லைஃப்ஸ்டைல்
தன்னம்பிக்கை
Published:Updated:

முதல் இஸ்லாமியப் பெண் தமிழ்த் திரைப் பாடலாசிரியர் - ரோஷனாரா பேகம்

ரோஷனாரா பேகம்
பிரீமியம் ஸ்டோரி
News
ரோஷனாரா பேகம்

இஸ்லாமியப் பெண்கள் திரைத்துறைக்கு வருவது இன்றுகூட பெரும் சிக்கலாகத்தான் உள்ளது.

`குடியிருந்த கோயில்' - தமிழ்த் திரைப்பட ரசிகர்கள் மனத்தில் நீங்காத இடம்பிடித்த இந்தப் படத்தில் பல சிறப்புகள் உண்டு. படத்தின் கதாநாயகன் எம்.ஜி.ஆரும், கதாநாயகி ஜெயலலிதாவும் பின்னாளில் தமிழக முதல்வர்களானார்கள். கொலைமுயற்சியில் இருந்து பெரும் போராட்டத்துக்குப்பின் உயிர்தப்பிய எம்.ஜி.ஆர் `குடியிருந்த கோயில்' படத்தில் நடித்தார். உடல்நலம் பெற்று எம்.ஜி.ஆர் முதல் நாள் படப்பிடிப்புக்கு வந்தபோது, அவருக்கு ஆளுயர மாலையைத் தயாரிப்பாளர் ஜி.என்.வேலுமணி அணிவித்து வாழ்த்திய பின்பே வேலைகள் தொடங்கின.

படத்தின் இன்னொரு சிறப்பு, பாடலாசிரியர் புலமைப்பித்தன். இந்தப் படத்தில் சூலூர் புலமைப்பித்தன் திரைப்பாடலாசிரியராக அறிமுகமானார். `நான் யார் நான் யார், நீ யார்?' என்ற பாடல் மூலம் சூலூர் புலமைப்பித்தனுக்கு திரைத்துறையில் அடித்தளம் அமைக்க எம்.ஜி.ஆரும் வேலுமணியும் உதவினார்கள். `குடியிருந்த கோயில்' என்றாலே ரசிகர்கள் மனத்தில் `குங்குமப் பொட்டின் மங்கலம்' பாடல் சட்டென நிழலாடும்; கூடவே வெண்ணிற சேலையில் நளினமாக ஆடும் ஜெயலலிதாவும், அலட்டலில்லாத காதலை வெளிப்படுத்தும் எம்.ஜி.ஆரும் மனக்கண் முன்வந்து போவார்கள். இரு முன்னாள் முதல்வர்கள் நடித்த அந்தப் பாடலை எழுதியவர், நம் முதல் பெண் ரோஷனாரா பேகம்!

இஸ்லாமியப் பெண்கள் திரைத்துறைக்கு வருவது இன்றுகூட பெரும் சிக்கலாகத்தான் உள்ளது. ஆனால், 1968-ம் ஆண்டே இஸ்லாமியப் பெண் ரோஷனாரா பேகம் திரைப்பாடல் எழுதியது பெரும் ஆச்சர்யம்தான். துரதிர்ஷ்டவசமாக அவர் எழுதிய `குங்குமப் பொட்டின் மங்கலம்' பாடல் அவரின் முதலும் இறுதியுமான திரைப்பாடலாக அமைந்து விட்டது. காலத்தின் அடுக்குகளில் எங்கோ மறைந்துபோனார் ரோஷனாரா.

ஆனால், அவரை நினைவில்வைத்திருந்து தேடிக் கண்டுபிடித்து ஆவணப்படுத்தி யிருக்கிறார் இயக்குநர் டி.விஜயராஜ். சில ஆண்டுகளுக்கு முன் பாடகர் டி.எம்.சௌந்தர ராஜன் பற்றிய `இமயத்துடன்' என்ற பிரமாண்ட தொலைக்காட்சித் தொடரைத் தயாரித்த விஜயராஜ், டி.எம்.எஸ் மற்றும் ரோஷனாரா இருவரையும் பேட்டி கண்டிருக்கிறார். இசை உரிமை சிக்கல்கள் காரணமாக அவரது தொலைக்காட்சித் தொடர் வெளியாவதில் தாமதமாகியிருக்கிறது.

பேட்டி ஒன்றில் ரோஷனாரா குறித்து பேசியிருந்த விஜயராஜ், அவரை பெரும் சிரமத்துக்கிடையே தேடிக் கண்டுபிடித்ததை இரு வரிகளில் சொல்லியிருந்தார். இன்றும் வெளிநபர்கள் யாரையும் சந்திக்க ஆர்வமின்றி மறுக்கிறார் ரோஷனாரா.

கோவையில் ஒரு காலத்தில் மிகப் பிரபலமாக இருந்த மோட்டார் நிறுவனம் `ஷைனிங் ஸ்டார்' மோட்டார்ஸ். அதன் உரிமையாளர் ஷேக் முஸ்தபாவின் மகள் ரோஷனாரா. இவரின் தாய் பேகம், பல ஆண்டுகளாக மருத்துவப் பணியாற்றியவர்.

ரோஷனாரா பேகம்
ரோஷனாரா பேகம்

கோவை செயின்ட் ஃபிரான்சிஸ் கான்வென்டில் ரோஷனாரா எஸ்.எஸ்.எல்.சி வரை படித்தார். நல்ல குரல் வளம்கொண்டிருந்த இவர் திரைப் பாடல்களை அருமையாகப் பாடக்கூடியவர். கைலாசம் என்பவரிடம் முறைப்படி இசை கற்றிருந்தார். பள்ளி நிகழ்ச்சிகளில் பாடிப் பரிசுகள் வென்றிருக்கிறார். எழுத்துத் திறமையும் கைவர, பாடல்கள் எழுதவும் தொடங்கினார். அவரே எழுதி, பாடியிருக்கும் இசைத்தட்டுகள் சில வெளியாகியுள்ளன. அதுமட்டுமல்ல... இவர் கதை எழுதும் ஆர்வமும் கொண்டிருந்தார்.

மகளின் திறமையை உணர்ந்திருந்த தந்தை ஷேக் முஸ்தபா, கலைத்துறையினருடன் நெருங்கிய நட்பு பாராட்டி வந்தவர். கோவையிலுள்ள அவர்கள் வீட்டுக்கு மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் வந்து செல்வதுண்டு. விஸ்வநாதனிடம் தன் மகளின் பாடல்கள் பற்றி ஷேக் முஸ்தபா சொல்ல, ரோஷனாராவின் பாடல்களை வாசித்து, அவ்வப்போது எம்.எஸ்.விஸ்வநாதன் திருத்தங்கள் சொல்லியிருக்கிறார். ரோஷனாவை எழுதத் தூண்டியவர்களில் எம்.எஸ்.வி-க்குப் பெரும் பங்குண்டு.

ஷேக் முஸ்தபாவின் நண்பரான பிரபல இயக்குநரும் தயாரிப்பாளருமான ஏ.பி.நாகராஜன், தான் தயாரித்து இயக்கவிருந்த `நவராத்திரி' திரைப்படத்துக்குப் பாடல் எழுத ரோஷனாராவை அணுக நினைத்தார். அது நடைபெற `வேளை' வாய்க்கவில்லை என்று சொல்கிறது ரோஷனாராவின் பேசும் படம் பேட்டி. ‘குடியிருந்த கோயில்’ படத்தின் தயாரிப்பாளரான வேலுமணியிடம், ரோஷனாராவுக்கு வாய்ப்பு வழங்கும்படி எம்.எஸ்.வி. பலமாக சிபாரிசு செய்தார். வேலுமணியின் அழைப்பின்பேரில், பாடல் எழுத ரோஷனாரா சென்னை வந்து சேர்ந்தார். வேலுமணி, படத்தின் இயக்குநர் கே.சங்கர் மற்றும் இசையமைப்பாளர் எம்.எஸ்.வி. முன்னிலையில் பாடல் எழுத வேண்டிய காட்சி பற்றி ரோஷனாராவிடம் விளக்கப்பட்டது.

பாடலின் பல்லவியை ரோஷனாரா அங்கேயே எழுதிவிட்டார். `குங்குமப் பொட்டின் மங்கலம், நெஞ்சமிரண்டின் சங்கமம்' என்ற பல்லவியைக் கேட்ட படக்குழுவினருக்கு பெரும் மகிழ்ச்சி. காரணம், படத்துக்கு அவர்கள் முதலில் சூட்டியிருந்த பெயர், `சங்கமம்'. வேடிக்கை என்னவென்றால், அந்தப் பெயர் ரோஷனாராவிடம் தெரிவிக்கப்படவில்லை. படத்தின் பெயரை பாடலின் இரண்டாவது அடியில் அறியாமலேயே ரோஷனாரா எழுதியிருந்தது அவர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. நான்கு நாட்கள் சென்னையில் தங்கி பாட்டெழுதித் தந்துவிட்டு ரோஷனாரா கோவை திரும்பிவிட்டார்.

என்ன காரணத்தாலோ அவர் எழுதிய பாடல் மாற்றப்பட்டு, வேறு பாடல் எழுதி, படமாக்கப்பட்டது. ஆனால், வேலுமணி தலையிட்டு, கட்டாயம் ரோஷனாரா எழுதிய பாடலே படத்தில் இடம்பெற வேண்டும் என்று சொன்ன பிறகு, மீண்டும் ‘குங்குமப் பொட்டின்’ பாடல் படமாக்கப்பட்டது. இந்தத் தகவல் மறுபடி சென்னைக்கு வந்தபோதுதான் வேலுமணி மூலம் ரோஷனாராவுக்குத் தெரியவந்தது.

‘குடியிருந்த கோயில்’ வெளியாகி சூப்பர் ஹிட் ஆனது. அன்றைய காதல் ஜோடிகளின் நெஞ்சில் ‘குங்குமப் பொட்டின்’ பாடலும், அதை எழுதிய ரோஷனாராவும் குடிகொண்டுவிட்டார்கள்.

ரோஷனாராவை எம்.ஜி.ஆர் வெகுவாகப் பாராட்டினார். 1968-ம் ஆண்டு அக்டோபர் மாதம் வெளியான ரோஷனாராவின் பேட்டி இப்படிச் சொல்கிறது... `இப்போது சென்னை வந்து தங்கியிருக்கும் ரோஷன் பல படங்களுக்குப் பாடல் புனையும் வாய்ப்பு பெற்றிருக்கிறார். வேலுமணியின் நவரத்னா பிலிம்ஸ் படத்துக்கு ரோஷன் பாடல்கள் இயற்றுகிறார். ஏ.பி.நாகராஜனின் அடுத்த படத்திலும் அவரது பாடல்கள் இடம்பெறுகின்றன. பாரத் மூவீஸ் ‘அஞ்சல் பெட்டி’, ஈ.வி.ஆர். பிக்சர்ஸ் ‘தங்கச் சுரங்கம்’, வீரகுமார் மூவிஸ் படம் ஆகியவற்றிலும் அவரது பாடல்கள் இடம்பெறுகின்றன.'

இப்படி கைநிறைய வாய்ப்புகள் இருந்த போது ரோஷனாரா என்ன நினைத்தார், என்ன சொல்ல விரும்பினார் என்பதை பேட்டியின் இறுதி வரிகள் விளக்குகின்றன.

`விஸ்வநாதனும் வேலுமணியும் என் வளர்ச்சியில் அக்கறை காட்டியதால்தான் நான் இன்று என் திறமையைக் காட்டி பாராட்டும் புகழும் பெறமுடிந்தது. அவர்களுக்கு எப்படி நன்றி சொல்வதென்றே எனக்குப் புரியவில்லை. தற்போது வாய்ப்பளித்திருக்கும் படாதிபதிகளுக்கும் பெரிதும் நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன். என்னைப் போன்ற புதியவர்களுக்கு வாய்ப்பளிக்கிறார்களே... தமிழகப் பத்திரிகைகள் அவர்களுக்கு மிக நல்லமுறையில் விளம்பரம் தந்து உற்சாகமூட்டுகின்றன. என்னதான் திறமையிருந்தாலும் விளம்பரமின்றி என்ன பயன்? ரசிகர்கள் ஒரே பாட்டெழுதிய என்னைப் பாராட்டி ஊக்குவித்ததை என்னால் மறக்க முடியாது.' ஒரு படத்திற்கு கதை - வசனம் - பாடல்கள் எழுத வேண்டும் என்பதுதான் அவரது ஆசை என்ற வரிகளுடன் பேட்டி முடிவுறுகிறது.

எழுதுவதில் இத்தனை ஆர்வம் கொண்டிருந்த ரோஷனாரா அதன்பின் என்ன ஆனார் என்பது நமக்குப் புரியாத புதிர். பொது வாழ்க்கை மற்றும் சினிமாவிலிருந்து முழுவதும் ஒதுங்கிக்கொண்டார்.

2005-ம் ஆண்டுவாக்கில் இயக்குநர் விஜயராஜ் ரோஷனாராவைத் தேடத் தொடங்கினார். டி.எம்.சௌந்தரராஜனின் இசைக்குழுவில் பாடவந்த கார்த்திகா என்ற பெண்ணின் தந்தை சந்திரசேகர், கோவையில் ரோஷனாரா இருக்கக்கூடும் என்று தகவல் தர, அவரைத் தேடி கோவைக்கு ரயிலேறினார் விஜயராஜ். கடும் சிரமத்துக்குப் பின் அவரால் ரோஷனாராவை சந்திக்க முடிந்தது. `பெரிய தொகுப்பு வீடு ஒன்றின் சிறு பகுதியில் மிக எளிமையாக வசிக்கிறார் ரோஷனாரா. திருமணம் செய்துகொள்ளவில்லை. சுற்றிலும் அவரது அண்ணன் முதலாக சொந்தமும் பந்தமும் சூழ அமைதியாக வாழ்கிறார். தமிழருக்கே உரிய கரிய நிறம், பெரிய ஃபிரேம் போட்ட கண்ணாடி என்று மிகச் சாதாரணர் போல எளிமையிலும் எளிமையாக இருக்கிறார்' என்று விவரிக்கிறார்.

டி.எம்.சௌந்தர ராஜனுடன் ஒரு நேர்காணல் எடுக்க வேண்டும் என்ற வேண்டுகோளை விஜயராஜ் வைத்தபோது பெரிதும் தயங்கித்தான் ஏற்றுக்கொண்டிருக்கிறார் ரோஷனாரா. கோவையின் பட்சிராஜா ஸ்டூடியோவுக்கு வெளியே படப்பிடிப்பு நடந்தபோது தான் அளிக்கப்போகும் முதலும் இறுதியுமான பேட்டி இதுவே என்று சொல்லியே ரோஷனாரா பேசியிருக்கிறார். படப்பிடிப்புக்கு காரில் செல்லும்போதுதான், பாடலைப் பாடிய டி.எம்.எஸ்ஸுக்கே ‘குங்குமப் பொட்டின்’ பாடலாசிரியர் ரோஷனாரா என்று தெரிந்திருக்கிறது. விஜயராஜ் சொல்லும் வரை அவரும் அந்தப் பாடலை இயற்றியவர் வாலி என்று நினைத்திருக்கிறார்.

விஜயராஜின் உதவியுடன், அவரது வெளிவராத ‘இமயத்துடன்’ தொலைக்காட்சித் தொடரின் சிறு பகுதியைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. `பிற மதத்தைச் சேர்ந்த உங்களுக்கு, ‘குங்குமப் பொட்டின்’ என்று தொடங்கும் இந்து பண்பாடு மாறாமல் எழுதும் எண்ணம் எப்படி வந்தது?' என்று டி.எம்.எஸ். கேட்க, `சிறு வயதில் பாடல், கவிதை இவற்றின் மேல் எனக்கு ஈடுபாடு உண்டு; எம்.எஸ்.வி அவர்கள் எங்கள் குடும்ப நண்பர். ஜி.என்.வேலுமணி ஐயாவும் அப்பாவும் நல்ல நண்பர்கள். அவர்கள் இருவராலும்தான் எனக்கு இந்த வாய்ப்பு கிடைத்தது. நான் என்றுமே அவர்கள் இருவருக்கும் நன்றிகூற கடமைப்பட்டிருக்கிறேன்' என்று ரோஷனாரா பதில் சொல்கிறார்.

`நடிகர்களுக்குப் பாடும் போது எந்த உணர்வோடு நான் பாடுவேனோ அந்த உணர்வு நடிக்கும்போது அவர்கள் முகங்களில் இருக்கிறதா என்று நான் பார்ப்பேன். நீங்கள் பாடலை எழுதும் போது நினைத்த உணர்வு நடிகர்களிடம் தெரிந்ததா?' என்று அடுத்த கேள்வியை டி.எம்.எஸ் கேட்கிறார். `அந்தப் பாடலை எழுதும் போது நான் மிகவும் சிறுவயதுப் பெண். அவ்வளவு தூரம் அதை உணர்ந்து பார்க்கக்கூடிய அறிவு எனக்கு அப்போது இல்லை. ஆனால், பாடலை எல்லோரும் ரசித்துப் பார்க்கும்போது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. என் முதல் பேட்டியே உங்களுடன் என்பது எனக்கு மிகப் பெருமையாக இருக்கிறது. இதற்கு காரணமான அனைவருக்கும் என் நன்றி' என்று பதில் சொல்லி பேட்டியை முடிக்கிறார் ரோஷனாரா.

`முதல் பெண்கள்' பகுதிக்காக அவரைத் தொடர்புகொள்ள முயன்றும் முடியவில்லை. இன்றும் அவர் உலகப் பார்வையில் இருந்து ஒதுங்கியிருப்பதையே விரும்புகிறார் .குங்குமப்பொட்டின் மங்கலத்தைப் போற்றி எழுதிய இஸ்லாமியப் பெண்மணி இன்றும் கோவையில் எங்கோ ஒரு பகுதியில் நிம்மதியாக வாழ்ந்துகொண்டிருக்கிறார். அவருக்கான உலகம், அவருக்கான உறவுகள் என அவரது சின்னஞ்சிறிய உலகில் சஞ்சரித்துக் கொண்டிருக்கிறார்.

`குங்குமப்பொட்டின்' பாடலில் வரும் வரி ஒன்று நினைவுக்கு வருகிறது... `மனம் சிந்திக்க சிந்திக்க சொந்தம், தினம் சந்திக்க சந்திக்க இன்பம், பெண்ணான பெண் என்னைத் தேடி கொண்டதே எண்ணங்கள் கோடி.'

தமிழகத்தின் கடைக்கோடியில் எங்கோ யார் எண்ணங்களிலோ இந்தப் பாடல் இருக்குமட்டும், ரோஷனாரா என்ற பெண்ணான பெண்ணும் இருப்பார்!