிரித்தாடுகிறது' போன்ற பிம்பங்கள் கட்டமைக்கப்படுகின்றன. ஆனால் உலகின் பல்வேறு நகரங்களில் நடப்பதைப் போலத்தான் இங்கும். பாலியல் தொழிலுக்கு சட்டரீதியாக அனுமதி இல்லையென்றாலும் மசாஜ் பார்லர்கள், பார்கள் போன்றவற்றின் வழியாக பெண்கள் உடல்ரீதியாக சுரண்டப்படுவது தொடர்ந்து நடக்கிறது.

தாய் மசாஜ் (Thai Massage)
ஜீவகா என்றழைக்கப்படும் சிவாகோ கமர்பாஜ் என்ற புத்த துறவிதான் தாய் மசாஜின் தந்தை எனப் போற்றப்படுகிறார். இவரை புத்த பெருமானின் டாக்டர் என்று தாய்லாந்து மக்கள் குறிப்பிடுகிறார்கள். இன்றளவும் புத்தருக்கு இணையாக ஜீவகாவை வணங்கி வருகிறார்கள் தாய்லாந்து மக்கள்.
ஜீவகா இந்திய நாட்டைச் சேர்ந்தவர். ஆம், 2000 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் பிறந்த ஜீவகா அப்போதே மருத்துவ துறையில் கல்வி பயின்று சிறந்து விளங்கினார். அப்போதைய, மன்னனின் மருத்துவராக ஜீவகா பணிபுரிகிறார். ஒருமுறை புத்தர் நோய்வாய்ப்பட்ட போது அவருக்கு மருத்துவமும் செய்கிறார். அந்தச் சமயத்தில் ஜீவகா மருந்துகளின்றி நோயை குணப்படுத்த கண்டுபிடித்த ஒரு முறை தான் மசாஜ். பின்நாளில், போதி தர்மர் சீனாவிற்கு சென்றது போல ஜீவகா தாய்லாந்திற்குச் சென்றிருக்கிறார்.

மசாஜ் எப்படி செய்ய வேண்டும் என்ற வழிமுறைகளை அந்தக் காலத்திலேயே கல்லில் செதுக்கி ’வாட் போ’ கோயிலில் வைத்திருக்கிறார்கள். தாய்லாந்து விவசாயிகள் கடும் உழைப்பினால் உடலையும், மனதையும் இலேசாக்க தாய் மசாஜ் செய்ய ஆரம்பித்ததாக சொல்லப்படுகிறது. தற்போது, உலகம் முழுவதும் தாய் மசாஜ் பிரபலம். இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையான தாய் மசாஜ் யுனெஸ்கோவின் பாரம்பர்யப் பட்டியலில் இடம்பெற்றிருக்கிறது, ஒரு விஷயம் பிரபலம் அடையும் போது அதன் பெயரில் போலி உருவாவது வழக்கம் தானே! ஆம், போலியாக நிறைய இடங்களில் தாய்மசாஜ் செய்யப்படுகிறது. உடம்பு பத்திரம் மக்களே...
அதாவது, மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் பிரதமர் அரசின் தலைவராகவும், மன்னர் நாட்டிற்குத் தலைவராகவும் இருப்பார்கள். மன்னரின் கை ஓங்கி இருக்கும்.
1946 முதல் 70 ஆண்டுகள் தொடர்ச்சியாக ஆட்சி செய்து வந்தவர் ஒன்பதாவது ராமா என்றழைக்கப்பட்ட பூமிபால் அதுல்யதேஜ். நீண்ட காலம் ஆட்சி செய்த மன்னர் என்ற பெயரும் இவருக்குண்டு. தாய்லாந்து மக்களுடன் நல்ல உறவை பேணி வந்த இவர் கடந்த 2016 அக்டோபர் மாதம் உயிரிழந்தார். இதனால், மகன் வஜிரலங்கோன் தந்தையின் மரணத்திற்கு ஒரு வருடம் துக்கம் அனுசரிக்க உத்தரவிட்டார். அனைத்து கொண்டாட்ட நிகழ்வுகளும் தடைபட்டது.
தந்தையின் மரணத்திற்குப் பின், மூன்றாண்டுகள் கழித்து 2019-ம் ஆண்டு வஜிரலங்கோனுக்கு முடிசூட்டுவிழா பிரமாண்டமாக நடைபெற்றது. மன்னரின் நடவடிக்கைகள் மக்களை பெரிதும் ஈர்க்கவில்லை.

வஜிரலங்கோனின் மோசமான சட்டங்களை யாரும் எதிர்க்க முன்வரவில்லை. மீறி எதிர்த்தால், சிறை. அதையும் மீறி எதிர்ப்பை தொடர்ந்தவர்கள் மாயமானார்கள். இது அந்த நாட்டின் இளைஞர்களையும், மாணவர்களையும் கோபத்தில் ஆழ்த்தியது. ‘நாடாளுமன்ற சபையைக் கலைக்க வேண்டும்’, ‘மக்களை அச்சுறுத்தும் சட்டங்களை அகற்ற வேண்டும்’, புதிய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்க வேண்டும்’ என்ற கோரிக்கையோடு வீதிகளில் இறங்கிப் போராட ஆரம்பித்தனர். மன்னரோ, தன் மனைவியுடன் ஓய்வெடுக்க ஜெர்மனிக்கு பயணம் செய்து விட்டார். மன்னராட்சி முடிவுக்கு வந்து மக்களால் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதே தாய் மக்களின் தற்போதைய அவா.

சென்னையில் இருந்து 3 மணி நேர விமானப் பயணம் மூலம் "க்ருங்தேப் மகானகோன் அமோன் ரட்னாகோசின் மகிந்தாரா அயூத்தியா மகாதிலோக் போப் நொபராட் ரட்சதானி புரிரோம் உடோம்ரட்சனிவேட் மகசாதான் அமோன் பிமான் அவதான் சதிட் சகதாதியா விட்சனுகம்" நகருக்கு சென்றுவிடலாம்.
என்ன ஏதோ புரியாத வார்த்தைகளை எழுதியிருக்கிறீர்கள்? என்று நீங்கள் புலம்புவது புரிகிறது. தலைநகர் பேங்காக் நகருக்கு தாய் மொழியில் உள்ள பெயர் இது. உள்ளூர் பேருந்தில் நடத்துனரிடம் இந்த பெயரைச் சொல்லி டிக்கெட் எடுப்பதை பற்றி யோசித்துப் பாருங்கள்...
(பயணிப்போம்)