காதலர் தினம் இனிதே நிறைவடைந்து முடிந்துவிட்டது. சோஷியல் மீடியாக்களில் ஆங்காங்கே போடப்பட்ட சில போஸ்ட்டுகளைத்தவிர பெரிதாக எந்தக் கொண்டாட்டத்தையும் பார்க்கமுடியவில்லை. 2000-ம்களில் கோலாகலமாக ஆரம்பித்த வேலன்டைன்ஸ் தின ஆர்ப்பரிப்புகள் கடந்த சில ஆண்டுகளாகக் குறைந்துகொண்டே வருவதைப் பார்க்க முடிகிறது. ஏன் என்று யோசிக்க யோசிக்கப் பல விஷயங்கள் நம் சமூகத்தில் மாறியிருப்பது கண்கூடாகத் தெரிகிறது.
இந்திய வாழ்வியல் முறையில், குடும்பங்களில் திருமணம் மிக மிக மிக முக்கியமானது. திருமணத்தை முதன்மையாக கொண்டு, திருமணத்தை சுற்றியே இயங்கும் நம் சமூகத்தில் சமீபத்திய மாற்றங்கள் இருவேறு திசைகளில் பயணிக்கிறது. துணையை தேர்ந்தெடுப்பதிலும், ஒத்துவராத உறவில் இருந்து விலகுவதிலும் பெண்கள் சுயமாக முடிவெடுக்கக்கூடிய சூழ்நிலைகள் அதிகரித்திருக்கின்றன. இது நம்பிக்கை அளிப்பதாக இருக்கிறது. ஆனால், இன்னொருபுறம் மீண்டும் அதிக அளவில் சுயசாதிக்குள்ளான ஏற்பாட்டுத் திருமணங்களும் #ArrangedMarriage-களும் பெருகி வருகின்றன.

முன்பு வேலை செய்த அலுவலகத்தின் உயரதிகாரி ஒரு ஃப்ரெஞ்சுக்காரர். தமிழர்களின் ஆடம்பர திருமணங்களை கண்டு ஆச்சர்யப்பட்டு, "ஏன் இவ்வளவு செலவு செய்கிறீர்கள்?" என்று கேட்டார்.
''நாங்கள் பிறந்ததில் இருந்தே திருமணத்துக்கு தயாராவது பற்றிய பேச்சுக்கள் ஆரம்பத்துவிடும். பெண் குழந்தையாக இருந்தால் திருமணத்துக்குத் தேவையான நகைகளை சேர்ப்பதற்கான சேவிங்ஸ் தொடங்கிவிடும். நகைச்சீட்டு திட்டத்தில் சேர்வது தொடங்கி Fixed Deposit வரை சேமிப்பைத் தொடங்கிவிடுவார்கள். ஆண் குழந்தையாக இருந்தால் இன்னும் சொத்து சேர்க்க ஆரம்பித்துவிடுவார்கள்" என்றேன். "திருமணத்திற்குப் பிறகு?" என்று கேட்டார். "பிறகு என்ன... இதே வழியில் நாங்கள் எங்கள் பிள்ளைகளின் திருமணத்தை நோக்கி ஓடுவோம்" என்றேன். "எப்போது உங்களுக்காக வாழ்வீர்கள்?" என்றார். "இதுதான் மரியாதையான, கௌரவமான, சரியான வாழ்வியல்முறை என்று போதிக்கப்பட்டு வளர்க்கப்பட்டிருக்கிறோம்” என்றேன்.
ஐஸ்வர்யா தனுஷ் இயக்கிய '3' திரைப்படத்தில் தனுஷ், தான் ஒரு பெண்ணை காதலிப்பதாகவும் அவளைத் திருமணம் செய்துகொள்ள விரும்புவதாகவும் பெற்றொர்களிடம் சொல்லுவார். சுயமாக சம்பாதிக்க ஆரம்பிப்பதற்கு முன்பு திருமணம் பற்றி பேசுகிறாயே என்று கேட்கும் அப்பாவிடம் தனுஷ் மிகவும் சாமர்த்தியமாக பேசுவார். "நீங்கள் சம்பாதித்தது எனக்கு வேண்டாம். ஆனால், தாத்தாவின் சொத்துக்களை எனக்கு கொடுங்கள். நான் வாழ ஆரம்பிக்கிறேன்" என்பார். இந்தப் படம் வந்த புதிதில் இந்தக் காட்சி எனக்கு மிகவும் சரியானது போல் தோன்றியது. காரணம் இறுதி காலத்தில் சொத்து இருந்தால்தான் மதிப்பு என்று நினைத்துக்கொண்டு, பிள்ளைகள் முன்னேற முடியாமல் தவிக்கும் காலத்தில்கூட கைகொடுத்து உதவாமல் வேடிக்கை பார்த்த பெற்றோர்களை நான் பார்த்திருக்கிறேன்.
ஆனால், சமீப ஆண்டுகளாக நம் வீடுகளில் காட்சிகள் மாறி வருகின்றன. பிள்ளைகள் தனுஷ் கதாபாத்திரம் போல் எல்லாவற்றுக்கும் பெற்றோர்களை நம்பியே இருக்கின்றனர். இன்று முப்பந்தைந்து வயதுக்கு கீழ் இருக்கும் இளைஞர்களில் பெரும்பாலானோர் தங்களது Comfort Zone-ல் இருந்து யாருக்காகவும், எதற்காகவும் வெளிவருவதில்லை.

50-60 வயதுவரை பிள்ளைகளுக்காக உழைத்துக்கொட்டிய பெற்றோர்கள் ஓய்வுகாலத்திலும் அதே பிள்ளைகளால் நெருக்கப்படுகிறார்கள். பொருளாதார உதவிகள் மட்டுமல்லாமல் பல குடும்பங்களில் பேரப்பிள்ளைகளைக் கவனித்துகொள்ள, வீட்டு உதவிக்கு என வெளியூர், வெளிநாடுகளுக்கு இடம்பெயரும் சூழ்நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். அவர்களின் ஓய்வு, உடல்நிலை, பிடித்த விஷயங்கள் பற்றியெல்லாம் பெரும்பாலான பிள்ளைகள் கவனிப்பதுகூட இல்லை. இதற்கு அடிப்படை காரணம், பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை ''கஷ்டம் தெரியாமல் வளர்த்துக்கிறேன்'' என்று வசதிக்குமீறி சொகுசாக வைத்திருப்பதும், இறுதிவரை தங்கள் பிள்ளைகளைக் குழந்தைகளாகவே நடத்துவதும்தான்.
ஆரம்ப பள்ளிக்கு செல்லும் குழந்தைக்கு Project Work-ஐ பெற்றோர்களே செய்துகொடுப்பதை போலவே பிள்ளைகளின் திருமண வாழ்க்கையிலும் தங்கள் பங்கு இருக்க வேண்டும் என பெற்றோர்கள் நினைக்கிறார்கள். அதற்கு பிள்ளைகள் நன்றிக்கடனுடன் நடந்துகொள்ள வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள். பாசம், கடமை போன்ற கயிறுகளால் கட்டி வைத்து இறுதிவரை எச்சூழலிலும் அது அறுபடாமல் பார்த்துக்கொள்கிறார்கள்.
இந்த சொகுசிற்குப் பழகிப்போன இன்றைய இளைஞர்கள் துணையை தேர்ந்தெடுப்பதில் இருந்து திருமணத்திற்கான செலவுகள்வரை எல்லாவற்றையுமே தங்களது பெற்றோரே செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். தானே சம்பாதித்து செலவு செய்து திருமணம் செய்ய வேண்டும் என்கிற வைராக்கியத்துடன் இருந்த இறுதி தலைமுறை இன்று 35 வயதை தாண்டிய #80sKids ஆக இருப்பார்கள்.
காதல் திருமணங்கள் நடக்கிறது என்றாலும் பெரும்பாலும் அதே சாதியில் அல்லது சமமாக கருதும் சாதி/வர்க்கத்திற்குள் மட்டுமே பெரும்பாலும் நடக்கிறது. சிறிது சிரமப்பட்டு வீட்டில் சம்மதம் வாங்கியோ அல்லது வீட்டை எதிர்த்தோ நடக்கும் காதல் திருமணங்களின் எண்ணிக்கைக் குறைந்துள்ளது. காதலில் அர்ப்பணிப்பு (Commitment) மற்றும் பொறுப்பு (Responsibility) குறைந்துள்ளது. யாரை திருமணம் செய்தாலும் ஃபேஸ்புக்கில் ஒரு ரிலேஷன்ஷிப் ஸ்டேட்டஸ், நான்கு #MandatoryWeddingSelfies மற்றும் இன்ஸ்டாகிராமில் மேட்சிங் உடைகளில் #ReelVideos... மற்றதை பெற்றோர்கள் பார்த்துகொள்வார்கள் என்கிற அளவில்தான் இன்றைய திருமணங்கள் நடந்துகொண்டிருக்கின்றன. திருமணத்திற்கு அடிப்படையான காதல், ஈர்ப்பு, மனப்பொருத்தம், புரிதல், நம்பிக்கை எல்லாமும் தேவை என்கிற நிலை மாறி வருகிறது.

'சுயம்வரம்' என்று 1999-ல் ஒரு திரைப்படம் வந்தது பலருக்கும் நினைவிருக்கலாம். ஊரிலேயே பெரும் பணக்கார தம்பதியர் தங்களது ஒன்பது பிள்ளைகளுக்கும் ஒரே நேரத்தில் வரன் தேட சுயம்வரம் நடத்துவார்கள். பிள்ளைகள் ஏற்கெனவே காதலிப்பவர்களை பெற்றோருக்குத் தெரியாமல் சுயம்வரத்துக்கு தயார் செய்து கூட்டி வருவார்கள். அதில் குறிப்பிட்டு சொல்லும்படியான இரண்டு கதாபாத்திரங்கள் படத்தில் உண்டு. பட்டியல் இனத்தவராக வரும் குஷ்பு மற்றும் தூய்மைப் பணியாளராக வரும் ஐஸ்வர்யா.
சுயம்வரம் என்ற பெயரில் திருப்பூரில் 2018-ல் ஒரு குறிப்பிட்ட சாதியின் திருமண ஏற்பாட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. 35 வயதிற்கு மேற்பட்ட ஆண்களும் 28 வயதிற்கு மேற்பட்ட பெண்களும் (குழந்தையுடன் இருக்கும் கணவரை இழந்து/பிரிந்து வாழும் பெண்கள் உட்பட) கலந்துகொள்வார்கள் என அறிவிப்பு வெளியானது. எதிர்பார்த்ததை விட பல மடங்கு கூட்டம் வந்து பிரதான சாலையை ஸ்தம்பிக்க வைத்த இந்நிகழ்வை யாரும் அவ்வளவு சீக்கிரம் மறந்திருக்க முடியாது. விஷயம் என்னவென்றால் அங்கே ஒரு பெண்கூட வரவே இல்லை. எல்லாமே ஆண்கள். 'சுயம்வரம்' திரைப்படத்தை திருப்பூரில் நடந்த ஒரு உண்மை சுயம்வரத்துடன் ஒப்பிட்டுப் பார்த்தால் 20 ஆண்டுகள் கழிந்து நம் சமூகம் நாற்பது ஆண்டுகள் பின்னால் சென்றிருப்பதைப் புரிந்துகொள்ள முடியும்.
தமிழ்நாடு முழுவதுமே இன்று 30-35 வயதுக்குள் நிறைய ஆண்கள் பெண் கிடைக்காமல் திருமணத்திற்காகக் காத்திருக்கிறார்கள். தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களில் 35 வயதுக்கு மேற்பட்ட திருமணமாகாத ஆண்களின் எண்ணிக்கை பெருகிக்கொண்டே இருக்கிறது. கேரளாவுக்குச் சென்று தாங்களே பணம், நகை கொடுத்து மலையாளப் பெண்களைத் திருமணம் செய்துகொண்டு வருவதும் சில ஆண்டுகளாக நடக்கிறது. அப்படி செய்பவர்கள்கூட உள்ளூரில் வேறு சாதி பெண்ணை திருமணம் செய்யத் தயாராக இருப்பதில்லை.

அதுமட்டுமல்ல, விவசாயம், சினிமா போன்ற நிரந்தர வருமானம் இல்லாத தொழில் செய்வோர், குறைந்த மாத சம்பளக்காரர்கள், நிரந்தர வேலை இல்லாதோருக்கு (ஆண்/பெண் இரு பாலருக்கும்) திருமணம் நடப்பதற்கான சாத்தியங்கள் குறைந்துகொண்டே வருகிறது.
படிப்பு, வேலை, வீடு, வாகனம், பணம் என்று ஏழு மலைகள், ஏழு கடல்களை கடந்து ஒருவர் திருமணத்திற்குத் தயாராகி வரும்போது ”நான் இருக்கிறேன் பார்” என்று மந்திரவாதியின் குகை வாசல் பூதமாய் வந்து நிற்கிறது ஜாதகம். கிரகங்களின் அடிப்படையில் இப்போது சொல்லும் திருமணத்தடைகளில் பலவும் இருபது ஆண்டுகளுக்கு முன்னால்வரை நாம் கேள்விப்படாதது. நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு பெரும்பாலான மக்களுக்குக் குறிப்பாக பெண் பிள்ளைகளுக்கு பிறந்த ஜாதகமே கிடையாது. இவை எல்லாம் இன்று திடீரென்று உருவானது என்பது ஜாதகம் இல்லாமல் திருமணம் செய்து இவ்வளவு ஆண்டுகள் நன்றாக வாழ்ந்த பெற்றோர்களுக்குக்கூடப் புரிவதில்லை.
அதேபோல் இன்று விவாகரத்தில் முடியும் பெரும்பாலான திருமணங்கள் ஜாதகம் பார்த்துதான் முடிவு செய்யப்படுகின்றன. ஆனாலும் இவர்களில் பலரும் மறுமணம் செய்துகொள்ளும்போதும் ஜாதகத்தின் பின்னால் ஓடுவதை பார்க்கையில் அயர்ச்சியாக இருக்கிறது.
நமது சமூகத்தில்/உறவினர்களில் அதிக வசதி படைத்தவர்களின் திருமணங்களைப் போல நாமும் செய்திட வேண்டும் என்கிற போட்டிதான் இங்கு திருமணங்களை இவ்வளவு ஆடம்பரமாக்கியிருக்கிறது.
வாழ்த்துவதற்காக எல்லோரையும் அழைத்த காலம் போய், அலுவலகத்தில், வங்கியில் பர்சனல் லோன் வாங்கி வசதியையும் ஆடம்பரத்தையும் காட்சிப்படுத்தும் நிகழ்வாக திருமணங்கள் மாறியிருக்கின்றன. இந்திய பெண்களின் திருமணங்கள் இன்னமும் தங்கத்தைச் சுற்றியே முடிவெடுக்கப்படுகின்றன. நகைகளும், பட்டாடைகளும் நமது அழகையும், 'ஸ்டாண்டர்டையும்' நிர்ணயிக்கும் என ஒரு பெண் நம்புவதே அவளை சுயமரியாதை அற்றவளாக, சுதந்திரமற்றவளாக ஆக்குகிறது.

1980-கள் வரை தமிழ் திருமணங்கள் பெரும்பாலும் வீட்டில் அல்லது கோயிலில் நடைபெற்று வந்தன. 90களின் பிற்பாதியில் இருந்துதான் ஆடம்பர திருமண முறைகள் உருவாக ஆரம்பித்தன. இந்த 25 ஆண்டுகளில் சாதாரண நடுத்தரவர்க்க குடும்பங்கள்கூட #ConceptWedding என ஆடம்பர திருமணங்களை நடத்தவே விரும்புகின்றன. மண்டபத்தின் ஒரு நாள் வாடகை ஒரு லட்சம், மேடை பூ வேலைப்பாடு ஒரு லட்சம், மணமக்கள் உடைகள் ரெண்டு லட்சம் என்பதெல்லாம் இன்று மாதம் ஐம்தாயிரம் சம்பாதிக்கும் ஒருவர் திருமணத்திற்கு செய்யும் 'அத்தியாவசிய செலவுகள்'.
தேவையற்ற செலவுகளுக்காக, தேவையில்லாமல் கடன் வாங்கி வாழ்க்கை முழுவதும் மன அழுத்தத்திலேயே ஓடுவது அவசியமற்றது. சரி தேவையானது, தேவையில்லாதது என்று எப்படி முடிவெடுப்பது? தலைவர் வடிவேலு சொன்னதுதான். "வெட்டி பந்தாவுக்காக செய்யும் எல்லாமே தேவையில்லாததுதான்."
தங்கள் அம்மா, பாட்டியைப் போன்றே மனைவியும் நடந்துகொள்ள வேண்டும் என எதிர்பார்க்கும் பெரும்பாலான ஆண்களுக்கு பெண்கள் தங்கள் சம உரிமையை விட்டுத்தர தயாராக இல்லாதது சிக்கலுக்குள்ளாக்குகிறது. பிரச்னை என்று வரும்போது “நீங்கள்தானே திருமணம் செய்து வைத்தீர்கள்... பிரச்னைகளை நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள்” என்று பெற்றொர்களின் மேல் பொறுப்பை ஏற்றிவிடுகின்றனர்.
பெற்றோர்கள் உடைமை எண்ணத்தால் #Possessiveness பிள்ளைகளின் குடும்பத்தில் #CCTV கேமிராவை போல் நடந்துகொள்கின்றார்கள். தினமும் பிக்பாஸ் அப்டேட்ஸ் பார்ப்பதுபோல் தங்கள் பிள்ளைகளின் வாழ்க்கையில் நடந்து விவாகரத்துவரை கொண்டு செல்லும் பெற்றோர்கள் நம்மிடையே உண்டு.

சுதந்திரம் பெற்று பல ஆண்டுகள் கழித்து பல தடைகளை கடந்து கணவன் மனைவி இருவரும் Mutual Consent-ல் பிரிய வழிவகை செய்யும் விவகாரத்து சட்டங்கள் இந்தியாவில் ஏற்படுத்தபட்டுவிட்டன. கல்வி, பொருளாதார சுதந்திரம் என பெண்கள் முன்னேற்றம் அடைந்து சுயமுடிவுகள் எடுக்க ஆரம்பித்த பின்னர் ஒடுக்கப்படும் உறவுகளில் இருந்து வெளியேறுவதும் அதிகமாக இருக்கிறது. அதே சமயம் குடும்ப வன்முறை தடைச்சட்டத்தை பயன்படுத்தி பொய் வழக்குகளினால் கணவனிடம் பணம் பறிக்கும் மோசமான காரியத்தையும் படித்து நல்ல வசதியுடைவர்களே செய்துகொண்டிருக்கிறார்கள்.
இருபது வருடங்களுக்கு முன்பு மேட்ரிமோனி வெப்சைட்டுகள் வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு ஒரு வரமாக பார்க்கப்பட்டது. பிறகு அது வேறு மாநிலத்தில் குடியேறிவிட்டவர்கள், வேலைக்கு சென்றவர்கள் தங்கள் ஊருக்குள் திருமணம் முடிக்க உதவியது. அதில் பெரும்பாலானவர்கள் எம்மதமும் சம்மதம் எனும் அடிப்படையில் பதிவு செய்திருப்பார்கள். அது மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தப் போகிறது என்று நம்பிக்கொண்டிருக்கையில், சமூகத்தைப் பின்னோக்கி இழுத்துச் செல்வதுபோல் திருமண தரகு விளம்பரங்கள் சாதிரீதியாக, உட்பிரிவு ரீதியாக வரத்தொடங்கி இருக்கின்றன.
சாதியின் அடிப்படையில் குலத்தொழிலை மட்டுமே செய்துவந்த காலம் ஒன்று இருந்தது. இட ஒதுக்கீடு, கல்வி உரிமைகள் மூலமாக குலத்தொழில் முறையை ஒழித்து யாரும் எந்த வேலையும் செய்யலாம் என காலம் மாறிவரும் சூழலில் இது போன்ற விளம்பரங்கள் குலத்தொழிலை மறைமுகமாக சொல்லுவது மிகப்பெரும் சமூகக்கேடு. அதுமட்டுமல்ல, இந்த சாதி திருமணத் தரகு விளம்பரங்கள் பெரும்பாலும் ஆண்கள் தங்களின் குலத்தொழிலுக்கு ஏற்ற துணையை தேர்வு செய்வதுபோல் அமைக்கப்பட்டிருப்பது சாதியம் மட்டுமல்ல ஆணாதிக்கமும்கூட.
இன்ஸ்டாகிராம், ட்விட்டர், ஃபேஸ்புக், யூடியூப் போன்ற தளங்களில் பெண்கள் சுதந்திரமாக இயங்க ஆரம்பித்திருக்கும் சூழலில் பெண்களை வீட்டுக்குள் பூட்டி பத்திரமாக வையுங்கள் எனும் பெண்ணடிமைத்தனத்தை மீண்டும் வலிந்து மக்களிடத்தில் திணிக்கின்றன இவ்விளம்பரங்கள்.

பெண்ணோ/ஆணோ சமூகம் நம் மேல் திணிக்கும் நடைமுறைகளில் இருந்து நம்மை பிடுங்கிக்கொண்டு தனித்து நிற்பது அவ்வளவு ஒன்றும் சிரமமல்ல. ஆரம்பத்தில் சில நாட்கள் கேலிகளையும், கேள்விகளையும் சந்திக்க வேண்டும். கண்டுகொள்ளாமல் விட்டால் போதும். பேசிய வாய்கள் ஓய்ந்துவிடும்.
எதற்கெடுத்தாலும் சுற்றியுள்ள மக்களுக்காகப் பயந்து, அவர்களுக்காக முடிவெடுத்து, அவர்களுக்காக ஓடிக் கொண்டிருந்தால் நம் வாழ்க்கையில் அவர்கள்தான் இருப்பார்கள். நாம் இல்லை. சமூக மாற்றம் தனி மனிதனில் இருந்து தொடங்குகிறது. காதல், திருமணம் என எந்த முடிவாக இருந்தாலும், எந்த உறவாக இருந்தாலும் தனித்து முடிவுகள் எடுப்போம். தனித்து நிற்க தைரியம் கொள்ளுவோம். இல்லையெனில் எப்போது நாம் நமக்காக வாழ்வோம்?