என்டர்டெயின்மென்ட்
ஹெல்த்
லைஃப்ஸ்டைல்
தன்னம்பிக்கை
தொடர்கள்
Published:Updated:

இடைவெளிக்குப் பின் வேலை... கவனிக்க வேண்டிய விஷயங்கள்!

வேலை
பிரீமியம் ஸ்டோரி
News
வேலை

நீண்ட இடைவெளிக்குப் பிறகு, நீங்கள் சேரும் வேலை உங்களுக்குப் பிடிக்காமலும் போகலாம்.

‘வேலைக்குச் செல்லும் பெண்களின் எண்ணிக்கை இன்று அதிகரித்திருக்கும் நிலையில், பணியில் இருந்து விலகிய பின், பெண்கள் மீண்டும் வேலைக்குத் திரும்புவதில் பல சவால்களை எதிர்கொள்கிறார்கள்’ என ஆய்வுகள் சொல்கின்றன.

அவ்தார் குழுமம், அண்மையில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த 783 பெண்களிடம் சர்வே ஒன்றை மேற்கொண்டு, ‘வியூபோர்ட்’ என்ற ஆய்வறிக்கையை வெளியிட்டது. அந்த அறிக்கையானது, `பணியில் இருந்து விலகும் இந்திய பெண்களில் 45% பெண்கள், தாய்மை பொறுப்பு காரணமாகவும், 35% பெண்கள் மகப்பேறு காரணமாகவும் விலகுகின்றனர். மீதமுள்ள 20% பெண்கள் தங்கள் லட்சியம் மற்றும் கனவுகளுக்காக, வீட்டில் இருக்கும் வயதானவர்களைப் பார்த்துக்கொள்வதற்காக, திருமணத்துக்குப் பிறகு, ஏற்படும் இட மாறுதல் காரணமாக, உடல் நலம் தொடர்பான பிரச்னைகள் காரணமாக விலகுவதாகத் தெரிவித் திருக்கிறார்கள்' எனச் சொல்கிறது.

செளந்தர்யா ராஜேஷ்
செளந்தர்யா ராஜேஷ்

வீட்டில் போதிய ஆதரவு இல்லாததும், பெண்கள் மீண்டும் பணிக்குத் திரும்ப தடையாக இருப்பதாக இந்த ஆய்வு தெரிவிக்கிறது. அது தவிர வேலை சார்ந்த போதிய தொடர்புகள் இல்லாதது, திறன் இடைவெளி, தன்மீது நம்பிக்கை இல்லாமை என பெண்கள் வேலைக்குத் திரும்புவதில் தடையை உணர்வதற்கான காரணங்களைத் தெள்ளத் தெளிவாக இந்த ஆய்வறிக்கை விளக்குகிறது.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு, பெண்கள் வேலைக்குச் செல்லும்போது சந்திக்கும் சவால்கள் என்னென்ன? அவர்கள் தங்களுடைய கரியரில் செகண்டு இன்னிங் ஸுக்கு எப்படித் தயாராக வேண்டும்? நீண்ட இடைவெளிக்குப் பிறகு, வேலைக்குத் திரும்பும் பெண்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன? அத்துறை சார்ந்த நிபுணர்களிடம் பேசினோம்.

நம்மால் முடியும் என்ற நம்பிக்கை வேண்டும்!

பெண்களுக்கு இரண்டாம் வேலைவாய்ப்பு கிடைக்கச் செய்வதில் கவனம் செலுத்தி வரும் அவ்தார் குழுமத்தின் நிறுவனர் டாக்டர் செளந்தர்யா ராஜேஷ், “திருமணமான ஓரிரு வருடங்களில், மகப்பேறு காலம் வந்துவிடும். இந்தக் காலகட்டம் பெண்கள் அனைவருக்கும் மிக முக்கிய மானது. வேலைக்குச் செல்லும் பெண்கள், இந்தக் காலத்தில்தான் சில ஆண்டுகள் விருப்ப ஓய்வைப் பெற்றுக்கொண்டு, பிறகு மீண்டும் வேலைக்குத் திரும்ப ஆரம்பிக்கிறார்கள். மகப்பேறு முடிந்து, நீண்ட இடைவெளிக்குப் பிறகு, வேலைக்குச் சேரும் பெண்கள், உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பல இன்னல்களை, மன அழுத்தங்களைக் கடந்துதான் வந்திருப்பார்கள். அதனால், அவர்களுக்குத் தன்னம்பிக்கை குறைவாக இருக்கும். இந்த நேரத்தில் தான் அலுவலக நண்பர்களிடமிருந்தும், கணவன் மற்றும் குடும்ப உறுப்பினர் களிடமிருந்தும் ஊக்கமும் உற்சாகமும் அவர்களுக்குத் தேவைப்படுகிறது.அப்படியான ஒத்துழைப்பும் ஊக்கமும் கிடைக்காதவர்கள்தாம் துவண்டுபோய், குழப்பத்துக்கு ஆளாவார்கள். அப்படிப் பட்டவர்களை கைதூக்கி விட வேண்டும் என்பதற்காகத்தான் அவ்தார் குழுமம் ஆரம்பிக்கப்பட்டது. இந்த நிறுவனத்தின் மூலம் இதுநாள் வரை 40,000 பெண்கள், இடைவெளிக்குப் பிறகான வேலையை வெற்றிகரமாக, சந்தோஷமாகத் தொடர ஆரம்பித்திருக்கிறார்கள்” என்றார் பெருமிதத் துடன்.

இடைவெளிக்குப் பின் வேலை... கவனிக்க வேண்டிய விஷயங்கள்!

மேலும், வேலைக்குத் திரும்பும் பெண்கள் கவனிக்க வேண்டிய சில விஷயங்களையும் பகிர்கிறார் சௌந்தர்யா. “வீட்டு வேலைகளை யும் கவனித்துக்கொண்டு, வேலைக்கும் சென்று வரும் பெண்களுக்கு, ‘நம்மால் எதையும் செய்ய முடியும்’ என்ற நம்பிக்கை எப்போதும் இருக்க வேண்டும். வீட்டுப் பிரச்னைகளை பக்குவத்துடன் எதிர்கொள்ளும் நீங்கள், உங்கள் திறமைகள் மீதும் நம்பிக்கை வையுங்கள். அதே திறமையுடன் அலுவலக பிரச்னைகளையும் துணிந்து எதிர்கொள்ளுங்கள். நீண்ட இடைவேளைக்குப் பிறகு, பணிக்குத் திரும்பு வதால், உங்களை மற்றவர்கள் மிகவும் அரவணைத்துச் செல்ல வேண்டும் என்று எதிர்பார்க்காதீர்கள். உங்கள் வேலையை நீங்களே திறம்படச் செய்யுங்கள். மற்ற பணியாளர்களைப் போலவே உங்களையும் நடத்தும்படி நடந்துகொள்ளுங்கள்.

வீட்டு வேலைகளை அலுவலக நேரத்தில் தூக்கிச் சுமக்காமல் அதற்கான முன்னேற் பாடுகளைச் செய்வது முக்கியம். அலுவலக பொறுப்பை ஏற்றுக்கொண்ட பிறகு, உங்களுக்கென இருந்த பொழுதுபோக்கு விஷயங்களை அப்படியே நிறுத்திவிடாதீர்கள். முன்பு நீங்கள் எவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தீர்களோ அது தொடருமாறு பார்த்துக் கொள்ளுங்கள். நீண்ட இடைவெளிக்குப் பிறகு, நீங்கள் சேரும் வேலை உங்களுக்குப் பிடிக்காமலும் போகலாம். வேறு வேலைக்கு எப்படி மாறுவது என்று யோசிக்கவோ. பயப்படவோ வேண்டாம். அந்த வேலைக்கு ஏற்ப மாற முயலுங்கள்.

வேலையையும் வீட்டு நிர்வாகத்தையும் உடனடியாக பேலன்ஸ் செய்வது கடினம். அதற் காக மனம் தளர வேண்டாம். இரண்டையும் சமாளிக்கும் பக்குவம் நிச்சயம் ஒரு நாள் கைகூடும்” என்றார் தெளிவாக.

''அப்டேட் ஆகுங்கள்!

மனிதவள மேலாளர் கே.ஜாஃபர் அலி

“மகப்பேற்றுக்காக அல்லது மேல் படிப்புக்காக எடுத்துக்கொண்ட பிரேக் ஆறு மாதங்களோ, ஆறு வருடங்களோ, அந்த இடைப்பட்ட காலத்தில் உங்களுடைய கரியர் சார்ந்த விஷயங்களில் தொழில்நுட்ப ரீதியாக, மேனேஜ்மென்ட் ரீதியாக ஏற்பட்டிருக்கும் மாற்றங்களை உள்வாங்கிக் கொண்டு, அதற்கேற்ப அப்டேட் ஆவது சிறந்தது.

இடைவெளிக்குப் பின் வேலை... கவனிக்க வேண்டிய விஷயங்கள்!

கொரோனா காலத்தில், வீட்டில் இருந்து வேலை செய்யும் வாய்ப்புகள் அதிகரித்திருக்கின்றன. இடைவெளிக்குப் பிறகு, வேலைக்குத் திரும்பும் பெண்களுக்கு, அலுவலகம் வந்து எட்டு மணி நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்ய வேண்டும் என்ற அவசியம் கிடையாது. ஆன்லைன் தொழில் வாய்ப்புகள் அதிகரித்திருக்கும் இந்த நாள்களில், அவற்றில் முயற்சி செய்தால் சுய தொழில் முனைவோராகவும் ஆகலாம்” என்றார்.

''நிறைய சிக்கல்களை எதிர்கொண்டேன்!

அனிதா, தஞ்சாவூர்

இடைவெளிக்குப் பின் வேலை... கவனிக்க வேண்டிய விஷயங்கள்!

``வேலைக்குச் சேர்ந்த புதிதில் சந்தித்த சிரமங்களைவிட, இடை வெளிக்குப் பிறகு, மீண்டும் வேலைக்குச் சேர்ந்தபோது எதிர் கொண்ட சிரமங்கள் அதிகம். பல ஆண்டுகள் வேலை செய்த அனுபவம் இருந்தும், நீண்ட இடைவெளிக்குப் பிறகு வேலைக்குச் சென்றது, புதிதாக வேலைக்குச் சென்ற அனுபவம்போல இருந்தது. பல விஷயங்களை நான் புதிதாகக் கற்றுக்கொண்டுதான், வேலை செய்ய ஆரம்பித்தேன். மேலும், குழந்தை வளர்ப்பையும் வேலையையும் என்னால் பேலன்ஸ் செய்ய முடியவில்லை. இருப்பினும், இந்தச் சிரமங்களைத் தாண்டி வேலைக்குச் செல்லும்போதுதான், என் மீது எனக்கு நம்பிக்கை வருகிறது. குடும்பத்துக்குப் பொருளாதார ரீதியில் உதவ முடிகிறது. குழந்தை வளர்ப்புக்காக, இப்போதும் நான் இரண்டாவது இடை வெளியில் இருக்கிறேன். சீக்கிரமாக வேலைக்குத் திரும்புவேன் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

குடும்பத்தின் ஆதரவுதான் காரணம்!

ரேணுகா, சென்னை

இடைவெளிக்குப் பின் வேலை... கவனிக்க வேண்டிய விஷயங்கள்!

``படிப்புக்காக வேலையிலிருந்து இரண்டு ஆண்டுகள் ஓய்வு எடுத்துக்கொண்டேன். படிப்பை முடித்த கையுடன், வேலை தேட ஆரம்பித்தேன். என் வேலைக்கான விஷயத்தில் நான் அப்டேட்டடாக இருந்ததால், வேலையிடத்திலும் எனக்கு பிரச்னை இல்லை. என் வீட்டில் முழுமையான ஆதரவு கிடைத்ததால்தான் என்னால் மீண்டும் வேலையில் சேர முடிந்தது. பெரும்பாலான குடும்பங்களில் இப்படியான ஆதரவு கிடைப்பதில்லை. அதனாலேயே பல பெண்களின் கரியர் வாழ்க்கை அடியோடு அழிந்துவிடுகிறது. பெண்கள் சுதந்திரமாகவும் தைரியமாகவும் செயல்பட நிச்சயம் வேலைக்குப் போக வேண்டும்.