Published:Updated:

``விவசாயக்கூலி to தஞ்சாவூர் ஓவியம்” - துணை ஜனாதிபதியிடம் சில்ப குரு விருது பெற்ற கைவினைக் கலைஞர்!

துணை ஜனாதிபதியிடம் விருது பெறும் பன்னீர்செல்வம்
News
துணை ஜனாதிபதியிடம் விருது பெறும் பன்னீர்செல்வம் ( ம.அரவிந்த் )

தஞ்சாவூர் ஓவியம் வரைவதை பொருளாதார ரீதியாகப் பின் தங்கிய நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் ஆண்களுக்கு கற்றுத் தந்து அவர்கள் வாழ்வு மேம்பட செய்திருப்பதாக சில்ப குரு விருது பெற்ற கலைஞர் தெரிவித்துள்ளார்.

``விவசாயக்கூலி to தஞ்சாவூர் ஓவியம்” - துணை ஜனாதிபதியிடம் சில்ப குரு விருது பெற்ற கைவினைக் கலைஞர்!

தஞ்சாவூர் ஓவியம் வரைவதை பொருளாதார ரீதியாகப் பின் தங்கிய நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் ஆண்களுக்கு கற்றுத் தந்து அவர்கள் வாழ்வு மேம்பட செய்திருப்பதாக சில்ப குரு விருது பெற்ற கலைஞர் தெரிவித்துள்ளார்.

Published:Updated:
துணை ஜனாதிபதியிடம் விருது பெறும் பன்னீர்செல்வம்
News
துணை ஜனாதிபதியிடம் விருது பெறும் பன்னீர்செல்வம் ( ம.அரவிந்த் )

மத்திய அரசின் கைவினைத் துறை சார்பில் டெல்லியில் கைவினைக் கலைஞர்களுக்கான விருது வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில், உயரிய விருதான `சில்ப குரு விருது' கும்பகோணம் பகுதியைச் சேர்ந்த தஞ்சாவூர் ஓவியக் கலைஞர் பன்னீர்செல்வத்துக்கு வழங்கப்பட்டது.

அந்தக் கலைஞரை பலரும் பாராட்டி வரும் நிலையில், தஞ்சாவூர் ஓவியம் மூலம் எனக்குக் கிடைத்திருக்கும் விருது கலைகளுக்குப் பெயர் பெற்ற தஞ்சாவூருக்குக் கிடைத்த பெருமையாகக் கருதுகிறேன் என பன்னீர்செல்வம் நெகிழ்ந்துள்ளார்.

தஞ்சாவூர் ஓவியம் வரையும் பன்னீர்செல்வம்
தஞ்சாவூர் ஓவியம் வரையும் பன்னீர்செல்வம்

கைவினைக் கலைஞர்கள் மற்றும் கைவினைப் பொருள்களை ஊக்குவிக்கும் விதமாக, மத்திய அரசின் இந்திய கைவினைப் பொருள்கள் மற்றும் ஜவுளித்துறை சார்பில் ஆண்டுதோறும் விருதுகள் வழங்கப்பட்டு கைவினைக் கலைஞர்கள் கெளரவிக்கப்படுகின்றனர். அந்தவகையில் தேசிய அளவில் கைவினைக் கலைஞர்களைத் தேர்ந்தெடுத்து, உயரிய விருதான `சில்ப குரு விருதை' டெல்லியில் நடைபெற்ற விழாவில் மத்திய அரசு வழங்கியது.

2017, 2018, 2019 ஆகிய மூன்று ஆண்டுகளுக்கான சில்ப் குரு மற்றும் தேசிய விருதுகள் வழங்கும் விழாவில் குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் கலந்துகொண்டு கலைஞர்களுக்கு விருதுகளை வழங்கினார். இதில் 30 கலைஞர்களுக்கு சில்ப குரு விருது மற்றும் 78 கலைஞர்களுக்கு தேசிய விருகள் வழங்கப்பட்டன.

சில்ப குரு மற்றும் தேசிய விருது பெறுவதற்கு 3,000 கலைஞர்கள் விண்ணப்பித்திருந்தனர். இந்த நிலையில் 30 கலைஞர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களுக்கு சில்ப குரு விருது வழங்கப்பட்டது.

சில்ப குரு விருது பெற்ற பன்னீர்செல்வம்
சில்ப குரு விருது பெற்ற பன்னீர்செல்வம்

தஞ்சாவூர் ஓவியம் புவீசார் குறியீடு பெற்ற சிறப்புக்குரியது. தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் காமராஜர் நகரைச் சேர்ந்த கலைஞர் பன்னீர்செல்வம் `தஞ்சாவூர் ஓவியம்' வரைவதில் சிறந்து விளங்குபவர். இவருக்கு 2019-ம் ஆண்டுக்கான `சில்ப குரு' விருதை குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் வழங்கி பாராட்டினார்.

பன்னீர்செல்வம், தமிழகத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு சில்ப குரு விருது பெற்ற ஒரே கலைஞர் என்பது குறிப்பிடத்தக்கது. அரசு அதிகாரிகள், கைவினைக் கலைஞர்கள் உள்ளிட்ட பலரும் இந்திய அரசின் உயரிய விருதைப் பெற்ற பன்னீர்செல்வத்தைப் பாராட்டி வாழ்த்தி வருகின்றனர்.

தஞ்சாவூர் ஓவியம்
தஞ்சாவூர் ஓவியம்

இது குறித்து பன்னீர்செல்வம் கூறுகையில், என்னோட அப்பா நாடகக் கலைஞர். அப்பா, அம்மா ரெண்டு பேருமே எனக்கு 10 வயசு இருக்கும்போதே இறந்துட்டாங்க. கடும் வறுமையால் மூன்றாம் வகுப்புடன் படிப்பை நிறுத்திவிட்டேன். பின்னர், விவசாய பண்ணையில் கூலி வேலை பார்த்தேன். அப்பா நாடகக் கலையை உயிராக நேசித்தவர் என்பதால், என்னை அறியாமலேயே எனக்குள் கலைகள் மீது பெரும் ஈர்ப்பு ஏற்பட்டது. எனக்கு நடிப்பு வரவில்லை. அதனால் கலை சார்ந்த தொழிலில் ஈடுபட முடிவு செய்தேன்.

தஞ்சாவூர் ஓவியத்தின் அழகும், அதன் நேர்த்தியும் எனக்குள் பிரமிப்பை தந்ததால் அதை வரைவதற்கு முறைப்படி கற்றுக் கொண்டேன். விவசாயக் கூலித் தொழிலாளியாக வேலை பார்த்துக்கொண்டே தஞ்சை ஓவியம் வரைய கற்றுக் கொண்டேன். முழுமையாகத் தேறிய பிறகு, என்னோட 20 வயசுல நானே சொந்தமாக சக்கரபாணி ஆர்ட்ஸ் அண்ட் கிராப்ட்ஸ் என்ற பெயரில் தஞ்சை ஓவியம் வரைய ஆரம்பித்தேன்.

விருது விழாவில் பன்னீர்செல்வம்
விருது விழாவில் பன்னீர்செல்வம்

நான் வரைந்த தஞ்சாவூர் ஓவியம் உலகின் பல நாடுகளுக்கு சென்றது. கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாகத் தஞ்சாவூர் ஓவியம் வரைகிறேன். ஆனாலும், அதன் மீதுள்ள காதல் எனக்கு அதிகமாகிக் கொண்டே வருகிறது. எனக்கு வாழ்வு தந்த தஞ்சாவூர் ஓவியத்தைப் பொருளாதார ரீதியாகப் பின் தங்கிய நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் ஆண்களுக்கு கற்றுத் தந்து அவர்கள் வாழ்வு வளம்பெற செய்து வருகிறேன்.

என்னிடம் தற்போது 40 பெண்களுக்கு மேல் வேலை செய்கின்றனர். தஞ்சாவூர் ஓவியம் வரைவதில் சிறந்து விளங்குவதால் நான் ஏற்கெனவே தேசிய விருது, மாநில அளவில் பூம்புகார் விருது உள்ளிட்ட பல விருதுகள் பெற்றுள்ளேன். இந்த நிலையில் தற்போது இந்திய அரசின் மிக உயரிய விருதான சில்ப குரு விருதைப் பெற்றுள்ளேன்.

ஓவியக் கலைஞர் பன்னீர்செல்வம்
ஓவியக் கலைஞர் பன்னீர்செல்வம்

நாலுக்கு, நாலு சைஸில் ஒரே படத்தில் ஒரு பகுதியில் விஷ்ணு துர்க்கை, விநாயகர் அவதாரங்களைக் கற்பனையாக வரைந்திருந்தேன். அந்த ஓவியத்தைத் தேர்ந்தெடுத்து எனக்கு சில்ப குரு விருது வழங்கப்பட்டுள்ளது. விருதுடன் 20 கிராம் தங்க நாணயம் ஒன்று, ரூ.2 லட்சம் ரொக்கப் பரிசு, தாமிரப்பத்திரம், சால்வை, சான்றிதழ் உள்ளிட்டவற்றை குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் வழங்கி பாராட்டினார்.

கைவினைத் துறையில் மிக உயரிய விருதான சில்ப் குரு விருது எனக்கு கிடைத்திருப்பது தஞ்சாவூருக்கும், தமிழகத்துக்கும் கிடைத்த பெருமையாகக் கருதுகிறேன். இதனால் தஞ்சாவூர் ஓவியம் இன்னும் பிரபலமடையவும், வர்த்தகம் பெருகுவதற்குமான சூழல் ஏற்ப்பட்டுள்ளது" என்றார்.