
பத்துப் பிள்ளைகளுடன் கலக்கும் திருநங்கை
துரைப்பாக்கத்தில் தன்னுடைய சிறிய வீட்டில் தவனம், சங்குப்பூ, பவழமல்லி, அரளி, சம்பங்கி எனப் பூச்செடிகளுடன் பூவாக வசித்துக் கொண்டிருக்கிறார் திருநங்கை சக்தி தேவி. நாம் சென்றபோது இரண்டு பிள்ளைகளுக்கு டியூஷன் எடுத்துக்கொண்டிருந்தார். விசாரித்ததில், தன் தத்து மகனின் அக்கா குழந்தைகள் என்றார்.
வீட்டிலும் சமூகத்திலும் புறக்கணிப்புக்கு ஆளான சக்தி தேவி, அப்பாவின் விருப்பத்துக்காக ‘டிப்ளோமா இன் மெக்கானிக்கல் இன்ஜினீயரிங்’ படித்திருக்கிறார். அதன் பிறகு தன் பெண்மை உணர்வுக்குத் தடை போடாமல், உறுப்பு நீக்க அறுவை சிகிச்சை செய்திருக்கிறார். நடன ஈடுபாடு காரணமாக ஸ்டேஜ் டான்சராக இருந்தவர், ஹெச்.ஐ.வி, உறுப்பு நீக்கம் தொடர்பாக திருநங்கைகளுக்கும் திருநங்கைகள் குறித்து கல்லூரிகளிலும் காவல் துறையிலும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தி வருகிறார். சமீபத்தில் நாளிதழ் ஒன்றில் தன் தத்து மகனுக்கு வாழ்க்கைத்துணை தேடி விளம்பரம் கொடுத்திருந்தார்.
“பிறப்பால் இல்லாமல், உணர்வின் உந்துதலால் பெண்களானவர்கள் நாங்கள். அதனால்தான் உயிரைப் பணயம் வைத்து நாங்கள் உறுப்பு நீக்க அறுவைசிகிச்சை செய்துகொள்கிறோம். ஆனால், எங்களால் கருத்தரிக்க முடியாதே... அந்தத் தாய்மை உணர்வை அனுபவிக்கத்தான் நாங்கள் தத்தெடுத்துக் கொள்கிறோம். ஆனால், நாங்கள் பெரும்பாலும் குழந்தைகளைத் தத்தெடுப்பதில்லை. எங்களைச் சுற்றி இருப்பவர் களில் கஷ்டப்படுகிறவர்களைத் தத்தெடுத்துக் கொள்வோம். அவர்கள் எங்களைவிட வயதில் இளையவர்களாகவோ மூத்தவர்களாகவோ இருக்கலாம். மூத்தவர்களாக இருந்தாலும் அவர்களும் எங்களை அம்மா என்றுதான் அழைப்பார்கள்” என்கிற சக்தி தேவி, இதுவரை 10 பேரை தன் பிள்ளைகளாகத் தத்தெடுத்திருக்கிறார்.
“என்னுடைய முதல் மகள் குடும்ப வன்முறையால் வாழ்க்கையை இழந்தவள். அவளுக்கு நான் பாதுகாப்பு கொடுத்ததால் என்னை அம்மா என்று அழைக்க ஆரம்பித்தாள். அவளுக்கு மறுமணம் நடந்த பிறகு அவளுடைய சின்ன வாடகை வீட்டில் என்னையும் உடன் வைத்துக்கொள்கிற அளவுக்கு என் மீது அன்பாக இருந்தாள். நான் சில திருநங்கைகளையும் தத்தெடுத்திருக்கிறேன். அந்தத் திருநங்கைகளின் உணர்வுகளைப் புரிய வைப்பதற்காக அவர்களுடைய வீடு களுக்குச் சென்றபோது, ஒரு திருநங்கையின் அக்கா எனக்கு மகளானாள். இளம் வயதில் தாயை இழந்த அவள் என்னிடம் அவள் தாயைப் பார்த்திருக்கிறாள். இன்னொரு குடும்பத்தில் திருநங்கையின் அம்மா எனக்கு மகளானார்.
நான் தத்தெடுத்த ஒரு திருநங்கையின் கணவர் என்னைவிட 10 வயது மூத்தவர். என்னுடைய குணத்தைப் பார்த்துவிட்டு ‘உங்களை நான் அம்மான்னுதான் கூப்பிடு வேன்’ என்றவர், பிறகு முறைப்படி எனக்கு மகனானார். கோயில் பயணங்களுக்கெல்லாம் இந்த மகன்தான் என் வழித்துணை. இந்த மகன் குடல் புற்றுநோயால் சமீபத்தில்தான் காலமானார்” என்று கண்கலங்குகிற சக்தி தேவிக்கு, பிற மதங்களிலும் தத்துப்பிள்ளைகள் இருக்கிறார்கள்.
“திருநங்கைகளுக்கு சாதி, மதமெல்லாம் கிடையாது. நாங்கள் ஒதுக்கப்படுகிற வரை சமூகத்திடமிருந்து அன்பை எதிர்பார்ப்போம். எங்களைப் புரிந்துகொண்ட வர்களுக்கு அன்பை அள்ளிக் கொடுப்போம். நான் தத்தெடுத்த குடும்பங்களில் கல்யாணம் போன்ற முக்கியமான விசேஷங்கள் நடக்கும்போது, என்னையும் அழைப்பார்கள். போய் வாழ்த்திவிட்டு வருவேன். இந்த வகையில் எனக்கு மருமகள், மருமகன், பேரன், பேத்திகளெல்லாம் இருக்கிறார்கள்.
கொரோனா நேரத்தில் தான் சரவணனைத் தத்தெடுத் தேன். செவித் திறனற்ற, பேச இயலாத 26 வயதுக் குழந்தை அவன். அவனுக்கொரு நல்ல வாழ்க்கையை அமைத்துத் தர வேண்டிய கடமை எனக்கிருக்கிறது. அதனால்தான் நாளிதழ் ஒன்றில் விளம்பரம் செய் திருந்தேன். அவனுக்கேற்ற பெண்ணிருந்தால் சொல் கிறீர்களா” என்கிறார் தாயன் புடன்.
அம்மாவாக இருப்பதற்கு இதயம் போதும்!