லைஃப்ஸ்டைல்
தன்னம்பிக்கை
Published:Updated:

தொலைந்த வசந்தங்கள் திரும்பி வருகின்றன! - எழுத்தாளர் சிவசங்கரி

எழுத்தாளர் சிவசங்கரி
பிரீமியம் ஸ்டோரி
News
எழுத்தாளர் சிவசங்கரி

லாக் டெளன் அனுபவங்கள்

சிறுகதைகள், நாவல்கள், பயணக்கட்டுரைகள் என இலக்கியத்தின் பல தளங்களிலும் சிறப்பாகச் செயல்பட்டவர் எழுத்தாளர் சிவசங்கரி.

பெண்களின் முன்னேற்ற எண்ணங்களும் இளைய தலைமுறைக்கான வழிகாட்டுதல்களும் இவரின் படைப்புகளில் மேலோங்கி நிற்கும். பாரம்பர்யத்துக்கும் நவீனத்துக்குமான மையப்புள்ளியாக இவரின் படைப்புகள் திகழும். ‘`சரியான பாதையில் சமூகம் செல்வதற்கான விழிப்புணர்வுக்காக இன்னும் என்னவெல்லாம் எழுதலாம் என்பதில்தான் என் நாள்களைக் கழிக்கிறேன்’’ என்று என்றும் ஆர்வம் குறையாமல் சொல்லும் சிவசங்கரியின் லாக் டௌன் அனுபவப் பகிர்தல் இங்கே...

‘`லாக் டௌனில் நான் தனியாகத்தான் இருக்கிறேன். 77 வயதாகிறது. எனக்குத் துணையாக, ரொம்ப காலமாக ஓர் அம்மா இருக்கிறார். காலை நான்கு மணிக்கெல்லாம் எழுந்து, தியானம் செய்து, விஷ்ணு சஹஸ்ரநாமம் கேட்டு, வாக் சென்று, காலை உணவு முடிப்பேன். பின்னர் நான் எழுதிய பழைய கதைகள், கட்டுரைகளை வாசிப்பேன். அவை மறுபதிப்பாக வரும்போது சிறப்பான முறையில் இருக்க வேண்டும் என்பதற்காக, சின்னச் சின்ன திருத்தங்கள் செய்து கொண்டிருக்கிறேன். என் வாழ்க்கையின் மறக்க முடியாத தருணங்களை, ‘சூரிய வம்சம்’ என்ற தலைப்பில் இரண்டு தொகுதிகளாக வெளியிட்டுள்ளேன்.

தொலைந்த வசந்தங்கள் திரும்பி வருகின்றன! - எழுத்தாளர் சிவசங்கரி

சிறிதுநேரம் பாட்டுப் புத்தகங்களை எடுத்து வைத்துக் கொண்டு பாடிப் பார்ப்பேன். இசை, நம் மனதுக்கும் உடலுக்கும் ஒரே நேரத்தில் சந்தோஷம் தந்து, இளமையாகவும் உற்சாகமாகவும் வைத்துக்கொள்ளக் கூடியது. இரவு டி.வி பார்ப்பேன். குறும்படங்கள் பார்ப்பதும் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. புதியவர்கள் சிறப்பாகச் சாதிக்கிறார்கள். நானும் சமுதாயத்துக்கு என் எழுத்தின் வாயிலாக ஏதேனும் செய்திட வேண்டும் என்கிற சிந்தனையில்தான் நாள்கள் நகர்ந்துகொண்டிருக்கின்றன.

கோவிட்-19, லாக்டௌன்... நம் தலைமுறை இதுவரை சந்தித்திராத ஒரு வித்தியாசமான சூழல். என்றாலும், குடும்பத்துடன் ஒரு நெருக்கமான இணைப்பையும் பிணைப்பையும் உருவாக்கும் காரணியாகவும் இந்த நாள்களைப் பார்க்க முடிகிறது. வேக வேகமாக ஓடிக்கொண்டிருந்தவர்களின் கையைப் பிடித்து இழுத்து லாக் டௌன் வீட்டுக்குள் உட்கார வைத்துவிட்டது. நீண்டகாலத்துக்குப் பிறகு குடும்பத்தில் அனைவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிடுகிறார்கள். நாம் அனுபவிக்காத ஒரு சுகமாக இது இருக்கிறது. தொலைந்த வசந்தங்கள் திரும்பி வருகின்றன.

பல வருடங்களுக்கு முன், பிரான்ஸில் நடந்த ஒரு விவாகரத்து சம்பவம் பரபரப்பாக உலகம் முழுவதும் பேசப்பட்டது.

கணவன் மிகப்பெரிய தொழிலதிபர். மனைவி சமூகத்தில் மிகப்பெரிய சேவைகள் புரிந்தவர். விழாக்கள், கூட்டங்களில் கலந்துகொள்வதில் புகழ் பெற்றவர். சமூக அந்தஸ்தில் இருந்த இந்த இருவருமே மிகவும் பிஸியானவர்கள். 40 வயதுகளில் இருந்த இருவரும், ‘வாழ்வில் சுவாரஸ்யமில்லை. இனி நாம் ஏன் ஒன்றாக இருக்க வேண்டும்... தனித்தனியாகவே இருப்போம்’ என முடிவு செய்து, பரஸ்பரம் விவாக ரத்து கேட்டு கோர்ட்டுக்குப் போனார்கள்.

தொலைந்த வசந்தங்கள் திரும்பி வருகின்றன! - எழுத்தாளர் சிவசங்கரி

தம்பதியின் விவாகரத்து வழக்கு நீதிமன்றத்துக்கு ஒரு வெள்ளிக் கிழமையில் வந்தது. இருவரிடமும் விசாரித்த நீதிபதி, ‘சனி, ஞாயிறு இரண்டு நாள்களும் இவர்களை ஒரே அறையில் தங்க வையுங்கள். திங்களன்று தீர்ப்பளிக்கிறேன்’ என்று சொல்லி அனுப்பிவிட்டார். தம்பதிக்குக் கோபம், குழப்பம். வேண்டாவெறுப்பாக இருவரும் ஓர் அறையில் தங்கச் சென்றார்கள்.

இரண்டு நாள்கள் கழித்து நீதிமன்றம் வந்த அவர்கள், ‘எங்களுக்கு விவாகரத்து வேண்டாம். மனம்விட்டுப் பேசிக்கொள்வதற்கு நேரம் இல்லாமல் இருந்ததுதான் எங்களுக்கிடையில் இருந்த பிரச்னை. இப்போது அது தீர்ந்தது. நாங்கள் செய்த தவறுகள், செய்த செயல் களுக்கான காரணங்கள் என எல்லாவற்றையும் உணர்ந்துவிட்டோம்’ எனக்கூறி வழக்கை வாபஸ் பெற்றனர். இது கற்பனையல்ல, உண்மை!

எலியும் பூனையுமாக இருந்த எத்தனையோ தம்பதிகளை, அந்த நீதிபதிபோல இந்த லாக் டௌன் ஒரே வீட்டுக்குள் வைத்து பூட்டியிருக்கிறது. பல குடும்பங்களில் புரிந்துணர்வு, இணக்கம், நெருக்கம் ஏற்பட்டிருக்கின்றன. இது மிகப்பெரிய விஷயம். மாதக்கணக்காக கவுன்சலிங் கொடுத்தால்கூட இப்படி ஒரு மாற்றத்தை ஏற்படுத்த முடியாது. லாக் டௌனால் ஏற்பட்டிருக்கும் இன்னும் சில நல்ல விஷயங்களும் உள்ளன. சக மனிதர்களுக்கு உதவக்கூடிய குணம் வளர்ந்துள்ளது. வாழ்வாதாரங்களை இழந்து கஷ்டப்படுகிறவர்களுக்கு, உணவு கொடுத்து பலர் ஆதரிக்கிறார்கள். நம் பழைய பழக்கவழக்கங்கள், பாரம்பர்ய உணவு வகைகளையெல்லாம் கேலி, கிண்டல் செய்துகொண்டிருந்தவர்களுக்கு அவற்றின் அருமை புரிய ஆரம்பித்திருக்கிறது. அவற்றைச் செயல்படுத்திப் பார்க்கும்போது வாழ்க்கையின் சுவை நமக்குப் புரிகிறது.

மனதுக்கும் ஆரோக்கியத்தையும் புத்திக்குக் கூர்மையையும் தரும் பல்லாங்குழி, தாயக்கட்டை விளையாட்டுகள் மீண்டும் உயிர்பெற்றிருக்கின்றன. உறவுகளையும் நட்புகளையும் வீடியோ கால்கள் இணைக்கின்றன. விட்டுப்போனவர்கள், பிரிந்து போனவர்கள் எல்லாம் மீண்டும் சேர்வதற்கான அன்புப் பாலங்கள் கட்டப்பட்டுவருகின்றன.

சுற்றுப்புறச்சூழல் மாசு அடைந்திருந்த நிலை மாறி, இப்போது தூய்மையான காற்று எங்கும் பரவி வருகிறது. புகை மூட்டமாக இருந்த டெல்லி, இப்போது பளிச்சென்று இருக்கிறது. ‘நீலவானத்தை நாங்கள் பார்த்ததில்லை, இப்போது பார்க்கிறோம்’ என்கிறார்கள் டெல்லி மக்கள்.

ஒரு கடினமான சூழ்நிலைதான் புதுமையான கண்டுபிடிப்புகளுக்குத் தாய் என்று சொல்வார்கள். இந்தக் கடினமான நாள்கள் நமக்குப் புதியதொரு வாழ்க்கை முறையைத் தந்து விட்டுப்போகும் என்பது மட்டும் நிஜம்!’’