தன்னம்பிக்கை
தொடர்கள்
லைஃப்ஸ்டைல்
ஹெல்த்
Published:Updated:

எதிர்க்குரல்: தனக்கென்று ஓர் அறை - வர்ஜீனியா உல்ஃப்

எதிர்க்குரல்
பிரீமியம் ஸ்டோரி
News
எதிர்க்குரல்

ஒரு பெரிய மேஜையின் முன்பாக ஜான் கண்களை மூடி யோசித்தபடி அமர்ந்திருக்கிறார். அந்த அறையில் அவரைத் தவிர வேறு யாருமில்லை.

‘`ஆனால், நாங்கள் உன்னைப் பேச அழைத்தது, ‘பெண்களும் புதினமும்' என்னும் தலைப்பில் அல்லவா? இதில் `அறை' எங்கே வந்தது என்று நீங்கள் கேட்கலாம். உங்கள் குழப்பத்தை நான் புரிந்துகொள்கிறேன். ஏன் இப்படியொரு தலைப்பை வைத்தேன் என்பதை விளக்க முடியுமா என்று பார்க்கிறேன்’’ - அக்டோபர் 1928-ல், வர்ஜீனியா உல்ஃப் ஆற்றிய இரு சொற்பொழிவுகள் பின்னர் ஒரு சிறிய நூலாக (A Room of One’s Own) வெளி வந்தது. அந்த நூலின் தொடக்க வரிகள் இவை. தனது விநோதமான தலைப்புக்கான காரணங்களை நிதானமாக, படிப்படியாக வர்ஜீனியா உல்ஃப் விவரிக்கும்போது, உலகின் மாபெரும் படைப்புகளில் ஒன்றாக இது ஏன் கருதப்படுகிறது என்பது புரியும்.

‘` `ஆக்ஸ்பிரிட்ஜ்' என்று பெருமிதத்தோடு சுருக்கி அழைக்கப்படும் ஆக்ஸ்ஃபோர்டு, கேம்பிரிட்ஜ் வளாகங்களுக்குள் நுழைந்தேன். அப்போதுதான் வெளியில் வந்த ஒரு பாதிரியார், என்னைப் பார்த்தபடியே கடந்துசென்றார். படிக்கட்டுகளில் ஏறினேன். நூலகத்தின் கதவுகள் திறந்துகிடந்தன. அலமாரியை நெருங்கி ஒரு புத்தகத்தைக் கையில் எடுத்தேன். ஏதோ ஒரு ஜான் எழுதிய புத்தகம். என்ன புத்தகம் என்பது முக்கியமல்ல. ஜானால் இவ்வளவு பெரிய ஒரு புத்தகத்தை எழுத முடிந்திருக்கிறது. இந்தப் புத்தகத்துக்கு அருகிலுள்ள மற்றொரு புத்தகத்தையும் ஜான்தான் எழுதியிருக்கிறார். வேறு ஜான்.

ஒரு பெரிய மேஜையின் முன்பாக ஜான் கண்களை மூடி யோசித்தபடி அமர்ந்திருக்கிறார். அந்த அறையில் அவரைத் தவிர வேறு யாருமில்லை. சிந்தனையோட்டம் தடைபடும்போது, ஜன்னலுக்கு வெளியில் பார்க்கிறார் ஜான். சில நிமிடங்கள் கழித்து அவர் காகிதங்களுக்குள் நுழைகிறார். தடையின்றி சில மணி நேரம் எழுதுகிறார். புகை வழியும் அவர் உதடுகளில் புன்னகை மலர்கிறது. அறையைவிட்டு வெளியில் வந்து, வரவேற்பறையைக் கடந்து வீதிக்குள் நுழைகிறார். பிறகு, ஓர் உணவகத்துக்குள் சென்று கால்களை நீட்டி இருக்கையைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு ஒய்யாரமாக அமர்ந்துகொள்கிறார். முதலில் ஒயின் வருகிறது. சுவைக்கிறார். பிறகு, அடுத்தடுத்து அவருக்கு விருப்பமானவை ஒவ்வொன்றாக வந்து சேர்கின்றன. மீண்டும் அவர் தன் அறைக்குள் நடந்துசெல்லும்போது, அவர் நடையில் ஒரு துள்ளலைக் காணலாம்.

`மிஸ், உங்களிடம் அனுமதிக் கடிதம் இருக்கிறதா' என்னும் கேள்வி என்னை ஜானிடமிருந்து பிரித்து, மீண்டும் நூலகத்துக்குள் கொண்டுவந்து தள்ளுகிறது. `என்ன கடிதம்?' என்றேன், என்னை உற்று நோக்கிக்கொண்டிருந்த அந்த அதிகாரியிடம். `அனுமதிக் கடிதம் இல்லாமல் ஒரு பெண் நூலகத்துக்கு வர முடியாது' என்றார் அவர். நான் ஜானின் புத்தகத்தை மற்ற ஜான்களின் புத்தகங்களுக்கு மத்தியில் கிடத்திவிட்டு படிக்கட்டுகளில் வேகமாக இறங்கினேன். என்னுடைய நடையில் துள்ளல் இல்லை என்பதை நீங்கள் இந்நேரம் உணர்ந்திருக்கலாம்.

மேரி, இப்போது வீட்டில்தான் இருப்பார். எந்த மேரி என்பது முக்கியமல்ல, ஷேக்ஸ்பியரின் தங்கை என்று வைத்துக்கொள்ளுங்கள். இளம் வெயிலைக்கண்டதும் கைக்குட்டையை அழுத்தி அதுவரை துடைத்துக்கொண்டிருந்த தட்டுகளைவிட்டு அகன்று சென்று, ஒரு மூலையில் கிடந்த மரக்கூடையை இடுப்பில் எடுத்துக்கொள்கிறாள் மேரி. ஈரமான துணிகளை ஒவ்வொன்றாக எடுத்து உதறி, கொடியில் காயப்போகிறாள். நன்றாக வெளுத்து ஈர மினுமினுப்போடு இருக்கும் ஜானின் சட்டைகளையும் தன்னுடைய பாவாடைகளையும் உலர்த்தி முடித்த பிறகு, குழந்தைகளின் சின்னச்சின்ன துணிகளைக் கவனமாக எடுத்து உலர்த்துகிறாள். காலி கூடையை உள்ளே வைத்துவிட்டு, மிச்சமிருந்த தட்டுகளையும் முள்கரண்டிகளையும் துடைத்து அதனதன் இடங்களில் பொருத்துகிறாள்.

எதிர்க்குரல்: தனக்கென்று ஓர் அறை -  வர்ஜீனியா உல்ஃப்

சில ஆண்டுகளுக்கு முன்பு தான் எழுத ஆரம்பித்திருந்த கதை மேரியின் நினைவுக்கு வருகிறது. கட்டிலுக்குக் கீழேயுள்ள பெட்டியைத் திறந்து காகிதக் கத்தைகளை வெளியில் எடுக்கிறாள். தொடர்வதற்கு முன்பு ஏற்கெனவே எழுதியதை வாசிப்போம் என்று நினைக்கிறாள். இரண்டு பக்கங்கள் நகர்வதற்கு முன், அறையில் மெல்லிய இருள் சூழ்கிறது. மீண்டும் எழுந்து காகிதக் கத்தைகளைக் கவனமாகச் சேகரித்து ஒரு பையில் போட்டு, மீண்டும் அதைப் பெட்டியில் வைத்துவிட்டு வெளியில் வந்து, கூடையை எடுத்து இடுப்பில் போட்டுக்கொண்டு, ஒவ்வொரு துணியாக எடுத்து உள்ளே போடுகிறாள். களைத்து முடித்து மீண்டும் இருக்கைக்குத் திரும்பும்போது, கொஞ்சம் கண்களை மூடிக்கொள்ளலாம் போலிருக்கிறது.

ஜானைப் போல மேரியால் ஒரு பெரிய புத்தகத்தை எழுத முடியப் போவதில்லை. `நான் ஒரு முக்கியமான வேலையில் இருக்கிறேன், என்னைத் தொந்தரவு செய்யாதே' என்று ஜான்போல சொல்லிவிட்டு, ஓர் அறைக்குள் சென்று கதவைச் சாத்திக்கொள்ள மேரியால் முடியாது. தன் சிந்தனைகளைத் தொகுத்துக்கொள்ள ஜானைப் போல மேரியால் ஜன்னல் கதவைத் திறந்து வெளியில் பார்வையைச் செலுத்த முடியாது. ஒரு கையில் தேநீர் கோப்பையைப் பிடித்துக்கொண்டு விதவிதமாக உருமாறும் மேகங்களைக் காணும் எவருக்குமே மின்னல் கீற்றுபோல புதிய சிந்தனைகள் தோன்றும். ஜான்களுக்கு அப்படித்தான் தோன்றியிருக்கிறது. `போரும் சமாதானமும்' என்னும் மாபெரும் படைப்பை லியோ டால்ஸ்டாய் அப்படித்தான் படைத்தார். சார்லஸ் டிக்கன்ஸ் ஒன்று, இன்னொன்று, மற்றொன்று என்று பல நாவல்களைப் படைத்து முடித்தது ஒரு தனியறையில் அமர்ந்துதான். அந்த அறை இல்லாவிட்டால், அதில் ஜன்னல் இல்லாமல் போயிருந்தால், அதன்வழியே வானமும் மேகமும் வீதியும் நட்சத்திரங்களும் மழையும் மனிதர்களும் தெரியாமல் போயிருந்தால் டிக்கன்ஸோ, டால்ஸ்டாயோ, கதேவோ, ஷேக்ஸ்பியரோ உருவாகியிருக்க முடியும் என்றா நினைக்கிறீர்கள்?!

ஒரு சிறிய கிண்ணத்தில் உணவை நிரப்பி, மணிக்கணக்கில் குழந்தைகளோடு மேரி போல் போராடிக்கொண்டிருந்தால், அவர்களால் உலகப் புகழ்பெற்ற கவிதைகளை, நாடகங்களை, புதினங்களைப் படைத்திருக்க முடியுமா? வெயில் மறைந்தால் துணிக்கூடை நினைவுக்கு வந்தாகவேண்டிய அவசியம் இருந்திருந்தால், அவர்களால் சுமக்கமுடியாத கனத்தோடுகூடிய பெரும் புத்தகங்களை உருவாக்கியிருக்க முடியுமா?

`தேநீரும் கேக்கும் கொண்டுவாருங்கள்' என்று சொல்லிவிட்டு, உணவுக் கூடத்தில் கால்களை நீட்டி, கண்களை மெள்ள மூடி, கைகளை மேலே உயர்த்தி சோம்பல் முறிக்க முடியுமா? நூலகத்துக்குள் ஒரு முழுநாள் அமர்ந்துகிடந்து, உலகுக்கும் தனக்குமான தொடர்புகள் அனைத்தையும் துண்டித்துக்கொள்ள முடியுமா? எழுதிமுடித்த காகிதங்கள் அப்படியே தன் அறையில் இருக்கும் என்று மேரியால் நிம்மதிகொள்ள முடியுமா? ஜேன் ஆஸ்டன், தன்னுடைய கையெழுத்துப் பிரதிகளை ஒரு காகிதத்தில் சுற்றி கவனமாகப் பாதுகாத்து வைத்திருக்க வேண்டியிருந்தது.

`உன்னிடம் அனுமதிக் கடிதம் இருக்கிறதா' என்று மேரியிடம் கேட்டதுபோல ஜானிடம் அதிகாரி கேட்பதில்லை. கேம்பிரிட்ஜில் உனக்கென்ன வேலை என்பதுபோல ஒரு பார்வையை ஜானை நோக்கி பாதிரியார் வீசுவதில்லை. `புதினமா... கொடுங்கள்' என்று ஜானிடமிருந்து இயல்பாகப் பிரதியை பெற்றுக்கொள்கிறார் பதிப்பாளர். ஜானின் நாவலை ஒரு விமர்சகர் நாவலாக அங்கீகரித்துப் படிக்கிறார், நிறைகுறைகளைச் சுட்டிக்காட்டுகிறார். அதே விமர்சகர், தன் விழிகளை அகலமாக விரித்து, மேரியிடமிருந்து பிரதிகளை வாங்கி தன் மேஜையின்மீது வைக்கிறார். `ஓ... புதினம் எழுதியிருக்கிறீர்களா...' என்கிறார் அவர். `இப்போதெல்லாம் பெண்கள் கவிதை எழுதுவதில்லையா' என்றும் அவர் விசாரிக்கிறார். மேரி விடைபெற்றுச் சென்றதும் அவர் அந்தப் பிரதியை உற்று நோக்குகிறார். அவருடைய கூர்மையான இலக்கியத் திறன் உடனடியாக அதை ‘ஒரு பெண்ணின் படைப்பு' என்று வகைப்படுத்திவிடுகிறது. கவிதையோ, நாடகமோ, நாவலோ அல்ல அது. ஒரு பெண்ணின் படைப்பு மட்டுமே.

மேரியின் ஒரு புத்தகத்தைக் கையில் எடுத்துப் பார்த்தேன். முதல் சில வரிகளைப் படித்தபோதே எனக்குத் தெரிந்துவிட்டது. இவை மேரியின் வரிகள். ஜானின் வரிகள் இப்படி இருக்காது. ஜானின் சொற்கள் இப்படி அமையாது. இந்த வரிகளை நூற்றாண்டுக்கால போராட்டங்களுக்குப் பிறகு, மேரி மெள்ள மெள்ள உருவாக்கியிருக்கிறாள். `நான் எழுதும் இந்த வரிகள், ஜானின் வரிகளைப் போல் இருக்கக் கூடாது' என்னும் முழு விழிப்போடு சிந்தித்து, மேரி இந்த வரிகளைப் படைத்திருக்கிறாள்.

அறிவுக்கூர்மையுள்ள விமர்சகனாக என்னைக் கற்பனை செய்துகொண்டேன். மேரிகளைப்போலல்லாமல் ஜான்கள் சிந்தனைக் குறைபாடுகொண்டவர்கள் என்று அதில் வருகிறதா என்று பார்த்தேன். அப்படி எதுவும் இல்லை. ஜானை மட்டம்தட்டி பக்கத்துக்கு ஒரு வரியாவது வந்திருக்க வேண்டுமே என்று பார்த்தேன். இல்லை. ஜானுக்கு வண்டி வண்டியாக மேரி புத்திமதி சொல்லியிருக்கிறாளா என்று பார்த்தேன். இல்லை. குறைந்தபட்சம் ஜானை மேரி வெறுத்திருப்பாள் என்று எதிர்பார்த்தேன். அதுவும் நடக்கவில்லை. ஒருவேளை ஜானை முற்றுமுழுதாகப் புறக்கணித்துவிட்டாளோ என்று பார்த்தால் அதுவும் இல்லை. ஜான் ஜானாகவே இடம்பெற்றிருந்தான்.

இத்தனை தடைகள், போதாமைகளுக்கு இடையிலும் மேரியால் எப்படி இப்படியொரு புதிய உலகைப் படைக்க முடிந்தது என்று வியந்துபோனேன். ஒருவேளை மேரி எழுத வராமல் போயிருந்தால் என்னாகியிருக்கும்? ஜான் படைத்தது மட்டுமே உலகம் என்று நாம் நினைத்துக்கொண்டிருப்போம். ஜான் எழுதியது மட்டுமே கவிதை. ஜான் இயற்றியது மட்டுமே நாடகம். ஜானின் தத்துவம், ஜானின் வரலாறு, ஜானின் அறிவியல். ஆனால், இதுவல்ல உலகம் என்பதை மேரி நமக்குக் காண்பித்துவிட்டாள். மேரியின் வரிகளை ஜானால் எவ்வளவு முயன்றாலும் எழுத முடியாது. மேரியின் பார்வை ஜானிடம் இல்லை. எத்தனை பெரிய சிந்தனையாளராக இருந்தாலும் ஜானால் மேரியைப் போல் சிந்திக்க முடியாது. நம் பார்வையிலும் புரிதலிலும் உள்ள மாபெரும் இடைவெளிகளை மேரி இட்டு நிரப்பியிருக்கிறாள். அதற்கு, அவளுக்கு நாம் நன்றி சொல்ல வேண்டும்.

அவளுக்கென்று ஓர் அறை. அவளுக்கென்று கொஞ்சம் பணம். இந்த இரண்டும் கிடைத்துவிட்டால், மேரி இன்னமும் நிறைய எழுதுவாள். நம் பார்வையை இன்னமும் அகலப்படுத்துவாள். மேரியின் விழிகளைக் கொண்டு இந்த உலகைக் காணும்போது, ஒரு புதிய உலகைக் காண்பது நமக்கும் சாத்தியமாகும்.

நீங்கள் கேட்டுக்கொண்டபடி, ‘பெண்களும் புதினமும்' என்னும் தலைப்பை ஒட்டிதான் பேசினேன் என்று நினைக்கிறேன். தலைப்பைவிட்டு விலகியிருந்தால், உரையின் அளவுமிகுந்திருந்தால் இந்த மேரியின் மன்னிப்பை ஏற்றுக்கொள்ளுங்கள். வாய்ப்புக்கு நன்றி!’’