Published:Updated:

``எங்க அண்ணன் முகத்தைப் பார்க்க ஆசையா இருக்கு!" பெற்றோரை இழந்து வறுமையில் வாடும் சிறார்கள்

அண்ணன் தங்கை
News
அண்ணன் தங்கை ( ம.அரவிந்த் )

''கண்ணு தெரியலைங்கிற வலியைவிட, நம்மள ஒரு விதத்துலகூட ஆண்டவன் நல்லா படைக்கலையேங்கிற வலிதான் மனசை ரணமாக்குது.''

``எங்க அண்ணன் முகத்தைப் பார்க்க ஆசையா இருக்கு!" பெற்றோரை இழந்து வறுமையில் வாடும் சிறார்கள்

''கண்ணு தெரியலைங்கிற வலியைவிட, நம்மள ஒரு விதத்துலகூட ஆண்டவன் நல்லா படைக்கலையேங்கிற வலிதான் மனசை ரணமாக்குது.''

Published:Updated:
அண்ணன் தங்கை
News
அண்ணன் தங்கை ( ம.அரவிந்த் )

பேராவூரணி அருகே, பெற்றோர் இறந்துவிட்ட நிலையில் ஆதரவுக்கு யாரும் இல்லாததால் அண்ணன், தங்கை இருவரும் வறுமையின் பிடியில் தவித்து வருகின்றனர். அதுவும் பார்வைக் குறைபாடுடைய மாற்றுத்திறனாளியான சிறுமி படும் துயரங்கள் வார்த்தைகளில் விவரிக்க இயலாதவை என அப்பகுதியினர் சோகத்துடன் தெரிவிக்கின்றனர்.

பேராவூரணி அருகே உள்ள சித்துக்காடு கிராமம் முனியாண்டி தெருவைச் சேர்ந்தவர்கள் அமுதா - பெத்தபெருமாள் தம்பதி. பெத்தபெருமாள் 5 வருடங்களுக்கு முன் இறந்துவிட்டார். இந்தத் தம்பதிக்கு பத்தாம் வகுப்புப் படிக்கும் காளிதாசன் என்ற மகனும் ஏழாம் வகுப்புப் படிக்கும் பார்வைக் குறைபாடுடைய மாற்றுத்திறனாளியான கார்த்திகா என்ற மகளும் உள்ளனர். கணவர் இறந்த பிறகு அமுதா விவசாயக் கூலி வேலைக்குச் சென்று பிள்ளைகளை வளர்த்து வந்துள்ளார்.

மாற்றுத்திறனாளி சிறுமி
மாற்றுத்திறனாளி சிறுமி

இந்நிலையில் கடந்த இரண்டு வருடங்களாகவே அமுதாவின் கால்கள் செயலிழந்து நடக்க முடியாமல் போனதுடன் ஒரே இடத்தில் முடங்கிக் கிடக்க வேண்டிய நிலைக்கு ஆளானார். இதனால் அமுதாவால் வேலைக்குச் செல்ல முடியவில்லை. நிலையான வருமானமும் இல்லை. தாய், பிள்ளைகளை வளர்க்கும் நிலை மாறி, கார்த்திகாவும் காளிதாசனும் தாயாக மாறி தன் அம்மா அமுதாவை பராமரித்து வந்தனர்.

ஏதோ கிடைப்பதை வைத்து தங்களுடைய வயிற்றை நிரப்பி பசியறியாமல் பார்த்துக்கொண்டனர். பார்வைக் குறைபாடுடைய மாற்றுத்திறனாளியான கார்த்திகா தன் அம்மா அமுதாவுக்கு எல்லாமுமாக மாறினார். அதே நேரத்தில் தங்கள் படிப்புக்கு எந்தத் தடையும் வராமல் இருவரும் அதே ஊரில் உள்ள அரசுப் பள்ளியில் படிப்பையும் தொடர்ந்து வருகின்றனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்நிலையில், சில மாதங்களாகவே அமுதாவின் உடல் நிலையில் பின்னடைவு ஏற்பட்டது. ஆஸ்பத்திரியில் சேர்த்து எப்படியாவது அம்மாவைக் காப்பாற்றிவிட வேண்டும் என அண்ணன், தங்கை இருவரும் தங்களுக்குத் தெரிந்தவர்களிடம் உதவி கேட்டனர். ஆனால், எந்தப் பலனும் இல்லை.

'என்னால எழுந்து நடக்க முடியலைன்னாலும் உங்களுக்கு ஒரு உசுரா நான் இருக்கேன்ங்கிற நெனப்பாச்சும் நிம்மதிய தருது. ஆனா, எனக்கு அப்புறம் உங்களை யார் கவனிப்பானு நினைச்சா அந்தக் கவலை என்னை நொறுக்குது' என்று கடந்த வாரம் தன் பிள்ளைகளைக் கட்டியணைத்துக் கலங்கியிருக்கிறார் அமுதா.

அம்மா மற்றும் பிள்ளைகள்
அம்மா மற்றும் பிள்ளைகள்

இறுதியாக, அந்தத் துயரம் நடந்தேவிட்டது. அமுதா தன் மூச்சை நிறுத்திக்கொள்ள, இப்போது அந்தப் பிள்ளைகளைப் பெரும் துயரம் சூழ்ந்துள்ளது. தற்போது வயதான தாத்தா, பாட்டியின் அரவணைப்பில் இருந்தாலும் வறுமை எனும் கொடுமை அவர்களைத் துரத்திக்கொண்டே இருக்கிறது.

கார்த்திகாவிடம் பேசினோம். ''இந்தச் சின்ன குடிசை வீட்டுல நான், அம்மா, அண்ணன் இருந்தோம். எங்கம்மாவால தனியா எந்த வேலையும் செய்ய முடியாது. எனக்கும் பார்வைக்குறைபாடு இருக்கு. ஒரு கண்ணு மட்டும்தான் லேசா தெரியும். ஒரு கண்ணு சுத்தமா தெரியாது. அம்மா எனக்காக உதவி கேட்டு எவ்வளவு அலைஞ்சும் பயனில்ல. ஆஸ்பத்திரியில நெறைய பணம் செலவாகும்னு எங்களால அதுக்கு மேல எதுவும் செய்ய முடியல.

சாப்பாட்டுக்கே காசு போதலை. இதுல கண்ணுக்கு எப்படி செலவுசெய்ய முடியும்? என் குறையை விட்டுத்தள்ளிட்டு, நானும் அண்ணனும் அம்மாவை பார்த்துக்கிட்டு வந்தோம். நான் சோறு வடிச்சு அம்மா பக்கத்துல வெச்சுட்டு பள்ளிக்கூடத்துக்குப் போவேன்.

'நாம நல்லா படிச்சாதான் அம்மாவ பெரிய ஆஸ்பத்திரியில சேர்த்து குணமாக்கலாம், உன் கண்ணையும் சரிசெய்யலாம்'னு அண்ணன் அடிக்கடி சொல்வான். அதனாலேயே ஒரு நாள்கூட லீவு போடாம பள்ளிகூடத்துக்குப் போயிருவேன்.

அம்மாவுக்கு உடம்புக்கு முடியலைன்னாலும், அது எங்க கூட இருந்ததே பெரிய நம்பிக்கை தந்துச்சு. 'நடக்குற நிலையில இருந்தா உன் கண்ண எப்படியாச்சும் சரி செய்திருப்பேன்'னு அடிக்கடி கலங்கும்.

அண்ணன் தங்கை
அண்ணன் தங்கை

ஒரு நாள் அண்ணன் வேலைக்குப் போயிட்டான். அம்மாவுக்கு நான் சோறு ஊட்டிக்கிட்டு இருந்தேன். அப்ப வீட்டுக்குள்ள பாம்பு வந்துட்டு. அம்மா 'பாம்பு பாம்பு'னு கத்துது. எனக்கு சுத்தமா எதுவுமே தெரியலை. அம்மா ரொம்ப தவிச்சுப்போய் கத்தி கத்தி அந்தப் பாம்பை விரட்டுச்சு. ஆனாலும், என் நெலமைய நெனச்சு அப்போ ரொம்ப கலங்குச்சு.

இப்ப எங்கள தவிக்க விட்டுட்டு போய்ட்டு. எங்க தாத்தா, பாட்டியோட இப்ப இதே வீட்டுல இருக்கோம். அவங்களுக்கு வயசாகிட்டதால வேலைக்குப் போக முடியலை. அம்மா இருந்தப்போ சின்னச் சின்ன உதவி கிடைச்சது. அதைவெச்சே ஒவ்வொரு நாளா ஓட்டினோம். இப்ப அதுக்கும் வழியில்ல. இந்தச் சின்ன வயசுல என்ன செய்யுறதுனு தெரியாம அண்ணன் தவிச்சு நிக்குறான்.

'பாப்பா, நமக்கு இருக்க ஒரு பாதுகாப்பான வீடு, உன் கண்ணுக்கு சிகிச்சை, இதுமட்டும் கிடைச்சுட்டா போதும் நாம நிம்மதியா வாழலாம்'னு அண்ணன் சொல்வான். இத்தனை வருஷத்துல அதுக்கு ஒரு வழி கிடைக்கல. அம்மா செத்ததுக்கு அப்புறம் இருந்த கொஞ்சம் நம்பிக்கையும் போச்சு.

வீடு
வீடு

கண்ணு தெரியலைங்கிற வலியைவிட, நம்மள ஒரு விதத்துலகூட ஆண்டவன் நல்லா படைக்கலையேங்கிற வலிதான் மனசை ரணமாக்குது. அந்த நேரத்துல என்னையும் அறியாம வழியுற கண்ணீரை, எங்கண்ணன்தான் துடைச்சுவிட்டு சமாதானப்படுத்துவான்.

எங்கம்மா முகத்தை நான் முழுசா பார்த்ததில்ல. ஆனா, எனக்கு இன்னொரு அம்மாவா இருக்குற எங்கண்ணன் முகத்தை பார்க்கணும்னு ஆசையா இருக்கு. எங்க கஷ்டம் தீர வழிகிடைக்குமா?'' - நம்பிக்கையின் விளிம்பில் நின்று கேட்கிறார் கார்த்திகா.