கட்டுரைகள்
தொடர்கள்
Published:Updated:

டார்ச்சர் ஃப்ரம் ஹோம்!

டார்ச்சர் ஃப்ரம் ஹோம்!
பிரீமியம் ஸ்டோரி
News
டார்ச்சர் ஃப்ரம் ஹோம்!

உலகம் முழுக்க லாக்டெளன் வந்தாலும் எங்களுக்கும் சமையல்கட்டுகளுக்கும் லாக்டெளன் வரவே வராதா..?

அன்புள்ள கொரோனாவுக்கு,

‘குட்டியாடு தப்பி வந்தா குள்ள நரிக்கு சொந்தங்கிற’ பட்டுக்கோட்டையார் பாட்டெல்லாம் உனக்குத் தெரிஞ்சிருக்க வாய்ப்பே இல்ல. ஆனா, நீ உலகத்துல காலடி எடுத்து வெச்சதுல இருந்து வொர்க் ஃப்ரம் ஹோம் அம்மாக்களுடைய செல்போன்களின் நிலைமை இப்படித்தான் இருக்கு... `அம்மா, நீ தான் ஆபீஸுக்கே போகலையே... அப்புறம் உனக்கெதுக்கு போன்’னு கேட்குதுங்க. அவங்க கேம்ஸ் விளையாட எங்க செல்போன் வேணுமாம். அதைத்தான் சுத்தி வளைச்சு புத்திசாலித்தனமா கேட்கிறாங்களாம்.

‘அம்மா வொர்க் ஃப்ரம் ஹோம் செல்லம்’னு கெத்து காட்ட ட்ரை பண்ணுனா, புது ரிமோட்டுக்கு ரெஸ்பான்ஸ் பண்ற டிவி கணக்கா ‘அப்போ எனக்கு உடனே பாஸ்தா செஞ்சு கொடு’ன்னு அதட்டுதுங்க. அம்மா ‘வொர்க் ஃப்ரம் கிச்சன் இல்லடா. வொர்க் ஃப்ரம் லிவிங் ரூம்’னு பேச்சுத் தமிழுக்கே தெளிவுரையெல்லாம் சொல்ல வேண்டிய நிலைமை.

வீட்ல இருக்கிற ஒரே பெட்ரூம்ல ஃபார்மல் ஷர்ட், டை, இடுப்புல காத்தோட்டமா லுங்கி கட்டிக்கிட்டு பெட்ல பாதி உடம்பை சாய்ச்சுக்கிட்டு லேப்டாப்பைத் தடவிக்கி ட்டிருக்கும் கணவன் கண்ணியவான், ‘ஒரு கப் காபி ப்ளீஸ்’னு ஆர்டர் போடும். வொர்க் ஃப்ரம் ஆரம்பிச்சுதுல இருந்தே எங்களை நடமாடுற காபி மெஷினாவே நினைச்சிக்கிட்டிருக்க புருஷன்களுக்கு வூஹான்ல டீக்கடை வெச்சுக் கொடுக்கணும். ஒரு நாளைக்கு ஏழெட்டுத் தடவை காபியும் டீயும் போட்டுக் கொடுக்கிறதைவிடக் கொடுமை, பாத்திரங்களைக் கழுவுறதுதான். பாத்திரம் தேய்க்கிற நாருக்கு மட்டும் வாயிருந்தா, ‘நீங்கெல்லாம் ஆபீஸுக்கு வேலைபாக்கப் போனீங்களா, இல்ல டீ குடிக்கப் போனீங்களா’ன்னு ஆஃப்டர் சிக்ஸ் வடிவேலு ஸ்டைல்ல கேட்டிருக்கும்.

டார்ச்சர் ஃப்ரம் ஹோம்!
டார்ச்சர் ஃப்ரம் ஹோம்!

அடுத்து ஸ்நாக்ஸ் கதைக்கு வரேன். புர்...ருசனுக்கு ஒரு ஸ்நாக்ஸ், புள்ளீங்களுக்கு ஒரு ஸ்நாக்ஸ், காலையில பதினோரு மணிக்கு ஒரு ஸ்நாக்ஸ், சாயந்திரம் வேற ஒரு ஸ்நாக்ஸ் கேட்குற குடும்பத்தாரே, இது நியாயமாரே... உலகம் முழுக்க லாக்டெளன் வந்தாலும் எங்களுக்கும் சமையல்கட்டுகளுக்கும் லாக்டெளன் வரவே வராதா..?

கொரோனா லீவு விட்டதுல இருந்து மொத்தக் குடும்பத்துக்கும் காலையில பத்து மணிக்குத்தான் பொழுது விடியுது. அதுக்குள்ள பாத்திரம் துலக்கி, துணி துவைச்சு, காலை டிபன், அதுக்குத் தொட்டுக்க ரெண்டு வகை சட்னி, லன்ச் எல்லாம் முடிச்சு சிஸ்டமை லாக் இன் பண்ணுறப்போ, பெருசு, ‘ம்மா... பால்’னு பல்லுகூட வெளக்காம மல்லுக்கட்ட ஆரம்பிக்கும். ஜூம் மீட்டிங்ல கனெக்ட்டாகுறப்போ, சின்னது சத்தமில்லாம என் முதுகுப்பக்கமா வந்து நின்னு என் டீம் லீடருக்கு ஒழுங்கு காட்ட ஆரம்பிக்கும்.

பதறிப்போய் வீடியோவை படக்குனு ஆஃப் பண்ணிட்டு, ஸ்பீக்கரை ஆன் பண்ணி அன்னிக்கான வேலைகளை அப்ரைசல் பயத்துல பவ்யமா சொல்லிட்டிருக்கிறப்போ மாமியார் டிவி, ஸாரி, முரசு டிவி ‘நான் ஏன் பிறந்தேன்’னு அலற ஆரம்பிக்கும். ‘நேத்து நைட்டு நீங்க தானே பாட்டி டிவி பார்த்தீங்க. இப்ப நாங்க சின்சான் பார்க்கணும்’னு சீனியர் சிட்டிசனும் ஜூனியர் சிட்டிசன்களும் ரிமோட்டுக்காக சொத்துத் தகராறு ரேஞ்சுக்கு வாய் அண்ட் கைகலப்புல இறங்க, ஒரே களேபரம்தான்!

டார்ச்சர் ஃப்ரம் ஹோம்!

வேலை பிஸியில லேப் டாப்பே கதின்னு இருந்தா, அந்த கேப்ல செல்போன்ல டாக்கிங் டாம், மை ஏஞ்சலா, லிட்டில் சிங்கம் எல்லாம் டௌன்லோடாகியிருப்பார்கள். போதாக்குறைக்கு யூ டியூபில் சின்சான் வீடியோ பார்த்தே நெட்டையும் சார்ஜையும் பாதி உயிராக்கி வெச்சிருக்கும் நாங்க பெத்த சின்சான்களும் ஹீமாவாரிகளும். ‘எனக்குத் தெரியாம எப்ப எடுத்தீங்க. வீடியோ சத்தமே காதுல விழலை’ன்னு பதறினா, ‘உனக்குக் கேட்கக்கூடாதுன்னு சைலன்ட்ல போட்டுட்டு வீடியோ பார்த்தாங்க’ன்னு பேரன், பேத்தியை மெச்சிக்கொள்ளும் மாமியார்... ஓ காட்!

‘நாளையில இருந்து வொர்க் ஃப்ரம் ஹோம்’னு ஆபீஸ்ல சொன்ன அன்னிக்கு, ‘ஆஹா, நாளையில இருந்து அரை மணி நேரம் கூடுதலா தூங்கலாம்’னு ஆசைப்பட்டதுக்கு மன்னிப்புகூடக் கேட்டுக்கிறோம் கொரோனா. தயவுசெஞ்சு சீக்கிரம் எங்க நாட்டை விட்டுக் கிளம்பு. முடியல...

இப்படிக்கு,

வொர்க் ஃப்ரம் ஹோமால் பாதிக்கப்பட்ட ஒரு குடும்பத்தலைவி.