Published:Updated:

நியூசிலாந்து: மக்கள் வாழ்வதற்கு ஏற்ற நாடு... அப்படி என்ன ஸ்பெஷல்?! நாடுகளின் கதை - 5

நாடுகளின் கதை - நியூசிலாந்து
News
நாடுகளின் கதை - நியூசிலாந்து

நியூசிலாந்து (New Zealand) வரலாற்றுக்குப் பின்னும் சோகம் இருக்கிறது. ஆம், எல்லா மகிழ்ச்சிக்குப் பின்னும் ஒரு சோகம் இருக்கத்தானே செய்கிறது.

Published:Updated:

நியூசிலாந்து: மக்கள் வாழ்வதற்கு ஏற்ற நாடு... அப்படி என்ன ஸ்பெஷல்?! நாடுகளின் கதை - 5

நியூசிலாந்து (New Zealand) வரலாற்றுக்குப் பின்னும் சோகம் இருக்கிறது. ஆம், எல்லா மகிழ்ச்சிக்குப் பின்னும் ஒரு சோகம் இருக்கத்தானே செய்கிறது.

நாடுகளின் கதை - நியூசிலாந்து
News
நாடுகளின் கதை - நியூசிலாந்து

2019 கிரிக்கெட் வேர்ல்ட் கப் செமி ஃபைனல் மேட்ச்.., தோனி ஸ்ட்ரைக்ல இருக்காரு... எப்படியும் ஜெயிச்சிடுவோம்னு இந்திய ரசிகர்களுக்கு அவ்ளோ நம்பிக்கை. அதிரடி காட்டிய தோனி 2 ரன்களை எடுக்க முற்படும் போது 2 இன்ச் இடைவெளியில் ரன் அவுட் ஆக, அப்போது, அம்பயர் Richard Kettleborough கொடுத்த அந்த ரியாக்‌ஷன், தலையை ஆட்டிக்கொண்டே தல தோனி பெவிலியன் திரும்புன நிகழ்வெல்லாம் இப்போ நினைச்சாலும் கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஒரு ஹார்ட் பிரேக்கிங் மொமண்ட்டா இருக்கும். நாடுகளின் கதையை கிரிக்கெட் நிகழ்வோடு தொடங்கக் காரணம் தோனியை அவுட் செய்து, இந்தியாவை உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்குப் போகவிடாமல் தடுத்த அந்த நாடு நியூசிலாந்துதான்.

ஆம், நியூசிலாந்து நாட்டை உலகத்தின் பெரும்பாலான மக்கள் தெரிந்து வைத்திருப்பது கிரிக்கெட் போட்டிகள் மூலமே. ஆனால், இந்நாட்டின் தேசிய விளையாட்டு என்னவோ ரக்பிதான்.
நியூசிலாந்து கிரிக்கெட் அணி
நியூசிலாந்து கிரிக்கெட் அணி

உலகின் மகிழ்ச்சியான நாடு எது?! அந்த நாட்டை என் கண்ணில் காட்டுங்கள் என்று கேட்போர் யாரும் உண்டெனில் தாராளமாக நியூசிலாந்து பக்கம் செல்லலாம். ஆம், மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் முதல் பத்து இடங்களில் நியூசிலாந்துக்கு இடமுண்டு. அதற்கென்று மகிழ்ச்சியாகச் சாலைகளில் கைவீசி நீங்கள் நடந்து சென்றால் உங்களோடு ஆடுகள்தான் அதன் மொழியில் பேசிக்கொண்டு வரும். 50 லட்சம் மக்கள் வாழும் நாட்டில் கிட்டத்தட்ட 3 கோடி செம்மறி ஆடுகள் இருக்கின்றன.

நியூசிலாந்து | New Zealand
நியூசிலாந்து | New Zealand
எல்லா மகிழ்ச்சிக்குப் பின்னும் ஒரு சோகம் இருக்குமே?! ஆம், நியூசிலாந்தின் வரலாற்றுக்குப் பின்னும் உண்டு.

பசிபிக் பெருங்கடலின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ளது இந்நாடு. மிகவும் அண்மைக்காலத்தில் குடியேற்றம் நிகழ்ந்த பகுதி. அதனால்தான் என்னவோ பெயரில் ’நியூ’ என்ற பெயரும் சேர்ந்திருக்கிறது. ’மவோரி’ இன பூர்வக்குடி மக்கள் வாழ்ந்த இப்பகுதியில், புது பகுதியைத் தேடிப் பயணித்த ’ஏபெல் டாஸ்மான்’ என்ற ஐரோப்பியப் பயணி 1642-ல் காலடியெடுத்து வைத்தார். அச்சமயம் அங்கு வாழ்ந்த மவோரி இன மக்களுடன் ஏற்பட்ட சண்டையினால் டாஸ்மான் உடன் வந்த 4 மாலுமிகள் கொல்லப்பட்டனர்.

பின்னர், 1769ல் மீண்டும் இப்பகுதியில் காலடியெடுத்து வைத்த ஐரோப்பியர்கள் மவோரி இனமக்களுடன் வணிகம் செய்ய ஆரம்பித்தனர். ஆயுதங்களையும், உருளைக் கிழங்குகளையும் கொடுத்து தண்ணீர் பெற்றனர். இதனால், மவோரிகள் தங்கள் செயல்பாடுகளை மாற்றி போரில் இறங்கினர். 30 ஆயிரம் முதல் 40 ஆயிரம் மக்கள் கொல்லப்பட்டனர்.

இதற்குப் பின், ஐரோப்பியர்களின் சதி இருக்கிறதா என்ற உங்கள் கேள்வி சரியானது தான்!

மதத்தைப் பரப்ப வந்தவர்களால் மவோரி மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக மதமாற்றம் செய்யப்பட்டனர். போதாக்குறைக்கு ஐரோப்பியர்களால் திட்டமிட்டு பரப்பப்பட்ட நோய்களால் ஓர் இனமே அழிவைச் சந்தித்தது. அதன் பின், பிரெஞ்சுக் குடியேற்றம் படிப்படியாக நடைபெற, நியூசிலாந்தின் ஐக்கியப் பழங்குடியினர் என்ற அமைப்பு நியூசிலாந்தின் விடுதலையை அறிவித்தது.

இருப்பினும் சில காலம், பிரிட்டிஷ் ஆதிக்கம் தொடர்ந்தது. முதலாம், இரண்டாம் போர்களிலும் நியூசிலாந்து பெரும் இழப்பைச் சந்தித்து. 1947ல் நம்பிக்கையளிக்கும் விதமாக, ”நியூசிலாந்து மக்களின் ஒப்புதல் இல்லாமல் பிரிட்டிஷ் எந்தவித தீர்மானமும் எடுக்க முடியாது" என்ற சட்டம் நிறைவேறியது. தொழிற் கட்சியும் அரசு பதவிக்கு வந்து பல திட்டங்களை முன்னெடுத்தது. மவோரி இன பூர்வ குடிகளும் சோகத்திலிருந்து மீண்டு நிம்மதியின் பக்கம் திரும்பினர்.

மவோரி இனத்தவர்களிடம் ஒர் அற்புத பழக்கம் இருந்து வந்தது. அது, ’உடு’ என்ற பொருளாதாரப் பரிமாற்றம். அப்படி இதில் என்னவிருக்கிறது என்று கேட்கிறீர்களா?!

மவோரி இனத்தவர் - Māori people
மவோரி இனத்தவர் - Māori people

உடு என்ற பரிமாற்றத்தில் மூன்று கொள்கைகள் கடைப்பிடிக்கப்படுகின்றன. ஒன்று, ஒரு பொருளை மற்றவருக்குக் கொடுப்பவர் மனப்பூர்வமாகக் கொடுக்க வேண்டும். பதிலுக்கு எதையும் எதிர்பார்க்கக் கூடாது. இரண்டு, வாங்கிக் கொள்பவர் அதைத் திருப்பிக் கொடுக்க வேண்டும். அதைவிடச் சிறப்பானதையும் கொடுக்க வேண்டும். மூன்றாவது, இதுபோன்ற பரிமாற்றங்கள் தொடர்ந்து நடைபெற வேண்டும்.

யோசித்துப் பாருங்கள் இவையெல்லாம் நடந்தால், நாட்டில் மக்களின் ஒற்றுமை எப்படி இருக்குமென்று?! யோசிக்கும் கனத்தில் இன்னொன்றையும் சொல்கிறேன். இந்நாட்டில் இது போன்று, பல ஆச்சர்ய சம்பவங்கள் இருக்கின்றன.

மக்களுக்கு மட்டுமில்லை, எல்லா உயிரிணங்களுக்கும் வாழ ஏற்ற நாடுதான்!
பென்குயின் | penguin
பென்குயின் | penguin

ஆம், மக்கள் வாழ்வதற்கு ஏற்ற நாடாகக் கருதப்படும் இந்நாட்டில் ஆடுகளைப் போல பென்குயின்களும் அதிகம். தன் பாலின திருமணத்தையும் இங்கு அரசு அனுமதிக்கிறது. நியூசிலாந்தினருக்கு முக்கியம் கிவி தான். பழமா என்று நீங்கள் கேட்கலாம். பணம், பறவை என (கிவி டாலர், தேசியப் பறவை கிவி) என நாடே கிவிதான். உலகின் மிகப்பெரிய பூச்சி இனம் என்று அழைக்கப்படும் Giant Weta கூட நியூசிலாந்தில்தான் காணப்படுகிறது.

கிவி டாலர்,  பழம், Giant Weta
கிவி டாலர், பழம், Giant Weta
சிங்கப்பெண்களே வாருங்கள்...

இந்த குட்டியூண்டு நாடு உலகமே வியந்து பார்க்கும் வகையில் சமீபத்தில் ஒரு சட்டத்தை அமல்படுத்தியிருக்கிறது. கருச்சிதைவுக்கு ஆளாகும் பெண்களுக்கும் அவரின் கணவருக்கும் சம்பளத்துடன் கூடிய விடுமுறையை அளிக்கும் சட்டம்தான் அது. பெண்களுக்கு ஆறுதலாக ஆண்கள் தேவை என்பதால் அவர்களுக்கும் விடுமுறை. பெண்கள் அனைவருக்கும் முதன்முதலில் வாக்குரிமை வழங்கிய நாடும் நியூசிலாந்துதான்.

2019, மார்ச் 15 அன்று இந்நாட்டில் கிறிஸ்ட்சர்ச் என்ற இடத்தில் நடைபெற்ற ஒரு கோரச் சம்பவம் உலகத்திலுள்ள அனைவரையும் உலுக்கியது. வெள்ளிக்கிழமை முஸ்லிம்கள் தொழுகை நடத்திக் கொண்டிருக்கும் சமயத்தில் பள்ளிவாசலில் நுழைந்த பிரெண்டன் டரண்ட் என்ற தீவிரவாதி 50 பேரை சுட்டுக் கொன்றான். இந்த கோர சம்பவம் பற்றிப் பேசிய நியூசிலாந்து பிரதமர் ஜெசிண்டா ஆர்டெர்ன், இன்று நடந்த துப்பாக்கிச்சூடு தாக்குதல், நியூசிலாந்துக்கு ஒரு கறுப்பு நாள்’என்று கூறி வருத்தம் தெரிவித்தார். இதன் பின்னர், நாட்டில் கடுமையான சட்டங்களையும் நிறைவேற்றினார் ஜெசிண்டா.

ஜெசிண்டா
ஜெசிண்டா
ஜெசிண்டா, உலகமே வியந்து பார்க்கும் பெண். உலகின் மிகச்சிறிய வயதில் ஒரு நாட்டின் பிரதமரான பெண் இவர்தான். இவர் பதவியேற்கும் போது இவருக்கு வயது 37 தான். கோவிட் பெருந்தொற்றை பல நாடுகளும் சமாளிக்க முடியாமல் தவித்த போது ஆசுவாசப்படுத்திக் கொண்ட நாடாக நியூசிலாந்து இருந்ததற்குக் காரணம் ஜெசிண்டாதான்.

சமூகப் பரவலைக் கட்டுப்படுத்த சிங்கப்பூர், ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் பலகோடி ரூபாய் முதலீட்டில் Contact tracing போன்ற அப்ளிகேஷன்களை வடிவமைக்க ஆரம்பித்தன. அப்போது, அமைதியாக ஜெசிண்டா அறிவித்த ஒரு யோசனை உலக நாடுகளை மூக்கின் மீது இல்லை, இல்லை, மாஸ்க்கின் மீது கை வைக்கும்படி செய்தது. அது என்ன யோசனை என்று கேட்கிறீர்களா?! 90ஸ் கிட்ஸ் பயன்படுத்திய ட்ரிக்ஸ்தான்...

ஒவ்வொரு நாளும் தாங்கள் யாரையெல்லாம் சந்தித்தோம் யாருடன் எல்லாம் அன்றைய தினத்தில் தொடர்பிலிருந்தோம் என்பதை ஒரு டைரியில் எழுதி வைக்க வேண்டும். டைரியில் தாங்கள் சந்தித்தவர்களையும் தொடர்பிலிருந்தவர்கள் பற்றியும் எழுதுவது தொடர்புகளின் தடயத்தைக் கண்டறியும் எளிய வகையிலான வழி. எல்லாவற்றையும் எழுதுவது கொஞ்சம் ரிஸ்க் என்றாலும், பெரும் செலவில்லாத செம்ம ஐடியா இது!

சரி, உடனே நியூசிலாந்துக்கு ஒரு விசிட் அடிச்சுடலாமா என கிளம்பிவிடாதீர்கள். இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பதால் நம் நாட்டிலிருந்து மக்கள் நியூசிலாந்துக்குச் செல்ல அந்நாடு தடை விதித்துள்ளது.

கொரோனா பிரச்னை முடிந்ததும், நியூசிலாந்திற்குச் சென்று ஜெசிந்தாவிற்கு ஒரு வணக்கத்தை வைப்போம்!

(பயணிப்போம்)