Published:Updated:

இடம்... பொருள்... ஆவல்: சென்னைக்கு ஆர்மீனியர்கள் வந்தது எப்படி? அவர்கள் செய்தது என்ன?

ஆர்மீனியன் தேவாலயம்
News
ஆர்மீனியன் தேவாலயம்

இயேசுவின் 12 சீடர்களில் ஒருவரான செயிண்ட் தாமஸின் அடக்கத்தலம் அமைந்துள்ள பரங்கிமலையிலேயே தங்கள் குடியிருப்பையும் அமைத்துக்கொண்டார்கள் ஆர்மீனியர்கள்.

Published:Updated:

இடம்... பொருள்... ஆவல்: சென்னைக்கு ஆர்மீனியர்கள் வந்தது எப்படி? அவர்கள் செய்தது என்ன?

இயேசுவின் 12 சீடர்களில் ஒருவரான செயிண்ட் தாமஸின் அடக்கத்தலம் அமைந்துள்ள பரங்கிமலையிலேயே தங்கள் குடியிருப்பையும் அமைத்துக்கொண்டார்கள் ஆர்மீனியர்கள்.

ஆர்மீனியன் தேவாலயம்
News
ஆர்மீனியன் தேவாலயம்

சென்னைக்கு 2000 ஆண்டுகால வரலாறு உண்டு. அந்தப் பழைமைக்குச் சான்றாக இன்றும் பொலிவு குலையாமல் ஓங்கி உயர்ந்து நிற்கின்றன கோயில்கள். பல்லவர்கள், சோழர்கள், விஜயநகர நாயக்கர்கள், நவாப்புகள் என பலரும் கோலோச்சிய சென்னையை சுமார் 380 ஆண்டுகளுக்கு முன்பு கைப்பற்றியது கிழக்கிந்திய கம்பெனி.

பிரிட்டிஷ்காரர்கள், டச்சுக்காரர்கள், போர்ச்சுகீசியர்கள், பிரெஞ்சுக்காரர்கள் என பலரும் சென்னையில் தங்கள் சுவடுகளைப் பதித்துச் சென்றிருக்கிறார்கள். அந்த அடையாளங்களை இப்போதும் சென்னை தாங்கிக்கொண்டிருக்கிறது.

சென்னையிலிருந்து சுமார் 4500 கிலோ மீட்டருக்கு அப்பால், ரஷ்யாவுக்கு அருகே இருக்கிறது ஆர்மீனியா நாடு. இங்கிருந்து நிறைய பேர் மருத்துவம் படிக்கப் போவதால் அந்த நாடு சிலருக்கு அறிமுகம். அந்த ஆர்மீனியாவுக்கும் சென்னைக்கு நெருங்கிய பந்தம் உண்டு.
ஆர்மீனியாவின் பெயரில் சென்னையில் ஒரு தெரு இருக்கிறது. அங்கு ஓங்கி உயர்ந்து நிற்கிறது, ஆர்மீனியர்கள் வழிபட்ட செயின்ட் மேரீஸ் ஆர்மீனியன் தேவாலயம்.

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு எதிரில் வடசென்னை நோக்கி நீளும் தெரு ஒன்றின் பெயர்தான் ஆர்மீனியன் தெரு. இப்போது அரண்மனைக்காரத் தெரு என்று மாறிவிட்டது இந்தப் பெயர்.

ஆர்மீனியன் தேவாலயம்
ஆர்மீனியன் தேவாலயம்
சென்னைக்குள் எப்படி வந்தது ஆர்மீனியா... வாருங்கள் வரலாற்றைப் புரட்டுவோம்.

கிறிஸ்தவத்தைத் அதிகாரப்பூர்வ சமயமாக ஏற்றுக்கொண்ட முதல் நாடு ஆர்மீனியா. இந்தக் குட்டி நாடு, 1991 வரை சோவியத் யூனியனின் அங்கமாக இருந்தது. சுமார் 30 லட்சம் பேர் வசிக்கும் இங்கு இப்போது வேளாண்மை தான் பிரதான தொழில். அக்காலத்தில் பெரு வணிகர்களின் தேசமாக இருந்தது ஆர்மீனியா.

ஆங்கிலேயர்களின் அழைப்பின் பேரில், உயர்தர பருத்தி மற்றும் பட்டுத் துணிகளையும் வைரக்கற்களையும் விற்பதற்காக 17ம் நூற்றாண்டில் சென்னை வந்திறங்கினார்கள் ஆர்மீனியர்கள். அந்த நாள்களில் பரங்கிமலைக்கு மேலிருக்கும் தேவாலயம்தான் ஆர்மீனியக் கப்பல்களும், போர்ச்சுகீசியக் கப்பல்களும் வந்திறங்க கலங்கரை விளக்கமாக விளங்கியது. இயேசுவின் 12 சீடர்களில் ஒருவரான செயிண்ட் தாமஸின் அடக்கத்தலம் அமைந்துள்ள பரங்கிமலையிலேயே தங்கள் குடியிருப்பையும் அமைத்துக்கொண்டார்கள் ஆர்மீனியர்கள்.

சரக்குகளை ஏற்ற இறக்க கடலோரத்தில் ஆர்மேனிய வணிகர்கள், தேர்வு செய்த இடம்தான் இப்போது அரண்மனைக்காரத் தெருவாக மருவியிருக்கும் ஆர்மீனியன் தெரு. சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பு தங்கள் வழிபாட்டுக்காக செயிண்ட் ஜார்ஜ் கோட்டைக்கு அருகில் செயிண்ட் மேரீஸ் தேவாலயத்தைக் கட்டியெழுப்பினார்கள் ஆர்மீனியர்கள். மரங்களைக் கொண்டு பேரழகாகக் கட்டியெழுப்பப்பட்ட இந்த ஆலய வளாகத்தில் 350 ஆர்மீனியர்கள் மீளாத்துயிலில் ஆழ்ந்திருக்கிறார்கள். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வரலாறு... பலரின் சரித்திரம் இந்திய சரித்திரத்தோடு பின்னிப் பிணைந்திருக்கிறது.

ஹரோத்யூனின் கல்லறை
ஹரோத்யூனின் கல்லறை

ஆர்மீனியாவின் முதல் பத்திரிகை வெளியானது சென்னையில்தான். ஆர்மீனியாவின் விராஸ் நகரத்தைச் சேர்ந்தவர் ஹரோத்யூன் ஷ்மோவ்னியன். ஒரே வாரத்தில் அடுத்தடுத்து தனது இரண்டு மகன்களையும் பறிகொடுத்த ஹரோத்யூன், அந்தத் துயரிலிருந்து விடுபட சமய சேவையில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். பாதிரியாரான அவரைச் சென்னைக்கு அனுப்பியது தேவாலயத் தலைமை. சென்னை வந்த ஹரோத்யூன், 1794-ல் ‘அஸ்தரார்’ என்ற ஆர்மினியாவின் முதல் பத்திரிகையை சென்னையிலிருந்து தொடங்கினார். சென்னை செயிண்ட் மேரீஸ் தேவாலயத்தின் பாதிரியாராக 40 ஆண்டுகள் பணிபுரிந்த ஹரோத்யூன் 1824-ல் மரணம் அடைந்தார். அவருடைய கல்லறை, தேவாலயத் தோட்டத்தில் இருக்கிறது.

இந்த தேவாலயத்தில் 150 கிலோ எடையுடைய 6 மணிகள் உள்ளன. வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் இந்த மணிகள் ஒலிக்கும். இந்தியாவின் மிகவும் பழைமையான தேவாலயங்களில் ஒன்று இது.
ஆர்மீனியர்கள் கட்டடம்
ஆர்மீனியர்கள் கட்டடம்

ஆர்மீனியர்கள் சென்னைக்கு அளித்த இன்னொரு கொடை... இன்று மறைமலையடிகள் பாலம் என்று அழைக்கப்படும் மர்மலாங் பாலம். 1720-21ல் சென்னையில் பெருமழை கொட்டித் தீர்த்தது. மரங்களால் கட்டப்பட்ட பாலங்கள் சேதமடைந்து நகரம் துண்டானது. பரங்கிமலை தேவாலயத்துக்குச் செல்ல முடியாமல் மக்கள் சிரமப்பட்டார்கள். அத்தருணத்தில் சென்னைக்கு வந்த ஆர்மேனிய வணிகர் கோயா பெட்ரஸ் உஸ்கான் தன் சொந்தப்பணம் ஒரு லட்சத்தைச் செலவு செய்து இன்றைய சைதாப்பேட்டையையும் கிண்டியையும் இணைத்து அடையாறு ஆற்றுக்கு நடுவே ஒரு பாலத்தைக் கட்டினார்.

மாம்பலம் கிராமத்துக்கு அருகிலிருந்ததால் இந்தப் பாலத்தை ஐரோப்பியர்கள் மர்மலான் பிரிட்ஜ் என்று அழைத்தார்கள். காலப்போக்கில் அது மர்மலாங் பாலம் என்றழைக்கப்பட்டது. ஒரு நதியின் குறுக்கே நிரந்தரமாக உருவாக்கப்பட்ட முதல் பாலம் இதுதான். இந்தப் பாலத்தைப் பராமரிக்க ஒரு பெருந்தொகையை பிரிட்டிஷ் நிர்வாகத்துக்குத் தந்தார் கோயா. 1973ல், மர்மலாங் என்ற உச்சரிப்புக்கு ஏற்றவகையில் இந்தப் பாலத்துக்கு மறைமலையடிகளின் பெயரைச் சூட்டினார் அப்போதைய முதல்வர் கருணாநிதி.

மர்மலாங் பாலம்
மர்மலாங் பாலம்
இன்று சென்னையில் ஆர்மீனியர்கள் இல்லை. பருத்தியும் பட்டும் வைரமும் விற்ற ஆர்மீனியன் தெருவில் இப்போது துரித உணவகங்களும் நடைபாதைக்கடைகளும் நிரம்பியிருக்கின்றன. ஆனாலும் வாரம் ஒருமுறை ஒலிக்கும் தேவலாய மணியின் ஓசை ஆர்மீனியர்களின் வரலாற்றை உயிர்ப்பித்துக்கொண்டே இருக்கிறது.