சினிமா
Published:Updated:

இருவாச்சிகள் உரையாடும் கானகவெளி

இருவாச்சிகள் உரையாடும் கானகவெளி
பிரீமியம் ஸ்டோரி
News
இருவாச்சிகள் உரையாடும் கானகவெளி

வீடுகளில் வைத்திருக்கும் ஒவ்வொரு பொருளுக்குப் பின்னாலும் ஒரு கதை இருக்கிறது.

``இந்த உலகில் முதலில் பேசத் தொடங்கியது ஓடையில் ஓடும் நீர்தான். நீர், தான் பேசக் காட்டைப் படைத்தது; விலங்குகளைப் படைத்தது. இறுதியாக மனிதர்களைப் படைத்தது. அப்படிப் படைக்கப்பட்ட எல்லா உயிர்களும் இன்னமும் இயற்கையோடு உரையாடிக்கொண்டே இருக்கின்றன. அவ்வுரையாடலை நிறுத்திய முதல் மற்றும் இறுதி உயிரி மனிதன்தான்.’’

இருவாச்சிகள் உரையாடும் கானகவெளி

‘காடோடி’ நாவலில் வரும் பழங்குடிப் பெரியவரான பிலியவ்வின் வார்த்தைகள் இவை. காடுகளுடனான உரையாடலை நாம் நிறுத்திப் பலகாலமாகிவிட்டது. ஆனால் இன்னமும் கரும்புகை படியாப் பகுதிகளில் அந்தப் பச்சைத் தொப்புள்கொடியை இறுகப் பற்றியிருக்கின்றன நரம்புகள் புடைத்தபடியிருக்கும் முதிர்ந்த கரங்கள். அவர்களில் முதன்மையானவர்கள் நாகாலாந்தின் தொல்குடிகள்.

‘நாகா’ எனப் பொதுப்பெயரில் அழைக்கப்பட்டாலும் அங்கே பெரியதும் சிறியதுமாக 16 பழங்குடி இனங்கள் இருக்கின்றன. இப்பழங்குடிகளுக்கு இடையிலான பிணைப்பை உறுதியாக்கவும் இவர்களை மற்ற மாநில மக்களோடு நெருக்கமாக உணரச் செய்யவும் நாகாலாந்து அரசு நடத்தும் விழாதான் இருவாச்சித் திருவிழா (Hornbill Festival).

நாகாலாந்துத் தொல்குடிகளிடையே இருவாச்சிப் பறவைக்குத் தனி மரியாதை இருக்கிறது. மாநிலம் முழுவதும் அடர்ந்து பரவியிருக்கும் பச்சைப் போர்வை முழுக்க இருவாச்சி உதிர்த்த இறகுகள் எனத் திடமாக நம்புகிறார்கள் அவர்கள். அது உண்மையும்கூட. இருவாச்சி அக்காடுகளின் ராஜா. இது ராஜாவைக் கொண்டாடும் ஒரு திருவிழா!

Hornbill Festival
Hornbill Festival

பத்து நாள்கள் நடக்கும் இந்தத் திருவிழாவின் மைய அச்சு, பிரமாண்டமாய் விரிந்திருக்கும் மைதானம்தான். நகர நாகரிகத்தையும் காடுகளின் கலாசாரத்தையும் இணைக்கும் பாலம். தங்கள் இசையை, போர்முறையை, வேட்டை நுட்பங்களைப் பார்வையாளர்களுக்குப் பழங்குடிகள் நிகழ்த்திக்காட்டும் களம். இங்கே ‘கியாம்னியுங்கன்’ பழங்குடியினரின் குழலிலிருந்து புறப்படும் இசை, தூரத்து மூங்கில்காடுகள் கிசுகிசுக்கும் ரகசியங்களை செவிக்கருகில் சொல்லிச் செல்லும். ‘ஆஓ’ இன மக்களின் முரசுச் சத்தம் மழைமேகங்களின் சிலிர்ப்பைப் பரிசளிக்கும். ‘சுமி’ இன மக்களின் கால் சண்டை, வேர்களில் இன்னமும் மிச்சமிருக்கும் வேட்கையை நினைவுக்குக் கொண்டுவந்து பதறவைக்கும். ‘சாக்கேசாங்’ குழுவின் வெள்ளாமைப்பாடல் களத்துமேடுகளுக்கு நம் கரம்பிடித்துக் கூட்டிப்போகும்.

களத்திற்கு அடுத்தபடியாக விரிந்து பரந்திருப்பது ‘மோரங்.’ மூத்தவர்கள் இளைய தலைமுறைக்குத் தங்கள் இனத்துப் பழக்கவழக்கங்களை, ஒழுக்கங்களை போதிக்கும் இடம் இது. சுருங்கச் சொன்னால் வாழ்வியல் போதிக்கும் போதிமரம். இத்திருவிழாவைப் பொறுத்தவரை இவை ஒவ்வொரு இனக்குழுவின் வாழ்விடத்தையும் பிரதிநிதித்துவப்படுத்தும் மாதிரிகள். ஒரு பனை உயரத்திற்கு எழுந்து நிற்கும் மரவீடுகள். வாசலில் தங்கள் முன்னோர்கள் வேட்டை யாடிய விலங்குகளின் ஓடுகளை மாட்டி வைத்திருக்கிறார்கள். வேட்டையாடப்பட்ட விலங்குகளின் தன்மை, அளவு ஆகியவைதான் அவ்வீட்டின் பெருமையைத் தீர்மானிக்கும் காரணிகள். இப்போதும் அந்த மண்டை யோடுகள் குறித்துப் பழங்குடிப் பெரியவர்கள் சிலாகிப்பதை நீங்கள் கேட்க முடியும். அருகிலேயே ஈட்டி, வில் அம்பு, பெரிய அரிவாள் என ஆயுதங்களும் அணிவகுத்து நிற்கின்றன.

இவற்றைக் கடந்து உள்ளே நுழைந்தால் வாசலிலேயே சட்டென நிகழ்காலம் உதிர்ந்து வரலாற்றின் ஏதோவொரு பக்கத்தில் நாமும் வார்த்தைகளாகிவிட்ட உணர்வு. பெரும்பாலும் ஒரே அறை கொண்ட வீடுகள். தேவைக்கேற்ப தட்டி வைத்து மறைத்துக்கொள்கிறார்கள். நீளமான கூடத்தின் நடுவே கங்குகள் கனன்றபடி இருக்கிறது சமைக்குமிடம். குளிர்காயும் இடமும் அதுதான். சுற்றிலும் மரத்தாலான உட்காரும் பலகைகள். அடிப்படைக் கட்டமைப்பு இதுதான். ஒவ்வொரு பழங் குடியினரும் தாங்கள் வசிக்கும் நிலப்பரப் பிற்கேற்ப இதில் மாறுதல்களைப் புகுத்திக் கொள்கிறார்கள்.

பன்றிக்கறிதான் இவர்களின் பிரதான உணவு. சோறு ஆக்கும் பாத்திரத்திற்கு மேலே பன்றி இறைச்சித்துண்டுகளைத் தொங்கவிட்டு நெருப்பில் வாட்டுகிறார்கள். இறைச்சி யிலிருக்கும் கொழுப்பு உருகி அப்படியே சோற்றில் இறங்க, பிசுபிசுக்கும் அந்த அரிசியோடு சுடச்சுடப் பருப்பைக் குழைத்து உள்ளே மாமிசத்துண்டுகளைப் புதைத்துக் கைநிறைய அள்ளிச் சாப்பிடுகிறார்கள். பொதுவாக உணவில் காரம் சேர்ப்பதில்லை. ஆனால் அதற்கும் சேர்த்து நாகாலாந்தில் அபரிமிதமாய் விளையும் ‘கிங் சில்லி’ எனப்படும் உலகின் காரமான மிளகாயைக் கொண்டு ஊறுகாய் உட்பட சிற்சில பதார்த்தங்களைச் செய்து சாப்பிடுகிறார்கள்.

அரிசியை நொதிக்கவைத்துத் தயாரிக்கும் கள்தான் இவர்களின் சோமபானம். அடிக்கும் குளிருக்கு இதமாய் உள்ளே இறக்கிக்கொண்டே இருக்கிறார்கள். அரிசிக் கள் புளித்துப்போனால் இருக்கவே இருக்கிறது சிறுதானியக் கள். கொறித்துக்கொள்ள பொரித்த பட்டுப்புழு. நாகா பழங்குடிகள் கடும் உழைப்பாளிகள். அதிகாலை நான்கு மணிக்கெல்லாம் தொடங்கி விடுகிறது இவர்களின் அன்றாடம். எலும்புகளை ஊடுருவும் குளிரில் காடு, மலை என ஏறி இறங்கி விவசாயம் செய்யும் இவர்களுக்குத் தேவையான ஊட்டத்தை இந்த உணவுகள்தான் வழங்குகின்றன.

வீடுகளில் வைத்திருக்கும் ஒவ்வொரு பொருளுக்குப் பின்னாலும் ஒரு கதை இருக்கிறது. உதாரணமாக, ‘அங்காமி’ குழுவின் வீடுகளில் காய்ந்துபோன மிகப்பெரிய மாமிசத்துண்டு தொங்கவிடப் பட்டிருப்பதைப் பார்க்கமுடியும். திருமணமாகி மாப்பிள்ளை வீட்டிற்குச் செல்லும் தங்கைக்கு அண்ணன் கொடுக்கும் சீதனம் அது. அந்தத் திருமண பந்தம் நீடிக்கும்வரை அந்த மாமிசத்துண்டு அந்தப் பெண்ணின் கணவர் வீட்டிலிருக்கும், ஆண்டுகள் கழிந்து அது சுருங்கினாலும்கூட! இப்படி ஒவ்வொரு பழங்குடிக்கும் வித்தியாசமான, நெகிழ்ச்சியான பல பழக்கங்கள் இருக்கின்றன.

மாலை ஐந்து மணிக்கெல்லாம் இருட்டிவிடும் நாகாலாந்தில் இரவுப்பொழுதுகள் மகிழ்ச்சி ததும்புபவை. மோரங்குகள் மெதுவாக வண்ணங்கள் பூசிக்கொள்கின்றன. வண்ணங்களாலானது இவர்களின் வாழ்வு! பால்பேதமில்லாமல் ஆடிப்பாடிக் கொண்டாடுகிறார்கள். விருந்தினர் களுக்கும் அவர்கள் கொண்டாட்டத்தில் இடமுண்டு. உபசரிப்பதில் இவர்களை மிஞ்சவே முடியாது. சாப்பாடு கொடுத்த அம்மாவிடம் ஐந்நூறு ரூபாயை நீட்டினேன். மொத்தமாக நோட்டுகளை அள்ளி என்னிடம் கொடுத்தவர், ‘எண்ணிப்பார்த்துட்டு அதிகமிருந்தா நீயே பெட்டில போட்டுடு’ என்றார். வெள்ளந்தி வாசத்தை இன்னமும் தேக்கி வைத்திருக்கும் இவர்கள் சக மனிதர்கள் மேல் வைக்கும் நம்பிக்கை அபரிமிதமானது. ஒவ்வொரு நாளையும் புதிதாய்த் தொடங்கும் இவர்களின் ஒருவரி வாழ்க்கைமுறை ‘களித்து வாழ்’ என்பதுதான். நகரத்துப் பரபரப்புகளுக்கிடையே கசகசத்து ஓடும் நமக்கு இது ஏக்கப்பெருமூச்சை வரவழைக்கும். அதேசமயம் தங்கள் இயல்பான வாழ்க்கைமுறையை விட்டு விலகி, காட்சிப்பொருளாக்கப் படுகிறார்களோ என்ற கேள்வியும் எழுகிறது.

இசை இவர்களைச் செலுத்தும் உயிர்வளி. தங்கள் மரபிசை தொடங்கி மேற்கத்திய ஹெவி மெட்டல் வரை ஸ்வரங்கள் சூழ் உலகு இவர்களுடையது. பாடல்களை முணுமுணுக்காத உதடுகளை இங்கே பார்க்கவே முடியாது. சகலவற்றையும் பாரபட்சமில்லாமல் பற்றிப் படர்ந்திருக்கும் வெள்ளைப் பனிப்படலம்போல இவர்களைச் சூழ்ந்திருக்கிறது இசை.

காடு, கலை, இசை, உணவு என ஏதோவொரு அனுபவத்தை ஒவ்வொரு பொழுதும் பரிசளித்துக்கொண்டே இருக்கிறது நாகாலாந்து. இந்த மாநிலம் மட்டுமல்ல, ‘செவன் சிஸ்டர்ஸ்’ எனப்படும் ஏழு மாநிலங்களின் எந்தப் பரப்பில் நீங்கள் கால் வைத்தாலும் அன்பைக் கொட்டிக்கொடுக்கும் மனிதர்களை மட்டுமே காண்பீர்கள். நிமிடங்களில் அவர்கள் நமக்கு வாழக் கற்றுக்கொடுக்கும் ஆசானாகிவிடுவார்கள். உங்களின் மதமோ, மொழியோ அவர்களுக்குப் பொருட்டல்ல. இறுதியில் ஓங்கித் தழைப்பது மனிதம்தான் என நம்புபவர்கள் அவர்கள். அந்தப் பேரழகான உலகை, கபடமற்ற மாந்தர்களைத்தான் என்.ஆர்.சி-யும் சி.ஏ.பி-யும் கூறுபோடக் காத்திருக்கின்றன. எண்களில் இல்லை பலம்; அவர்களின் ஒன்றுபட்ட எண்ணங்களில் இருக்கிறது. மீண்டெழுவார்கள் அதே அழகியலோடு! நம்மால் இயன்றது, அவர்களை அவர்களாக இருக்கவிடுவது மட்டும்தான்!