கட்டுரைகள்
Published:Updated:

விஜய் - அஜித்; ஜோதிகா - வனிதா; ஸ்டாலின் - சீமான் -இவர்கள் இமேஜை உடைப்பது யார்?

இவர்கள் இமேஜை உடைப்பது யார்?
பிரீமியம் ஸ்டோரி
News
இவர்கள் இமேஜை உடைப்பது யார்?

விநாயக முருகன்

ஓ.கே... ஆரம்பத்திலேயே ஒரு டிஸ்க்ளைமர். இது சமூக ஊடகங்களை விமர்சிக்கும், பாராட்டும் கட்டுரை அல்ல. சமூக ஊடகங்கள் மூலம் நாம் எப்படியெல்லாம் ‘இன்ஃப்ளூயன்ஸ்’ செய்யப்படுகிறோம் என்பதை அலசும் ஒரு முயற்சி. முழுதாக வாசியுங்கள். கொஞ்சம் யோசியுங்கள்... விகடனின் சமூகவலைதளப் பக்கங்களில் இது தொடர்பான கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள். தொடர்ந்து விவாதிப்போம்... தெளிவோம்!

லகின் மிகப்பெரிய திண்ணை என்று சமூக ஊடகங்களைச் சொல்லலாம். ஒவ்வொரு நொடியும் யாராவது எதையாவது பேசிக்கொண்டுதான் இருக்கிறார்கள். பலசமயம் அர்த்தமற்ற விஷயங்கள்கூட டிரெண்டிங்கில் வந்து திகைக்க வைத்துவிடுகின்றன.

யாரோ ஒருவர் ‘ப்ரண்ட்ஸ்’ படத்தில் வடிவேலு தலையில் சுத்தியல் விழுந்த காட்சியைக் குறிப்பிட்டு ‘நேசமணி தாக்கப்பட்டார்’ என்று பதிவிட, என்ன ஏதுவென்றே புரியாத உலகமக்கள், நேசமணி நலம்பெற்று வரவேண்டுமென்று #PrayForNesamani எனக் கண்ணீருடன் பிரார்த்தனை செய்ததைப் போன்ற ஒரு நகைச்சுவையை நாம்வாழும் இந்தக் காலத்திலேயே பார்த்துவிட்டோம். முன்பெல்லாம் பிரபலமடைய ஒருவர் நிறைய படிக்க, எழுத வேண்டும். அல்லது தங்கள் துறையில் சில பத்தாண்டுகள் தேர்ந்த அனுபவத்தைக் கொண்டிருக்க வேண்டும். ஆனால், இப்போதெல்லாம் அது தேவை இல்லை. ஒருத்தர் சும்மாவே காமிராவைப் பார்த்துக்கொண்டு இரண்டு மணிநேரம் உட்கார்ந்துள்ளார். அதை வீடியோ எடுத்து யூடியூப்பில் போட அதை உலகமெங்கும் உள்ள மில்லியன் பார்வையாளர்கள் பார்த்து ரசித்துள்ளார்கள். இந்த நவீன காலத்தில் யார் எப்போது உலகின் ஹீரோவாக மாறுவார் என்றே சொல்லமுடியாது.

விஜய் - அஜித்; ஜோதிகா - வனிதா; ஸ்டாலின் - சீமான் -இவர்கள் இமேஜை உடைப்பது யார்?

சமூக ஊடகங்கள் அவ்வளவாக பிரபலமாகாத காலத்திலேயே எழுத்தாளர் சுஜாதா இந்த இரண்டுநிமிடப் புகழைப்பற்றிக் குறிப்பிட்டிருப்பார். இதுபோன்ற அர்த்தமற்ற உள்நோக்கம் இல்லாத விஷயங்கள் டிரெண்டிங்கில் போவது பிரச்னை இல்லை. ஆனால் ஒரு தனிநபரோ, அல்லது ஒரு குழுவினரோ திட்டமிட்டுப் பரப்பப்படும் செய்திகள் அந்தக் கருத்தை ஏற்கும் மனநிலையில் உள்ளவர்கள் அதை முகநூல், டிவிட்டர், வாட்ஸப் என்று பகிரும்போதுதான் இதன் உள்நோக்கம், அரசியல் பற்றிப் பேச வேண்டியுள்ளது. டிரெண்டிங்கில் வரும் ஒவ்வொருவருக்கும் அவரது பின்னணி, அரசியல் நிலைப்பாடு சார்ந்தே எதிர்ப்புகளும், ஆதரவுகளும் எழுகின்றன. சமூக ஊடகங்களில் எதிர்ப்பு என்பது நெருப்பில் பெட்ரோல் ஊற்றுவது போலத்தான். சிறுசிறு அலைகள் திரண்டுபேரலையாக மாறுவதுபோல சிலமணி நேரத்திலேயே அது பெரிய டிரெண்டிங்காக மாறிவிடும். ஆனால் இது ஓரிரு நாள்கள்தான். பிறகு இன்னொரு பிரச்னை வந்ததும் இதை மறந்து அதைப்பற்றி எல்லாரும் பேசுவார்கள். ஒரு தெருவில் கும்பலாக நூறு பேர் ஓடும்போது அங்கு சும்மா நிற்கும் ஒருத்தனும் அவர்களோடு சேர்ந்து ஓடுவான். அவனை நிறுத்தி எதற்கு ஓடுற என்று கேட்டால் என்ன சொல்வான்? மற்ற எல்லா ஊடகங்களைவிடவும் சமூக ஊடகங்கள் வேறுபட்டு இருக்கக் காரணமே இந்த மந்தைமனநிலைதான்.

ஸ்பீல்பெர்க் படமொன்றின் கதைப்படி பதிமூன்று ஏலியன்கள் இருக்கும். அதில் ஒரு ஏலியனின் மூளை காணாமல் போய்விடும். ஆனால் மற்ற ஏலியன்களால் சிந்திக்கமுடியாது. காணாமல்போன மூளையும் வந்தால்தான் மற்ற மூளைகள் எல்லாம் இயங்கும். அதுபோலத்தான் சமூக ஊடகங்களில் இருப்பவர்கள் கூட்டாக ஏற்படுத்தும் டிரெண்டிங்கும்.

எதிர்ப்பைப் போலவே சமூக ஊடகங்களில் இருக்கும் ஆதரவு மனநிலையும். இரண்டுக்கும் பெரிய அளவில் வித்தியாசமில்லை. சமூக வலைதளத்திலேயே அரசியல்கட்சி நடத்துபவர்களெல்லாம் உண்டு. அவர்களுக்கு மில்லியன்கணக்கில் லைக்ஸ் விழும். ஆனால் தேர்தல் என்று வந்தால் பத்தாயிரம் ஓட்டுகூட விழாது. இதிலிருந்து பொதுமக்களின் மனநிலை என்பது வேறு, சமூக ஊடகங்களில் நிலவும் மனநிலை என்பது வேறு என்று தெரிந்து கொள்ளலாம். இந்தச் சமூக ஊடகச்செய்திகளில் வரும் செய்திகளின் நம்பகத்தன்மையையும் பார்க்கவேண்டும். எனக்கு ஐந்து தலை நாகமொன்றின் படம் தொடர்ந்து ஐந்தாண்டுகளாக வாட்ஸப்பில் வருகிறது. ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு ஊரில் அந்தப் பாம்பு இருப்பதாகப் படத்தில் செய்தி இருக்கும். எனக்குத் தெரிந்து வாட்ஸப் கண்டுபிடிக்கப்பட்ட நாள்முதல் இந்த நாகம் இந்தியாவெங்கும் பயணித்துக்கொண்டிருக்கிறதென்று நினைக்கிறேன். இதுபோன்ற விஷமற்ற ஜந்துகளைப் பகிர்பவர்கள் ஒருபக்கம் என்றால், போட்டோஷாப் போலிகள் இன்னொரு பக்கம்.

விஜய் - அஜித்; ஜோதிகா - வனிதா; ஸ்டாலின் - சீமான் -இவர்கள் இமேஜை உடைப்பது யார்?

ஒருவரின் சொந்த அரசியல் நிலைப்பாடு காரணமாக திட்டமிட்டுக் குறிவைத்துத் தாக்கப்படுபவர்கள் ஒருபக்கம் என்றால் இன்னொரு பக்கம் சில ஆதாரமான சண்டைகள் எப்போதும் இருக்கும். புதிய டிரெண்டிங் இல்லாத நேரத்தில் ஏற்படும் வெற்றிடத்தை இந்தச் சண்டைகள் நிரப்பும். உதாரணம் அஜித்-விஜய் ரசிகர்கள் அவ்வப்போது அடித்துக்கொள்வது. இளையராஜா-ரகுமான் ரசிகர்கள் மோதிக்கொள்வது எல்லாம் இதில் அடங்கும். பிக்பாஸ் புகழ் கவினுக்கு ஒரே நாளில் 10 லட்சம் ட்விட்டுகள் இட்டு சாதனை செய்கிறார்கள். ரசிகர்களே இல்லாத இரண்டு பிரபலங்கள் மோதிக்கொள்ளும்போதும் அந்தச்சண்டை டிரெண்டிங்கில் போவதற்கான வாய்ப்புகள் மிக அதிகம். அண்மையில் வனிதா விஜயகுமார்-லட்சுமி ராமகிருஷ்ணன் சண்டை டிரெண்டிங்கில் போனது. அதுபோல த்ரிஷா-மீரா மிதுனை முன்வைத்து டிவிட்டரில் தீ பறந்தது. ஏதாவது ஒரு விஷயம் பற்றி ஒரு பிரபலம் அவரது நிலைப்பாட்டை சொல்லும்போது, முதலில் அங்கு இரண்டுவித அபிப்ராயங்கள் வரும். ஒருவர் அந்த பிரபலத்தின் கருத்தை ஆதரிப்பார். இன்னொருவர் அதை எதிர்ப்பார். எதிர்ப்பவர்கள் ஓரணியில் நின்றுக்கொண்டு கல்வீசுவார்கள். ஆதரிப்பவர்கள் இன்னொரு அணியில் நின்று திருப்பித்தாக்கு வார்கள். இதில் யார் பக்கம் நிற்பது என்பதெல்லாம் அவரவர் நிலைப்பாடு. ஆனால், தரவுகளோடு, சான்றுகளோடு பேசுபவர்களின் குரல் எப்போதும் சமூக ஊடகங்களில் எடுபடாது. குறிப்பாக வாட்ஸப் போன்ற ஊடகங்களுக்குப் பொய்தான் பொருத்தமாக இருக்கும். கவிதைக்குப் பொய் அழகு என்பதுபோல!

ஆனால், இந்த வெட்டிச் சண்டைகளை யெல்லாம் தாண்டி கணிசமானோர் தொடர்ந்து ஆக்கபூர்வமாக எழுதிவந்தாலும் அவர்களை ஒருகட்டத்தில் சோர்வடைய, எரிச்சலடைய வைத்துவிடுவார்கள். சமூக ஊடகங்களில் நம்மைச் சோர்வடைய வைக்கும் பெரிய விஷயமே எத்தனை முறை ஒரு விஷயத்தை விளக்கம் கொடுத்தாலும் யாராவது ஒருத்தர் வந்து அதே கேள்வியை மீண்டும் முன்வைப்பார். உதாரணமாக பாரதியார், `பள்ளித்தலமனைத்தும் கோயில் செய்குவோம்’ என்கிறார். இதில் வரும் கோயில் என்பது மசூதி, சர்ச் என்பதை உள்ளடக்கியது என்று விளக்கினாலும் இன்னொருத்தர் வந்து அப்ப பௌத்த விகாரைகள், சமணத்தலங்களையெல்லாம் விட்டுவைக்கலாமா என்று கேட்டு நம்மைத் திகைப்படைய வைப்பார். அதுபோல இப்படிச் சோர்வடைய வைப்பதில் இன்னொரு உத்தி இருக்கும். அது ஒருவர் சொன்ன கருத்தின் உட்பொருளை விட்டுவிட்டு அதிலிருந்து தனக்குத் தோதான இரண்டு வரிகளை மட்டும் உருவி மட்டையடி அடிப்பது. உதாரணம், அதே பாரதியின் வரிகளை எடுத்துக்கொள்வோம். ‘பள்ளித்தலமனைத்தும் கோயில் செய்குவோம். எங்கள் பாரத தேசமென்று தோள் கொட்டுவோம்’ இப்போது பாரதி உயிரோடு இருந்திருந்தால் எங்கள் பாரத தேசமென்று தோள்கொட்டுவோம் என்ற வரியை நீக்கிவிட்டு டிவிட்டரில் அவரை ஆன்ட்டி இந்தியனாக்கியிருப்பார்கள்.

ஒருவகையில் பார்த்தால் முகநூல் போன்ற பெரும் கார்ப்பரேட் நிறுவனங்கள் இந்த மந்தை மனநிலையையும் சண்டைகளையும் பொய் விஷமங்களையும் ரசிக்கிறார்களோ என்றுகூடத் தோன்றுகிறது. ஏனெனில் முதன்முதலில் முகநூல் அறிமுகமாகும்போது அதில் 140 வார்த்தைகள் மட்டுமே எழுதமுடியும் என்ற கட்டுப்பாடு இருந்தது. பிறகு நீண்ட கட்டுரைகளை எழுதும் வசதியை எடுத்துவந்தார்கள். இப்போது எழுத்தை விட வீடியோக்களுக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். இப்படி காலத்துக்கு ஏற்ப முகநூல் மாறினாலும் அவர்கள் டிஸ்லைக் பட்டனை மட்டும் கொடுக்கவே இல்லை. ஒருமுறை பரிசோதித்துப் பார்த்தார்கள். ஆனால் அது அவர்கள் தொழிலுக்கே வேட்டுவைத்துவிடும் என்று நீக்கிவிட்டார்கள். லைக் அதிகம் வாங்க ஒவ்வொருத்தரும் குட்டிக்கரணம் போட்டால்தான் தங்கள் பிழைப்பு ஓடும் என்று தெரிந்துகொண்டார்கள். இதுதவிர, பெரும் வர்த்தக நிறுவனங்கள், அரசியல் கட்சிகள் பணம் கொடுத்து ஏற்படுத்தும்செயற்கை டிரெண்டிங் பெரும்பாலும் திரைக்குப் பின்னாலேயே நடக்கிறது. எடப்பாடி, ஸ்டாலின், ரஜினி பயன்படுத்தும் ஹேஷ்டேக்குகளை பாட்களை வைத்தாவது டிரெண்டாக்கி விடுகிறார்கள். இது சற்று மிகைப்படுத்தப்பட்ட கூற்றாகத் தோன்றலாம். ஆனால் இப்போதே கூகிள் தொடங்கி ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனங்கள் வரை அப்படித்தானே இருக்கின்றன. இப்போது ‘வீட்டுக்குச்செல்ல வலதுபக்கம் திரும்புங்க’ என்று சொல்லும் கூகிள் மேப் இன்னும் சிலநாள்கள் கழித்து ‘வீட்டுக்குப் போய் என்ன செய்யப்போற? வெட்டியாத்தானே இருக்கே. இடதுபக்கம் திரும்பி நான் சொல்ற கடைக்குப் போய் இந்தப் பொருளை வாங்கு’ன்னு மிரட்டலாம்.

விஜய் - அஜித்; ஜோதிகா - வனிதா; ஸ்டாலின் - சீமான் -இவர்கள் இமேஜை உடைப்பது யார்?

சமூக ஊடகங்களில் செல்வாக்குள்ளவர்கள் நினைத்தால் யாரையும் சட்டை போடாத காந்தியாக மாற்றிவிடவும் முடியும். ரஜினி, கமல், விஜய், அஜித், ஸ்டாலின், எடப்பாடி, சீமான், ஜோதிகா, வனிதா என்று யார் இமேஜையும் சோப்புக்குமிழியை உடைப்பதைப்போல் உடைத்துக் காலிபண்ணவும் முடியும். ஆனால் இந்தச் சமூகவலைதள உலகத்தைத் தாண்டி உண்மையான உலகம் இருக்கிறது. அது ரத்தமும் சதையும் இதயமும் மூளையும் கொண்டது. இணையத்தில் நீங்கள் எதையும் ரசிக்கலாம் அளவோடு, ‘இதுமட்டுமே முழு உண்மையில்லை’ என்ற புரிதலுடன். ‘எப்பொருள் யார்யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு’ என்ற வள்ளுவரின் வழிப்பேரன்கள்தான் நாம். அவர் இப்போது இருப்பதாக நினைத்துக்கொண்டு ‘எப்பொருள் யார்யார் வீட்டினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு’ என்று டிரெண்டுக்கு ஏற்றாற்போல் திருக்குறள் நமக்குநாமே சொல்லிக்கொள்ள வேண்டியதுதான்.