Published:Updated:

`என்னைப் பார்த்து திமிரா பேசுறீயான்னு துாக்கி எறிஞ்சுட்டுப் போனான்' - திருநங்கை தனுஜா

தனுஜா
News
தனுஜா

என்னைக் காதலிச்ச பலரும் என்னைப் பாலியல் ரீதியாகத்தான் பயன்படுத்தினாங்க. நம்மை யாரும் ஏத்துக்காதப்ப ஒரு ஆண் ஏத்துக்கிறான் எனும்போதே அவனுக்கு நாம அடிமைதான். அவனுடைய பாலியல் தேவையைப் பூர்த்தி செய்கிற அடிமையாகத்தான் நாம வாழுறோம்.

Published:Updated:

`என்னைப் பார்த்து திமிரா பேசுறீயான்னு துாக்கி எறிஞ்சுட்டுப் போனான்' - திருநங்கை தனுஜா

என்னைக் காதலிச்ச பலரும் என்னைப் பாலியல் ரீதியாகத்தான் பயன்படுத்தினாங்க. நம்மை யாரும் ஏத்துக்காதப்ப ஒரு ஆண் ஏத்துக்கிறான் எனும்போதே அவனுக்கு நாம அடிமைதான். அவனுடைய பாலியல் தேவையைப் பூர்த்தி செய்கிற அடிமையாகத்தான் நாம வாழுறோம்.

தனுஜா
News
தனுஜா

இலங்கையில் இருந்து அகதிகளாக குடும்பத்துடன் தமிழ்நாட்டிற்குப் புலம்பெயர்ந்து தற்போது ஜெர்மனியில் வாழ்ந்துகொண்டிருக்கிறார் திருநங்கை தனுஜா. எழுத்தாளர், பல் சுகாதார மருத்துவர் என இவருக்குப் பல முகம் உண்டு. 'ஆனந்த விகடன்' யூடியூப் தளத்தில் வெளியாகும் 'உடைத்துப் பேசுவோம்' பகுதிக்காக அவரைச் சந்தித்தோம்.

தனுஜா
தனுஜா

சின்ன வயதிலிருந்தே சின்ன, சின்ன விஷயங்களை ரசிக்கத் தொடங்கினேன். அதுதான் வாழ்க்கையில் எனக்கு மிகப்பெரிய சந்தோஷத்தைக் கொடுத்துச்சு. இன்றைய நிம்மதியைக்கூட அதுதான் கொடுத்துச்சு. பெரும்பாலும் திருநங்கைகள் குடும்பச் சூழலில் இருந்து வெளியே வருகிறதனால அவங்களுக்கு ஆரம்பக் கட்டத்தில் ரொம்ப கஷ்டமா இருக்கும். ஆனா, எனக்கு அந்தச் சூழல் இல்லை. ஏன்னா புலம்பெயர்ந்த தமிழர்கள் என்பதால் எங்க குடும்பத்தில் எப்போதும் ஒருத்தர் மிஸ் ஆகிட்டேதான் இருப்பாங்க. நான் வளரும்போது அப்பா இல்லாம அம்மாவின் வளர்ப்பில் மட்டுமே வளர்ந்தேன். எப்பவும் குடும்பம் என்கிற அமைப்பில் இல்லாததனால் என் முடிவை நான் எடுக்க அது ரொம்ப வசதியாக இருந்தது.

பலரும் திருநங்கையாக சர்வ சாதாரணமா மாறிட்டதாக நினைக்கிறாங்க. உண்மையில் அப்படியில்லை. அதுல உளவியல் சார்ந்த மிகப் பெரிய சிக்கல் இருக்கு. அந்தச் சமயத்தில் படிப்பையும், உளவியல் சிக்கல்களையும் பேலன்ஸ் பண்ண வேண்டிய சிக்கல் எனக்கும் இருந்தது. சமுதாயம், குடும்பம்னு நாம யார்மீது அதிகமா அன்பு வைக்கிறோமோ அவங்களே நம்மளைப் புரிஞ்சிக்கல என்பதில் தொடங்கி எல்லாமே சிக்கலாக இருந்தது. அதனால, என் படிப்பையும் தொடர முடியாமப்போச்சு. வாழ்க்கையில் அந்த சிக்கலில்தான் முதன்முறையாக தற்கொலைக்கு முயன்று மீண்டு வந்தேன்.

தனுஜா
தனுஜா

பிறகு வாழ்க்கையில் எந்த வித நோக்கமும் இல்லாமப் பயணப்பட ஆரம்பிச்சேன். காதல் எல்லாருக்கும் வர்ற ஒன்றுதான்... அதுல எந்தத் தவறும் இல்லை. காதல்தான் நாம வாழுறதுக்கான அர்த்தத்தைக் கொடுக்கும். அப்படி எனக்கும் சிகிச்சைக்குப் பிறகு ஒரு காதலன் வந்தான். அவனுடன் என் வாழ்க்கை ஆரம்பிச்சது. இவன்தான் மருமகன்னு என் வீட்டில் எல்லாரும் அவனைக் கொண்டாடினாங்க. ஒருநாள் நீ போலியான ஆள்னு சொன்னான். ஒவ்வொரு நாளும் எந்த உறுப்போடு இருந்தாரோ அந்த உறுப்பே போலின்னு சொன்னான். நீ போலியானவள், நீ என்னைப் பார்த்து திமிரா பேசுறீயான்னு சொல்லி என்னைத் தூக்கி எறிஞ்சிட்டுப் போனான். என் அம்மா இன்னைக்கு வரைக்கும் என் கையால மீன் குழம்பும், புட்டும் சாப்பிட்டுட்டுப் போயிட்டு என் பிள்ளையை மருத்துவமனையில் படுக்க வச்சிட்டானேன்னு சொல்லுவாங்க. அவங்களுக்கு என்னை அவன் பிடிக்கலைன்னு சொன்னதுக்கு முதல் நாள் வரை என்னைத் தொட்டுட்டுப் போனான் என்பது எப்படித் தெரியும்? பிடிக்கலைன்னு சொன்னவன் அதுக்கு முந்தைய நாள் வரைக்கும் என்னுடன் உறவில்தான் இருந்தான். அந்தச் சமயம் பல சிக்கல்கள் இருந்தது. அதனுடைய வெளிப்பாடாக இரண்டாவது முறையா தற்கொலை முயற்சி செய்து அதிலிருந்தும் மீண்டு வந்தேன்.

என்னைக் காதலிச்ச பலரும் என்னைப் பாலியல் ரீதியாகத்தான் பயன்படுத்தினாங்க. நம்மை யாரும் ஏத்துக்காதப்ப ஒரு ஆண் ஏத்துக்கிறான் எனும்போதே அவனுக்கு நாம அடிமைதான். அவனுடைய பாலியல் தேவையைப் பூர்த்தி செய்கிற அடிமையாகத்தான் நாம வாழுறோம். காதலன்கிட்டகூட நோ சொல்ல முடியாது.. ஆனா, வாடிக்கையாளர்களிடம் நோ சொல்ல முடியும். அதனால பாலியல் தொழில் செய்து சம்பாதித்தேன். ஒரு கட்டத்துக்கு மேல் அந்த வாழ்க்கையிலிருந்தும் வெளி வந்தேன்.

தனுஜா
தனுஜா

படிக்க ஆசைப்பட்டு என் 27 வயதில் படிக்க ஆரம்பிச்சேன். அப்ப தான் என் சுயசரிதையை எழுதினேன். இந்தச் சமுதாயம் கொடுத்த கஷ்டத்தை எழுத்தின் மூலமா கேள்வி கேட்டப்ப மனதுக்கு நிறைவாக இருந்தது. தனுஜா - ஈழத்திருநங்கையின் பயணமும் போராட்டமும் என்கிற என் சுயசரிதைப் புத்தகத்தை எனது 29ஆவது வயதில் வெளியிட்டேன். நான் ஆசைப்பட்ட மாதிரியே பல் சுகாதார மருத்துவராகிட்டேன். இப்ப தனியா ஒரு கிளினிக் வைக்கணும் என்பதுதான் என் ஆசை என்றார்.

இன்னும் பல விஷயங்கள் குறித்து தனுஜா நம்மிடையே பேசினார். அவற்றைக் காண லிங்கை கிளிக் செய்யவும்!